தீவிர இலக்கிய செயற்பாட்டிலிருந்து தற்போது தீவிர அரசியல் செயற்பாட்டிற்குள் வந்திருக்கிறீர்கள் இரண்டும் சமூகத்திற்கான பணிதான் அந்த வகையில் உங்கள் அரசியல் கொண்டுள்ள இலக்கியம் என்ன? இலக்கியம் வெளிப்படுத்தும் அரசியல் என்ன?
இரண்டிலுமே அதீத ஈடுபாடு எனக்கு. என்னளவில் அது என்னுள் இயல்பானதாகவே இருந்து வந்துள்ளதாகவே உணர்கிறேன். இலக்கியதுறையில் பல காலம் ஈடுபாடு கொண்டவர் தனது படைப்புகளை தொகுப்பாக்கி வெளியிடும்போதுதான்சில சமயம் வெளிப்படுவார். அரசியல் களத்தில் பல காலம் செயற்பட்டவர் கூட தேர்தல் ஒன்றில் வெற்றிபெறுவதன் மூலம் வெளித்தெரிவார். இது தான் எனது விடயத்தில் நடந்திருக்கிறது என நினைக்கிறேன். சிறுவயது முதல் வறுமையில் வாழ்ந்தாலும் வாசிப்பு பழக்கம் உள்ள, அரசியல் விவகாரங்களை உரையாடும் குடும்ப சூழல் எனக்கு வாய்த்திருந்தது. அப்பா இந்த இரண்டிலும் ஆர்வம் உள்ளவர். என்னை வாசிக்க தூணடியதில் அவருக்கு அதிக பங்குண்டு. அந்த காலத்தில் 'சிந்தாமணி'யை வாரந்தவறாமல் அப்பா எனக்கு வாங்கிக்கொடுப்பது நினைவிருக்கிறது. இது மலையக தோட்டக் குடும்ப சூழலில் அந்த நாட்களில் அபூர்வம் தான். வறுமை அந்தளவுக்கு வாட்டும். ஞாயிறுதோறும் அந்த பத்திரிகையை வாங்கிவரும் பொறுப்பைக் கூட என்னிடமே விட்டார். பல மைல் நடந்து சென்று அதை வாங்கி வரவேண்டும். தினமும் வேலை முடிந்து வந்தவர் அந்த வாரப்பத்திரகையின் ஒவ்வொரு பக்கத்திலும் என்ன செய்தி இருந்ததது என்பதை அவருக்கு வாசித்து காட்ட வேண்டும்.
ஒரு பத்திரிகைக்கு எப்படியும் ஒரு வாரம் ஆகிவிடும். எனவே தினம் வாசிப்பு நிகழ்ந்திருக்கிறது. அதேபோல அது பல தரப்பட்டதாகவும் இருந்திருக்கிறது. அதில் எப்படியோ இலக்கியமும் அரசியலும் இருந்திருக்கத் தானே வேண்டும். இந்த இயல்பு வாசிப்பு சிறுவயதிலேயே 'லங்காராணி' யை தலையணைக்கு அடியில் ஒளித்து வாசிக்கும் அளவுக்கு என்னை மாற்றியிருந்தது. அவ்வப்போது வீட்டுச்சூழலில் நடக்கும் அரசியல் பேச்சுவார்த்தைகளில் வாய்பார்த்தவனாகவே வளர்ந்திருக்கிறேன். 'எமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்..இப்படைத் தோற்கின் எப்படை வெல்லும் ..'என்ற பாடல் முழக்கத்துடன் ஒலிபரப்பாகும் சிற்றலை வானொலியை திருகிதிருகி காதில் ஒற்றி கேட்டிருக்கிறேன். எவ்வாறெனினும் உள்ளதை உள்ளபடியே ஏற்காமல் எனக்குள் ஒரு தராசினை உருவாக்கிக்கொண்டு உள்வாங்கிக்கொண்டேன். இப்படி இயல்பாக வந்ததுதான் இலக்கியமும் அரசியலும் மற்றபடி 'தீவிரம்' ஒன்றும் திடீரென்று வரவில்லை.
இலக்கியம், அரசியல் இரண்டிற்குள்ளும் பொதுவானதாக ஒன்று உள்ளது. அது 'அரசியல்' தான். ஒவ்வொரு இலக்கிய படைப்புக்குள்ளம் ஒரு அரசியல் இருக்கும். அதனைத் தேர்தல் அரசியலாக நாம் பார்க்க முடியாது. இலக்கியத்திற்குள் இந்த 'அரசியல்' இருப்பதால்தான் அங்கேயும் அணிகளும், அணிமோதல்களும் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. எனது எழுத்தின் 'அரசியல்' மலையக மக்களின் வாழ்வியலாகவே அமைந்தது. நான் பிறந்து வளர்ந்த சூழல் மானுடம் என்ற பரந்த கண்ணோட்டத்தையும் அதற்குள் மலையகம் என்ற உணர்வு கண்ணோட்டத்தையும் எனக்குள் ஏற்படுத்தியது. என் எழுத்துக்களில் அதனை அவதானிக்கலாம். இந்த எழுத்துக்களின் ஊடாக, அல்லது வாசிப்புகளின் ஊடாக மலையக மக்களின் பிரச்சினைகளை அடையாளப்படுத்த மாத்திரம் முடிகிறது. அதே பிரச்சினைகளுக்கு தீர்வு தேடவேண்டும் என இன்னும் சிந்தித்த போது செயற்பாட்டு அரசியல் அவசியம் எனப்பட்டது. அதில் இறங்கிச் செல்லும் போது தேர்தல் அரசியலையும் சந்திக்க நேரிட்டது. இப்போது அந்த சந்திப்பில் நிற்கிறேன். இனி அடுத்த கட்டம் பற்றி சிந்திக்க வேண்டியுள்ளது.
புதிய கருத்தியலுடன் புதிய தலைமுறையினரின் கையில் மலையக அரசியல் மாற்றம் பெற்றிருப்பதாக கூறமுடியுமா? அதற்கான அவசியங்கள் என்ன?
நிகழ்ந்திருக்கிறது. ஆனால், முழுமையாக இல்லை என்பதே எனது கருத்தாகவுள்ளது. வேண்டுமானால் இது ஆரம்ப கட்டம் என சொல்லலாம். இந்த ஆரம்பகட்டத்தை அடைவதற்கே கணிசமான போராட்டத்தை நடத்த வேண்டியிருந்தது. ஏற்கனவே களத்தில் விளையாடிக் கொண்டிருக்கும் பலமான அணியை எதிர்த்து ஒரு புதிய அணி களமிறங்கும்போது ஆரம்பத்தில் எவ்வித எதிர்பார்ப்பும்கொள்ளமால் இருந்துவிட்டு அந்த அணி வெற்றியை நோக்கி நகரும் வகையில் ஓட்ட எண்ணிக்கையை அதிகரிக்கும்போது வெற்றிபெறுவார்கள் போலத் தெரிகிறதே என எண்ணி ஆதரவாக கைதட்ட ஆரம்பிப்பார்களே அந்த கட்டத்தில்தான் இப்போதைய மலையக அரசியல் களம் இருக்கிறது. நான் அந்த புதிய அணியை உருவாக்குவதிலும் பங்கேற்று களத்தில் இறங்கி விளையாடிக்கொண்டிருக்கிறேன். பலர் கைதட்டிக்கொண்டிருக்கிறார்கள். விளையாடுபவர்களதும், கைதட்டுபவர்களதும் இலக்கு அணி வெற்றிபெறவேண்டும் என்பதாகவே உள்ளது. ஆனால், விளையாடுவது என்பது கரையில் இருந்து கைதட்டுவது போல இலகுவானதாக இருந்துவிடமுடியாது. ஆனால் இத்தகைய அணியின் அவசியம் ஒன்று குறித்து நீண்டகாலமாக பேசப்பட்டு வந்தது. இப்போது அடையாளம் காணப்பட்டிருக்கிறது. இதற்கான அவசியம் என்னவென்று கேட்டால் முன்னைய அணியின் வெற்றிகள் அணியின் வெற்றியாக மட்டுமே பார்க்கப்பட்டதே அன்றி அந்த அணிசார்ந்த மக்களின் வெற்றியாக மாற்றம் பெறவில்லை. புதிய அணியையும் அவ்வாறே பயணிக்க விடாமல் அதுசேரக்கும் ஒவ்வொரு ஓட்டமும் மக்களுக்கானதாக மாற்றியமைக்கும் பாரிய வழிநடத்தலை உள்ளுக்குள் இருந்து ஆற்ற வேண்டியிருக்கிறது. எனவேதான் புதிய கருத்தியலும், புதிய தலைமுறையும் முழுமையாக உள்வாங்கப்படவில்லை இது ஆரம்ப கட்டம் என ஆரம்பத்திலேயே சொன்னேன்.
மலையக அரசியலில் மாற்றுச் சிந்தனைக்கான அரசியல் முனைப்புடன் கடந்த தேர்தலை எதிர்கொண்டு உங்கள் அணி வெற்றி கண்டுள்ளது எத்தகைய அரசியல் எழுச்சிகளை நீங்கள் மலையக அரசியலில் ஏற்படுத்தப் போகின்றீர்கள் ?
மனிதனின் அடிப்படைத் தேவைகள் என்றால் என்ன ? என கேட்டால் பாடத்திட்டத்தில் (Syllabus) சொல்லிக் கொடுத்தவாறு உணவு, உடை, உறையுள் என்றே எல்லோரும் விடை எழுதுவார்கள். அதற்கும் சரி போட்டு புள்ளியிட்டுக்கொண்டிருந்தார்கள். காலப்போக்கில் மனிதனின் அடிப்படைத் தேவை கல்வி, சுகாதாரம், வீடு என மாறியபோது இதனைப்பாடத்திட்டத்திற்குள் சேர்க்காததனால் ஏற்றுக்கொள்ள முடியாதென முன்னயை தரப்பினர் முன்னெடுக்கத்தவறிவிட்டனர். இதனையே நாங்கள் முன்னெடுக்கிறோம். இங்கே உணவு, உடை , உறையுள் என்பதற்கும், கல்வி, சுகாதாரம், வீடு என்பதற்கும் பாரிய வேறுபாடு இருப்பதாக நான் உணரவில்லை. ஆனால், முன்னயை தரப்பினர் இதனை உள்வாங்கத் தவறியபோது நாம் முன்வைத்த கோரிக்கைகள் புதுவடிவத்தில் காட்சிபெற்றன. மக்கள் நுண்ணிய வேறுபாடுகளையும் அவதானிக்கத் தொடங்கினர். 1977 க்குப்பிறகு அண்மைக்காலத்திற்கு முன்னர் வரை மலையக அரசியலில் ஏற்பட்ட பின்னடைவுக்கு பிரதான காரணமே அங்கே அரசியல் 'உரைகள்' இடம்பெறவேயில்லை. சந்திரசேகரன் காலத்தில் சற்று தலைதூக்கினாலும் தேர்தல் வெற்றியோடு அது திசை மாறியது. எனவே, மலையக அரசியலில் 'உரைகளின்' முக்கியத்துவம் உணரப்பட்டது. 'யாரும் பேசுகிறார்கள் இல்லை' என்ற உணர்வு மக்களிடத்தில் வெளிப்படத் தொடங்கியது. இங்கு 'பேசுவது' என்பது மேடை அல்லது சபை பேச்சுக்கள் மட்டுமல்ல சாதாரணமாக மக்களிடமே பேசுவதில்லை என்கிற நிலை உருவானபோது ஒரு 'சர்வாதிகாரத்தன்மை' உணரப்பட்டது. இதுவே மாற்றம் ஒன்றை செய்யவேண்டும் என்ற மனநிலையை மக்களிடத்தில் தோற்றுவித்தது.
முதலில் உரையாடவேண்டும். மக்கள் தம்மிடையே, தம் சக சமூகத்திடையே, தம் தலைமைகளிடையே, அரசிடையே உரையாட வேண்டும். ஒரு சமூகத்தில் உரையாடல் குறைவடையும் போது அந்த சமூகம் ஊமையாகிப்போகிறது. மலையக மக்களை நோக்கி வந்த ஆபத்து அதுதான். அவர்கள் உரையாட மறுக்கப்பட்டு ஊமையாக்கப்பட்டார்கள். குறிப்பாக, அரசியல் களத்தில் ஊமையாதல் என்பது ஒரு சமூகத்தின் அழிவுக்கு பிரதான அம்சமாகிவிடும். ஜே.வி.பி எனப்படும் மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர்களின் எண்ணிக்கை நாடாளுமன்றத்தில் அதிகம் இல்லை. ஆனால், இருக்கின்ற எணணிக்கையானோர் எழுப்புகின்ற குரல் இந்த நாட்டு மக்களின் குரலாக பல சமயம் அமைந்துவிடுகின்றது என்பதை மறுப்பதற்கில்லை. பேராசிரியர். காரத்திகேசு சிவத்தம்பி கூறுவார்; 'எந்தவொரு சமூகம் தன் அவலத்தை சரியாக வெளியே சொல்லவில்லையோ அந்த சமூகம் அதன் அவலத்தில் இருந்து ஒருபோதும் வெளியே வர முடியாது'. அவரிடம் பலதைக் கற்றுக்கொண்ட எனக்கு இந்த வாசகம் மலையக மக்கள் குறித்து மிகவும் பொருந்திப் போவதாக உணர முடிந்தது. எனவே எமது மக்களின் அவலத்தை முதலில் உரிய முறையில் உரிய இடத்தில் உரிய விதத்தில் எடுத்துச் சொல்ல வேண்டும் என எத்தணித்தபோதுதான் இலக்கியமும் அதன் தொடர்ச்சியாக அரசியல் களமும் எனக்குத் திறந்தது. இந்த உரையாடல் வெளியை அதிகரித்துவிட்டாலே போதும் அவலங்கள் வெளிப்படுவது மாத்திரமல்ல அதற்கான தீர்வுகளும் அந்த மக்களை நாடி வரச் செய்யும் என நம்புகிறேன். அண்மைக் காலத்தில் அதனை யதார்த்தமாகவும் என்னால் உணரமுடிகின்றது. எங்கள் மக்களிடத்திலும், எங்கள் மக்கள் பற்றியும் உரையாடல்கள் இடம்பெற ஆரம்பித்திருப்பதே எழுச்சியின் ஆரம்பம் என நினைக்கிறேன்.
மலையக அடையாளம் என்பது வடகிழக்கு தமிழர் அடையாளம் - இலங்கை முஸ்லிம் அடையாளம் போன்று தனித்துவமான ஒரு அடையாளத்தையும் அரசியலையும் கொண்டது இந்த அடையாளம் அரசியல் ரீதியாக அடைந்த வெற்றிகள் என்ன? தோல்விகள் அல்லது சவால்கள் என்ன?
மலையகம் என்பது ஒரு உணர்வு. ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டுக்கு 'கூலி' த் தொழிலாளர்களாக அழைத்துவரப்பட்ட மக்கள் கூட்டத்தினர் நூறு ஆண்டுகளைக்கடந்து குடியேறிய நாட்டுக்குள் வாழ்ந்த பின்னர் தலைமுறைகளைக் கடக்கிறார்கள். புதிய தலைமுறையினர் பிறந்து வளர்ந்த சூழல் 'மலையும், மலைசார்ந்த' குறிஞ்சி நிலமாக அமையும்போது தாங்கள் அந்த மண்ணுக்கு உரியவர்கள் என்ற உணர்வைப்பெறுகிறார்கள். தாங்கள் தன் உழைப்பால் உருவாக்கிய அந்த மலை மண்ணையே தாயகமாக நினைக்கும் போது தங்களை மலையகத்தவர்கள் என்று அழைத்துக்கொள்கிறார்கள். காலப்போக்கில் அந்த மக்கள் கூட்டத்தில் இடம்பெறும் இடப்பெயர்வுகள் மலைசாராத பகுதிகளுக்கு சிறு அளவில் இடம்பெறும்போதும் தங்களது உணர்வால் மலையகத்தவர் என்கிற நிலையயை அடைகின்றனர். தாங்கள் இந்தியாவில் இருந்து வந்த பரமப்பரையைச் சேரந்தவர்கள் என்பதற்காக தாங்கள் தொடர்ந்தும் 'இந்தியத் தமிழர்' என அழைக்கப்படவேண்டியதில்லை என்கிற உணர்வும் அவர்களுக்கு வலுக்கிறது. அதேநேரம் தாங்களே உருவாக்கிய அந்த மலையகப்பிரதேசங்கள் தமது தாயகப்பிரதேசம் என்கிற உணர்வு 'மலையகம் ', 'மலையகத் தமிழர்', 'மலையக மக்கள்' எனும் விரிவாக்கத்திற்கு இட்டுச் செல்கின்றது. இந்தச் சூழலில் அவர்கள் பண்பாட்டு ரீதியாக, கலாசார ரீதியாக மொழி ரீதியாக தனித்துவமான தன்மை கொண்டவர்களாக காணப்படுகின்றனர். இன்றும் கூட இந்த 'மலையகம்' என்கிற அந்த பண்பாட்டு அடையாளத்தை அரசியல் அடையாளமாக மாற்றுவதில் அவர்களது போராட்டம் தொடர்ந்துகொண்டிருக்கிறது.
இலங்கையில் சட்ட ரீதியாக 'இந்திய தமிழர்' என்றே அடையாளப்படுத்தப்படுகின்றனர். ஆனாலும் 'மலையக மக்கள் முன்னணி' எனும் அரசியல் கட்சியை பதிவு செய்வதிலும், மலைநாட்டு புதிய கிராமங்கள், சமூக அபிவிருத்தி அமைச்சு என அமைச்சினைப்பெறுவதிலும் வெற்றி கண்டிருக்கிறார்கள். இது 'மலையகத் தமிழர்கள்' எனும் சட்ட அங்கீகாரத்தைக் கோருவதற்கான வழிதிறப்பு எனக் கொள்ளலாம். இந்திய அடையாளத்தை தாங்கள் சுமப்பதன் மூலம் தங்கள் வணிக நோக்கத்தை அடைந்துகொள்ளும் சிறுகுழுக்கள் செல்வந்தவர்களாகவும் இருந்துகொண்டு இந்த மக்களை 'இந்திய' மக்களாகவே வைத்திருக்க ஆசைபடுகிறார்களே தவிர, மலையக மக்கள் இலங்கையில் இந்தியா தமிழர்களாக இருப்பது பற்றியோ மலையகத் தமிழர்களாக இருப்பது பற்றியோ இந்தியாவுக்கு எந்த அக்கறையும் இல்லை. 1964 ஆம் ஆண்டு 'தாயகம் திரும்பியோர்' எனும் போர்வையில் இந்தியாவுக்கு திருப்பியழைக்கப்பட்ட அல்லது இலங்கையில் இருந்து நாடு கடத்தப்பட்ட லட்சக்கணக்கான மக்கள் அங்கே இந்தியாவிலே பண்பாட்டு அளவில் கூட 'சிலோன்காரர்களக' வாழந்துகொண்டிருப்பது இதற்கு மிகப்பெரிய சான்று.
எனவே இப்போதைக்கு மலையக மக்களை மலையக மக்களாகவே அரசியல் ரீதியாக அடையாளப்படுத்துவதில் தடையாக இருப்பது 'இந்திய' மாயை கொண்ட முதலாளி வர்கக்கமே தவிர அந்த மக்களின் ஆணிவேராகத் திகழும் பாட்டாளி வர்க்கம் அல்ல. இந்த தடையை கடப்பது இன்றைய இளைய மலையக சமூகத்திறகு ஒரு பெரிய சவாலே அல்ல.
பொதுவாக சிறுபான்மை அரசியல் அல்லது பிராந்திய அரசியல் என்கின்ற அரசியல் அலகுகள் இந்த நல்லாட்சியின் பிறகு ஏற்படும் அரசியலமைப்பு மாற்றத்தில் எத்தகைய பங்கினை எடுக்க முடியும் ?
அரசியலமைப்பு மாற்றத்தில் சிறுபான்மை அரசியல் தற்போது கொண்டிருக்கும் நிலைமை மாற்றமடையும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. நிலவுகின்ற ஜனாதிபதி முறைமையின் கீழ் அதற்காக நடாத்தப்படும் தேர்தலில் முழு நாடுமே ஒரு தேர்தல் தொகுதியாக மாறும் நிலையில் அதில் வெற்றிபெற வேண்டடியவர்கள் அல்லது தோல்வி அடையவேண்டியவர்கள் யார் என்பதை தீர்மானிக்கின்ற ஒரு பலத்தினை இந்த நாட்டின் சிறுபான்மைச் சமூகம் கொண்டிருக்கிறது. 2005 ஆண்டு மகிந்தவின் வெற்றியிலும் 2015ஆம் ஆண்டு அவரது தோல்வியிலும் இந்த சிறுபான்மைச் சமூகத்தின் வாக்களிப்பு நடத்தைச் செல்வாக்கு செலுத்தியதை நாம் நினைவுகூரல் பொருந்தும்.
எனவே இந்த ஜனாதிபதி முறை மாற்றடையும்போது முழு நாடே ஒரு தொகுதியாகும் வாய்ப்பை சிறுபான்மை அரசியல் இழக்கும். இதுதேசிய ரீதியாக ஒரு பாரிய மாற்றத்தை எற்படுத்துவதற்கு பங்களிப்பதற்கு அவர்களுக்கு இருந்த வாய்ப்பினை இல்லாதாக்குகிறது. அதேநேரம் நாடாளுமன்றத் தெரிவுக்கு தொகுதிவாரி தேர்தல் முறை அறிமுகமாகும்போது வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்கள் தவிர அதற்கு வெளியே வாழும் தமிழ் (மலையக), முஸ்லிம் மக்கள் பாரிய சவாலினை சந்திக்க நேரிடும். ஏனெனில் பெரும்பான்மை சிங்கள மக்களுடன் கலந்துவாழும் இவர்கள் தனியான தொகுதிகளை தங்களுக்காக அடையாளம் காண்பது சிரமமாகவே இருக்கும். இந்த நிலைமையில் புதிய அரசியல் யாப்பு அறிமுகமாகும் பட்சத்தில் அதில் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகக் கூடிய அபாயம் சிறுபான்மை அரசியலுக்கு உண்டு என்றே எண்ணத் தோன்றுகிறது. அதேநேரம் தற்போதைய முறைமை தங்களுக்கு வழங்கியிருக்கின்ற பிரதிநிதித்துவ வாய்ப்புகளைப் பயன்படுத்தி தங்களின் அரசியல் இருப்பை உறுதி செய்துகொள்ள வேண்டியது வரலாற்றுக் கடமையாகிறது.
தமிழர் அரசியல், முஸ்லிம் அரசியல், மலையக அரசியல் இந்த மூன்று கூறுகளும் ஒன்றிணையும் அரசியல் தேவைப்பாடுகள் எதிர்காலத்தில் என்ன நிலையினை அடையும்?
அதற்கு சாத்தியமான எந்தவொரு நடைமுறையும் இப்போதைக்கு தெரிவதாக இல்லை. நடைமுறையில் உள்ள தேர்தல் முறைமை பல்வேறு அணிகளை உருவாக்கிவிடுவதற்கு இலகுவான ஒரு பொறிமுறையாக உள்ளது. எனவே நீங்கள் கூறும் மூன்று தரப்பிலும் (பெரும்பான்மை கட்சிகளிலும்) பல அணிகளாக பிரிந்து செயற்படும் நிலைமை காணப்படலாம். சில நேரம் தொகுதிவாரி தேர்தல் முறைமை அறிமுகமாகும் பட்சத்தில் வடக்கு, கிழக்குக்கு வெளியேவாழும் தமிழ், முஸ்லிம் சமூகம் தேர்தல் அடிப்படையில் இணைந்து செயற்படும் தேவைப்பாடுகள் எழலாம். வடக்கு, கிழக்கிலும் அணிகள் இணையும் வாய்ப்பு உள்ளது. உங்களது கேள்வியின் எதிர்பார்ப்பு சமூக இலக்குகளை அடைவதற்கான இவர்களின் இணைப்பு என்பது இப்போதைக்கு கண்ணுக்கு எட்டிய தூத்தில் இல்லை என்பதே கசப்பான உண்மை. இதை விரிவபடுத்தினால் இந்த கேள்விக்கான விடை ஒரு கட்டுரையாகிவிடும் அபாயமுள்ளது.
ஒரு இலக்கியவாதி என்ற அடிப்படையில் மலையகத்திற்கு அப்பாலும் சிந்திக்க வேண்டிய அதற்காக செயற்பட வேண்டிய ஒரு உரையாடல் சமூகத்தை அல்லது அமைப்பை எந்த புள்ளியிலிருந்து ஆரம்பிக்கலாம் ?
முதல் கேள்விக்கான பதிலின் தொடர்ச்சியாக இதனைக் கொள்ளலாம் என நினைக்கிறேன். அரசியல் ரீதியாக இந்த இணைவுகளின் சாத்தியம் தொலைவில் தெரிகிற காரணத்தினால்தான் இலக்கியம் வழியாக மலையகத்திற்கு அப்பாலும் சிந்தித்து சக சமூகங்களுடனான உரையாடல் வெளியினை நான் கொண்டுள்ளேன். என்னளவில் மலையகத்திற்கு வெளியே வடக்கு, கிழக்கு, கொழும்பு மற்றும் புலம்பெயர் என நான்கு சூழல்களில் நான் நட்பு சூழலைக் கொண்டிருக்கின்றேன். குறிப்பாக கொழும்புத் தமிழ்ச் சங்கத்தைக் களமாக்கிக் கொண்டு முன்னெடுத்த இலக்கிய செயற்பாட்டு முயற்சிகள் தென்னிலங்கை வாழ் சமூகங்களிடையே மலையகம் குறித்த ஒரு புரிந்துணர்வை எற்படுத்த உதவியது. அதேபோன்று யாழ்ப்பாணத்திலும், மட்டக்களப்பிலும் இடம்பெற்ற இலக்கிய சந்திப்புகள் கணிசமான நட்பு வட்டத்தை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. தமிழ்நாட்டிலும் தனிப்பட்ட பயணங்களின் ஊடாக என்னால் ஏற்படுத்த முனைந்திருக்கிறது. இந்த உரையாடல் சமூகத்துக்கு 'இலக்கியமே' பொருத்தமான வழி என உறுதியாக நம்புகிறேன்.
உங்களுடைய தனிப்பட்ட அடையாளம் எதனைப் பேசுகிறது ? எதனை நேக்கிப் போகிறது ?
எனக்கென நான் வைத்துக்கொள்ள விரும்பும் அடையாளம் 'மலையக செயற்பாட்டாளன்' என்பதுதான். காலத்தின் தேவையில் கவிஞனாகவும், கட்டுரையாளனாகவும், கதாசிரியனாகவும், கலைஞனாகவும், ஆசிரியனாகவும் அடையாளம் காணப்படுகிறேன். சிறு வயது முதலே பண்பாட்டு, சமூக அடிப்படையில் செயற்பட்டு இப்போது செயற்பாட்டு அரசியல்காரனாகவும் பார்க்கப்படுகிறேன். அரசியல் என்று வரும்போது குறிப்பாக தேர்தல் களம் பிரச்சாரம் என்றெல்லாம் வரும்போது கோமாளி அடையாளம் கூட வந்துபோகும். அந்தச் சூழலில் அதனைத் தவிர்க்க முடியாது. அடையாளம் எதுவாகினும் அந்த அடையாளத்தில் இருந்து 'மலையகம்' என்பதை எடுத்துவிட்டு என்னைப்பார்த்தால் எனக்குள் வேறு எதனையும் உங்களால் தேட முடியாது. எனவே மலையகம் குறித்த சிந்தனையோடு வளர்ந்து வாழ்ந்து வருபவன் என்ற வகையில் 'மலையக செய்றபாட்டாளனாக' அந்த மக்களின் விடுதலைக்காக என்னால் இயன்ற எல்லா அடையாளங்களையும், அவமானங்களையும் தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவத்தை கொண்வடனாக உள்ளேன்.
நன்றி - சமகளம்
செவ்வி- நவாஸ் சவ்பி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...