Headlines News :
முகப்பு » , , » புத்தனின் ஆக்கிரமிப்பு !? - என்.சரவணன்

புத்தனின் ஆக்கிரமிப்பு !? - என்.சரவணன்


இலங்கையில் சிங்கள பௌத்தர்கள் அல்லாதோர் நான்கு முக்கிய முக்கிய விடயங்களுக்குப் பயப்படுவார்கள்.
  • புத்தர் சிலை,
  • அரச மரம்,
  • புத்த விகாரை,
  • காவிச் சீருடை.
இந்த நான்கும் அடிப்படையில் ஆக்கிரமிப்புச சின்னங்களாக ஆகியிருப்பது தான் அதன் காரணம். இவை அரச இயந்திரத்தின் ஆசியுடனும், அரசியலமைப்பின் பாதுகாப்புடனும் ஏனைய இன மதத்தவர் மீது செலுத்திவரும் பண்பாட்டு ஆதிக்கம் தான்.

ஏனைய பண்பாடுகளை நசுக்குவதற்கு மதத்தைப் பயன்படுத்தும் போக்கு உலகளவில் வளர்ந்துவிட்டிருக்கிறது. தான் தோன்றித்தனமாக வகுப்புவாதம் வளர்ந்த நம் நாடுமட்டும்  இதற்கு விதிவிலக்கா என்ன.

நிறுவனமயப்பட்ட சிங்கள பௌத்த பேரினவாதத்தை பலப்படுத்துவதில் சகல தரப்பும், சகல முனைகளிலும் தன்னியல்பாக இந்த ஆயுதங்களைப் பலப்படுத்தி வருகிறது. அரச மரங்களை நடுவது அல்லது வளர்ந்த மரங்களுக்கு அடியில் பௌத்த வணக்கஸ்தளங்களை உருவாக்குவது, புத்தர் சிலைகளை அமைப்பது, புத்த விகாரைகளாக பெருப்பிப்பது, பொலிசாரையும், படையினரையும் மிஞ்சிய அதிகாரங்களைக் கொண்ட அராஜக சர்வாதிகாரிகளாக ஆக்கப்பட்டிருக்கும் காவிச் சீருடையணிந்த பௌத்த பிக்குகள் ஆகிய அம்சங்களே இன்றைய இந்தப் பண்பாட்டு ஆதிக்க ஆயுதங்கள்.

அரசியலமைப்பாலும், அரச இயந்திரத்தாலும் பேணிப், பாதுகாத்து, வளர்த்து வந்த இந்த அம்சங்கள் இன்று அதே அரச படையினரால் கூட கட்டுபடுத்த முடியாத நிலையை எட்டியிருப்பது எதனால்?

சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்வை ஒரு அப்பட்டமான உதாரணமாக உங்களுக்குத் தருகிறேன்.

“ஸ்ரீ  பாத” பீதி
சமீபகாலமாக ஸ்ரீ பாதவை முஸ்லிம்கள் ஆக்கிரமிக்கிறார்கள் என்கிற வதந்தியைப் பரப்பி முஸ்லிம்களுக்கு எதிரான ஒரு பெரும் பிரச்சாரத்தை முன்னெடுத்தன இனவாத சக்திகள். இன்று அவர்களுக்கு இருக்கும் அபரிதமான ஊடக, சமூக ஊடக செல்வாக்கால் இந்த பிரச்சாரத்தில் அவர்கள் வெற்றி கண்டிருக்கிறார்கள். அவர்கள் பரப்பி வரும் அத்தனை வதந்திகளும் எத்தனை பொய்யானவை என்று மறு பிரச்சாரம் செய்வதற்கு முஸ்லிம்கள் தரப்பில் போதுமான பலம் இருக்கவில்லை என்றே கூறவேண்டும். தவ்ஜீஜ் ஜமாத் காரர்களும் இதனை உணர்ச்சிகரமாக எதிர்கொண்டு சிங்கள இனவாத சக்திகளை உசுப்பேத்தி விட்டார்கள் என்றால் அது மிகையில்லை.



நவம்பர் 5 அன்று கொழும்பிலிருந்து சிங்கக் கொடியையும், பௌத்த கொடியையும் தாங்கிய பல வாகனங்களில் ஒரு பெரும் குழு சென்றது இந்தக் குழுவுக்கு தலைமை தாங்கியவர் சுரேஷ் பிரியசத் கடந்த 15ஆம் திகதி இனவாத குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டிருப்பவர். சமீப காலமாக முஸ்லிம்களுக்கு எதிராக பல சண்டியர்களையும், சாதாரண பௌத்தர்களையும் திரட்டிக்கொண்டு பல கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்களை நடத்தி வந்தவர். சிங்கள சமூக ஊடகங்களால் பெரும் ஹீரோவாக ஆக்கப்பட்டிருப்பவர். இன்றைய நிலையில் பொதுபல சேனா உள்ளிட்ட பல சிங்கள பேரனவாத அமைப்புகள் தம்மை தூசு தட்டி எழுப்புவதற்கு ஒரு வாய்ப்பாக இந்த கைதை பயன்படுத்திவருவதை அவதானித்து இருப்பீர்கள்.
83 இல் தமிழர்களுக்கு அடித்ததைப் போலல்ல... நாளை, நாளைன்றைக்கே முஸ்லிம்களை விரட்டி விரட்டி அடிப்போம். தமிழர்களின் கடைகளை கொளுத்தியதைப் போல முஸ்லிம்களின் கடைகள் அனைத்தையும் கொளுத்துவோம்... "பொருட்களை" இப்போதே தயார் நிலையில் தான் வைத்திருக்கிறோம். முஸ்லிம்கள் சிங்களவர்களை சீண்டிக் குழப்பிவிட்டார்கள்.
-ப்ரியசாதின் முகநூல் பதிவு-
பிரியசாத் தலைமையிலான குழு சிவனொளிபாத மலையின் அடிவாரத்தில் இதுவரை ஒரு பௌத்தச் சிலையும் கிடையாது என்றும். அங்கெல்லாம் பௌத்த சிலைகளை வைத்தால் தான் முஸ்லிம்கள் அங்கு நெருங்க மாட்டார்கள் என்றும் கூறி, அங்கு ஒரு பௌத்த சிலையை நிறுவி உடனடியாகவே சிறிய வணக்கஸ்தளத்தைக் கட்டிமுடித்தனர். இப்படியான பணிகளுக்கு பல நூற்றுக்கணக்கான சிலைகள் ஜப்பானில் இருந்தும், கொரியாவிலிருந்தும் உதவியாக கிடைத்ததாக அங்கு தெரிவிக்கப்பட்டது.

இதன் போது தெரிவித்த கருத்துக்கள் கவனிக்கத்தக்கது. “முஸ்லிம்களுக்கு அந்நிய மதச் சின்னங்களும், சிலைகளும் ஹராம் (தவிர்க்கப்பட்டது) எனவே நாங்கள் இந்த இடத்தில் இந்த முஸ்லிம் சிலையை நிறுவினோம். அவர்களுக்கு “ஹராம்” ஆன இந்த இடம் எப்படி அவர்களுக்கு இனி புனிதமாக ஆகப் போகிறது பார்ப்போம்.” என்றார் பிரியசாத்.


15ஆம் திகதி ஞானசார தேரர் இந்தியாவிலிருந்து நாடு திரும்பியதும் அவரை வரவேற்பதற்காக பெரும் குழுவொன்று விமான நிலையம் சென்றிருந்த வேளை, அங்கு வைத்து அவர் ஆற்றிய உரையில் ஆக்ரோஷமான கர்ஜித்தார். அன்றைய தினம் கைது செய்யப்பட்டிருந்த “வீரன்” பிரசாத்தை சந்திக்கப் போவோம் என்ன நடக்கிறது இங்கு என்று அறிவோம் வாருங்கள் என்று அழைத்துக் சென்றார். அங்கு வைத்து ஆற்றிய உரை பயங்கரமானது. நேரடி கொலை அச்சுறுத்தலை ஞானசார அங்கு வெளியிட்டார்.

“...எங்கள் இளைஞர்களின் பொறுமையை இதற்கு மேல் சோதிக்க வேண்டாம் என்று அரசாங்கத்திடம் சொல்லி வைக்கின்றோம். வடக்கிலும் கொழும்பிலும் சிங்களவர்களைத தாக்குகின்றனர். இந்த அரசாங்கம் தாக்குபவர்களை பாதுகாக்கின்றது. அதை விமர்சிக்கும் எங்களை கைது செய்து சிறையில் அடைக்கிறது. நாளைக்குள் இந்த நாயை (அப்துல் ராசிக்) கைது செய்யாவிட்டால் நுனியிலிருந்து பிடுங்க வேண்டும். (பலத்த ஆதரவு கோஷம் எழுகிறது). இதற்காக எமது தரப்பில் 100 அல்லது 200 பேர் சாக நேரிடும். சாவோம்! (ஓம் சாவோம்! என்கிற கூச்சல்) படுத்துக்கொண்டிருக்கின்ற மகாநாயக்கர்களை நாங்கள் கேட்க வேண்டும் எங்கள் மரணத்தில் கலந்து கொள்ளப் போகிறீர்களா அல்லது நீங்கள் இதனை தீர்ப்பதற்கு முன்வரப்போகிறீர்களா. நாங்கள் செய்ய வேண்டியதெல்லாம் செய்தாகிவிட்டது. இனி நாங்களே கற்களையும், கம்பிகளையும், பொல்லுகளையும் எடுத்துக் கொண்டு இரத்தத்தால் இந்தப் பிரச்சினையை ... (“தீர்ப்போம்!” என்று வசனத்தை முடிக்கிறது கூட்டம்). இது எங்கள் வெற்றுக் கூச்சலல்ல.”

இந்தப் பாரதூரமான உரைக்கு எதிராக எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்காத நீதித்துறை அடுத்த நாள் ஞானசார மிரட்டியதற்கு அடிபணிந்து அப்துல் ராசிக்கை கைது செய்தது.

இப்போது புதிய “சாசன பாதுகாப்பு சபை” (சாசனாரக்ஸ சபாவ) என்கிற அமைப்பைத் தொடங்கி அதன் கீழ் சிங்கள பௌத்த அமைப்புகளை அணிதிரட்டத் தொடங்கியிருக்கிறது.

அளுத்கம கலவரத்தைத் தூண்டியதற்காக இன்னமும் இவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை. வட்டறக்க விஜித தேரோவின் கூட்டத்தின் போது அதை பலாத்தகாரமாக குழப்பி மரண அச்சுறுத்தல் விடுத்த போதும் அங்கு பொலிசார் இருந்தார்கள். வட்ட்றக்க விஜித தேரோவைத் தேடி அமைச்சு காரியலாயத்துக்குள் பொலிசாரையும் மீறி சண்டித்தனமாக புகுந்து தடுத்தல் நடத்திவிட்டு போலீசாரோடு வம்புக்கு போனார்கள். பொலிசார் வேடிக்கை பார்த்தார்கள். அதன் பின்னர் அவர்கள் நடத்திய அடாவடித்தன ஊர்வலங்கள், கூட்டங்கள், மிரட்டல்கள் போன்றவற்றின் போதும் அருகில் பொலிசார் இருந்தார்கள். கண்டி தலதா மாளிகைக்கும் பொலிசாரையும் மீறி உட்புகுந்து சிங்கக் கொடியை ஏற்றினார்கள். அங்கும் பொலிசார் கோமாளிகளாக்கப்பட்டார்கள். கிழக்கு முதலமைச்சரின் காரியாலயத்துக்குள்ளேயே அவரை அசிங்கமாகத் திட்டி மிரட்டிவிட்டு வந்தார் சுமண தேரர். அதுவும் பொலிசார் முன்னிலையில் தான் நடந்தது.


மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி சுமண தேரர் பலாத்கார சிங்கள குடியேற்றங்களை நடத்தி வருவதும், அதை சட்ட ரீதியில் அணுகும் சிவில் அதிகாரிகள், பொலிசார் போன்றோரை தாக்க முற்படுவதும், தூசன வார்த்தைகளை பிரயோகித்து சண்டித்தனம் செய்வதும், கொலை அச்சுறுத்தல் விடுப்பதும் நிகழ்கிறது. பொலிசார் கையறு நிலையில் இருக்கின்றனர். சிவில் உத்தியோகத்தர்களின் கடமையை செய்வதற்கு பாதுகாப்பு வழங்குவதற்குப் பதிலாக சிவில் அதிகாரிகளின் கடமைக்கு குந்தகம் விளைவிக்கும் பிக்குமாருக்கு பாதுகாப்பு கொடுகிறார்கள். சிவில் அதிகாரிகள் பொலிசாரின் பாதுகாப்பு இன்றி கடமையை நிறைவேற்ற முடியாமல், அவமானப்பட்டு, சுயமரியாதை இழந்து தவிக்கிறார்கள்.


இலங்கையில் ஏனைய மதத் தலைவர்களால் இப்படி நிகழ்ந்திருக்க வாய்ப்பே இல்லை. அதன் விளைவை நினைத்துப் பார்க்கவே முடியாது.

சிலைகளின் அரசியல்
சிலைகளைக் கொண்டு போய்  தான் தோன்றித்தனமாக நினைத்த இடங்களில் நிறுவது ஒரு பௌத்த வேலைத்திட்டமாக ஆகியிருக்கிறது. ஆனால் புத்தர் தனக்கு சிலையமைப்பதோ, வணங்குவதையோ எங்கும் குறிப்பிட்டது கிடையாது. “வெறுப்பைத் தரும் இந்த உடலைக் காண்பதில் என்ன இன்பம்” (கிந்தே இமினா பூத்திகாயென திட்டென” என்று பாலியில்) என்று கேட்டிருக்கிறார். ஆரம்ப காலத்தில் புத்த சிலைகளை அமைப்பது அவருக்கு செய்யும் அவமரியாதை என்று நினைத்தார்கள். அதற்குப் பதிலாக தர்மசக்கரம், தூபி போன்றவற்றை பயன்படுத்தினார்கள். அசோக சக்கரவர்த்தி பௌத்த சிலைகளை உருவாக்கினார் என்றும், பௌத்தத்தைப் பரப்ப வந்த அவரின் இரட்டைப் பிள்ளைகளான மகிந்த, சங்கமித்த (இருவரும் பௌத்த துறவிகள்) ஆகியோரில் முதலில் இலங்கை வந்தவர் மகிந்த. மகிந்த தன்னுடன் 18 தேர்ந்த கலைஞர்களை அழைத்து வந்தார் என்றும் அவர்கள் இலங்கையில் புத்த சிலைகளை உருவாக்கியிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. ஆனால் பௌத்தர்களின் “புனித” வரலாற்று நூலான மகாவம்ச கதைகளின் படி துட்டகைமுனு உள்ளிட்ட பல அரசர்கள் புத்தர் சிலைகளை எப்படியெல்லாம் உருவாக்கினார்கள் என்று கூறப்படுகிறது.

புத்தர் பரிநிர்வாணம் அடைந்த அரச மரத்தின் கிளையை அசோக சக்கரவர்த்திக்கு ஊடாக சங்கமித்த இலங்கைக்கு கொண்டுவந்து அனுராதபுரத்தில் நட்ட வெள்ளரசு மரம் இன்றும் வழிபடப்பட்டு வருகிறது. இந்தியாவில் அந்த மரம் யுத்தத்தால் அழிக்கப்பட்ட நிலையில் மீண்டும் இலங்கையில் இருந்து கொண்டு செல்லப்பட்ட கிளையே புத்தகயாவில் வணங்கப்படுகிறது. 

பௌத்த நாடுகள் புத்தர் சிலைகளை இன்னொரு நாட்டுக்கு பரிசுப் பொருளாக கொடுக்கும் வழக்கம் பல நூற்றாண்டுகளாக நடந்துவரும் நிகழ்வு. இன்று அதன் நீட்சியானது பல நூற்றுக்கணக்கான சிலைகளை பரிசாகக் கொடுக்கும் வழக்கம் வளர்ந்துள்ளது. சீனா, ஜப்பான், தாய்லாந்து, பர்மா, கொரியா, வியட்நாம் போன்ற நாடுகளில் இருந்து இலங்கைக்கு மாத்திரம் இவ்வாறு வருடமொன்றுக்கு ஆயிரக்கணக்கான சிலைகள் பரிசாக வந்து சேர்கின்றன. அவற்றிற்கு புனித மரியாதை கொடுத்து பக்குவமாக பல்வேறு இடங்களில் நிறுவும் போக்கு இப்போது வளர்ந்துள்ளது.

பௌத்தம் ஒரு மதம் அல்ல. அது ஒரு வாழ்க்கை அறநெறி. அப்படியிருக்கையில் பௌத்தத்தின் போதனையை ஆராதிப்பற்குப் பதில், பௌத்த சிலைகள் ஆராதிக்கப்படுகின்றன.


இன்றைய நிலையில் இலங்கையில் பௌத்த சிலைகள் வெறித்தனமான ஆக்கிரமிப்பு ஆயுதமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் எழுகின்ற சர்ச்சைகளின் காரணமாக இரகசியமாக சிலைகள் உடைக்கப்படும் சம்பவங்கள் பல சமீபகாலமாக செய்திகளாக பதிவாகி வருகின்றன. சமீபத்தில் கூட கொழும்பு கோட்டை பகுதியில் உடைக்கப்பட்ட புத்தர் சிலையை ஒரு சர்ச்சைக்குள்ளாக்கி மீண்டும் பெரும் எடுப்போடு அந்த சிலைகள் புனரைக்கப்பட்டது. ஏனைய சமூகங்களுக்கு எதிரான பிரச்சாரத்தும் இந்த சம்பவத்தைப் பயன்படுத்திக்கொண்டனர்.

புத்தர் என்றும் தனக்கு சிலை வைக்கும்படியோ, ஏன் தன்னை வணங்கும்படி கூட எங்கும் தெரிவித்தது கிடையாது. அப்படியிருக்க உலகில் எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு அதிக புத்தர் சிலைகளைக் கொண்ட நாடாக இலங்கை ஆகியிருப்பது வெறும் புத்த பக்திக்காகத் தானா. அது ஆக்கிரமிப்பு உள்நோக்கமன்றி வேறேது.

கலாச்சார ஆக்கிரமிப்புக்கான ஆயுதங்களாக ஆகியிருக்கும் புத்தர் சிலைகளை பௌத்தர்கள் அல்லாதோர் தமக்கெதிரான பண்பாட்டு ஆயுதங்களாகவே கருதுகின்றனர். கருணையும், அகிம்சையும் வடிவான புத்தரின் சிலை வெறுப்பூட்டும் பூதமாகவே ஆக்கப்பட்டுள்ளது.

முதலில் அரச மரம் பின்னர் அதில் புத்தர் சிலை (அரச மரம் கட்டாயமில்லை), அதனைத் தொடர்ந்து விகாரை பின்னர் அதனைப் பராமரிக்க பிக்குகளும் அதற்கான உட்கட்டமைப்புகளும் சேர்ந்து விரிவாகிவிடும். அதனைத் தொடர்ந்து அதற்கு பாதுகாப்பு மற்றும் குடியிருப்புகள் என வளர்ந்து பெருகிவிடுகிறது. வழிபடுவதற்கோ, பராமரிப்பதற்கோ கூட எவரும் இல்லாத இடங்களில் கூட இவை உருவாக்கப்படுவதன் அரசியலை நாம் விளங்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது?

வரலாற்று ரீதியாகவும், அரசியலமைப்பு ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் பௌத்தர்களின் உரிமை இது என்கிற தர்க்கத்தை முன்வைத்து வருன்றனர்.
யுத்தத்தில் அழிக்கப்பட்ட இந்து, முஸ்லிம், கத்தோலிக்க மத ஸ்தளங்கள் மீள புனரமைத்துக் கொடுப்பதற்குப் பதிலாக அங்கு அம்மக்களுக்கு அவசியமற்ற புத்தர் சிலைகளை திணிப்பதன் சூட்சுமம் என்ன? சிங்கள பௌத்தத்தை நிறுவனமயப்படுத்தும் தொடர் வேலைத்திட்டத்தின் அங்கமல்லவா இது.


குறிப்பாக யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர் மதவுணர்வையும், பண்பாட்டுப் பதட்டநிலையையும் தூண்டும் முக்கிய ஒரு சிக்கலாக சிலை வைப்புகள் வடிவமெடுத்துள்ளன. பல பிரதேசங்களில் கைகலப்பு வரை கொண்டு சென்றுள்ளன. பல நூற்றுக்கணக்கான வழக்குகள் நாடெங்கிலும் இது தொடர்பில் நடந்து வருகின்றன. சில இடங்களில் புத்தருக்கு பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டிய வேடிக்கை தொடர்கிறது.

இலங்கையில் மதச் சிலைகளை நிறுவது கூட சிரமமிருக்காது. ஆனால் அதனை அகற்றுவது பெரும் பதட்டதையோ, கலவரத்தையோ உண்டு பண்ணும் விடயம். பொதுவாகவே இந்த ஆக்கிரமிப்பு மதச் சின்னங்களின் மீது கை வைப்பது என்பது பெரும் சிக்கலைத் தோற்றுவிக்கும் ஒன்றாக இலங்கையில் ஆகியிருக்கிறது. அப்படியிருக்கையில் பௌத்த சிலைகளை எதிர்த்து நிற்பது என்பது, சிங்கள பெரும்பான்மை மக்களையும், படையினரையும், அரசாங்க அதிகாரிகளையும், அரசையும் எதிர்த்து நிற்பதைப் போலாகிவிடும் என்கிற பயத்தால் கையறு நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள் மக்கள்.

பௌத்தத்தை வழிபடுவதற்கு தயாரான சமூகத்தவர்களும் கூட பௌத்தத்தை வெறுத்து ஓடும் மனநிலைக்கு உள்ளாகியுள்ளார்கள்.

இலங்கையில் அரச காரியாலயங்கள், பிரதேச செயலகங்கள், அமைச்சுக்கள், திணைக்களங்கள், விமான நிலையம், துறைமுகம், ஆஸ்பத்திரிகள் வீதிகள், சந்திகள், மலையுச்சிகள் என அனைத்து இடங்களிலும் புத்தரின் ஆக்கிரமிப்பு விரிவாகியிருக்கிறது. ஒரு பல்லின சமூகங்கள் வாழும் நாட்டில் இது பரஸ்பர இனப் பண்பாட்டு வெறுப்புணர்ச்சியை தோற்றுவித்திருக்கிறது என்றால் மிகையில்லை.

மதமாற்றத்துக்கு எதிரான சட்டத்தை வலியுறுத்தி அரசியல் நிர்ப்பந்தங்களை தொடர்ச்சியாக செய்துவரும் பௌத்தத தரப்பு பௌத்தர்களல்லாதோரின் பிரதேசங்களில் பௌத்தத்தை திணிப்பதன் தார்மீகம் தான் என்ன?

பௌத்தர்கள் அல்லாதோர் அனைவரும் மதம் மாற்றப்பட்டவர்கள் என்று பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அப்படி என்றால் இலங்கையில் உள்ள பௌத்தர்கள் யார். இலங்கையில் பௌத்தம் வருவதற்கு முன்னர் அவர்கள் எதைப் பின்பற்றியிருந்தார்கள்.

இலங்கையில் உள்ள சிங்கள பௌத்தர்கள் தவிர்ந்தவர்கள் அனைவரும் வந்தேறிகள், கள்ளத்தோணிகள் என்றால் பௌத்தர்கள் யார். அவர்கள் இந்தியாவில் இருந்து வந்த மூத்த கள்ளத்தோணிகள் என்பதை அவர்களின் புனித நூல் மகாவம்சம் சொல்லவில்லையா.

சில பதட்டத்துக்கு உரிய இடங்களில் ஏனைய சமூகங்களின் உரிமைகளை பறிக்க வேண்டுமென்றால் முதலில் அங்கே ஒரு புத்தர் சிலையை கொண்டு சென்று வைப்பது சாதாரண சண்டியர்கள் தொடக்கம், “பாதுகாப்புப்” படையினர் வரை புரியும் கைங்கரியமாக ஆகியிருக்கிறது.

பௌத்தத்தை வளர்ப்பதாகக் கூறி புத்தரை வெறுக்கும் நிலையை விதைத்து வருகிறார்கள். இன்று நிகழ்வது புத்தரின் ஆகிரமிப்பல்ல, பௌத்தம் தான் பௌத்த கயவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது. இதற்காகத் தான் அமைச்சர் மனோ கணேசனும் சமீபத்தில் “பௌத்தத்தை பௌத்தர்களிடம் இருந்து பாதுகாக்கும் இயக்கம் அவசியம்” என்று சமீபத்தில் கூறினார் போலும்.

ஒட்டுமொத்தத்தில் சிங்கள பௌத்த பாசிசத்தின் விரிவாக்கமாகவே இன்று வளர்ந்து விரிந்துள்ளது. பௌத்தர்களல்லாதோரின் அச்ச உணர்வில் இருக்கும் நியாயத்தை வரலாறு கற்பித்தே வந்துள்ளது. 

பௌத்த மதம் இலங்கையில் அரச மதமாக இருந்துவிட்டுப் போகட்டும். இலங்கையில் சிறுபான்மை இனங்களும், மதங்களும், அதாவது சிங்கள பௌத்தரல்லாதோர் பயப்படுவது அதற்கு அல்ல. பௌத்தத்துக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக அல்ல. மாறாக அதன் பேரால் தமக்கு அநியாயம் நேர்ந்து விடக்கூடாது என்பதற்காகத் தான். தமக்கான பாதுகாப்புக்கு அச்சுறுத்தலும், பாரபட்சமும், அநீதியும் இழைக்கப்பட்டுவிடும் என்பதற்காகத தான். சமத்துவத்துக்கான உத்தரவாதம் இல்லாமல் போய் விடும் என்பதற்காகத்தான்.

எதற்காக அவர்கள் பயப்பட்டார்களோ அந்த பயத்தைத் உறுதி செய்யும் நிலை தான் இன்று வளர்ந்துவிட்டிருக்கிறது. அரச இயந்திரத்தால் சிறுபான்மை சமூகங்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதமளிக்க முடியாது போயிருக்கிறது. அது மட்டுமன்றி இந்த பௌத்த பாசிச போக்குக்கு உடந்தையாக அரச இயந்திரம் ஆகியிருக்கிறது.

நன்றி - தினக்குரல்


Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates