“சுடர் ஒளி” பத்திரிகையின் 15 ஆண்டு நிறைவை முன்னிட்டு வெளியிடப்பட்ட விசேட பதிப்புக்கு “ஊடகம்” குறித்த ஒரு கட்டுரையொன்று கேட்டுக்கொண்டதற்கிணங்க எழுதிய கட்டுரை. மனதில் குடைந்துகொண்டிருந்த விடயங்கள் பலவற்றை எழுத ஒரு வாய்ப்பாக இந்தக் கட்டுரையை பயன்படுத்திக்கொண்டேன். ஆனால் அக்கட்டுரையின் உயிர் பிரித்தெடுக்கப்பட்டு சிறிதாக்கி வெறும் ஜடத்தை பிரசுரித்து விட்டார்கள் (எழுதியவற்றில் மூன்றில் ஒருபகுதி). என்னிடம் கட்டுரையைக் கேட்ட நண்பர்களுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. அதேவேளை இந்தக் கட்டுரையை எதற்காக எழுதினேனோ அந்த கார்பரேட் மாபியாத்தனமே இதனை கொத்தி வெட்டியதிலும் நிகழ்ந்திருகிறது என்பதை வெட்டிய பகுதிகளைப் பார்த்தால் நீங்களே புரிந்துகொள்வீர்கள்.
“தெரிவிப்பது நாங்கள்...!
தீர்மானிப்பது நீங்கள்!”
இப்படியான ஊடக விளம்பரங்களை நாங்கள் பார்த்திருப்போம். மேம்போக்கில் ஆஹா நமது தெரிவுக்காக அக்கறையுடன் செய்தி தருபவர்களா இவர்கள் என்கிற பூரிப்பு வரும் அளவுக்கு அந்த விளம்பரங்களை நாம் கடந்திருப்போம்.
இதில் எந்தளவு உண்மை இருக்கிறது? தெரிவிக்கப்பட்டவற்றைக் கொண்டு தீர்மானிக்கிறோமா அல்லது தீர்மானிக்கப்பட்டவற்றைத் தான் பெறுகிறோமா? உண்மையைச் சொல்லப்போனால் தீர்மானிக்கப்பட்டவற்றைத் தான் பின்னர் நுகர்வோர் பெற்றுகொள்ளுகின்றனர் என்பதே கசப்பான உண்மை. மேம்போக்கில் இந்த கருத்தை எவராலும் மறுக்கவும் இயலும். ஆனால் இதன் பின்னால் உள்ள ஆழ்ந்த நுண்ணரசியலை நாம் ஆராய வேண்டும்.
இன்று உலகிலுள்ள பெரும்போக்கு (mainstream) ஊடகங்கள் பல ஊடகவியலாளர்களிடம் இல்லை. அது கார்ப்பரேட்டுகளிடமும், வியாபார, அரசியல், அதிகாரத்துவ சக்திகளிடமே உள்ளது. ஆக தீர்மானிக்கும் சக்திகளாக ஊடகவியலாளர்கள் இல்லை. அதற்கு அன்றாட உதாரணங்கள் எத்தனையோ ஊடகவியலாளர்களால் கூற முடியும். ஆக தகவலும், கருத்தும் நம்மிடம் எங்கே இருக்கிறது. அது கட்டுபடுத்தப்பட்டது. ஆதிக்க தரப்பிடம் சிக்கியுள்ள ஊடகத்துறையை அந்த ஆதிக்கத தரப்பு நேரடியாக தணிக்கை செய்ய வேண்டுமென்பதில்லை அவர்களின் தேவையை உணர்ந்து தாமே ஒரு வகை சுயதணிக்கைகளுக்கு உடபடுத்தித் தான் இன்று ஊடகவியலாளர்கள் இயங்கும் நிலை. அவர்களின் இருப்புக்கு வேறு வழி இல்லை என்றே கூறினால் அது மிக இல்லை.
ஊடகவியலாளர்கள் ஊடக நெறிக்கு மாத்திரம் கட்டுப்பட்டவர்கள் அல்லர். தாம் சம்பளம் வாங்கும் எஜமானர்களின் விதிக்கும் நெறிகளுக்கும் தவிர்க்கமுடியாதபடி கட்டுபட்டவர்களே.
இன்று எது மக்களுக்குத தேவையோ, எதை மக்களுக்கு வழங்கவேண்டுமோ அதைக் கொடுப்பதிலும் பார்க்க, “எதைத் தம்மால் கொடுக்க முடியுமோ” அதைக் கொடுக்கும் நிலை உருவாகியுள்ளது. லட்சிய ஊடக படைப்புகளுக்கு பதிலாக, தமது இயலுமைக்கு உட்பட்ட விடயங்களுடன் மட்டுபடுத்திக்கொண்ட ஊடகவியலாளர்கள் உருவாக்கப்பட்டு வருகிறார்கள். இந்த நிலை மாற்றப்பட வேண்டும். இலங்கையில் உள்ள ஊடக அமைப்புகள் கூட தமது உரிமைகளுக்காக அரச அதிகாரத்திற்கு எதிராக போராடும் அளவுக்கு ஊடக நிறுவனங்களில் தமது கருத்துச் சுதந்திரத்துக்காகப் போராடும் நிலை இல்லையே ஏன் என்கிற கேள்வியை இங்கு எழுப்ப வேண்டியிருக்கிறது. தாம் சுயதணிக்கையுடன் பணி புரிகிறார்களா இல்லையா என்பதை இதய சுத்தியுடன் சுய விசாரணை செய்துகொள்ளவேண்டும்.
தகவல்கள், தரவுகள் என்பன செய்தியாகி அவை கருத்துருவாகி சித்தாந்த உருவாக்கத்துக்கும், சிந்தனையுருவாக்கத்துக்கும் வித்திடுகிறது. இந்த போக்கில் தகவல்களும் தரவுகளும் மிகவும் அடிப்படையானவை. ஆக முதல் கோணல் முற்றிலும் கோணலுமாக ஆகின்றதென்றால் தகவல் உறுதியானதாகவும், உண்மையானதாகவும் இருக்க வேண்டும் என்பது முன்நிபந்தனை.
எந்த தகவல் வழங்கப்படவேண்டும், எது தவிர்க்கப்படவேண்டும், எது எப்படி திரிக்கப்படவேண்டும், எது மட்டுறுத்தபடவேண்டும் போன்றவற்றை தீர்மானிப்பதில் செல்வாக்கு செலுத்தும் காரணிகளையும், காரணகர்த்தாக்களையும் நாம் பகுத்தறிய வேண்டியிருக்கிறது.
சராசரி நாளாந்த செய்திப் பத்திரிகைகளை மக்கள் அந்த தகவல்களுக்காகவே காத்திருக்கிறார்கள். ஆக சிந்தனாவுருவாக்கத்துக்கும், பகுப்பாய்வுகளுக்கும், மதிப்பீடுகளுக்கும் தலையாய இந்த தகவல்கள் யாரிடம் இருக்கிறது? யார் கட்டுபடுத்துகிறார்கள்? யார் தீர்மானிக்கிறார்கள்? எதை வெளியிடுவது எதைத் தவிர்ப்பது எவரிடம் சேர்ப்பிப்பது (விற்பது) என்பதை தீர்மானிப்பது யார்? இதில் ஊடகவியலாளர்களின் பாத்திரமென்ன, ஊடக நிறுவனங்களின் நிர்வாகத்தின் (எஜமானர்களின் ஏவலாளர்கள்) பாத்திரமென்ன? போன்ற கேள்விகளை நாம் எழுப்ப வேண்டியிருக்கிறது.
ஒரு காலத்தில் தேசியவாதம் ஊடகங்களில் விலைபோகக்கூடிய சிறந்த சரக்காக இருப்பதும் இன்னொரு சீசனில் தேசியவாதத்தை மறுப்பதே விலைபோகின்ற சரக்காகவும் ஆகிவிடுகிறது. இங்கு செய்தி, தகவல், கருத்து என்பன பல சந்தர்ப்பங்களில் சந்தையில் உள்ள கேள்வியை நிறைவு செய்யும் சரக்காக ஆக்கப்பட்டு விடுகிறது. இது அச்சு ஊடககங்களுக்கு மாத்திரமல்ல, இலத்திரனியல் மற்றும் இணைய ஊடகங்களுக்கும் அதிகம் பொருந்தும்.
தமது நலன்களுக்குட்பட்ட விடயங்களையும் வாசகர்களின் ஜனரஞ்சக அலைவரிசையையும் ஒருங்கிணைத்து (syncronize) அதற்கொப்ப இயங்கும் ஊடகத்துறையே இன்று உள்ளது. வாசகர்களின் ஜனரஞ்சக தேவை என்பது ஏற்கெனவே இதே ஊடகங்களால் புனையப்பெற்றவை என்பதிலிருந்து இதனை நாம் விளங்கிக்கொள்வது அவசியம்.
இன்றைய மக்களின் சுதந்திரமான சிந்தனைக்கு அச்சுறுத்தலாக ஆகியிருக்கிறது இந்தப் போக்கு. இந்தபோக்கைத் தான் நாம் ஒரு வகையில் ஊடக பயங்கரவாதம் என்கிறோம். வலுவான மாற்று ஊடகங்கள் உருவாக்கப்படாத வரை, பலப்படுத்தப்படாத வரையில், இந்த ஊடக பயங்கரவாதம் ஒரு போதும் முடிவுக்கு வரப்போவதில்லை.
ஊடகங்களால் தாம் எவ்வாறு வழிநடத்தப்படுகிறோம் என்கிற நுண்ணரசியலைப் பற்றி ஊடகங்களை நுகர்வோர் கூட போதிய புரிதலை உணர முடியாதளவுக்கு வைத்திருப்பது தான் இன்றைய ஊடக உலகம் கண்டுள்ள மகத்தான வெற்றி.
ஊடகம் இன்று நம்மையெல்லாம் வழிநடத்துகிறது. நம்மை வழிநடத்துகிறது என்று கூறப்படுவதன் அர்த்தம் இன்றைய எமது சிந்தனைகளை தீர்மானிப்பதாக அது ஆகிவிட்டிருக்கிறது. இன்றைய பெரும்போக்கு (mainstream) எது என்று தீர்மானிக்கும் சக்தியாக அது ஆகிவிட்டிருக்கிறது. பிற்போக்கு ஆதிக்க சித்தாந்தங்களை பெருங்கதையாடல்களாக ஆக்கி அவற்றை நிலைநிறுத்தும் கருவியாக இது ஆகிவிட்டிருக்கிறது.
ஊடகத்தை யார் கொண்டிருக்கிறாரோ அவரிடம் - அச்சக்தியிடம் மனித நடத்தையை கட்டுப்படுத்தும் அதிகாரம் இருக்கிறதென்று கூறலாம். ஊடகத்தை கொண்டிருப்பவர் அல்லது கொண்டிருக்கும் சக்தியிடமே சிந்தனையை மட்டுப்படுத்தும், கட்டுப்படுத்தும், வழிநடத்தும் சக்தி உண்டு. இவ்வாதத்துக்கு மறுப்பு கூறும் சாரார் இதனை, இன்னும் ஊடகம் சென்றடையாத பின்தங்கிய நாடுகளில்’ பின்தங்கிய கிராமங்கள் அதிகமுள்ள உலக சமுதாயத்தில் இக்கருத்து எப்படி சரியாகும் என வினவுவர். ஆனால் பின்தங்கச் செய்யப்பட்ட சமுதாயங்களில் நிச்சயம் ஊடகம் நேரடியாக சென்றடைய வேண்டுமென்பதில்லை. அந்த சமுதாயங்களை அதிகாரம் செலுத்துகின்ற சமூக, பொருளாதார, அரசியல், பண்பாட்டம்சங்கள் இந்த ஊடகங்களால் ஏலவே வழிநடத்தப்பட்டிருக்கும். ஆக, இன்று இந்த ஊடகம் வழிநடத்தாத எந்த சமூகமும் உலகில் இல்லை. ஊடகம் இன்று சகலவற்றையும் தீர்மானிக்கின்ற முக்கிய கருவியாக ஆகிவிட்டிருக்கிறது. இன்றைய ஊடகங்களை தன்னகத்தே கொண்டிருக்கும் அதிகாரத்துவ சக்திகள், தமது அதிகாரத்தை நிலைநாட்ட ஊடகங்களை மிகவும் தந்திரமாகவும் நுட்பமாகவும் கையாண்டு வருகின்றன. ஏற்கெனவே புரையோடிப் போயிருக்கின்ற அதிகாரத்துவ சிந்தனைகளை, ஆதிக்க சிந்தனைகளை, உறுதியாக பலப்படுத்துவதில் இந்த கைதேர்ந்த ஊடகங்களைக் கையாள்கின்றன.
ஆதிக்க பிற்போக்கு சிந்தனைகளையும், மரபார்ந்த அதிகார ஐதீகங்களையும் மீளுறுதி செய்கின்ற வகையில் அதன் சித்தாந்த மேலாதிக்கத்தை இந்த ஊடகங்களைக் கொண்டே இன்று உலகம் முழுவதுமாக அதிகார சக்திகள் செய்து வருகின்றன. ஆதிக்க சித்தாந்தங்களை ஜனரஞ்சகமாக நிலைநாட்டுவதிலும் மூளைச்சலவை செய்து அடிபணிய வைக்கும் முயற்சியிலும் இந்த ஊடகங்களை மிகவும் நுட்பமாக பயன்படுத்தி வருகின்றன.
நோம் சொம்ஸ்கி இதனை தொடர்பூடக பயங்கரவாதம் (Media Terrorism) என்கிறார். இந்தப் போக்கை ஆராய்கின்ற இன்னும் சில சமூகவியலாளர்கள் இதனை தொடர்பூடாக மாபியா (Media Mafia) என்றும் ஊடக வன்முறை (Media Violation) என்றும் குறிப்பிடுகின்றனர். ஒட்டுமொத்தத்தில் இந்த ஊடகங்கள் இன்று ”அதிகாரத்துவத்தின் கருவிகளாக” (Media as a Weapon of power ) பயன்படுத்தப்படுகின்றன.
போர்க்கருவியாக ஊடகம்
வர்க்கம், பால்வாதம், இனவாதம், வயதுத்துவம், பதவி, சாதியம், நிறவாதம் என பல்வேறு வடிவங்களிலும் நிலவுகின்ற ஆதிக்க உறவுகள், அதிகாரத்துவமாக தொடர்ந்தும் நிலைபெற அவற்றிற்கு நியாயம் கற்பிக்கப்பட வேண்டும். “மதத்தின்” பெயரால், ”தூய்மை”யின் பெயரால் இந்த கற்பிதங்கள் குறித்து மூலைச்சலவை மிகுந்த சித்தாந்த மோதிக்கத்தை நிலைநாட்டியே ஆகவேண்டும்.
இப்படி கருத்தேற்றம் செய்யப்பட்ட கற்பிதங்களை நிலைநாட்டுவதில் ஊடகம் முக்கிய பங்காற்றி வருகின்றன. இந்த வகையில் ஊடகம் பற்றிய நமது பார்வை எளிமைப்படுத்தப்பட்டே இருக்கின்றன. குறைத்து மதிப்பிடப்படுகின்றன. ஊடகம் நம்மை ஒன்றும் செய்து விடமுடியாது என்கின்ற மாயையில் இருத்தப்பட்டுள்ளோம். எனவே தான் ஊடகத்தின் வடிவம், பண்பு, அதன் திசைவழி என்பன குறித்து அவ்வளவாக எம்மத்தியில் அக்கறை கிடையாது.
ஒரு தொலைக்காட்சி நிறுவனம் 30 வினாடிகள் கொண்ட ஒரு விளம்பரத்துக்கு சராசரியாக எவ்வளவு அறவிடப்படுகிறது என்பதைத் தெரிந்தால் அசந்து போவோம். ஒரு தடவைக்கு இவ்வளவு அறவிடப்படுகிறதென்றால் எத்தனை முறை குறிப்பிட்ட விளம்பரம் வருகின்றது? அப்படியெனில் எவ்வளவு தொகை ஆகிறது? நம்மீது அது எந்த விளைவையும் ஏற்படுத்தப் போவதில்லையென்றால் ஒரு நிறுவனம் ஏன் இவ்வளவு தொகையை அவ்விளம்பரத்துக்கென ஒதுக்குகிறது? அவ்வாறெனில் விளம்பரம் எவ்வாறு எம்மில் பிரதிபலிக்கின்றது? என்ன விளைவை ஏற்படுத்துகிறது?
இன்று சகல தளங்களிலும் தகவல்களுக்கும், தரவுகளுக்கும் பெரும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. அது போலவே தகவல்களை களஞ்சியப்படுத்துவதற்கும் அவற்றைத் சந்தைப்படுத்துவதற்காவும் உலக அளவில் பாரிய பல்தேசிய கம்பனிகள் இயங்குகின்றன. தரவுகள், தகவல்கள் பரப்பப்படுவதற்கு - சந்தைபடுத்துவதற்கு முன்னரே அதன் நுகர்வோர் யார் என்பது இந்த தகவல் முதலாளிகளால் தீர்மானிக்கப்பட்டு விடுகின்றது. ஆக, தகவல் தொழில்நுட்பத்தின் மீது மூலதனம் பாரிய அளவு ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருக்கிறது.
தரவுகளையும், தகவல்களையும் சித்தாந்த சுமையேற்றி பரப்புகின்ற பணியை சகல ஆதிக்க சக்திகளும் மேற்கொண்டுவருகின்றன. அதற்கேற்றபடி அதன் வடிவம், வரிசை, உள்ளடக்கம், பண்பு என்பன கட்டமைக்கப்பட்டுவிடுகின்றன. இத்தகவல்களை வழங்குகின்ற சாதனமாக, சகலவற்றையும் தீர்மானிக்கும் சக்தியாக இந்த ஊடகங்கள் தோன்றி, வளர்ந்து, ஊடுருவி, வியாபித்திருக்கின்றது. ஆதிக்க சக்திகள் தமது அதிகாரத்துவத்தை தக்கவைக்க, அதனை விரிவுபடுத்த மிகக் கனமாக தகவல்களை உற்பத்தி செய்து, உற்பத்தி செய்யப்பட்ட அத்தகவலை அரசியல்மயப்படுத்தி’ கருத்தேற்றம் செய்து அல்லது புனைந்து, திரிபுபடுத்தி, பெருப்பித்து, சிறுப்பித்து சந்தைக்கு விடுகின்றன.
இதற்காக இரண்டு வகை பிரதான தந்திரோபாயங்களை அது அணுகும். முதலாவது, சந்தையில் ஏற்கெனவே கேள்வி அதிகம் (ஏற்கெனவே புரையோடிப்போயுள்ள ஆதிக்கக் கருத்துக்கள்) எதற்குண்டு என பார்த்து அந்த இடைவெளியை நிரப்புவது. இரண்டாவது, தம்மால் சந்தைப்படுத்த விரும்புகின்ற புதிய செய்திகளை கருத்தாக்கங்களை, புனைவுகளை சந்தைக்கு விட்டு சமூகத்தை அதற்கு பழக்கப்படுத்துவது, போதைகொள்ளச் செய்வது.
இந்த நூற்றாண்டின் அறிவைக் கட்டுப்படுத்தும் மிகப்பெரும் தீர்மானிக்கும் சக்தியாக ஊடகம் (media) மாறியிருக்கிறது. சமீப காலமாக சமூக ஊடகங்களின் செல்வாக்கு பாரம்பரிய ஊடக போக்கை புரட்டிப்போடத் தொடங்கியிருக்கிறது. ஒரு வகையில் கட்டற்ற கருத்துப் பரிமாறலுக்கான வெளியையும், பஞ்சமற்ற தகவல் வெளியை ஏற்படுத்தியதாக ஒரு மாயத்தோற்றத்தை அது தருகிறது. அதேவேளை ஆதிக்க தரப்பிடமே அதன் நெம்புகோல் தொடர்ந்தும் இருக்கிறது. தகவல்களையும், தரவுகளையும் கருத்தாக்கமாக மாற்றித்தரும் செயன்முறை ஆதிக்க மற்றும் அடக்குமுறைகுள்ளாகும் சக்திகளுக்கிடையேயான ஒரு போராக தொடர்ந்தும் நடந்துகொண்டுதான் இருக்கிறது.
கூகிள் ஒரு முன்னுதாரணம்
இன்று உலகளாவிய ரீதியில் தகவல் ஏகபோகத்தையும், கருத்து ஏகபோகத்தையும் படிப்படியாக பறித்து, அறிவுத்துறை ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது கூகிள். இலவச சேவைகளை பலவற்றை வழங்கிவருதற்கூடாக உலகின் பெருவாரியோனரை கூகிளின் அடிமையாக ஆக்கி வைத்திருக்கிறது. தாம் அடிமைப்பட்டு இருக்கிறோம் என்பதை விளங்கியவர்கள் கூட தன் சேவைகளிலிருந்து விலக முடியாதபடி ஒரு உலகத்தை உருவாக்கி ஆக்கிரமித்து வருகிறது. அதன் வளர்ச்சிப்போக்கு ஒருபுறம் இலவசங்களுக்கு அடிமையான அப்பாவி நுகர்வோருக்கு வசதியாக இருந்தாலும் மறுபுறம் வோட்டு கேட்காமலேயே உலகை கட்டுபடுத்துகின்ற அதிகாரியாக தம்மை ஆக்கியுள்ளது கூகிள் என்றால் அது மிகையில்லை.
இது குறித்து சிவா சத்தியநாதன் என்கிற அமெரிக்கர் எழுதிய “The Googlization of Everything” நூல் மிகவும் பரபரப்பாக பேசப்படுகிறது. அனைத்தும் கூகிள்மயமாகிவருவதன் ஆபத்தை அவர் நான்கு வருடங்களுக்கு எழுதிய நூல் நவீன ஊடகத்துறை குறித்த ஆய்வுகளுக்கு மிகவும் முக்கியமான ஒன்று. கூடவே கூகிள் தேடிபொறி இயந்திரத்தின் ( search engine) எகபோகத்தையும் தன்வசமாக்கியுள்ள கூகிள் உலகில் வலைத்தளங்களை வைத்திருப்போருக்கு கொடுத்திருக்கும் SEO (search engine optimization) நிபந்தனைகளின் மூலம் அவற்றின் எல்லைகளையும் வரையறுக்கிறது. அந்த நிபந்தனைகளை எற்பவர்களையே தமது தேடுபொறி இயந்திரத்தில் உரிய இடத்தை வழங்கமுடியும் என்கிற ஆணை கூர்ந்து கவனிக்கத்தக்கது.
அதிகாரம், பணம் போன்ற ஆதிக்க, அதிகார வர்க்க, ஏகபோக, முதலாளித்துவ சக்திகளின் கூட்டுத் தேவையை நிறைவு செய்வதன் மூலம் இலாபம் சம்பாதிப்பதே கூகிளின் அடிப்படை நெறி. இதில் மக்கள் நலன் என்பது வெறும் கண்துடைப்பே.
ஊடக முதலாளிகளின் நலன்களுக்குட்பட்ட விடயங்களையும் வாசகர்களின் ஜனரஞ்சக அலைவரிசையையும் ஒருங்கிணைத்து (syncronize) அதற்கொப்ப இயங்கும் ஊடகத்துறையே இன்று உள்ளது. வாசகர்களின் ஜனரஞ்சக தேவை என்பது ஏற்கெனவே இதே ஊடகங்களின் புனைவுகளுக்கு ஆட்பட்டவை என்பதிலிருந்து இதனை நாம் விளங்கிக்கொள்வது அவசியம்.
இன்றைய மக்களின் சுதந்திரமான சிந்தனைக்கு அச்சுறுத்தலாக ஆகியிருக்கிறது இந்தப் போக்கு. இந்தபோக்கைத் தான் நாம் ஒரு வகையில் ஊடக பயங்கரவாதம் என்கிறோம். வலுவான மாற்று ஊடகங்கள் உருவாக்கப்படாத வரை, பலப்படுத்தப்படாத வரையில், இந்த ஊடக பயங்கரவாதம் ஒரு போதும் முடிவுக்கு வரப்போவதில்லை.
நன்றி - சுடரொளி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...