Headlines News :
முகப்பு » , , , , » நீதிபதி எப்படி தனக்கு தீர்ப்பு வழங்க முடியும்? (1915 கண்டி கலகம் –58) - என்.சரவணன்

நீதிபதி எப்படி தனக்கு தீர்ப்பு வழங்க முடியும்? (1915 கண்டி கலகம் –58) - என்.சரவணன்

ஆர்மண்ட் டீ சூசா
கேகாலைப் படுகொலை விசாரணையை விசாரிக்க அமைக்கப்பட்ட விசாரணை ஆணைக்குழு ஒரு பாரபட்சமான ஆணைக்குழுவாகவே அமைந்தது. அதன் இறுதி அறிக்கை கூட ஒரு கண் துடைப்பாகவே இருந்தது. அந்த ஆணைக்குழுவுக்கு ஆணையாளர்களாக நியமிக்கப்பட்ட ஐவரில் ஒருவர் மாத்திரமே இலங்கையர். அவர் சேர் சொலமன் ஒபேசேகர. ஏனையோர் ஆங்கிலேயர்கள். இந்த ஆணைக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்ட சே அலெக்சாண்டர் வூட் ரெண்டன் (Chief Justis Sir Alexander Wood Renton) உயர் நீதிமன்ற நீதியரசராக இருந்தவர். ஆணைக்குழு அறிக்கை குறித்து எழுந்த கண்டனங்களுக்கு ரெண்டனும் ஆளானார். 201 பக்கங்களைக் கொண்ட சாட்சியங்கள் ஆடங்கிய விசாரணை அறிக்கை இறுதியில் 14 பக்கங்கள் அடங்கிய பரிந்துரையுடன் அறிக்கையாக வெளியிடப்பட்டிருந்தது.

இந்த அறிக்கை குறித்து பல்வேறு தரப்பிலிருந்து எழுந்த பல்வேறு கண்டனங்களில் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது  ஆர்மண்ட் டீ சூசாவின் கடிதப் பரிமாறல்கள். ஆங்கிலேய ஆட்சியாளர்களுடன் அவர் மேற்கொண்ட கடிதப் பரிமாறல்கள் அவரது “100 நாள் இராணுவ சட்டத்தின் கீழ் இலங்கை” (Hundred days: Ceylon under martial law in 1915) என்கிற நூலின் இறுதி அத்தியாயங்கள் இரண்டிலும் காணக் கிடைக்கின்றன. அவர் “த சிலோன் மோர்னிங் லீடர்” பத்திரிகையின் ஆரியரும் கூட. எனவே மிகவும் துணிச்சலாக அவர் கேள்விகளை எழுப்பியிருக்கிறார். இந்த கலவரம் குறித்த பல விளக்கமான ஆதாரங்களைக் கொண்ட அந்த நூலில் உள்ள அந்தக் கடிதங்கள் மிகவும் முக்கியமானவை. உத்தியோகபூர்வமான கடிதப் பரிமாறல் என்பதால் காரசாரமான, அதேவேளை நாகரீகமான வார்த்தைகலைக் கொண்டவை அவை.

மேலும் இந்த விசாரணை குறித்த பல விடயங்களை ஆணைக்குழு அறிக்கையாகத் தொகுக்குமுன்னமே அறிந்திருந்தார். அதன் பிரகாரம் அவர் அவ்வறிக்கை வெளியாகு முன்னமே அந்த உள்ளடக்கம் தொடர்பில் ஆங்கிலேய ஆட்சியாளர்களுடன் கடிதத் தொடர்பை ஏற்படுத்தியிருக்கிறார்.
எச்.ஜே.சீ.பெரேரா, ரெண்டன் போன்றோரின் கடிதங்களிலிருந்து இந்த ஆணைக்குழு நீதியைத் தரப்போவதில்லை என்பதை முன்னரே அறிந்திருந்தார் சூசா. பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் வாதாடிய வழக்கறிஞர்கள் அந்த ஆணைக்குழுவிள் இருந்த நீதிபதிகள் நடந்துகொண்ட முறையும், சாட்சிகளுக்கு பாதகமாகவும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சாதகமாகவும் விசாரணையை நடத்தியதால் அந்த வழக்கறிஞர்கள் அனைவரும் விலகினர். இந்த ஆணைக்குழு விசாரணையின் போக்குக்கு அதுவே சிறந்த உதாரணம்.

Stubbs - ஸ்டப்ஸ்
சூசா இந்த விசாரணைகளின் போது தானும் அங்கிருந்து அவற்றைப் பதிவு செய்ய அனுமதிக்கும்படி காலனித்துவ செயலாளர் சேர் ரெஜினோல்ட் ஸ்டப்ஸ்ஸிடம் (Reginald Edward Stubbs) கடிதம் மூலம் கோரினார். அதற்கு அவர் அளித்த பதிலில் “இதனை மறுப்பதற்கு எந்த அவசிமும் இல்லை என்பதாலும் ஆணைக்குழுவுக்கு தெரியப்படுத்தும் வகையில் அது குறித்து அறிய முடியும்” என்றும் அவருக்கு பதிலளிக்கப்பட்டது. நீதிபதியின் ஆட்சேபனை இல்லையெனில் தமக்கு எந்த வித பிரச்சினை இல்லையென்றும் அறிக்கை வெளியிடப்படும் வரை அது குறித்து கருத்துக்களை வெளியிடுவதை தவிர்க்குமாறும் அறிவிக்கப்பட்டது.

எனவே நீதியரசர் ரெண்டனிடம் சென்று அனுமதி கேட்ட வேளை “நீண்ட பரிசீலனைக்குப் பின்னர் இந்த விசாரணையை இரகசியமாக மேற்கொள்வது என்று தீர்மானித்துள்ளோம்” என்று பதில் தரப்பட்டது. ஸ்டப்ஸ் இந்த விசாரணையை பகிரங்கமாக மேற்கொள்ளுமாறு அறிவித்திருந்தார். ஆனால் அதுவும் நடக்கவில்லை.

இந்த இராணுவச் சட்டக் காலத்தில் செய்தித் தணிக்கை கடுமையாக அமுல் படுத்தப்பட்டிருந்ததாலும் பத்திரிகையில் பகிரங்க அறிக்கைகள் பலவற்றை தவிர்த்துக்கொண்டார் சூசா. 

ஆளுநர் சேர் ஜோன் அண்டர்சனுக்கு 10.11.1916 அன்று ஆர்மண்ட் டீ சூசா எழுதிய கடிதத்தில் “கேகாலை படுகொலைகளை விசாரிக்கும் ஆணைக்குழு நடவடிக்கைகள் மற்றும் அதற்கு நியமிக்கப்பட்டவர்கள் குறித்தும் எனது எதிர்ப்பை தெரிவிக்குமுகமாக இவற்றை முன்வைக்கிறேன் என்று தொடங்கி பல விடயங்களை முன்வைக்கின்றார். அதன் சாரம்:

“...செய்தித் தணிக்கை அதிகாரியிடம் நான் சமர்ப்பிக்க இருந்த பல விபரங்களை உங்கள் முன் வைக்க விரும்புகிறேன். அவரிடம் இவற்றைத தெரிவித்திருந்தால் அதற்கு எந்த அர்த்தமும் இருக்காது என்பதால் நான் இதனை உங்களிடமே விளக்குகிறேன்...

உங்களுக்கு முன்னர் இருந்த ஆளுநர் ரோபர்ட் சார்மஸ் அடிக்கடி சேர் அலெக்சாண்டர் வூட் ரெண்டனை சந்தித்து வந்தவர். இராணுவ நீதிமன்றம் தமது கடமைகளை மேற்கொண்ட விதம் குறித்து நல்லபிப்பிராயம் கொண்டவர். அதனை பகிரங்கமாகவும் தெரிவித்திருக்கிறார். இந்த விசாரணைக் குழுவின் பிழையான போக்குகளை உங்கள் மீது சுமத்த முற்படுகின்றனர். அதே வேளை அவர்கள் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சாமான்யர்களின் அதிருப்திக்கு உள்ளாகியுள்ளனர். கடந்த ஆட்சியாளருக்கு அனுசரணையாக பல இடங்களில் இருந்தவர் ரெண்டன். அப்படியிருக்கையில் இந்த வழக்கை அவர் திறந்த மனதுடன் அணுகுவது சிரமமாகத்தான் இருக்கும். அதிகாரிகளின் கருத்துக்களை நான் அறிவேன்.

அடுத்தவர் ஸ்னைடர். அவரின் நியமனத்துக்கும் கூட பல எதிர்ப்புகள் உண்டு. இராணுவச் சட்டம் நடைமுறையில் இருந்த போது பல வழக்குகளில் ஈடுபட்டவர் அவர். அவர் சாதாரணர்கள் பலரை விசாரித்துவிட்டு பின்னர் இராணுவ நீதிமன்றத்திற்கு அனுப்பியவர். நீதிபதி என்கிற வகையில் அவர் அரசாங்கத்தின் தரப்பை சேர்ந்தவராக இருந்த அதேவேளை மரண தண்டனை விதிக்கக்கூடிய வகையில் தகவல்களை தொகுத்ததற்கு பொறுப்பானவர். அவரும் இந்த ஆணைக்குழுவில் திறந்த மனதுடன் மேற்கொண்டிருப்பார் என்று நினைக்கவில்லை.

இந்த நியமனங்கள் அரசாங்கத்தின் நன்மதிப்பை இல்லாது செய்யும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். 

...இந்த வழக்கில் சுமத்தப்பட்டிருகின்ற குற்றச்சாட்டுக்கள் பாரதூரமானவை. அவை நிரூபிக்கப்பட்டால் உச்ச தண்டனை வழங்க வாய்ப்புண்டு. அந்தக் குற்றத்தை இழைக்கவும், ஆணையிடவும், சிலவேளைகளில் அந்த வழக்கை நடத்துவதற்கு ஆலோசனை வழங்குவதும் நீதிபதியின் கடமை. நீதிபதி ஒருவர் வழங்கிய தீர்ப்பின் மீது குற்றம் சாட்டப்பட்டிருகின்ற வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நீதிபதியே தீர்ப்பு வழங்கும் நிலை சிக்கலானது. சேர் அலக்சாண்டர் வூட் ரெண்டனின் நிலையும் அது தான்.

இலங்கையின் பிரதான  நீதியரசர். அன்றைய பல வழக்குகளுக்கு ஆலோசகாராகவும் செயற்ப்பட்டவர். தீர்ப்புகளையும் வழங்கியவர் எனும் போது அந்த தீர்ப்புகளின் மீது அவரே எப்படி மீள தீர்ப்பு வழங்க முடியும். மக்களின் நம்பிக்கை சீர்குலைந்ததற்கு இதுவும் ஒரு காரணம். இது நியாயத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். விசாரணை திசை திருப்பப்படக் கூடும். 

...வழக்கை பதிவிடுவதற்கு ரெண்டன் தடை விதித்தார். இந்த விசாரணை பத்திரிகையாளர்களுக்கு மாத்திரம் தான் தடை. இதற்கு எதிராக எந்த நீதிமன்றத்துக்கும் செல்லலாம் என்றார். ஆனால் போது மக்கள் பார்வைக்கு தடையில்லை. எனவே நானும் ஒரு போது மகனாக உள்ளே செல்ல விரும்பியிருந்தேன். ஆனால் விசாரணை தனிப்பட்டது என்று கூறி நான் அறைக்குள் செல்வதை தடுக்கும் வகையில் நீதிமன்ற ஆணை பெறப்பட்டிருந்தது. உண்மையைச சொல்லப்போனால் கேகாலை ஆணைக்குழு விசாரணையை கவனிக்க போது மக்களுக்கும் அனுமதிக்கவில்லை...

..மக்களுக்கு எந்தத் தகவல்களையும் அறிவதை தடுத்த இந்தப் போக்கை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

அதிர்ஷ்டவசமாக பாதிக்கப்பட்ட குடும்பங்கள் சார்பில் வாதாடிய வழக்கறிஞர்களின் கருத்துக்களை அறியும் சந்தர்ப்பம் இருந்தது. அவர்கள் ஆணையாளர்களுக்கு எதிரான கோரிக்கையையும் முன்வைத்திருந்தார்கள். எச்.ஜே.சீ.பெரேரா, எச்.எல்.பெரேரா, ஈ.டபிள்யு.ஜெயவர்த்தனா. எப்.ஆர்.சேனநாயக்க, ஏ.மகாதேவ போன்றோர் அவர்களில் சிலர். வழக்குகளுக்கான செலவுகளில் ஒரு பகுதியை இவர்கள் தனிப்பட்ட ரீதியில் பொறுப்பேற்றிருந்தார்கள். இந்த வழக்கறிஞர்களுக்கு குறுக்குக் கேள்வி கேட்பதும் பல தடவைகள் தடுக்கப்பட்டன. 

...அதேவேளை குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் இருந்த வழக்கறிஞர்களான பீ.டபிள்யு.பாவா, கே.சீ.ஹெலி, எப்.ஹேலி போன்றோர் குக்குக் கேள்விகள் கேட்பதற்கு தாராளமாக அனுமதிக்கப்பட்டதுடன், அவர்கள் விரும்பிய சாட்சிகளை நீதிமன்றத்துக்கு வரவழைப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் தமது குற்றத்தை நியாயப்படுத்த போதுமான சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. நீதிபதி அரசாங்கத்தை பாதுகாக்கும் தரப்பிலேயே இருந்தார்.

...இந்த நிலைமைகளால் விசாரணை ஆரம்பித்த முதல் நாளே எச்.ஜே.சீ.பெரேரா, எச்.எல்.பெரேரா, ஈ.டபிள்யு.ஜெயவர்த்தனா. எப்.ஆர்.சேனநாயக்க, ஏ.மகாதேவ ஆகியோர் தமது எதிர்ப்பைத் தெரிவித்து இந்த விசாரணைகளில் இருந்து விலகி கொழும்பு திரும்பினர். ஆனால் ஆணைக்குழு விசாரணை அடுத்த நாளும் தமக்கேற்றபடி சுதந்திரமாகத் தொடர்ந்தது. 

கேகாலை விசாரணைக் கமிஷன் மக்களின் நம்பிக்கையைப் பெறத் தவறியது என்பதை நான் இத்தால் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனவே உங்கள் சுய புத்தியுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி வழங்கி அவர்களின் உரிமையை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.

இத்தால் உங்கள் நம்பிக்கைக்கு உரிய சேவகன்
ஆர்மண்ட் டீ சூசா (ஆரிசியர் – த சிலோன் மோர்னிங் லீடர்)

சூசா கூறியபடி தான் நிகழ்ந்தது. சூசாவுக்கு தகவல் அறியும் உரிமை மறுக்கப்பட்டது. விசாரணை இரகசியமாக நடத்தப்பட்டது. பாதிக்கப்பட்டவர்கள் உரிய முறையில் சாட்சியமளிக்க விடவில்லை. குற்றம் சாட்டப்பட்டவர்களையும் உரிய முறையில் விசாரணை செய்ய விடவில்லை. இறுதியில் வெளியான பாரபட்சமான அறிக்கை வெட்டவெளிச்சமாக குற்றவாளிகளை பாதுகாத்தது தான் மிச்சம். 

அடுத்த இதழில்...

நன்றி - தினக்குரல்


Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates