இலங்கையில் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் உத்தேச புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் மிக முக்கிய விடயங்களான அதிகார பகிர்வு, நிறைவேற்று அதிகாரம் மற்றும் தேர்தல் முறை மாற்றம் தொடர்பான கலந்தாய்வுகள் வழிப்படுத்தல் குழுவிலேயே இடம்பெற்று வருகின்றன. இந்த நிலையில் வழிப்படுத்தல் குழுவிற்கு விளக்கமளிக்கும் வகையில் உரிய தகவல்களைக் கொண்ட 'தொழில்நுட்ப' ரீதியான அறிக்கையாக விஞ்ஞான பூர்வமாக அதனைத் தயாரிக்கும் பொறுப்பினை மலையக புத்திக்க ஜீவிகள் ஏற்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் தெரிவித்துள்ளார்.
சனநாயகத்துக்கான மலையக அமைப்பின் ஏற்பாட்டில் பிரிடோ மற்றும் பெவ்ரல் அமைப்பின் பங்களிப்புடன் இடம்பெற்ற 'உத்தேச தேர்தல் முறைமை தொடர்பான கலந்தாய்வு கூட்டம்' ஹட்டன் பூல்பேங்க் தொழிற்பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
உத்தேச அரசியலமைப்பு உருவாக்க நோக்கில் அமைக்கப்பட்ட 'மக்கள் கருத்தறியும் குழுவுக்கு' மலையக மக்களின் சார்பான பிரதிநிதியாக பேராதனைப் பல்கலைக்கழக பொருளியல் பீட தலைவர் எஸ்.விஜயசந்திரன் நியமிக்கப்பட்டார். அந்த குழுவின் பணிகள் நிறைவடைந்த பின்னரும் கூட மலையக மக்களின் சார்பில் மக்கள் கருத்தறியும் குழுவின் சார்பில் முன்மொழிவுகளைச் செய்தவர்களை ஒன்றிணைத்து அவர்களை ஒரு அமைப்பாக்கம் செய்து இன்று தலைமை இடத்தில் இருந்து அதனை வழி நடத்தி வருவது மலையக புத்திஜீவிகளுக்கு ஒரு முன்னுதாரணமாகும்.
அண்மையில், தபாலக கேட்போர் கூடத்தில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் அவர்கள் சார்ந்த சமூகத்திற்கு உத்தேச தேர்தல் முறைமை தொடர்பில் எத்தகைய முன்மொழிவுகள் செய்யப்படல் வேண்டும் என்பதாக கலந்தாய்வு கூட்டம் ஒன்று இடம்பெற்றது. அதில் நட்பு ரீதியாக கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அதில் அவர்கள் உணர்ச்சி நிலையில் நின்று மாத்திரமல்லாமல் வரலாற்று மற்றும் தொழில்நுட்ப ரீதியான கருத்துக்களுடன் விஞ்ஞானபூர்வமாக ஒரு முன்மொழிவை தயார் செய்வதில் அக்கறை காட்டியதை அவதானிக்க முடிந்தது. தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் சுயாதீன உள்ளக நிபுணராக செயற்பட்டுவரும் கலாநிதி.சுஜாதா கமகேவையும் அழைத்து தங்களது அரசியல் ரீதியான கோரிக்கைக்கையை எவ்வாறு விஞ்ஞான பூர்வ அறிக்கையாக வெளிப்படுத்துவது என்பது தொடர்பில் ஆராய்ந்தனர்.
மலையக மக்கள் சார்பில் தனிப்பட்ட நட்பு ரீதியாக உள்நாட்டு, வெளிநாட்டு நிபுணர்களுடன் உரையாடல் இடம்பெறுகிறதே தவிர இன்னும் துறைசார்ந்த அடிப்படையில் ஒரு அறிக்கையினை உத்தேச தேர்தல் முறை தொடர்பில் நாம் உருவாக்கவில்லை. இந்த குறைபாட்டை அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் முக்கிய வகிபாகம் கொண்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி. ஜயம்பதி விக்கிரமரட்னவும் என்னிடம் தனிப்பட்ட அடிப்படையில் தெரிவித்தார். இந்த கசப்பான உண்மையை மலையக கல்விச் சமூகம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
நாம் எல்லோரும் மலையக மக்கள் சார்ந்து உச்ச உணர்வுடன் செயற்படுகிறோம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதுவே உணர்ச்சி மேலிட்ட ஒன்றாக மாதிரி எப்படியாவது வேண்டும் என கேட்கிறோமே தவிர இப்படித்தான் வேண்டும் என விஞ்ஞான பூர்வ கோரிக்கை ஒன்றை நாம் முன்வைப்பதில்லை. சம்பள பிரச்சினை உட்பட பல்வேறு கோரிக்கைகளிலும் அவதானிக்கலாம். உத்தேச தேர்தல் தொகுதிகள் குறித்த கவனத்தை பெறும் தூரநோக்குடனேயே எமது நீண்ட கால கோரிக்கையாக இருந்த நுவரெலியா மாவட்டத்தில் பிரதேச செயலகங்களை அதிகரிக்கும் பிரேரணை ஒன்றை சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையாக கடந்த மாத இறுதியில் கொண்டுவந்தேன் .அதில் பல புள்ளி விபரங்களுடன் எமது கோரிக்கையின் நியாயத்தை விஞ்ஞான பூர்வமாக எடுத்துரைத்தேன். இன்னும் விரிவாக அந்த கோரிக்கையை எடுத்துச் சொல்ல முடியும். ஒரு பின் வரிசை பாராளுமன்ற உறுப்பினராக கிடைக்கின்ற மிகக் குறைந்த சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி எமது உரிமைசார் விடயங்களை பேசு பொருளாக்கி வருகிறேன்.
இப்போது கூட எனக்கு கிடைக்ககூடிய பல்வேறு ஆய்வுகள் தகவல்கள், தரவுகளை நேரடியாகவும் மின்னஞ்சல்கள் மூலமாகவும் இந்த சனநாயகத்திற்கான மலையக அமைப்பின் ஆய்வாளர்களுடன் பகிர்ந்துக்கொள்கிறேன். அதேபோல நிபுணர்களை அழைத்து ஆலோசனைக் கூட்டங்களை நடாத்த வேண்டுமெனில் அவர்களை அழைத்து வரும் செலவு, பொறுப்புகளையும் ஏற்றுக் கொள்ளத் தயாராக உள்ளேன்.
அரசியல் வாதிகளின் கோரிக்கைகளை, உரைகள் உணர்ச்சி மேலீட்டால் ஆனதாக அமையலாம்.ஆனால், அறிவார்ந்த ரீதியாக சிந்தித்து செயற்படக்கூடிய மலையக புத்திஜீவிகளின் கோரிக்கையும் உண்ர்ச்சி மேலீட்டாலானதாக அமைய கூடாது. அவர்களின் கோரிக்கை தரவுகள், தகவல்கள், அடங்கியதாக விஞ்ஞான பூர்வ கோரிக்கையாக அறிக்கைச் செய்யப்படல் வேண்டும்.சனநாயகத்துக்கான மலையக அமைப்பு அதனைச் செய்யும்போது வழிப்படுத்தல் குழுவில் அதனை சமர்ப்பித்து நமது கோரிக்கையின் நியாயங்களை எடுத்துச் செல்லக்கூடிய ஏற்பாடுகளை மக்கள் பிரதிநிதிகளான நாங்கள் மேற்கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.
பேராதனைப் பல்கலைக்கழக பொருளியல் பீட தலைவர் எஸ்.விஜேசந்திரன் வழிப்படுத்தலில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் அமைப்பின் செயலாளர் பொன்.பிரபாகரன், தமிழ் முற்போக்கு கூட்டணி செயலாளர் ஏ.லோரன்ஸ், மலையக மக்கள் முன்னணி உபதலைவர் சரத் அத்துகோரல மற்றும் பெபரல் நிறுவன அதிகாரிகளுடன் சிவில் சமூக உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...