Headlines News :
முகப்பு » , , , , » ப்ரஸ்கேர்டலால் பதவி துறந்த படுகொலையாளன் டவ்பிகின் (1915 கண்டி கலகம் –57) - என்.சரவணன்

ப்ரஸ்கேர்டலால் பதவி துறந்த படுகொலையாளன் டவ்பிகின் (1915 கண்டி கலகம் –57) - என்.சரவணன்

ப்ரஸ்கேர்டலுடன் அமர்ந்திருப்பவர் கொல்வின் ஆர் டி சில்வா
(ஹொரண பிரதேசத்தில் 1937இல் எடுக்கப்பட்ட புகைப்படம் இது)
கேகாலை ஆணைக்குழு விசாராணையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி கிடைக்காவிட்டாலும் கூட அந்த ஆணைக்குழு விசாரணை உலகின் கண்களைத் திறந்தது என்று தான் கூற வேண்டும். ஆங்கிலேய ஆட்சியதிகாரத்தின் பீதி அதன் சர்வாதிகாரத்துக்கு வித்திட்டது எப்படி என்பது குறித்து அம்பலமானது.  

கேகாலை ஆணைக்குழு விசாரணையின் போது இந்த அநியாயங்களை மூடி மறைக்கவும், நியாயப்படுத்தவும், தப்புவதற்காகவும் பொலிஸ் மா அதிபர் டவ்பிகின் (H.L. Dowbiggin) எடுத்த பிரயத்தனம் அத்தனை வெற்றி பெறவில்லை என்றே கூறவேண்டும்.

இந்த அநியாயங்களுக்கு கூட்டுப்போறுப்பை சுமத்தவேண்டியது ஆளுநர் சார்மஸ், காலனித்துவ செயலாளர் ஸ்டப்ஸ், பிரிகேடியர் ஜெனரல் மால்கொம் (படைகளுக்கு பொறுப்பானவர்), அடுத்தது போலிஸ் மா அதிபர் டவ்பிகின். இவர்கள் தான் இந்த கண் மூடித்தனமான அராஜங்களை பிரயோகித்ததில் நேரடி கூட்டுப்பொறுப்புக்கு உரியவர்கள். இவர்களில் டவ்பிகின் ஆளுனரோடு அவ்வப்போது முரண்பட்டிருக்கிறார் என்று பல ஆவணங்கள் தெளிவுபடுத்துகின்றன. அந்த முரண்பாடுகள் பெரும்பாலும் உச்சபட்ச அதிகாரத்தைப் பயன்படுத்துவது தொடர்பிலானது. லண்டனிலிருந்த காலனித்துவ செயலகத்தின் செல்வாக்கால் ஆளுனரை பிழையாக வழிநடத்தியதிலும், நிலைமைகள் குறித்து பிழையாக வழிநடத்தியதிலும் டவ்பிகின்னின் பாத்திரம் முக்கியமானது. கலவரத்தை அடக்குவதற்கு பொலிசார், படையினர், பஞ்சாப் படைப்பிரிவு போன்றவற்றை உபயோகித்ததுடன் அவர் நின்றுவிடவில்லை. அத்தகைய அதிகாரத்தை சிவில் சேவையில் இருந்தவர்களுக்கும், தோட்ட உரிமையாளர்களுக்கும் கூட வழங்கினார். அவர்களுக்கு சுட்டுத் தள்ளும் உரிமை வழங்கப்பட்டது. அவர்கள் தம்மிஷ்டப்படி சுட்டுத்தள்ளிய பல சம்பவங்கள் பதிவாகின. இவற்றையெல்லாம் நியாயப்படுத்தினார் டவ்பிகின்.

“அவர்கள் மதம், மதுவொழிப்பு என்கிற போர்வைக்குள் செய்ததெல்லாம் தெளிவான அதே வேளை பொறுப்பற்ற அரசியலைத் தான்.” என்று அவர் அறிவித்தார்.

ஆளுநர் சார்மர்ஸ் லண்டனுக்கு திருப்பி அழைக்கப்பட்டு அவருக்குப் பதிலாக ஆளுநராக வந்து சேர்ந்த சேர் ஜோன் அண்டர்சன் இந்த நிலைமைகள் குறித்து விசாரித்து அறிந்து கூறிய பல தகவல்கள் கவனிக்கத்தக்கது.
“...உயிருக்கு கெஞ்சக் கெஞ்ச சில தலைக்கனம் பிடித்த இளம் தோட்ட உரிமையாளர்கள் அம்மக்களை சுட்டுக்கொன்றுள்ளார்கள். படையினரும் தமது கட்டுப்பாட்டை இழந்தார்கள்...” என்றார். அவர்
வல்கம்பாய வழக்கு
07 ஜூலை 1916 அன்று கண்டி நீதிமன்றத்தில் டவ்பிகினுக்கு எதிராக நடந்த வழக்கும் முக்கியமானது.

கொளுகல வல்கம்பாயவைச் சேர்ந்த லொக்கு மெனிக்க குமாரிஹாமி தொடர்ந்த இந்த வழக்கில் தனது கணவரும் இரு குழந்தைகளுக்கு தகப்பனும், வல்கம்பாய பஸ்நாயக்க நிலமே பதவியை வகித்து வந்தவருமான புஞ்சி பண்டாவின் கொலைக்கு நீதி கோரினார். சட்டவிரோதமான இந்த கொலைக்கு 50,000 ரூபா நட்டஈடு கோரி டவ்பிகினுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நடத்தியவர் புகழ் பெற்ற வழக்கறிஞர் ஜோர்ஜ் ஈ.டீ.சில்வா. அவரோடு சேர்ந்து ஒத்துழைத்த ஏனைய வழக்கறிஞர்களும் பிரசித்திபெற்ற வரலாற்றுப் பாதிரங்கள் தான். பாவா, ஈ.ஜீ.சமரவிக்கிரம, சீ.எஸ்.ராஜரத்தினம். ஏ.ஏ.பெரேரா போன்றவர்களை உள்ளடக்கிய குழு அது.

பொலிஸ்  மா அதிபர் டவ்பிகின் தரப்பில் லீச்சிங், லீத மற்றும் அன்றைய சட்டமா அதிபரான  டீ.எப்.கார்டின் போன்றோர் வாதிட்டார்கள்..

நீதிபதி டவ்பிகின் மற்றும் சம்பந்தப்பட்ட பொலிசார் உள்ளிட்ட பஞ்சாப் படையினரையும் சாட்சிக்கு அழைத்தார். வல்கம்பாய நிலமே ஒரு கத்தியை வைத்துக்கொண்டு சர்ச்சையில் ஈடுபட்டதால் தாம் நடவடிக்கை எடுத்ததாகக் கூறினார்.

கலவரக்காரர்கள் வீதியில் ஒன்ருகூடியதால் தான் நிலமே அங்கு தலையிட்டார் என்றும், அவர் தாக்கப்பட்டதால் தான் அவரும் பதில் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தார் என்றும் பிரதிவாதி தரப்பில் கூறப்பட்டது.
சட்ட ஒழுங்கை நிலைநாட்டவே பொலிசார் நடவடிக்கை எடுத்தார்கள் என்று டவ்பிகின் அங்கு கூறினார். அதுமட்டுமன்றி பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனில் அது மூன்று மாதங்களுக்கு எடுக்கப்பட வேண்டும் என்றும் இந்த வழக்கு மூன்று மாதங்களுக்குப் பின்னர் தொடுக்கப்பட்டிருப்பத்தையும் சுட்டிக்காட்டி வலக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று டவ்ப்கின் கோரினார். அந்த சட்ட விதிகளின் படி அந்த வழக்கை தள்ளபடி செய்தார் நீதிபதி.

இப்படி ஆங்கிலேய சட்டத்தில் இருந்த  ஓட்டைகளையும் தனக்கு சார்பாக பயன்படுத்தி இலகுவாக தப்பினார் டவ்பிகின். சிங்களத்தில் ஒரு பழமொழியுண்டு. “நடுத் ஹாமுதுருவன்கே படுத் ஹாமுதுருவன்கே” என்பார்கள். அதாவது “வழக்கும் பிக்குவுடையது பொருளும் பிக்குவுடையது”. அவர்களின் சட்டம் அவர்களைத் தான் பாதுகாத்தது. பாதிக்கப்பட்ட அப்பாவிகளுக்கு அந்த சட்டங்கள் எதுவும் நியாயம் வழங்கவில்லை.

எச்.எல்.டவ்பிகின்
டவ்பிகின் (1880- 1966) உதவிப் போலிஸ் மா திபராக பதவியேற்றது 1901 அப்போது அவருக்கு வெறும் 21 வயது தான். அடுத்த 4 ஆண்டுகளில் அதாவது 1913 ஆம் ஆண்டு போலிஸ் அதிபராக நியமிக்கப்பட்டார். அதிலிருந்து 1937 வரை அவர் அந்தப் பதவியில் இருந்திருக்கிறார். இலங்கையில் அதிகமான காலம் பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இலங்கையில் அதிகமான பொலிஸ் நிலையங்கள் உருவாக்கப்பட்டதும் அவரது காலத்தில் தான். 1916 ஆம் ஆண்டில் 138 பொலிஸ் நிலையங்கள்  இலங்கை முழுவதும் உருவாக்கப்பட்டிருந்தன. மாத்திரம் அவர் அவரைக் காலனித்துவ பொலிசின் ('Father of Colonial Police') தந்தை என்றும் பரவலாக அழைக்கிறார்கள். அதுமட்டுமல்ல அவர் இலங்கையில் பதவியில் இருந்த காலத்தில் தான் அவரது சேவையைப் பாராட்டி இங்கிலாந்து அரசரால் மிகப் பெரும் கௌரவ பட்டமான நைட் பட்டமும் வழங்கப்பட்டது. அவர் அப்படி இலங்கையில் ஆற்றிய கடமை தான் என்ன. இலங்கை ஒரு இரத்தக்காடாக ஆக்கியதில் அவரது பங்கு எத்தகையது என்று 1915 கலவரம் தெளிவாக பதிவு செய்திருக்கிறது.

மீரிகம படுகொலை
1915 ஜூன் 3ஆம் திகதியன்று இன்ஸ்பெக்டர் ஜெனரல் டவ்பிகின் (H. L. Dowbiggin) ஆயுதம் தாங்கிய பஞ்சாப் படையினரையும் அழைத்துக் கொண்டு கண்டியில் இருந்து கொழும்பை நோக்கி ரயிலில் புறப்பட்டு வந்தார். எப்போது மீரிகமைக்கும் வேயங்கோடவுக்கும் இடைப்பட்ட பகுதியில் தெருவோரோத்தில் குழுமி நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த அப்பாவி கிராமவாசிகள் மீதி கண்மூடித்தனமாக துப்பாக்கி பிரயோகம் செய்ததில் பலர் கொல்லப்பட்டனர்.

உத்தியோகபூர்வமாக அரசாங்கம் எதனையும் இது குறித்து வெளியிடவில்லை. ஆனால் ஜூன் 5 வெளியான சிலோன் மோர்னிங் லீடர் (Ceylon Morning Leader) பத்திரிகையில் ரயிலில் டவ்பிகின்னோடு 28 பஞ்சாப் படையினர் இருந்தார்கள் என்றும் சுற்றிவர கண்மூடித்தனமாக மேகொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 35 அப்பாவி கிராமவாசிகள் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டதாகவும், பலர் காயப்பட்டதாகவும் அந்த செய்தியில் இருந்தது. அதுமட்டுமன்றி கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை அதைவிட மேலதிகமாக இருக்கக்கூடுமென்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

1930 ஜனவரியில் பாலஸ்தீன பொலிஸ் படையை அவசரமாக சீரமைக்குமுகமாக டவ்பிகின் அனுப்பப்பட்டார். ஐந்தே மாதங்களில் அதாவது மே மாதம் அவர் தயாரித்த அதி இரகசிய அறிக்கையானது யூத குடியேற்றங்கள் குறித்த முக்கிய ஆவணமாக கருதப்படுகிறது. மீண்டும் இலங்கை திரும்பி தனது பதவியைத் தொடர்ந்த அவரின் பதவி இழக்கப்பட்டு இங்கிலாந்துக்கு திருப்பி அழைக்கப்பட்ட சம்பவம் இலங்கை இடது வரலாற்றிலும் முக்கியமானதாக கருதப்படுகிறது. அது தான் பிரஸ்கேடில் வழக்கு.

ப்ரஸ்கேர்டலால் பதவி துறந்த டவ்பிகின்
டவ்பிகினின் பதவி வகிக்கத் தொடங்கியதும் இலங்கையில் தான் அவர் பதவி இழந்ததும் இலங்கையில் தான். 1915 ஆம் ஆண்டின் இரத்த வரலாற்றில் பதவி இழக்காத அவரை பதவி இழக்கச் செய்த சம்பவம் பிரஸ்கேடில் சம்பவம்.

அவுஸ்திரேலிய பிரஜையான ப்ரஸ்கேர்டல் 04.04.1936இல் கப்பல் மூலம் இலங்கை வந்து காலனித்துவத்துக்கு எதிராக இலங்கையின் இடதுசாரி இயக்கங்களுடன் சேர்ந்து தொழிலாளர் போராட்டங்களில் ஈடுபட்டார். சாதாரண வீசாவை வைத்துக்கொண்டு அரசியலில் ஈடுபட்டமைக்காக அவரை நாடுகடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 10.01.1937 அன்று காலிமுகத் திடலில் ப்ரஸ்கேர்டல் கைது தொடர்பாக லங்கா சம சமாஜக் கட்சி நடத்திய மாபெரும் கூட்டம் மிகவும் பிரசித்தமானது அந்தக் கூட்டத்தில் ப்ரஸ்கேர்டலுக்கு நிகழ்ந்த அநீதி மட்டுமல்லாது டவ்பிகினின் பதவிக் காலத்தில் நிகழ்ந்த அத்தனை அநியாயங்களுக்கும் எதிர்ப்பு தெரிவிக்குமுகமாகவும், அவை குறித்து நீதி விசாரணை செய்யக் கோரியும் அந்தக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.   அவர் தலைமறைவாக இருந்துகொண்டு தொழிலாளர் போராட்டங்களுக்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்கினார். அவரை நாடுகடத்துவதற்கு எதிராக கொல்வின் ஆர் டி சில்வா தலைமையிலான அன்றைய போராட்டம் பிரசித்திபெற்றது. லங்கா சமாஜக் கட்சியின் அன்றைய உத்தியோகபூர்வ பத்திரிகையான “சமசமாஜய” என்கிற பத்திரிகையில் 08.01.1937 ஆம் திகதியன்று முதற் பக்கத்தில் தலைப்புச் செய்தி இப்படி இருந்தது “கொலைகார டவ்பிகினின் சரித்திரம்”. அந்தத் தலைப்பில் வெளியான பெரும் கட்டுரையில் “இலங்கையை இரத்தக்காடாக ஆக்கிய கொலைகார டவ்பிகின் யார்” என்கிற அடிப்படையில் அந்தக் கட்டுரை தொடர்ந்தது. 1915 ஆம் ஆண்டு அந்தக் கொலைகளைப் புரிவதற்கு டவ்பிகின் வழங்கிய ஆணை குறித்து அக்கட்டுரையில் இப்படி மேற்கோள் காட்டப்பட்டிருந்தது.


“எமக்கு அறிவிக்காமலேயே எந்த ஒருவரையும் சுட்டுக்கொலை செய்ய நான் அனுமதி தருகிறேன். அவர்கள் தன் பாட்டில் இருந்தால் கூட அவர்களை சுடும் அதிகாரம் உங்களுக்கு இருக்கிறது. சுடப்பட்டு காயபட்டவர்களையோ அல்லது சடலங்களையோ என்ன செய்வது என்பது உங்களுக்கு உரிய வேலை அல்ல. நீங்கள் மேற்கொள்ளும் துப்பாக்கிச் சூடு குறித்து அரசாங்கத்துக்கோ பொலிசுக்கோ அறிவிக்க வேண்டிய எந்த அவசிமமும் கிடையாது. வீடுகளில் உள்ளவர்களை பலத்தைப் பிரயோகித்து இழுத்து வந்து சுவரில் வைத்து சுட்டுக்கொல்லுங்கள். அவர்களை கைது செய்வது என்பது சிக்கலானது. எனவே ஒரே தடவையில் கொன்று விடுவது அவசியம். அந்த சடலங்களுக்கு எது நடந்தாலும் பரவாயில்லை.”
இந்த பாரதூரமான, கொடூரகரமான ஆணையை அன்று பிறப்பித்திருந்த டவ்பிகின் பிரஸ்கேர்டல் விவகாரத்தோடு இங்கிலாந்துக்கு திருப்பி அனுப்பட்டார். அவர் நாடு திரும்பிய அதே 1937 ஜனவரி 10 அன்று காலிமுகத்திடலில் பெரும் கூட்டத்தை நடத்தியது லங்கா சமசமாஜக் கட்சி. அந்த கூட்டத்தில் பிரஸ்கேர்டலும் உரையாற்றினார். பொலிசார் கைது செய்ய முற்பட்டபோதும் அது வெற்றியளிக்கவில்லை,
பிரஸ்கேர்டல் 84 வது வயதில் - “The Bracegirdle Affaire” நூலிலிருந்து
சமசமாஜக் கட்சி காரியாலயத்தில் வைத்து ப்ரஸ்கேர்டல் கைதுசெய்யப்பட்டு நாடுகடத்தப்படவிருந்த சூழலில் அந்த உத்தரவை எதிர்த்து சமசமாஜிகள் வழக்கு தொடர்ந்திருந்தனர். 18.05.1937 அன்று வழங்கப்பட்ட தீர்ப்பின்படி ஆளுநரின் உத்தரவு செல்லுபடியற்றது என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. மனச்சாட்சியின் சுதந்திரம் என்பதனை தேச எல்லை இடையூறு செய்ய முடியாதென கூறிய நீதிமன்றம், கருத்து கூறும் சுதந்திரத்தை தடுக்கும் விதத்தில் ப்ரஸ்கேர்டலுக்கு தீர்ப்பு வழங்காததோடு, அவரை குற்றச்சாட்டிலிருந்தும் விடுவித்தது.

கேகாலை படுகொலை வழக்கு குறித்து அரசாங்க சபையில் பேருரை ஆற்றினார் பொன்னம்பலம் இராமநாதன். அவர் டவ்பிகினுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை சபையில் முன்வைத்திருந்தார். டவ்பிகின் பற்றிய அவர் வெளியிட்ட பல தகவல்களையும் விமர்சனங்களையும் எம்.வைத்திலிங்கம் எழுதிய “சேர் பொன்னம்பலம் இராமநாதன் – வாழ்க்கை வரலாறு – 2வது தொகுப்பு” (Ramanathan Of Ceylon The Life Of Sir Ponnambalam Ramanathan) என்கிற நூலில் தனி அத்தியாயமாக தொகுக்கப்பட்டிருக்கிறது.


நன்றி - தினக்குரல்


Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates