Headlines News :
முகப்பு » » நுவரெலியா மாவட்டத்தில் பிரதேச செயலகங்களை அதிகரித்தல்; கோரிக்கையும் அதற்கான நியாயங்களும் - பா.பார்த்திபன்

நுவரெலியா மாவட்டத்தில் பிரதேச செயலகங்களை அதிகரித்தல்; கோரிக்கையும் அதற்கான நியாயங்களும் - பா.பார்த்திபன்


நுவரெலியா மாவட்டம் இலங்கையில் புவியியல் ரீதியாக சிறப்புபெற்ற ஒரு மாவட்டம். கடல் மட்டத்தில் இருந்து ஆயிரம் அடிக்கு மேலே உயரம் கொண்ட இந்த மாவட்டம் முற்றிலும் மலைப்பாங்கானது  மட்டுமல்லாது நான்கு பக்கங்களிலும் வெவ்வேறு மாவட்டங்களை எல்லைகளாகக் கொண்டது. கொழும்பில் அவிசாவளை வழியாகச் சென்றால்   கேகாலை,  இரத்தினபுரி மாவட்டங்களையும் பேராதனை வழியாகச் சென்றால் கண்டி மாவட்டத்தையும் மறுபுறத்தில் பதுளை மாவட்டத்தையும்   எல்லையாக சூழ்ந்த இந்த மாவட்டம் மொத்தமாக 1743 சதுர கிலேமீற்றர் பரப்பளவைக்கொண்டது. நாட்டின் பிரதான நீரேந்து நிலைகளைக் கொண்ட இந்த மாவட்டத்தில்தான் மகாவலி நதி மற்றும் களனி நதிகள் ஊற்றெடுக்கின்றது. மட்டுமில்லாது உயரமான மலைத்தொடரான பீதுருதலாகலையும் உயரமான சிகரமான சிவனொளிபாதமலையும் அமையப்பெற்ற மாவட்டம். சென்கிளேயர், டெவன், ரம்பொடை, அலடின்  முதலான பல அழகிய நீர்வீழ்ச்சிகளும், உலகமுடிவு என அழைக்கப்படும் அழகிய ஹோர்ட்டன் பிளேஸ் சமவெளியும, ஹக்கல தாவரவியல் பூங்கா அமையப் பெற்றுள்ளதோடு குட்டி இங்கிலாந்து எனும் அழகிய நுவரெலியா நகரை தலைநகரமாகக் கொண்ட மாவட்டம்.

பொருளாதார அடிப்படையில் தேயிலைத் தோட்டங்கள் அதிகளவான பரப்புகளைக் கொண்டுள்ளதோடு மரக்கறி விவசாயம், உருளைக்கிழங்கு பயிரிடல், மலர்ச்செய்கை இந்த மாவட்டத்தில் பிரபலமானது. சனத்தொகை அடிப்படையில் பார்க்கின்றபோது 2012 ஆம் ஆண்டு புள்ளிவிபர கணிப்பீடுகளின்படி மொத்த சனத்தொகை 706,588 ஆக அமைய இனரீதியான சனத்தொகை கணிப்பீட்டிணைப் பார்க்கும்போது இந்தியத் தமிழர்கள் (மலையகத் தமிழர்) 53.18 வீதமாகவும் சிங்களவர்கள் 39.6 ­வீ­தமாகவும் இலங்கைத் தமிழர் 4.51  வீதமாகவும் இலங்கை சோனகர் 2.47  ­வீ­த­மாகவும் ஏனைய இனங்கள் .25  வீதத்­துக்கும் குறைந்த அளவில் வாழ்கின்றனர். 

ஒட்டுமொத்தமாக தமிழ் பேசுவோர் என்று பார்த்தால் 60 வீ­தமான அளவினர் அடங்குவர். இந்த அமைவானது வடக்கு, கிழக்குக்கு வெளியே அதிகளவான தமிழர்கள் வாழுகின்ற முதன்மை இடமாக நுவரெலியா அமைகின்றது. இதனால் இந்திய வம்சாவளி தமிழர்களாக உத்தியோகபூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ள மலையக மக்கள் அதிகளவில் வாழும் மாவட்டம் இதுவாகும். இதனால் மலையகத்தின் இதயப் பிரதேசமாகவும் மலையக மக்களின் அரசியல் இருப்பை உறுதி செய்கின்ற மாவட்டமாகவும் நுவரெலியா மாவட்டம் அமைகின்றது. 

 1947 -1952 காலப்பகுதியில் மலையக மக்களின் பிரதிநிதிகளாக மக்கள் அவையில்  8 பேரில் 4 மலையகத் தமிழ் உறுப்பினர்களைக்  கொண்டிருந்த இந்த மாவட்டம் தற்போதைய 2016ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில்  5 உறுப்பினர்களைக் கொண்டிருக்கின்றது. 

நுவரெலியா மாவட்டத்தின் புவியியல் அமைவு, பரப்பளவு, இயற்கை அமைவுகள் வனப்புகள், பொருளாதாரம், மற்றும் அரசியல் பின்னணிகள் குறித்து அறிமுகம் செய்ததற்கு காரணம் அந்த மாவட்டத்தில் 'அரச நிர்வாகம்' அமைந்துள்ள முறை தொடர்பாகவும் அதனை முன்னெடுக்கும் பிரதேச செயலகங்கள் எவ்வாறு அமைந்துள்ளன? எவ்வாறு அமைதல் வேண்டும் என்பது தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை ஒன்றை குறித்த மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் முன்வைத்தமையினாலாகும். 

நுவரெலியா மாவட்டத்தின் மொத்தப்பரப்பளவு 1743 சதுர கிலேமீற்றராக உள்ள நிலையில் அதன் ஒவ்வொரு பிரதேச செயலகங்களினதும் பரப்பளவு 2012 ஆண்டு புள்ளிவிபரங்களின்படி பிரதேச செயலக அடிப்படையில் சனத்தொகை மற்றும் கிராமசேவகர் பிரிவுகளின் எண்ணிக்கை ஆகியவற்றை கீழ்வரும் அட்டவணையில் பார்க்கலாம்.


மேற்படி அட்டவணையின்படி நுவரெலியா மாவட்ட பிரதேச செயலகங்களின் எண்ணிக்கை சனத்தொகை மற்றும் கிராம சேவகர்களின் பிரிவுகளில் உள்ள சமத்துவமின்மையை அவதானிக்கலாம். குறைந்த பரப்பளைவையும் (229 சதுர கி.மீ) குறைந்த சனத்தொகையையும் (88528) கொண்டுள்ள ஹங்குரங்கத்தை பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 131 கிராம சேவகர் பிரிவுகள் அமையப்பெற்றுள்ள நிலையில் அதிக பரப்பளவான 486 சதுர கிலோ மீற்றர் அளவையும் அதிக 205723 சனத்தொகையையும் கொண்ட அம்பகமுவை பிரதேச செயலகத்திற்க உட்பட்ட பகுதியில் 67 கிராம சேவகர் புகதிகளே அமைந்துள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. இதே நிலைமையை வலப்பனை நுவரெலியா ஆகிய பிரதேச செயலகங்களுடன் ஒப்பிட்டும் நோக்கலாம். 
மறுபுறத்தில் இனரீதியான சனத்தொகை அளவை இந்த பிரதேச செயலகங்களில் அவதானித்தால் இந்ந சமத்துவமற்ற நிலைமைகளுக்கான உள்ளாரந்த அர்த்தம் ஒன்றையும் கண்டறிய முடியும். 

மேலுள்ள அட்டவணையை அவதானித்தால் கிராம சேவகர் பிரிவுகள் அதிகம் உள்ள பிரதேச செயலக பிரிவுகளில் சிங்கள சனத்தொகை அதிகமாகவும் கிராம சேவகர் பிரிவுகள் குறைவாக உள்ள பிரதேச செயலகங்களில் தமிழ் சனத்தொகை அதிகமாக இருப்பதனையம் அவதானிக்கலாம். இதன் பாரபட்சத் தன்மையை ஒரு உதாரணத்துடன் பார்த்தால் 'கிராமத்துக்கு ஒரு வேலைத்திட்டம்' என்ற அடிப்படையில் ஒரு கிராம சேவகர் பிரிவுக்கு அரசாங்கத்தால் 10 இலட்சம் ரூபா அபிவிருத்தித் திட்டத்துக்காக ஒதுக்கப்படுகிறது. இதன்போது 88528 சனத்தொகைக் கொண்ட ஹங்குரங்கத்தை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட மக்களுக்கு (13x1000000) 13 கோடி பத்துலட்சம் ரூபாய்களும் 205723 சனத்தொகையைக் கொண்ட அம்பகமுவ பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட மக்களுக்கு 6 கோடி 70 லட்சம் ரூபாய்களும் ஒதுக்கப்படும். எனவே ஒரே மாவட்டத்தில் சிங்கள மக்கள் அதிகளவாக வாழும் பிரதேச செயலகத்துக்கு அதிக நிதியும் பெருந்தோட்டப்பகுதிகள அதிகம் கொண்ட மலையகத் தமிழ் மக்கள் வாழும் பிரதேச செயலகத்துக்கு அதன் சரிபாதி அளவ குறைவான நிதி அபிவிருத்திக்காக ஒதுக்கப்படுவதும் இங்கு புலனாகிறது. மலையக தமிழ் மக்களின் குறை அபிவிருத்திக்கு நாடு தழுவிய ரீதியாக இந்த 'கிராம சேவகர் பிரிவுகிளின் எண்ணிக்கை குறைவு ஒரு பிரதான காரணமாகும்'
இந்த நிலைமைகளை அவதானிக்கும்போது பிரதேச செயலகங்கள் மாத்திரமல்ல கிராம சேவகர் பிரிவுகளும் அதிகரிக்கப்படல் வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. எனினும் முதலில் பிரதேச செயலகங்களை அதிகரிப்பது நடைபெறவுள்ள பிரதேச சபை தேர்தல்களுக்கும் அதேபோல அமையப்பெறவுள்ள புதிய அரசியலமைப்பில் புதிய தேர்தல் தொகுதிகளைக் கோருவதற்கும் வாய்ப்பானதாக அமையும் என்கின்றதன் அடிப்படையில் நுவரெலியா மாவட்ட மக்களின் பல காலக் கோரிக்கையாக இருந்த பிரதேச செயலகங்களின் கோரிக்கை ஒரு பிரேரணையாக பாராளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ளது. 

அண்மைக்காலமாக மலையகம் குறித்த விடயங்கள் பாராளுமன்றில் அதிகம் பேசுபொருளாகியுள்ளது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அதேநேரம் அந்த குரல் எழுப்புதலில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரெலியா மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜாவின் பங்களிப்பு அதிகம் என்பதையும் மறுப்பதற்கில்லை. புள்ளிவிபரங்களுடன் நியாயமான வாதங்களுடன் மும்மொழிகளிலும் தனது உரைகளை வழங்கி வருகிறார். இந்த நிலையிலேயே கடந்த வியாழன் மாலை பாராளுமன்றில் நுவரெலிய மாவட்டத்தின் பிரதேச செயலகங்களின் அதிகரிப்பு தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை ஒன்றை முன்வைத்திருந்தார். இந்த பிரேரணையில் கூட அரைவாசி பகுதி சிங்களத்தில் அமைந்திருந்தமை இங்கு நினைவு கூரத்தக்கது.

அவருக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் சபை நெறிமுறைகளுக்கு அமைவாக அவரது உரையும் ஆவன முன்வைப்புகளும் அமைந்திருந்ததுடன் அதற்கு அமைச்சர் வழங்கிய பதில் அவதானிக்கத்தக்கது. உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன் 'தேசிய முக்கியத்துவம் வாய்ந்த'  ஒரு விடயம் என்றும் பிரேரணையில், பாராளுமன்ற உறுப்பினர் திலகராஜா எடுத்துரைக்கும் விடயங்கள் தொடர்பாக எந்த பிரதிவாதமும் இருக்க முடியாது என்றும் பதில் அளித்திருந்தார். அமைச்சரின் உரையில் நுவரெலியா மாவட்டத்தின் பிரதேச செயலகங்கள் அமையவுள்ள முறை தொடர்பில் கருத்துரைத்தார். அதன்போது குறுக்கிட்ட பிரேரணையை முன்வைத்த ( திலகர் பா.உ) தான் முன் மொழியும் 15 பிரதேச செயலகங்கள் எவ்வாறு அமைய வேண்டும் என வலியுறுத்திக் கூறிய விவாதத்தையும் அமைச்சர் ஆமோதித்து ஏற்றுக் கொண்டார்.

 பிரேரணைக்கு ஆமோதித்து உரையாற்றிய மக்கள் விடுதலை முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் நிஹால் கலப்பத்தி பிரேரணைக்கு மேலும் வலு சேர்த்தார். அதேபோன்று எதிர்கட்சியான தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் ஞானமுத்து ஶ்ரீ நேசன் மற்றும் கோடீஸ்வரன் ஆகியோர் பிரேரணைக்கு ஆதரவாக உரையாற்றியதுடன் தங்களது மாவட்டத்தில் நிலவுகின்ற இத்தகைய குறைபாடுகள் தொடர்பிலும் கருத்து தெரிவித்தனர். நுவரெலியா மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர்  கே.கே. பியதாச பிரேரணைக்கு ஆதரவாக சிங்களத்திலும் தமிழிலும் உரையாற்றியமை அவதானத்திற்குரியது. இதற்கு முன்னதாக மலையக மக்களை பிரதிநிதித்துப் படுத்திய உறுப்பினர்கள் முன்வைக்காத பல விடயங்களை திலகராஜா எம்.பி தற்போது சபையின் கவனத்திற்கு கொண்டு வருவதாக குறிப்பிட்டார். கே.கே.பியதாச எம்.பி மறைமுகமாக இ.தொ.காவை சாடினாலும் தனது நேரடி எதிர்கட்சியான இ.தொ.கா வை விமர்சிக்காது அவர்கள் வழிவந்த அரசியல்வாதிகளின் பெயர்களையும் சுட்டிக்காட்டி திலகர் எம்.பி உரையாற்றியமை நாகரிகமானதாக அமைந்திருந்தது. 

அரசியல் கருத்து வேறுபாடுகள் இருந்த போதும் பொது விடயங்களில் மக்களின் பிரதிநிதித்துவத்தின் முக்கியத்துவத்தை திலகரின் உரை வலியுறுத்தியது. தமது கிராம சேவகர் பிரிவு அடங்கும் கொத்மலை பிரதேச சபைக்கு உட்பட்ட மடகொம்பர தோட்டத்தில் இருந்து அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக பழனி திகாம்பரமும் பாராளுமன்ற உறுப்பினராக தானும், மத்திய மாகாண அமைச்சராக மருதுபாண்டி ரமேஷ்வரனும் அரசியல் செயற்பாட்டில் மக்கள் பிரதிநிதிகளாக விளங்குவதாகவும் எடுத்துரைத்தார். அத்துடன் இ.தொ.காவின் முன்னாள் செயலாளர் எம்.எஸ்.செல்லச்சாமி மற்றும் தொழிலாளர் தேசிய சங்க ஆலோசகராக செயற்பட்ட கவிஞர் சி.வி. வேலுப்பிள்ளையும் மடகொம்பரை மண்ணுக்குரியவர்கள் என்பதை சபையில் எடுத்துரைத்தா. பதினைந்து நிமிட உரையில்  நுவரெலியா மாவட்டத்தில் தற்போது செயற்பாட்டில் ஐந்தாக உள்ள பிரதேச செயலகங்களின் எண்ணிக்கையை ஏன் 15 ஆக அதிகரிக்க வேண்டும், அதற்காக இதுவரை முன்னெடுக்கப்பட்டுள்ள முயற்சிகள் என்ன என்பது தொடர்பாக தனது வாதத்தை புள்ளிவிபரங்களுடன் முன்வைத்து தனது கோரிக்கையின் நியாயங்களையும் எடுத்துரைத்திருந்தார்.

  2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் முதன் முறையாக போட்டியிட்டு மாவட்டத்தில் எட்டு பாராளுமன்ற உறுப்பினர்களில் மூன்றாவது இடத்தைப்பெற்று 67,716 விருப்பு வாக்குகளுடன் தெரிவான இவர் 2015 ஆம் ஆண்டு செப்தெம்பெர் முதலாம் திகதி பாராளுமன்ற உறுப்பினராக சத்தியபிரமானம் செய்துகொண்டதோடு ஒக்டோபர் மாதம் தனது கன்னியுரையை ஆற்றியிருந்தார். அவரது உரையிலே மலையகம் தொடர்பான தனது தூரநோக்கு செயற்பாடுகள் குறித்து கருத்து தெரிவித்ததோடு மட்டுமல்லாது மலையக மக்கள் தேசிய நீரோட்டத்தில் உள்வாங்கப்படாமையே அவர்களின் குறை அபிவிருத்திக்குக் காரணம் என தெளிவான நிலைப்பாட்டை பாராளுமன்றிற்கும் அரசாங்கத்திற்கும் அறிவித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக தனது பாராளுமன்ற உரைகள், பிரேரணைகள் மூலம் மலையக மக்களின் பிரச்சினைகளை, தேவைப்பாடுகளை சபையில் எடுத்துரைத்துள்ளார் என்பதை பாராளுமன்ற பதிவுகள் காட்டுகின்றன. 

2016 ஓக்டோபர் மாதம் ஆகும் போது ஒரு வருடத்தில் சுமார் 40 உரைகளை ஆற்றியுள்ளதோடு நான்கு பிரேரணைகளையும் முன்வைத்துள்ளார். தவிரவும் சபை அமர்வுகளுக்கு மேலதிகமாக நிலையில் குழுக்கள், மேற்பார்வைக் குழுக்கள் மற்றும் அரசியலமைப்பு உப குழு ஆகியவற்றிலும் கூட தனது பங்களிப்பை வழங்கி வருவதாக சமீபத்திய பாராளுமன்ற உரை ஒன்றில் சுடடிக்காட்டியிருந்தார். சுயாதீன இணையத்தளம் ஒன்று அண்மையில் வெளியிட்ட ஆய்வின்படி ஒட்டுமொத்த பாராளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடுகளில் 57 வது இடத்தைப்பெற்றவராகவும் ஆகஸ்ட் மாதம் மிகச்சிறப்பாக செயற்பட்ட முதல் பத்து பாராளுமன்ற உறுப்பினர்களில் ஆறாவது இடத்தை பெற்றவராகவும் பாராளுமன்ற உறப்பினர் திலகரை நிரற்படுத்தியிருந்தது. 

பாராளுமன்றத்திற்கு வெளியே பத்திரிகை, வானொலி, இணையம்,  தொலைக்காட்சி என பல்வேறு ஊடகங்களிலும் இவரது கருத்துகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதனை அவதானிக்க முடிகிறது. அந்த வகையில் கடந்த ஒரு வருட காலத்தில் அவர் முன்வைத்திருக்கும் நான்கு பிரேரணைகள் மலையகம் சாரந்தததும் தனது மாவட்டம் சாரந்தததுமானதாக அமைந்து கவனத்தைப் பெற்றுள்ளமை இங்கு சுடடிக்காட்டத்தக்கது. தோட்டப்பகுதிகளுக்கும் சேவையாற்றும் விதத்தில் பிரதேசசபை சட்டத்தைத்  திருத்துதல், தோட்டத் தொழிலாளர்களின் வேதனம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுவரும் கூட்டு ஒப்பந்த நடைமுறையை மீளாய்வு செய்தல் மற்றும் ஹட்டன் நகரில் இயங்கும் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்திற்கு நிரந்தர கட்டடம் அமைத்தல் என முதல் மூன்றும் கணிசமான கவனத்தைப்பெற்றுள்ளதோடு சமூக மட்டத்தில் ஒரு அசைவியக்கத்தையும் காட்டி நின்றது. 
பிரதேச சபை சட்டத்திருத்தம் தற்போது அமைச்சரவை அனுமதி மற்றும் சட்டமா அதிபரின் அனுமதியைப்பெற்று தற்போது சட்ட வரைஞர் திணைக்களத்தில் வரைப மட்டத்தில் அடைந்திருப்பதாக அறியக் கிடைக்கின்றது. கூட்டு ஒப்பந்த மீளாய்வு என்பது இந்த முறை பல்வேறு சலசலப்புகளை உருவாக்கி தற்போதைய நடைமுறையை மீளாய்வு செய்யும் தேவை தற்போது உணரப்பட்டுள்ளது. அதேபோல திறந்த பல்கலைக்கழக கட்டடம்  அமைப்புப் பணியில் இடம்பெற்றிருக்க கூடிய முன்னேற்றங்கள் குறித்தும் வாராந்த மலையக பத்திரிகை ஒன்றிற்கு விளக்கமளித்து உரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு உறதிபடுத்துமாறும் கேட்டுக்கொண்டிருந்தார். 

இந்த கட்டத்திலேயே தனது ஒருவருட கால பாராளுமன்ற செயற்பாட்டில் நான்காவதாக 'நுவரெலியா மாவட்டத்தில் பிரதேச செயலகங்களை அதிகரிக்கும் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இதன்போது, பிரேரணை முன்வைத்த உறுப்பினரின் கோரிக்கை 15 ஆகவும் அமைச்சர பதிலளிக்கும்போது 10 வழங்கலாம் என்பதாகவுமே விவாதம் அமைந்திருந்தது. 2017 ஆம் ஆண்டு மீளவும் இடம்பெறவுள்ள எல்லை மீள்நிர்ணயத்துடன் 15 ஆக உயர்த்துவது தொடர்பில் கலந்தாலோசிக்கலாம் என்பதாகவும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் பதில் அளித்து இருந்தார். 

எது எவ்வாறெனினும் மலையக சமூகம் தமது ஒட்டுமொத்த குரலையும் வலுப்படுத்தி தமது அரசியல் உரிமை கோரிக்கைகளை வென்றெடுக்க வேண்டியது கடப்பாடாகிறது. தற்போது பாராளுமன்றத்திலும் அதற்கான குரல் ஒலிப்பது மேலதிகமாக இதனை இலகுபடுத்தும் செயன்முறையாக அமைந்துள்ளது. பாராளுமன்றத்தில்  திலகர் ஹன்சார்ட பதிவுகளுக்காக சமர்ப்பித்த நுவரெலியா மாவட்ட செயலாளரினால் கோரிக்கை விடப்பட்டுள்ள ஐந்து பிரதேச செயலகங்களை பத்தாக உயர்த்தும் யோசனை வரவேற்ககூடியது எனினும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள தரவுகள் நியாயப்பாடுகளில் இருந்து மலையக சமூகத்தின் கோரிக்கைகளும் நியாயங்களும் வேறுபட்டன என்பதை மனதில் கொள்ளுதல் வேண்டும். எனவே திலகர் தனது உரையில் முன்வைத்த சனத்தொகை மற்றும் பரப்பளவு அடிப்படையில் 12 ஆக அதிகரிக்க கூடிய வாய்ப்பு மற்றும் புவியில் அடிப்படையில் அவதானம் செலுத்தி மேலதிக மூன்று என எல்லாமாக நுவரெலியா மாவட்டத்தில் பிரதேச செயலகங்களை 15 ஆக உயர்த்தும் கோரிக்கையை நுவரெலியா மாவட்ட மக்கள் மாத்திரம் அல்ல ஒட்டுமொத்த மலையக சமூகமும அக்கறை கொள்ள வேண்டியது அவசியமாகும்.

  அதேநேரம் நுவரெலியாவுக்கு வெளியே பெருந்தோட்டங்கள் அமைந்துள்ள மலையகத் தமிழ் மக்கள் அதிகம் வாழுகின்ற பதுளை, கண்டி, மாத்தளை, இரத்தினபுரி, கேகாலை, மொனராகலை, களுத்துரை, காலி மாவட்டங்களிலும் இந்த நிலைமைகளை ஆய்வு செய்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் நாடாளுமன்றில் அங்கம் வகிக்கம் அர­சியல்  பிரதிநிதிகள் ஆவணஞ் செய்ய வேண்டும். ஏனெனில் இங்கு பேசப்படுவது வெறுமனே நிர்வாகரீதியான அதிகாரம் மாத்திரம் அல்ல நாளை அரசியல் அதிகார பகிர்வு என்று ஒன்று வரும்போது அதில் மலையக மக்கள் வாழுகின்ற பிரதேசங்களை உரிய முறையில் அடையாளம் காட்டவும் உத்தேச தேர்தல் முறையில் மலையக மக்களுக்கான தேர்தல் தொகுதிகளை அடையாளம் காண்பதிலும் இந்த பிரதேச செயலகங்களின் கோரிக்கை மிகவும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.

நன்றி - ஞாயிறு தினக்குரல் 
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates