Headlines News :
முகப்பு » , » கூட்டு ஒப்பந்தம் தொழிற்சங்கங்களின் இயலாமையும் அரசியல் தலைமைகளின் ஆளும் வர்க்க சார்பையும் வெளிப்படுத்தியுள்ளது

கூட்டு ஒப்பந்தம் தொழிற்சங்கங்களின் இயலாமையும் அரசியல் தலைமைகளின் ஆளும் வர்க்க சார்பையும் வெளிப்படுத்தியுள்ளது


மக்கள் தொழிலாளர் சங்கம்

தோட்டத் தொழிலாளர்கள் 1000 ரூபா கோரி கடந்த காலங்களில் தமது போராட்டங்களை மேற்கொண்டிருந்த போதும் புதிய சம்பள கூட்டு ஒப்பந்தம் வெறும் 730 ரூபா என்று தீர்மானிக்கப்பட்டு கம்பனிகள் சார்பாக இலங்கை முதலாளிமார் சம்மேளனமும் தொழிலாளர்கள் சார்பாக இ.தொ.கா., இ.தே.தோ.தொ.ச., மற்றும் தொழிற்சங்க கூட்டு கமிட்டி என்பவும் கைச்சாத்திட்டுள்ளன. அடிப்படை சம்பளம் வெறும் 50 ரூபா அதிகரித்துள்ள புதிய சம்பள கூட்டு ஒப்பந்தத்தில், ஏற்கனவே வழங்கப்பட்ட விலைக்கேற்ற கொடுப்பனவு 30 ரூபா அப்படியே வழங்குவதற்கும், ஏற்கனவே 75சதவீத வரவுக்கு வழங்கப்பட்ட 140 ரூபாய் 60 ரூபாயாக குறைக்கப்பட்டும், இது வரை இல்லாத உற்பத்தித்திறன் கொடுப்பனவு என்ற புதியவகை கொடுப்பனவாக 140 ரூபாயும் சேர்க்கப்பட்டுள்ளன. எனவே, அடிப்படை சம்பளத்தில் 50 ரூபாயும் ஏனைய கொடுப்பனவுகளாக 60 ரூபா சேர்த்து வெறும் 110 ரூபா சம்பள உயர்வு மாத்திரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த சம்பள உயர்வு தொழிலாளர்களால் எந்தவகையிலும் ஏற்றுக் கொள்ள கூடியதல்ல. அத்தோடு இது வரை காலமும் சம்பள கூட்டு ஒப்பந்தத்தில் வழங்கப்பட்டு வந்த பாக்கி சம்பள நடைமுறை இல்லால் ஆக்கப்பட்டு 2015ஆம் ஏப்பிரல் மாதத்தில் இருந்து வழங்கப்பட வேண்டிய 18 மாத பாக்கி சம்பளம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படாமை என்பன கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களின் இலாமையையே காட்டுகிறது. ஏற்கனவே 800 ரூபாவிற்கும் அதிக தொகை நாட் சம்பளமாக பெற வாய்பு இருந்த நிலையில் 730 நாட் சம்பளத்திற்கு கைச்சாத்திட்டுள்ள தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களுக்கு துரோகமிழைத்துள்ளனர். இது பெருந்தோட்டக் கம்பனிகளுக்கும், கம்பனிகள் நட்டத்தில் இயங்குகின்றன என்று கூறிய பிரிவாரங்களுக்கும் கிடைத்த வெற்றியாகும்.

ஒன்றாக இருந்து பேச்சுவார்த்தை நடத்தி, நிபந்தனைகளை ஏற்று கையொப்பமிட்டுப் பின்னர் ஒருவரையொருவர் குற்றம்சாட்டும் அசட்டுத்தனமான தொழிற்சங்க அரசியல் கலாசாரத்தை தொழிலாளர்கள் தொடர்ந்தும் சகிக்கக்கூடாது. இ.தொ.கா. தலைவர்கள் நிலுவை சம்பளம் பெற்றுக் கொடுக்க முடியாது என்றும் கூறும் கருத்துக்கள் கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் அடிப்படை அறிவற்ற கருத்துக்களாக இருப்பதுடன் அச்சங்கத்தில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களை கொச்சைப்படுத்தும் நடவடிக்கையாகும். அத்தோடு தொழிலாளர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள துரோகத்திற்கு இ.தே.தோ.தொ.ச. மற்றும் பெருந்தோட்டக் கூட்டு கமிட்டியும் சம அளவில் பொறுப்பு கூறவேண்டியவர்களாவர். கம்பனிகள் கூறுவது போல் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் நு.P.கு மற்றும் நு.வு.கு. என்பவற்றை சேர்த்து சம்பளத் தெகையை கூறும் வங்குரோத்து நிலைக்கு இன்று தொழிற்சங்கங்கள் தள்ளப்பட்டுள்ளன. கம்பனிகள் அனைத்தும் இலாபமோ நட்டமோ ஒருமுகமாக இருந்து தங்கள் பக்க பேரப்பேச்சை முன்னெடுத்த போதும், தொழிலாளர்கள் சார்பாக ஒப்பமிடும் மூன்று சங்கங்களும் கம்பனிகளை பலப்படுத்தும் வகையில் பல முரண்பட்ட நிலைப்பாடுகளை பேச்சுவாத்தை மேசையிலும் அதற்கு வெளியிலும் வெளிப்படுத்தி அவர்களின் தொழிலாளர் விரோத நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர்.

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் தமிழ் முற்போக்கு கூட்டணியினரின் செயற்பாடுகள் அவர்கள் தோட்டத் தொழிலாளர்களின் நலனில் அக்கறை இல்லை என்பதையே காட்டுகிறது. ஆரம்பத்தில் தாங்கள் 1000 சம்பள உயர்விற்கு ஆதரவளிப்பதாக சத்தியாகிரகம் இருந்த அக் கூட்டணியினர், 730 இணங்கியதால் தாங்கள் நடத்த இருந்ததாக கூறிய போராட்டத்தை கைவிட்டனர். 1000 ரூபா பெற்றுக் கொடுத்தால் பதவி விலகுவேன் என்று கூறிய தலைவர்கள் 1000 ரூபா கேட்டவருக்கும் தனக்கும் இடையில் வித்தியாசம் இல்லை என்பதை மக்களுக்கு வெளிப்படுத்தியுள்ளனர். சில பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலவாக்கலையில் இடம்பெற்ற தோர்தல் பிரசாரக்கூட்டத்தில் தான் ஆட்சிக்கு வந்தால் 1000 பெற்று கொடுப்பேன் என்று கூறவில்லை என்று கூறும் வங்குரோத்து நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். தாங்கள் தும்மினாலும் பத்திரிக்கையில் வரவேண்டும் என்று துடிக்கும் சில அரசியல் தலைவர்களுக்கு தொழிலாளர்கள் சார்பான கருத்துக்கள் ஊடகங்களில் வருவது சகிக்க முடிவதில்லை. அத்துடன் சிலருக்கு மலையக அரசியலில் ஏகபோக உரிமை தேவைப்படுகிறது.

அடுத்த முறை கூட்டு ஒப்பந்தத்தில் நாட் சம்பளத்தையும் இல்லாமல் செய்து உற்பத்தி திறனை அடிப்படையாக கொண்;ட முறை என்ற பேரில் தொழிலாளர்களின் சட்ட ரீதியான உரிமைகளை பறித்து தொழிற்சங்க உரிமைகள் அற்ற உதிரிகளாக ஆக்கும் நிலைக்கு தள்ளுவதற்கே கம்பனிகள் திட்டமிட்டுள்ளனர். அதன் அங்கமாகவே உற்பத்தித்திறன் கொடுப்பனவு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அவ்வாறான திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தே தற்போதைய கூட்டு ஒப்பந்தத்தில் தொழிற்சங்கங்கள் கைச்சாத்திட்டப்பட்டுள்ளதாக அம்முறைக்கு முழு ஒத்துழைப்பை கம்பனிக்கு வழங்கி வரும் பெருந்தோட்டத்துறை அமைச்சர் நவீன் திசாநாயக்க மற்றும் தொழில் அமைச்சர் ஜோன் செனவிரத்தின போன்றோர் குறிப்பிட்டுள்ளனர். அரசாங்கம் கூட்டு ஒப்பந்தத்தில் தான் மத்தியஸ்தர் என்று கூறிவந்த போதும் 730 ரூபாயை ஏற்று கையொப்பம் இட வேண்டும் என்று வற்புறுத்தியமை அவர்கள் வெளிப்படையாக கம்பனிகள் சார்பாக இருந்தமையை காட்டுகிறது.

தோட்டத் தொழிலாளர்கள், தொழிலாளர் வர்க்க குணமற்ற கம்பனிகளுக்கு அடிப்பணியும் தொழிற்சங்கங்களையும் ஆளும் வர்க்கத்தை சார்த்திருக்கும் பாராளுமன்ற தலைமைகளையும் கூட்டு ஒப்பந்த நேரத்தில் மாத்திரம் விமர்சித்து விட்டு பின் தேர்தலில் அவர்களை ஆதரித்து பின்னர் மீண்டும் கூட்டு ஒப்பந்தத்தின் போது விமர்சிக்கும் போக்கை மாற்றி தொழிலாளர் வர்க்க உணர்வுடன் மாற்று பாதையை பற்றி சிந்திக்க வேண்டும். அவ்வாறு மக்கள் செயற்படாவிட்டால் தோட்டத் தொழிலாளர்களின் வஞ்சிக்கப்பட்ட வரலாறு தொடர்வதையும் பெருந்தோட்டத் தொழிற்துறை அழிவடைவதையும் மலையக தேசிய இனத்தின் இருப்பு தகர்க்கப்படுவதையும் தடுக்க முடியாது போய்விடும் என்பதை வலியுத்துகின்றோம்.

சட்டத்தரணி இ.தம்பையா LL.B
பொதுச் செயலாளர் 
மக்கள் தொழிலாளர் சங்கத்தின் நிறைவேற்றுக் குழுசார்பாக
2016.10.22
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates