சீ.பீ.ஸ்கொட் (Charles Prestwich Scott |
இங்கிலாந்துக்கு சென்று இலங்கையில் நடந்த கொடுமைகளுக்கு நீதி கோரி போராடிய ஈ.டபிள்யு.பெரேரா கேகாலை படுகொலைகள் குறித்த விபரங்களின் தொகுப்பை பல அரசியல் தலைவர்களின் பார்வைக்குக் கொண்டு சென்றார். மான்செஸ்டரில் அமைந்திருந்த காலனித்துவ செயலகத்தில் அவர் நடத்திய விவாதத்துக்கு ஆதரவாக மான்செஸ்டர் கார்டியன் (Manchester Guardian) பத்திரிகையின் ஆசிரியர் சீ.பீ.ஸ்கொட் (Charles Prestwich Scott, (1846-1932)) பெரும் ஆதரவு வழங்கினார். அந்தப் பத்திரிகை அப்போது மிகவும் பிரபலமான பத்திரிகை. அவர் 1895-1906 காலப்பகுதியில் லிபரல் கட்சி உறுப்பினராக இங்கிலாந்து அரசாங்க சபையில் உறுப்பினராக இருந்தவர். எனவே பழுத்த அனுபவசாலி.
கேகாலை துப்பாக்கிச் சூடு சம்பந்தமாக அரசாங்க சபையில் முன்வைக்கப்பட்ட அறிக்கையை (Sessional Paper VI of 1917) இலங்கையிலிருந்து அவர் மான்செஸ்டர் கார்டியன் பத்திரிகைக் காரியாலத்துக்கு அனுப்பச் செய்து பெற்றுக்கொண்டார். அதுமட்டுமன்றி இது குறித்த பல விபரங்களை அந்தப் பத்திரிகையின் மூலம் வெளியுலகிற்கு கொண்டுவந்தார். குறிப்பாக ஆளுநரின் விரிவான விபரங்கள் அடங்கிய குறிப்புகளையும் அவர் 1917ஆம் ஆண்டு நவம்பர் 2ஆம் திகதி பத்திரிகையில் வெளியிட்டார். அதை பரவலாக முக்கிய அனைவருக்கும் விநியோகித்தார்.
ஈ.டபிள்யு.பெரேரா, ஜயதிலக்க, பிரேசர் ஆகியோர் தங்களுக்கு இடையிலும், ஏனையோருக்கும் இங்கிலாந்தில் இது குறித்து பரிமாறிய கடிதங்கள், அறிக்கைகளில் ஒரு பகுதி பேராதனைப் பல்கலைக்கழக நூலகத்தில் இன்றும் பார்வைக்கு கிடைக்கிறது என்று 1915 கலவரம் குறித்து எழுதிய ஆய்வாளர்களில் ஒருவரான ஜேம்ஸ்.டீ.ரட்னம் தெரிவிக்கிறார். ஏனைய ஆவணங்கள் எங்கெல்லாம் கிடக்கின்றன என்பது குறித்து அவர் பிரேசரும் 1915 கலவரமும் என்கிற கட்டுரையில் (THE REV. A. G. FRASER AND THE RIOTS OF 1915) தொகுத்துள்ளார்.
இராணுவச் சட்டத்தின் போது கேகாலை மாவட்டத்துக்கு நியமிக்கப்பட்ட ஆணையாளர் எச்.டீ.பேர்டனின் ( H. D. Burden) இன் வாக்குமூல அறிக்கை கேகாலை படுகொலை சம்பவத்துக்கு முக்கியமான ஆவணங்களில் ஒன்றாக எடுத்துக்கொள்ளப்படுகிறது.
1917 செப்டம்பர் 5 அன்று இலங்கை அரசின் வர்த்தமானி பத்திரிகையின் விசேட பதிப்பில் கீழ்வரும் வகையில் அறிவிக்கப்பட்டிருந்தது. மிகப் பெரும் அறிக்கை அது.
அறிவித்தல்
“சமாதான நீதவான்களும், உத்தியோகபற்றற்ற பொலிஸ் நீதவான்களுமாக நியமிக்கப்பட்டிருந்த கீழ்வருவோரின் நியமனங்களை ஆளுனரால் இல்லாமல் செய்யப்படுகின்றது என்பதை இத்தால் அறிவிக்கப்படுகிறது.
• மேஜர்.எல்.பேலி
• ஏ.எல்.பெய்னஸ்
• ஏ.டீ.ஸ்லை
நகரப் பாதுகாப்பு படையின் உறுப்பினராக இருந்த எப்.எல்.சட்லோவின் சேவை இதற்கு மேல் தேவைப்படாது என்பதையும் ஆளுனரால் அறிவிக்கப்படுகிறது.”
மேஜர்.எல்.பேலி
மேஜர் பேலி இந்த படுகொலைகளில் சம்பந்தப்பட்ட முக்கிய சூத்திரதாரி. அவர் இந்த அறிக்கை வருமுன்னரே நாட்டை விட்டு போய்விட்டார். அதுமட்டுமன்றி இத்ன்ஹா அறிக்கை வெளியான வேளை அவர் அரசரின் இராணுவச் சேவைக்காக பிரான்சில் சேவையாற்றவும் தொடங்கிவிட்டார். அவர் இலங்கை விட்டு வெளியேறுமுன்னர் தோட்டத்துரையாக 27 வருட காலம் சேவையில் இருந்திருக்கிறார். அதுமட்டுமன்றி இலங்கையின் ரைபல் படையில் மேஜராக 11 வருட காலம் இருந்திருக்கிறார். சமாதான நீதவானாகவும் உத்தியோகபற்றற்ற பொலிஸ் நீதவானாகவும் நியமிக்கப்பட்டவர்.
பெய்னஸ்
அலெக்சாண்டர் லெவ்ளின் பெய்னஸ் ஒரு தோட்டத்துரையாக பல ஆண்டு காலம் சேவையில் இருந்தவர். இலங்கை ரைபல் படையில் 17 வருடகால சேவையிலும் இருந்திருக்கிறார். அதே துறையில் தென் ஆப்பிரிக்காவிலும் சேவையில் இருந்திருக்கிறார். இலங்கையில் சமாதான நீதவானாகவும் உத்தியோக பற்றற்ற நீதவானாகவும் 1914 ஆம் ஆண்டு நியமனம் பெற்றவர்.
ஸ்லை
எல்பர்ட் டேவிட் ஸ்லை பிரபலம் மிக்க தோட்டத்துரையாக இருந்தவர். 20 வருட காலமாக சப்பிரகமுவாவில் சேவையில் இருந்திருக்கிறார். இவரும் இலங்கை ரைபல் படையில் இருந்ததுடன், 1910 ஆண்டு இலங்கையில் சமாதான நீதவானாகவும் உத்தியோக பற்றற்ற நீதவானாகவும் நியமிக்கப்பட்டவர்.
சட்லோ
13 வருடகாலமாக இலங்கையில் வாழ்ந்துவந்த இவர் போபஸ், வோகர் போன்ற நிறுவங்களில் பங்குதாரர். 1914ஆம் ஆண்டு நகர பாதுகாப்பு படை தோற்றுவிக்கப்பட்டபோது அதன் ஆரம்பத்திலேயே இணைந்துகொண்டவர்.
கொழும்பு நகர பாதுகாப்பு படை.
இலங்கை இராணுவத்தில் ரைபல் படையில் அதிகமாக தோட்ட்டத்துரைமாரைக் கொண்ட சுயாதீன படைப்பிரிவாக இயங்கியிருக்கிறது. முதலாவது உலக யுத்தம் தொடங்கிய வேளை இவர்களில் பலர் இலங்கை இராணுவத்தில் நேரடியாக இணைந்து யுத்த களத்தில் பணியாற்றுவதற்காக சென்று விட்டனர். அதன் பின்னர் அதில் இருந்தவர்களின் எண்ணிக்கை 150 பேராக குறைந்தது. இராணுவச் சட்ட காலத்தின் போது இப்பேற்பட்ட உலக யுத்த காலத்தில் இலங்கையை ஆட்சிக் கவிழ்ப்பு சதியிலிருந்து பாதுகாக்க வேண்டும் என்கிற பேரில் அவர்கள் கலவரத்தை அடக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டார்கள். குறிப்பாக கொழும்பு நகர பாதுகாப்பு படை என்கிற பிரிவும் இதன் பிரகாரம் உருவாக்கப்பட்டது. அதுபோல பீரங்கிப் பயிற்சியும் இவர்களுக்கு வழங்கப்பட்டு மேலதிக பீரங்கிப் பிரிவும் உருவாக்கப்பட்டது. இவர்கள் நாடு முழுவதும் ஏனைய படையினருக்கும் ஒத்துழைப்பு வழங்கினர்.
இந்த கலவரம் ஒரு ஆட்சிக் கவிழ்ப்பு சதி என்றும், தமது எதிரியான ஜெர்மனும் பின்னணியில் இருக்கிறது போன்ற வதந்திகளாலும் இவர்கள் மூர்க்கத்தனமாக பல இடங்களில் நடந்துகொண்டுள்ளார்கள்.
இந்த பெரும் அறிக்கை முழுவதையும் ஆர்மண்ட் டீ சூசா எழுதிய “இலங்கையில் இராணுவச் சட்டத்தின் கீழ் 100 நாட்கள்” என்கிற நூலில் ஒரு தனி அத்தியாயமாக வெளிவந்திருக்கிறது. அந்த அறிக்கையின்படி கலவரம் குறித்து சிவில் நீதிமன்றங்களில் நடந்த வழக்குகளில் குற்றவாளிகல் என நிரூபிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3731. அவற்றில் 28 கொலையும் தேசத்துரோக குற்றங்கள். 58 தேசத்துரோகக் குற்றங்கள். முஸ்லிம்களின் கடைகள் 4075 கொள்ளையிடப்பட்டிருக்கின்றன. 350 வீடுகளும் கடைகளும் தீக்கிரையாகியுள்ளன. 17 முஸ்லிம் பள்ளி வாசல்கள் நாசப்படுத்தப்பட்டுள்ளன. 8 அழிக்கப்பட்டுள்ளன. (ஆளுநர் சேர் ரோபர்ட் சார்மர்ஸ் காலனித்துவ செயலாளருக்கு 1917 நவம்பர் 3 அனுப்பிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டதை இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.)
பொலிஸ்மா அதிபர் தான் பூரண அதிகாரத்தை வழங்கியிருந்தார் என்று குற்றம் சாட்டப்பட்டவர்கள் சாட்சியம் வழங்கியிருந்தார்கள். இந்தக் கலவரம் தொடங்கிய பின்னர் நிலவிய நிலைமை குறித்து ஆணைக்குழு விசாரணையின் போது பொலிஸ்மா அதிபர் வழங்கிய சாட்சியம் கவனிக்கத்தக்கது.
“சேவையில் ஈடுபடுத்துவதற்கு உடனடியாக படையினர் எவரும் இருக்கவில்லை. பீரங்கிப் படையையும் கொழும்புக்கு வெளியில் அனுப்ப இயலாது இருந்தது. 50 பேரைக்கொண்ட அந்த படையில் பிரித்தானியர்கள் தான் இருந்தார்கள். நகர பாதுகாப்ப்பு படையினரும் கொழும்பை பாத்துக்கத் தேவைப்பட்டார்கள். பஞ்சாப் படையினரையும் வெளியில் இருந்து தான் கொண்டுவர வேண்டியிருந்தது. அதுவும் அதிகாரி மட்டத்தில் எவரையும் பெற முடியவில்லை. அனைத்து நீதவான்களும் கலவர வழக்குகளில் ஈடுபட்டிருந்ததால் அவர்களையும் எம்மால் பெற முடியவில்லை.
சிவில் சேவையில் இருந்தவர்களையும் பெற முடியவில்லை. அனைத்து போலிஸ் அதிகாரிகளும் தத்தமது பிரதேசங்களில் நிலைத்திருக்க வேண்டியிருந்தது. இந்த நிலைமையில் தான் கலவரம் நிகழ்ந்த பிரதேசங்களுக்கு பஞ்சாப் படையினருடன் தகுதிவாய்ந்தவர்களை தெரிவு செய்து அனுப்ப வேண்டிய நிலை ஏற்பட்டது. நகர பாதுகாப்பு படையைச் சேர்ந்தவர்களையும், ஏனைய பிரதேசங்களுக்கு சுயாதீன அதிகாரிகளையும் ஆணையிடக்கூடியவகையில் அதிகாரங்கள் வழங்கப்பட்டன.”
கலவரத்தின் தன்மை குறித்து அவர் வழங்கிய வாக்குமூலத்தில்..
“ஏனைய மாவட்டங்களோடு ஒப்பிடுகையில் சப்பிரகமுவா, மேல்மாகாணம் ஆகிய மாவட்டங்களில் அதிகமான குற்றங்கள் நிகழ்ந்தன. அந்த மாவட்டங்களில் ஏற்பட்ட இழப்பீடுகள் ஏனைய மாவட்டங்களை விட அதிகமானவை. கேகாலை மாவட்டத்தில் நிகழ்ந்த பல சம்பவங்கள் திட்டமிடப்பட்டவை. டைனமைட்டுகளை சுதந்திரமாக பயன்படுத்தியிருக்கிறார்கள். சப்பிரகமுவா மாகாணத்தோடு ஒப்பிடுகையில் கேகாலை மாவட்டத்தில் இடம்பெற்ற இழப்புகள் இரட்டிப்பானவை.
....சிறைசெய்யப்பட்டவர்களை தடுத்து வைப்பதற்கு சிறைகள் போதாது இருந்தன. கேகாலை நகரத்தில் மாத்திரமல்ல கேகாலை மாவட்டத்தில் எந்த இடத்திலும் சிறைகள் போதாது இருந்தன....”
போலிஸ் மா அதிபரின் இந்த வாக்குமூலம் இந்த அநியாயங்களை நியாயப்படுத்துவதற்கு முன்வைத்த காரணங்கள் என்பதை எடுத்த எடுப்பில் விளங்கிக் கொள்ள முடியும். இதை விட முக்கிய விபரங்கள் இந்த ஆணைக்குழு விசாரணை அறிக்கையில் வெளிவந்தன.
அடுத்த இதழில்
நன்றி - தினக்குரல்
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...