Headlines News :
முகப்பு » , , , , » “பண்டாரநாயக்க மகா முதலியாரின் துரோகம்” (1915 கண்டி கலகம் –43) - என்.சரவணன்

“பண்டாரநாயக்க மகா முதலியாரின் துரோகம்” (1915 கண்டி கலகம் –43) - என்.சரவணன்


பிரித்தானிய ஆட்சியின் இராணுவ சட்டம் மேற்கொண்ட அடக்குமுறையை அன்றைய பத்திரிகைகள் போதுமானளவு வெளிக்கொணர்ந்திருந்தன. அதுமட்டுமன்றி அவ்வூடகங்கள் வெளிப்படுத்திய கருத்துக்களும், கண்டனங்களும் கண்டனங்களும் கூர்ந்து கவனிக்கப்பட்டன.

அப்படிப்பட்ட பத்திரிகைகளில் ஒன்றான “The Hindu Organ” என்கிற பத்திரிகை வடக்கு தமிழர்களின் குரலாக வெளிவந்தது. சைவ பரிபாலன சபையால் வெளியிடப்பட்ட இப்பத்திரிகை ஆரம்பத்ததில் தமிழ் மொழியில் “இந்து சாதனம்” என்கிற பெயரில் 1889 இல் இருந்து வெளிவரத் தொடங்கியது. பின்னர் ஆங்கிலத்திலும் வெளியிடப்பட்டது. இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை வெளிவந்த இந்தப் பத்திரிகை 1889-1949 கால இடைவெளிகளில் வெளிவந்தது. அப்பத்திரிகை இராணுவ நீதிமன்றத் தீர்ப்புகள் குறித்து ஆசிரியர் தலையங்கத்தில் இவ்வாறு வெளியிட்டது.

"கடந்துபோன கலவரத்தைத் தொடர்ந்து சிறைகளில் துன்பம் அனுபவித்துவரும் சிங்களவர்களுக்கு நீதி பெற்றுத்தருவதற்காக அரசாங்க சபையில் நகர்ப்புற ஐரோப்பியர்களை பிரதிநிதித்துவப் படுத்தும் ஹரி கிரிஸ் மேற்கொண்டுவரும் முயற்சிகளுக்கு இலங்கையர்கள் நன்றிக்கடன்பட்டுள்ளார்கள். நம்பத்தகுதியற்ற சாட்சிகளைக் கொண்டு இராணுவ நீதிமன்றத்தினால் அப்பாவிகள் பலர் சிறைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளார்கள் என்று இலங்கையர்கள் கருதுகிறார்கள். பெருமளவு பணத்தைக் கட்டி வெளியில் வரக்கூடியவர்கள் மாத்திரம் ஆளுனரால் விடுவிக்கப்பட்டுள்ளனர். இராணுவ நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தந்தைகள் பற்றியும், அதன் பிழையான நடைமுறை பற்றியும் ஆராய்வதற்காகநீதித்துறையில் சிறப்புப் பயிற்சிப்பெற்றவர்களைக் கொண்ட ஒரு குழு உருவாக்கப்படுவது அவசியம். நீதி என்பதானது அதிகாரத்துவத்தால் அலட்சியபடுத்தமுடியாத தூய்மையான ஒன்று.”

அது போல த சிலோன் மோர்னிங் லீடர் பத்திரிகை மீண்டும் மீண்டும் ஒரு விடயத்தை வலியுறுத்தியது. கருணை தேவையில்லை! நீதியின் பெயரால் இராணுவ நீதிமன்ற வழக்குகள் அனைத்தும் மீள விசாரணைக்கு எடுப்பட வேண்டும் என்றது அப்பத்திரிகை. 1915 டிசம்பர் 21 ஆசிரியர் தலையங்கத்தில் இப்படி தெரிவித்தது.

இராணுவ நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்புகளில் பெரும்பாலானவை பிழையான கணிப்புகளால் செய்யப்பட்ட தீர்ப்புகள். இராணுவச் சட்டம்  அமுலுக்கு வருவதற்கு ஒரு சில தினங்களுக்கு முன்னரும் அது அமுலில் இருந்த காலத்திலும் அரசுக்கு எதிரான சதியில் சிங்களவர்கள் இறங்கியிருக்கிறார்கள் என்று நாடு முழுதும் பரப்பப்பட்ட வதந்தியின் அடிப்படையிலேயே அவை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. எனவே முடிந்த முன்முடிவுகளில் இருந்தே தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அதன் பின்னர் சிங்களவர்கள் அப்படி எந்தவொரு சதியையோ, எழுச்சியையோ கொண்டிருக்கவில்லை என்பது தெளிவானது என்று அப்பத்திரிகை எழுதியிருந்தது. அதன் இறுதியில் இப்படி முடிக்கப்பட்டிருந்தது.

“இங்கு கருணைக்காண அவசியம் எதுவும் இல்ல. இது நியாயம் சம்பந்தப்பட்ட பிரச்சினை. இந்த அதிகாரிகள் இவர்களை குற்றவாளிகள் என்பதை உறுதிசெய்வார்களா? அப்படி உறுதிசெய்ய முடியாதென்றால் இந்த வழக்குகளை மீள விசாரிப்பதற்கு நிராகரிப்பது நியாயமானதா? உண்மை நிலையை இப்போது உணர்ந்த பின்னராவது இந்த யோசனையை எற்றுக்கொள்ளவேண்டுமல்லவா? அன்று அத்தீர்ப்பு சரியென நம்பினார்கள். அத்தீர்ப்புகள் நியாயமானது என இன்றும் நடமுறைப்படுத்திப்படுத்திக் கொண்டிருக்கலாமா? எனவே தான் இது நியாயம் சம்பந்தப்பட்ட ஒரு விடயம் என்கிறோம். எனவே தான் எமக்கு ஒருபோதும் கருணை தேவையில்லை, நீதியே தேவை என்கிறோம். ஏற்பட்ட நாசம் விசாலமானது, முழு நாட்டுக்கும் கொடுத்த தீர்ப்பு பயங்கரமானவை. கடந்த காலத்தை விட இப்போது நியாயத்துக்கான வாய்ப்புகள் திறந்துள்ளன.

நீண்ட கால தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள மோசமான குற்றச்சாட்டு “தேசத்துரோக”க் குற்றச்சாட்டு. பேரரசருக்கு எதிராக போர் தொடுத்தல் என்கிற வெற்றுக் கற்பனை என்பது தெளிவு. இப்படியான தேசத்துரோக கற்பனாபூர்வமான குற்றச்சாட்டுகளுக்கு உயர்ந்தபட்சம் 14 ஆண்டுகாலம் அல்லது ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முந்திய பிரித்தானிய தீர்ப்பொன்று உதாரணமாக பார்க்கப்படுகிறது. கிறிஸ்டியான் தி வெட்  அரசருக்கு எதிராக போர் தொடுத்த ஒருவர். எதிரிப்படைகளுடன் சேர்ந்து அரசரின் படைகளுக்கு எதிராக போர் தொடுத்த குற்றச்சாட்டில் கிறிஸ்டியன் தி வெட் மற்றும் 118 பேருக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பில் ஆறு ஆண்டு கால சிறைத்தண்டனை மட்டுமே வழங்கப்பட்டது. அந்த ஆறு ஆண்டுகால தண்டனை முடிவதற்கு முன்னர் அவர்கள் விடுதலையும் செய்யப்பட்டார்கள். அப்படிப்பார்க்கும் போது இலங்கையில் நிகழ்ந்தது அரசருக்கு எதிரான போர் தொடுத்தலே அல்ல. கிளர்ச்சியாளர்கள் எவரும் அரசரின் படைகளை எதிர்த்து சண்டை பிடிக்கவுமில்லை. ஆனால் கிறிஸ்டியான் தி வெட்டுக்கு வழங்கப்பட்ட தந்தையோடு ஒப்பிடும் போது சிறிய குற்றங்களுக்காக அதிகபட்ச கடும் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மேலும் வெட் மற்றும் அவரின் படையினருக்கு கருணை வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டார்கள். அந்த சந்தர்ப்பம் கூட இலங்கையர்களுக்கு கிடைக்கவில்லை.

சாதாரண நீதிமன்றத்தை விட இந்த இராணுவ நீதிமன்றம் விசேடமாக எதனையும் சாதிக்கவும் இல்லை. இந்த இரண்டு நீதிமன்றங்களும் ஏக காலத்தில் இயங்கவே செய்தன. நீதியை நிலைநாட்டுவதற்குப் பதிலாக இராணுவ நீதிமன்றம் மக்களின் நம்பிக்கையை இழந்தது தான் மிச்சம். குற்றவாளிகளுக்கு தண்டனையை உணர்த்துவதற்குப் பதிலாக அப்பாவிகளை விரக்தி கொள்ளைச் செய்தன.

நாடுமுழுவதும் பரவிய “சிங்களக் கிளர்ச்சி” என்கிற கற்பனாவாத பீதி சிங்களவர்களை சந்தேகமாகவும், முஸ்லிம்களை இரக்கத்துடனும் பார்க்கச் செய்தன. இதுவே ஆட்சியாளர்களின் பிழையான அணுகுமுறைக்கு பின்னணியாக அமைந்தது. அதுவே குற்றம் சுமத்தப்பட்டவர்கள் தாம் அப்பாவிகள் என்பதை நிரூபிப்பதற்கான வாய்ப்புகள் அடைக்கப்பட்டன. அதேவேளை பொய்சாட்சிகள் அதிகாரிகளின் நம்பகத்தன்மையை பெற்றன. சட்டத் தேர்ச்சியற்ற இராணுவத்தினரை நீதிபதிகளாகக் கொண்ட தான்தோன்றித்தனமான நீதிமன்றத்தால் இதைத் தான் செய்ய முடிந்தது.”
இந்த ஆசிரியர் தலையங்கத்தை எழுதியவர் சிலோன் மோர்னிங் லீடர் பத்திரிகையின் ஆசிரியராக இருந்த ஆர்மண்ட் டீ சூசா என்பது கவனிக்க வேண்டியது. “இலங்கையில்  இராணுவ சட்டத்தின் கீழ் 100 நாட்கள்” என்கிற நூலை எழுதியவரும் அவர் தான்.
சொலமன் டயஸ் பண்டாரநாயக

சொலமன் டயஸ் பண்டாரநாயக
சேர் சொலமன் டயஸ் பண்டாரநாயக்க மகா முதலியார் குறித்து இங்கு குறிப்பிடுவது அவசியம் இவர் பிற்காலத்தில் இலங்கையின் பிரதம மந்திரியாக ஆன S.W.R.D.பண்டார்நாயக்கவின் தகப்பனார். 1915 கலவர காலத்தின் போது பண்டாரநாயக்க கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பை நிறைவு செய்த வருடம் அது. ஆனால் அதே வேளை அவரது தகப்பனார் சொலமன் முதலி இலங்கையில் ஆங்கிலேயர்களின் முதன்மையான விசுவாசியாக அறியப்பட்டிருந்தது மட்டுமன்றி கலவரத்தின் போது அப்பாவி சிங்களவர்கள் பலர் தண்டனைக்கு உள்ளாகவும் அவர் காரணமானார். எனவே தான் இன்று வரை சொலமன் முதலியாருக்கு வரலாற்றில் குறிப்பிடத்தக்க இடத்தை சிங்களவர்கள் வழங்கவில்லை என்றே கூறவேண்டும். அவர் ஒரு காட்டிக்கொடுப்பாளராகவும், துரோகியாகவுமே பல இடங்களில் இடம்பிடித்துள்ளார்.

இராணுவ நீதிமன்ற விசாரணைகள் நிகழ்ந்தபோது அந்தந்த பிரதேசங்களைச் சேர்ந்த முதலியார்களின் கருத்துக்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார்கள் எனத் தெரிகிறது. மக்களை தேவையான இடங்களுக்கு கூடச் செய்து பொது விசாரணைக்கு அழைப்பது, போது இடங்களில் தண்டனையளிப்பதை மக்களைக் கூட்டி பார்வயிடச் செய்வது போன்ற காரியங்களையும் இந்த முதலியாயர்களைக் கொண்டே செய்வித்தனர். அத்தகைய முதலியார்களின் தலைமை மகா முதலியார் தான் சொலமன் டயஸ் பண்டாரநாயக்க மகா முதலி.

மகா முதலிகளின் தலைமை முதலியாராக பிரித்தானியா அரசுக்கு சேவகம் செய்தார். பிரித்தானிய ஆட்சியின் போது அவர் ஒரு பலம்பொருந்திய அதிகாரி. பிரித்தானிய விசுவாசத்துக்காக முகாந்திரம் பதவியிலிருந்த அவரை 1882 ஆம் ஆண்டு முதலியார் பதவியைக் கொடுத்தது. அதன் பின்னர் சில வருடங்களில் மகா முதலியார் பதவியும் வழங்கப்பட்டதுடன் அவரது சேவைவைப் பாராட்டி சேர் பட்டமும் இன்னும் பல முக்கிய பதவிகளையும் கொடுத்து கௌரவித்தது. பிரித்தானிய ஆட்சியில் மிகவும் இளம் வயதில் மகாமுதலியார் பதவியை வகித்தவர் சொலமன் டயஸ் பண்டாரநயாக்க. அவர் அப்பதவியை பெற்றபோது அவருக்கு வயது 33.

1915 கலவரத்தின் போது பல தலைவர்கள், பிரமுகர்கள் கைதானதன் பின்னணியில் மகா முதலியாரின் பங்கு கணிசமானது என்று பல ஆவணங்கள் குறிப்பிடுகின்றன. சேர் பொன் இராமநாதன் எழுதிய “இலங்கையில் கலவரமும் இராணுவச் சட்டமும் - 1915” என்கிற நூலிலும் இந்தத் தகவல்களை உறுதிபடுத்துகிறார்.

கண்டி, நுவரெலியா மற்றும் இன்னும் பல இடங்களிலும் கலவரத்தை கட்டுப்படுத்தவும் அது குறித்து அறிக்கையிடும் பணியிலும் அவர் ஈடுபட்டார். ஆளுநரின் ஆலோசகராகவும், பிரதான மொழிபெயர்ப்பாளராகவும் அவர் உடனிருந்து கடமையாற்றினார்.

குறிப்பாக சிங்கள அரசியல் தலைவர்களின் கைதின் பின்னணியில் அவர் இருந்தார் என்றும், ஹென்றி பேதிரிஸ் குற்றவாளியாக சித்திரிக்கப்படுவதற்கும் சொலமன் முதலியார் வழங்கிய தகவல்களும் முக்கியமானது என தெரிகிறது. தனது அரசியல், அதிகார, பண்பல செல்வாக்குக்கு போட்டியாக இருந்தவர்களே இவ்வாறு அவரால் பழிவாங்கப்பட்டார் என்கிற குற்றச்சாட்டும் சிங்களத் தரப்பில் இன்றும் முன்வைக்கப்படுகின்றன. ஹென்றி பேதிரிஸ் குறித்த நூல்களிலும் இவரை சாடும் போக்கைக் காண முடிகிறது. ஹென்றி பேதிரிஸ் குறித்து பிழையான தகவல்களை இவர் வழங்கினார் என்கிற பலமான குற்றச்சாட்டு உள்ளது. அப்பாவியான இளைஞர் ஹென்றி பேதிரிஸ் துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை வழங்கப்பட்ட கதையை இந்த தொடரில் தனியாக அறிந்தோம்.


இந்த கலவரத்தை ஆராய்பவர்களால் அதிகமாக பேசப்பட்ட அடுத்த விடையன் இழப்பீடு சம்பந்தப்பட்ட விவகாரம். இந்த விடயத்தையும் ஆங்கில அதிகாரிகளால் கையாளப்பட்ட முறைகேடுகள் மேலும் பல அப்பாவிகளை அதிகம் பாதிக்கச் செய்தது. அடுத்த வாரம் விரிவாகப் பார்க்கலாம்.

தொடரும்..
நன்றி - தினக்குரல்


Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates