Headlines News :
முகப்பு » » போதைப்பொருள் பாவனையில் சீரழியும் மலையகம் - புவியரசன்

போதைப்பொருள் பாவனையில் சீரழியும் மலையகம் - புவியரசன்


உலக நாடுகள் துறைசார் ரீதியாக பெரிய அளவில் அபிவிருத்தி அடைந்து வருகின்றன. எனினும் அபிவிருத்தி அடைந்து வரும் ஆசிய நாடுகள் தொடர்ந்தேர்ச்சியாக பல்வேறு சமூக விரோத பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து அபிவிருத்தியில் பின்னடைவைக் கண்டு வருகின்றன. உள்நாட்டு யுத்தம், போதைப்பொருள் கடத்தல், பாலியல், துஷ்பிரயோகம், இயற்கை வளங்கள் சட்ட விரோதமாக சூறையாடப்படல் என்பன அவற்றுள் சிலவாகும்.

தெற்காசிய நாடுகளை பொறுத்தவரையில் போதைப்பொருள் கடத்தல், பாவனை என்பன நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட பாரிய போதைப்பொருள் கடத்தல், முயற்சிகள் அண்மையில் பாதுகாப்பு துறையினரின் சாதுரியத்தால் முறியடிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு வருடமும் ஜுன் மாதம் 26 ஆம் திகதியை சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினமாக உலக நாடுகள் அனுஷ்டித்து வருகின்றன. இக்காலப்பகுதியில் போதைப்பொருள் பாவனையின் தீமை குறித்து அனைத்து மட்டங்களிலும் பல்வேறு விழிப்புணர்வு செயற்றிடங்களை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. எனினும், போதைப்பொருள் பாவனையாளர்களின் மனநிலையிலும் எண்ணிக்கையிலும் எவ்வாறான நேர்மாற்றத்தை ஏற்படுத்துகின்றதென்பது கேள்விக்குறியே.

நம் நாட்டில் தமிழ் பேசும் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் போதைப்பொருள் பாவனை அதிகரித்து காணப்படுவதாக அரசாங்க புள்ளிவிபரங்கள் சுட்டி நிற்கின்றன. அண்மையில் நுவரெலியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அரசாங்க அனுமதி பெற்ற மதுபான விற்பனை நிலையங்களில் நுகரப்படும் போதைப்பொருளின் அளவிற்கு ஏற்ப யாழ்ப்பாண மாவட்டம் முதலிடத்திலும் நுவரெலியா மாவட்டம் இரண்டாமிடத்திலும் மூன்றாவது இடத்தில் மட்டக்களப்பு மாவட்டமும் உள்ளதாக குறிப்பிட்டதோடு போதைப்பொருள் வர்த்தகத்தோடு அரசியல்வாதிகளுக்கும் தொடர்பிருப்பதை மறைமுகமாக சுட்டிக்காட்டியிருந்தார்.

யுத்தத்திற்கு பின்னராக வடகிழக்குப் பிரதேசங்களில் இயல்பு வாழ்க்கை ஏற்பட்டாலும் சமூக, கலாசார சீரழிவுகளால் தம் மக்கள் பாதிக்கப்பட்டு வருவதை அப்பகுதியிலுள்ள அரசியல் பிரமுகர்கள் நிச்சயம் ஜீரணித்து கொள்ளமாட்டார்கள். போதைப்பொருள் பாவனையை இல்லாதொழிப்பது குறித்து வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உட்பட அங்குள்ள அனைத்து அரசியல் தலைவர்களும் பகிரங்கமாகவே பொது மேடைகளில் பேசி வருகின்றனர்.

மலையகம் கொடிய யுத்தத்திற்கு முகங்கொடுக்காத போதும் பொருளாதார யுத்தத்திற்கு முகங்கொடுத்துள்ள ஒரு சமூகமாகும். மலையக மக்களின் தொழில்முறையும் வாழ்க்கை முறையும் அவர்களை இயல்பாகவே போதைப்பொருள் பாவனைக்கு பழக்கப்படுத்தியுள்ளன. இந்நிலையில் மலையகத்தில் அரசாங்க அங்கீகாரம் பெற்ற மதுபான விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்படும் சாராயம், கள்ளு, பியர் என்பவை தாராளமாக விற்றுத் தீர்க்கப்படுகின்றன.

தவிர மதுபானங்களின் விலைகளை அரசாங்கம் அதிகரித்துள்ளதால் சில மாவட்டங்களில் காய்ச்சி வடிகட்டிய சாராயத்தை மலையக மக்கள் அதிகளவில் அருந்துவதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளன. மலையக மக்கள் மிக அதிகமாக வாழும் நுவரெலியா மாவட்டம் அகில இலங்கை ரீதியாக போதை தரும் மதுபாவனையில் இரண்டாமிடத்தில் உள்ளதென்பது எமது சமூகத்தின் எதிர்கால வளர்ச்சிப் பாதைக்கு போதை வடிவில் இடப்பட்டுள்ள கடிவளம் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மதுபான விற்பனை மூலம் அரசாங்கத்திற்கு கிடைக்கும் வருமான புள்ளிவிபரங்களை அடிப்படையாகக் கொண்டே தரவுகளை வெளியிட்டிருந்தார்.

இம் மூன்று மாவட்டங்களிலும் சட்டவிரோத மதுபான விற்பனை இடம்பெறுவதோடு, அவற்றை நுகருவோர் அதிகளவில் உள்ளனர் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். அவ்வாறு நோக்கும் போது தமிழ் பேசும் மக்கள் அதிகமாக வாழும் மாவட்டங்களில் மதுபான நுகர்வு மிக அதிகமாக உள்ளதென்பதை தெளிவாக அறியமுடியும்.

மலையகத்தில் காய்ச்சி வடிக்கப்படும் சட்டவிரோத சாராயமான கசிப்பு விற்பனை சப்ரகமுவ மாகாணத்திலும் ஊவா மாகாணத்திலும் அதிகமாக உள்ளது. சட்டவிரோத மதுபாவனையால் சிறுநீரக நோய், மாரடைப்பு, புற்றுநோய் போன்ற கொடிய நோய்களால் மலையகத்தில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. எனினும் இவ்வாறு உயிரிழப்புகள் ஏற்பட்டாலும் அவற்றை நுகர்வோரின் எண்ணிக்கை குறைவதாக தெரியவில்லை.

தோட்டப்புறங்களை இலக்கு வைத்து சந்திக்கு சந்தி திறக்கப்பட்டுள்ள அரச அங்கீகாரம் பெற்ற மதுபான விற்பனை நிலையங்கள் மலையக மக்களை தொடர்ந்தும் மதுவுக்கு அடிமையாக்கி கட்டிப்போட்டுள்ளன.

மதுபாவனைக்கு வயது வித்தியாசமின்றி இளைய தலைமுறையினரும் அடிமையாகி வருவது கவலைக்குரிய விடயமாகவே பார்க்கப்படவேண்டும்.
பாடசாலைகளில் கல்வி கற்றுவரும் மாணவர்களும் மதுபாவனையிலும் புகைத்தலிலும் ஈடுபட்டு வருகின்றனர். பாடசாலை பருவத்தில் மதுவுக்கு அடிமையாகும் மாணவர்கள் குறித்த சில நாட்களில் பாடசாலைகளில் இருந்து இடைவிலகுவதுடன் சமூக சீரழிவு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இவர்கள் காலப்போக்கில் சமூக விரோதிகளாக மாறி குற்றச் செயல்களில் ஈடுபடுவது மலையகத்தில் அதிகரித்துள்ளது.

நவநாகரிக மோகம் காரணமாக இளைஞர்கள் அதிக விலை கொடுத்து டின்களில் அடைக்கப்பட்ட பியரை பருகுகின்றனர். தோட்டங்களுக்கு செல்லும் பாதைகளில் பியர் டின்கள் அதிகளவில் கிடக்கின்றன. மலையக மக்கள் இயற்கை தெய்வ வணக்கங்களில் ஈடுபடும்போது மதுபானத்தையும் சேர்த்து கொள்வது வழக்கத்தில் உள்ளது.

இதை சாட்டாக வைத்துக் கொண்டு இளைய தலைமுறையினர் மது பாவனைக்குரிய அங்கீகாரத்தை தமது குடும்பங்களில் பெற்றுக் கொள்வதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

மலையக பெண்கள் அதிகமாக வெற்றிலையோடு சேர்த்து புகையிலை உண்ணும் பழக்கத்தை வழக்கமாக்கி கொண்டுள்ளனர்.

மலையகத்தில் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களில் அதிகமானோர் வாய்ப்புற்று நோய்க்கே இலக்காகி வருகின்றனர். புற்றுநோயால் தாக்கப்பட்டு மரணமடையும் பெண்களின் எண்ணிக்கை தோட்டப்பகுதிகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாக குறுகிய கால இடைவெளிக்குள் அதிகரித்து வருகின்றது.

கடந்த 20 வருட காலப்பகுதியினுள் தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களை இலக்கு வைத்து அதிகளவு மதுபான நிலையங்கள் திறக்கப்பட்டதன் பின்னணியில் யார் இருக்கின்றார்கள். இது தமிழ் பேசும் மக்களின் வளர்ச்சியை கட்டுபடுத்த நீண்டகால நோக்குடன் முன்னெடுக்கப்பட்டுள்ள சதி முயற்சியா என்பவை குறித்து தெளிவான ஆய்வுகள் மலையக தன்னார்வ அமைப்புகளால் மேற்கொள்ளப்படவேண்டியது அவசியமாகும்.
கல்வியை மூலதனமாக கொண்டுள்ள தமிழ் பேசும் சமூக மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருட்கள் குளிசை, இனிப்பு வடிவங்களில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள பிரதேச செயலாளர்களும் வைத்தியர்களும் தெரிவித்திருப்பதை ஊடகங்களில் காணக்கூடியதாக உள்ளது. இந்நிலைமை மலையகத்திற்கும் பொருந்தும் என்பதை நாம் உணரவேண்டும்.

தமது தோட்டங்களுக்கு அண்மையில் அமைந்துள்ள மதுபானசாலைகளை மூடிவிடுமாறு தோட்ட மக்கள் மேற்கொண்டுவரும் போராட்டங்கள் அதிகளவில் வெற்றி பெறவில்லை. இப்போராட்டங்கள் சில சந்தர்ப்பங்களில் இனமுறுகலை ஏற்படுத்தியிருந்தன.

ஆண், பெண், இளைய தலைமுறையினர் என அனைவரும் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகி வருவது எமது சமூகத்தின் குடும்ப கட்டமைப்பை சீரழித்து, சமூக வளர்ச்சியை வீழ்ச்சியடையச் செய்யும் என்பதில் சந்தேகமில்லை.

மதுவிற்கு புறம்பாக கஞ்சா, ஹெரோயின் உட்பட பல புதிய போதைப்பொருட்களும் தமிழர் பிரதேசங்களில் புழக்கத்தில் உள்ளன. இவற்றை அடியோடு இல்லாதொழிக்க மக்கள் பிரதிநிதிகள் முன்வரவேண்டும். மலையகப் பகுதிகளில் அதிகரித்துள்ள மதுபானசாலைகளை குறைக்கவும் புதிய மதுபானசாலைகளை திறக்காமலிருக்கவும் சட்டவிரோத மது உற்பத்தியை தடுக்கவும் கீழ் மட்டத்திலிருந்து வேலைத்திட்டங்கள் மலையகத்தில் முன்னெடுக்கப்படுவது அவசியமாகும். இதற்கான பொறுப்பு மலையக மக்கள் பிரதிநிதிகளுக்கு மட்டுமன்றி சமூகத்தின் மீது அக்கறை கொண்ட அனைவருக்கும் உண்டு. அப்போதுதான் மதுவற்ற சமூகத்தை எதிர்காலத்திலாவது கட்டியெழுப்ப முடியும்.

நன்றி - veerakesari
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates