Headlines News :
முகப்பு » , , , » ஆளுநர் மன்னிப்பு கேட்டார்! (1915 கண்டி கலகம் –41) - என்.சரவணன்

ஆளுநர் மன்னிப்பு கேட்டார்! (1915 கண்டி கலகம் –41) - என்.சரவணன்


எட்மன்ட் ஹேவாவிதாரணவின் மரணம் பிரிட்டிஷாரின் அநீதியால் விளைந்த கொலை என்பதை சென்ற வாரம் கண்டோம். கலகக்காரர்களை கடுமையாக அடக்குவது, குற்றவாளிகள் தப்பிவிடக்கூடாது என்கிற நோக்கத்திலேயே இராணுவ நீதிமன்றம் உருவாக்கப்பட்டது. ஆனால் அந்த இரண்டும் நிறைவேறவில்லை. அடக்கப்பட்டது கலகக்காரர்கள் அல்ல. நிரபராதிகள் குற்றவாளிகள் ஆக்கப்பட்டார்கள். குற்றவாளிகள் எப்போதோ தப்பிப் போய்விட்டார்கள். தண்டனையளிக்கப்பட்டவர்களில் கலகக்காரர்கள் இருக்கவில்லை. அதுவும் அவர்கள் பல சமூகங்களாலும் அந்தஸ்தும் அங்கீகாரமும் பெற்றவர்கள். மேன்முறையீடுகள் கூட ஏற்றுக்கொள்ளப்படவில்லை. குற்றவாளிகளை இலகுவாக தப்பவிட்டார்கள். குறைந்தபட்சம் குற்றவாளிகள் விசாரணைக்கு கூட உட்படுத்தப்படவில்லை.

இதனை விசாரிப்பதற்கு ஒரு இராணுவ நீதிமன்றமே தேவைப்பட்டிருக்கவில்லை. சாதாரண நீதிமன்றமே போதியதாக இருந்தது. கலவரத்தில் ஈடுபட்டமை, கடைகளை உடைத்தமை, கொள்ளயடித்தமை போன்ற குற்றச்சாட்டுக்கள் சிவில் நீதிமன்றத்தில் விசாரிக்கும் வழக்குகளைவிட பெரியவை அல்ல. விசேடமாக “தேசத்துரோகக்” குற்றச்சாட்டு ஒன்று தான் புதிதாக இருந்தது. ஆனால் அப்படிப்பட்ட தேசத்துரோக குற்றங்களுக்கு கூட அதற்கு முன்னர் 4 அல்லது 5 ஆண்டுகள் தான் தண்டனையளிக்கப்பட்டுள்ளது. மிஞ்சினால் வதந்தி பரப்புதல், சட்டம் ஒழுங்கை சீர்குலைத்தல் போன்ற குற்றங்களுக்காக 10 வருட தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

காலங்கடந்த மன்னிப்பு
எட்மன்ட் மிகுந்த நோய்வாய்ப்பட்டு யாழ் சிறையில் இறந்த பின்னர், அவரது மரணச் சடங்கை நிறுத்தும் தைரியம் அதிகாரிகளுக்கு இருக்கவில்லை. ஆனால் அது பெரிய சடங்காக மாறாமல் இருக்க தாளவாத்தியங்களை இசைக்கத் தடை விதித்தனர். ஆனால் அதையும் மீறி ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்ட மரணச் சடங்காக ஆனது அது. நாட்டின் பிரபலஸ்தர்கள் பலர் அதில் கலந்துகொண்டார்கள். அரசாங்க அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், மக்களவை உறுப்பினர்கள், தொழில் அதிபர்கள் சமூகத் தலைவர்கள் என பலரும் குழுமினர். கலந்து கொண்டவர்கள் பற்றிய பெரிய பட்டியலை ஆர்மண்ட் டீ சூசா தனது நூலில் தந்துள்ளார் (கலந்து கொண்டவர்களில் சூசாவும் ஒருவர்). அவர்களில் சீ.நமசிவாயம் (அன்றைய அரச நிர்வாகச் சபை, ஆணைக்குழு என்பவற்றின் உறுப்பினர்), நகர சபை உறுப்பினர் டொக்டர் ரத்தினம், எச்.ஏ.பி.சந்திரசேகர், பொலிஸ் அதிகாரி ஏ.எஸ்.இளையதம்பி போன்ற தமிழர்களும் அடங்குவர். ஒரு “தேசத்துரோகி”யின் இறுதிச் சடங்கில் இத்தனை பெரிய கூட்டம் கலந்துகொண்டது எங்கனம் என்கிற கேள்வி எழுகிறது. தேசத்துரோக குற்றச்சாட்டுக்கு உள்ளான ஒருவருக்கு இறுதி மரியாதை செலுத்த அரசாங்கத்துக்கு விசுவாசமானவர்கள் கலந்துகொண்டதை நாம் கவனத்தில் எடுக்க வேண்டும். 

இறுதி நிகழ்வில் கலந்துகொள்ள முடியாமல் போன பல கனவான்கள் தமது இரங்கல் செய்தியை அனுப்பிவைத்தனர். அவர்களது பட்டியலும் அந்த நூலில் அடங்குகிறது. இந்த நிகழ்வுக்கு சில தினங்களுக்கு முன்னர் இதே தேசத்துரோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட நிலையில், அதே யாழ் சிறையில், அதே நோய்க்கு இலக்காகி மரணமான எஸ்.ஏ.விஜேசேகரவின் இறுதிச் சடங்கும் ஏறத்தாள இதுபோலத்தான் நடந்தது.

“டைம்ஸ் ஒப் சிலோன்” (Times of Ceylon) என்கிற சுதேசிகளுக்கு எதிரான, ஆங்கிலேய ஆதரவு பத்திரிகை “தேசத்துரோக குற்றமிழைத்தவருக்கு மாபெரும் மரியாதையளிப்பு” என்று தலைப்பிட்டது. அதனை பலர் பகிரங்கமாக கண்டித்தனர்.

எட்மன்ட் நவம்பர் மாதம் மரணமானதன பின்னர் ஆளநராக வந்த ஜோன் எண்டர்சன் இந்தக் கலவரத்தின்போது போலீசார் நடந்துகொண்டமுறை குறித்து விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கையை ஆளுநர் உடனடி கவனத்துக்கு உள்ளாக்கவில்லை. இந்த விசாரணைகுழு விசாரித்த பலரில் முக்கியமானவர்கள் இருவர் காலனித்துவ செயலகத்தைச் சேர்ந்த எச்.எச்..எம்.முவர், ஈ.பீ.சூட்டர் ஆகியோர். கலவரம் நிகழ்ந்தபோது சூட்டர் பொலிஸ் மஜிஸ்ட்ரேட் ஆக கடமையாற்றினார். ஆணையாளர்களாக சத்தியபிரமாணம் செய்துகொண்ட இந்த இருவரும் கலவரம் நிகழ்ந்த இடங்களுக்கு அன்றைய தினம் காரில் ஒன்றாகப் பயணம் செய்து விசாரித்தவர்கள்.

எச்.எச்..எம்.முவர் இப்படி தெரிவித்தார்.
“நாங்கள் இருவரும் அன்றைய தினம் கெய்சர் வீதியின் இறுதிவரை சென்றோம். நாங்கள் சென்றிருந்த வேளை கொள்ளையடிப்பு முடிந்திருந்தது. பலர் பொல்லுகளுடன்  அந்த வீதியில் முனைக்கு ஓடிக்கொண்டிருந்தார்கள். நாங்கள் பார்த்துகொண்டிருக்கும் போதே அவர்கள் வேகமாக மாயமானார்கள். களைந்து செல்லுங்கள் என்று கூறுவதற்கு தேவையிருக்கவில்லை. சுடுவதற்கும் எந்த நியாயமான தேவையும் இருக்கவில்லை. நாங்கள் கிறிஸ்டல் பெலசுக்குச் சென்ற போது அங்கு ஏற்கெனவே கொள்ளையடிக்கப்பட்ட நிலையில் தான் இருந்தது. அங்கு பெரிய இரும்புக் கம்பியுடன் ஒரு சிறுவனைப் பார்த்தேன். அவன் எஞ்சியதையும் உடைத்துக்கொண்டிருந்தான்."

கம்பர்ளேன்ட் (விசாரணையாளர்): தொன் கரோலிஸ் கடையிலிருந்து கிறிஸ்டல் பேலஸ் கடை எவ்வளவு தூரத்தில் இருந்தது?

முவர் : 30 இலிருந்து 40 யார் தூரமளவில் இருக்கும்.

ஈ.பீ.சூட்டர் தனது சாட்சியில் தாம் சென்றிருந்த நேரத்தைப் பற்றிக் குறிப்பிட்டார்.
“மதியம் 12க்கு முன்னர் கொள்ளையடிப்பு முடிந்ததிருந்தது. நாங்கள் சென்றிருந்தவேளை கிறிஸ்டல் பேலஸ் கொள்ளையடிக்கப்பட்டிருந்ததைப் பார்த்தோம். 12 அளவில் அங்காங்கு சிறு சிறு அளவில் கொள்ளைகள் நிகழ்ந்துகொண்டிருந்ததைக் கண்டோம். ஆனால் அது கலவரத்தைப் போல இருக்கவில்லை. சிறுவர்கள் சிலர் ஆங்காங்கு கிறிஸ்டல் பேலஸ் போன்ற கடைகளுக்கு சிறு சிறு சேதங்களை விளைவித்துக்கொண்டிருந்தார்கள்....”
கிறிஸ்டல் பேலஸ் மதியத்துக்கு முன்னரே தாக்கப்பட்டிருக்கிறது என்பது பல வகையிலும் நிரூபிக்கப்பட்டே இருந்தது. ஒரு மணிக்கு எட்மன்ட் அங்கு வந்து கிறிஸ்டல் பெலசை தாக்கத் தொடங்கினார் என்று கூறப்பட்டது பொய் என்பது நிரூபிக்கப்பட்ட ஒன்று.

இந்த சாட்சியங்கள் அடங்கிய ஆணைக்குழு அறிக்கையை புதிய ஆளுநர் வாசித்தறிகிற பொது சூட்டர் இறந்து போயிருந்தார். எச்.எச்..எம்.முவர் ஐரோப்பாவுக்கு யுத்த களத்துக்குச் சென்றிருந்தார். 1916 ஆம் ஆண்டு நடுப்பகுதி அளவில் பொலிஸ் விசாரணை அறிக்கை அனுப்பபட்டிருந்தது. ஆனால் 1917 ஜூலை வரை ஆளுநர் சேர் ஜோன் அண்டர்சன் இந்த அறிக்கையை வாசித்து முடித்திருக்கவில்லை. அந்த அறிக்கையை வாசித்தறிந்தபோது எட்மன்ட் ஹேவவிதாரண நிரபராதி எனும் முடிவுக்கு வந்திருந்தார். ஒரு அப்பாவிக்கு இழைக்கப்பட்ட அநீதி மரணத்துக்கு தள்ளியிருப்பதை அறிந்ததும் தான் எடுக்க வேண்டிய முடிவை எடுத்திருந்தார். எட்மன்ட் ஹேவாவிதாரணவின் சகோதரர் டொக்டர் சீ.ஏ.ஹேவாவிதாரணவுக்கு இப்படி ஒரு கடிதத்தை ஆளுநர் தனது செயலாளருக்கு ஊடாக அனுப்பிவைத்தார்.

இராணி மாளிகை, கொழும்பு
18 ஜூலை 1917
“அன்புடையீர்!
இந்தக் கடிதத்தை உங்களிடம் சேர்ப்பிக்கும்படி மாண்புமிகு ஆளுநர் எனக்கு அறிவுறுத்தியுள்ளார். இறந்துபோன உங்கள் சகோதரர் குறித்து பொலிஸ் விசாரணை ஆணைக்குழு இதுவரை விசாரித்தரியாத தகவல்கள் ஏதும் உண்டா என்பதை அவர் ஆராய்து பார்த்தார். சிவில் உத்தியோகத்தர்கள் இருவர் 1915 ஒக்டோபர் மாதம் ஆணைக்குழுவின் முன்னாள் அளித்த வாக்குமூலங்களில்; ஜூன் 1ஆம் திகதி புறக்கோட்டைப் பகுதியில் நடந்த கலவரம் குறித்து குறிப்படப்பட்டுள்ளது. அன்றைய தினம் கிறிஸ்டல் பேலஸில் நடந்த கலவரம் குறித்து அளிக்கப்பட்ட சாட்சியங்களும் உங்கள் சகோதரர் அளித்த வாக்குமூலமும் பொருந்துகின்றன. இருவரின் வாக்குமூலமும் இதனை உறுதி செய்கின்றன. அந்த அதிகாரிகளில் ஒருவர் இறந்து போனார். இன்னொருவர் யுத்தகளத்தில் இருக்கிறார். அதனால் மீண்டும் அவர்களை விசாரிப்பது வாய்ப்பற்றது. இருந்தாலும் இந்த சாட்சிகள் இரண்டும் அன்று இராணுவ நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டிருந்தால் உங்கள் சகோதரர் அன்றே விடுவிக்கப்பட்டிருக்கக் கூடும் என்பதை உறுதியாக நம்புகிறேன்.
மேற்படி காரணங்களால் உங்களுக்கும், இறந்துபோன உங்கள் சகோதரர் ஹேவாவிதாரணவின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும் மன்னிப்பையும் இத்தால் வெளிப்படுத்த விரும்புகிறேன்.”
இங்ஙனம்
உங்கள் சேவகர்
ஆர்.எச்.வைட்ஹோண்
ஆளுநரின் தனிப்பட்ட செயலாளர்

(டொக்டர் சீ.ஏ.ஹேவாவிதாரண, ஸ்ரீ நகர், கொள்ளுபிட்டி, கொழும்பு)
இதன் மூலம் எட்மன்ட் மீதான களங்கம் அவரது அநீதியான மரணத்துக்குப் பின்னர் துடைக்கப்பட்டது.


“மரக்கல” என்கிற அடையாளம் ஏன்?
1915 கலவரத்தை ஆங்கிலத்தில் ‘கம்பளை பெரஹர வழக்கு” (“Gampola Perehara Case”) என்றே அழைகின்றனர். குறிப்பாக அன்றைய அரசாங்க ஆவணங்கள் கூட இந்த தலைப்பிலேயே குறிக்கின்றன. தேசிய சுவடிகூடத்தில் இது குறித்த ஆவணங்கள் அனைத்தும் அப்படித் தான் தேட முடியும். தமிழில் “சிங்கள-முஸ்லிம் கலவரம்” என்று அழைக்கின்றனர். ஆனால் சிங்களத்தில் “சிங்கள-மரக்கல” கலவரம்” (சிங்கள மரக்கல கோலாஹலய) என்று தான் அழைகின்றனர். இன்றுவரை ஊடகங்களிலும் அப்படியான ஒரு பதத்தையே வெகுஜன மட்டத்தில் நிலையுருத்தியிருக்கின்றனர்.

இதற்கான முக்கிய காரணம் இந்த கலவரம் குறித்து ஆர்மண்ட் டீ சூசா எழுதிய “Hundred days in Ceylon under the martial law – 1915” என்கிற நூலை ஜீ.எஸ்.பீ.சேனநாயக்க 1988இலும், யஹாபால வனசிங்க 2009இலும் (යසපාල වනසිංහ) மொழிபெயர்த்திருக்கின்றனர். இவர்கள் தமது மொழிபெயர்ப்பில் அந்த நூலின் பெயரைக் கூட “சிங்கள-மரக்கல கோலாஹலய” என்று தலைப்பிட்டிருகிறார்கள். மூல நூலில் உள்ளபடி “இராணுவச் சட்டத்தின் கீழ் இலங்கை - 1915” என்று ஏன் அவர்களால் தலைப்பிட முடியாமல் போயிற்று? மூல நூலை எழுதியவர் இட்ட தலைப்பை மாற்றியது என்ன அறம் என்கிற கேள்விகள் எழுகின்றன. ஆங்கிலத்தில் வெளிவந்த மூல நூலை இன்று ஆங்கிலத்தில் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு இல்லை. அதேவேளை அதன் சிங்கள மொழிபெயர்ப்பு பல பதிப்புகளை வெவ்வேறு பதிப்பாளர்களால் வெளியிடப்பட்டு இருக்கின்றன.

இந்த நூல் ஏற்படுத்திய பாதிப்பும் இந்த பதத்தை சமூகமயாக்கிதற்கு காரணமாக ஆகியிருக்கலாம். “சிங்கள-மரக்கல” என்று அடையாளப்படுத்தும்போது அதிலுள்ள “மரக்கல” என்கிற பதம் இன்று முஸ்லிம்களுக்கு எதிராகவும், முஸ்லிம்களை இழிவுபடுத்தும் பதமாகவுமே பேச்சு வழக்கில் இருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது. சிங்கள ஊடகங்களிலும், சிங்களத்தில் வெளிவந்துள்ள பல்வேறு ஆய்வுகளிலும் கூட இப்படி “மரக்கல” என்று விழிப்பதையே காணக்கூடியதாக உள்ளது.

தொடரும்

நன்றி - தினக்குரல்

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates