Headlines News :
முகப்பு » » மலையக இலக்கிய, ஊடகத்துறையில் ஒரு சகாப்தம் சீ.எஸ்.காந்தி - சுப்பையா இராஜசேகரன்

மலையக இலக்கிய, ஊடகத்துறையில் ஒரு சகாப்தம் சீ.எஸ்.காந்தி - சுப்பையா இராஜசேகரன்


இந்தியாவிலிருந்து தோட்டத் தொழிலாளர்களாக இலங்கை வந்த இந்தியர்கள் படுகின்ற அவலங்களை ஆங்கிலத்தில் தம் கவிநயத்தினால் உலகோருக்கு எடுத்தி யம்பிய பாவலன் சி.வி.வேலுப்பிள்ளையின் பரம்பரையில் வந்துதித்தவர்தான் சி.எஸ்.காந்தி என அழைக்கப்பட்ட காந்திநேசன்.

1868ஆம் ஆண்டு புசல்லாவ ‘சோகம’ தோட்டத்திற்கு வந்து குமரன் குடியேறினார். அங்குதான் குமரனுக்கும் அழகம்மாளுக்கும் திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு மூன்று பிள்ளைகள். மூத்தவர் தெய்வானை. இரண்டாவது சுப்பிரமணியம். மூன்றாவது சின்னையா. இதில் ஆண்பிள்ளைகளான சுப்பிரமணியம், சின்னையா இருவரும் ‘கண்டி திரித்துவக்’ கல்லூரியில் கல்வி கற்றுள்ளார்கள்.

‘ஈஸ்ட்டன் புரட்டியூஸ்ட்’ கம்பனிக்கு சொந்தமான ‘புசல்லாவ சோகம’ தோட்டத் தைப் போன்று நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்டேசன் வட்டகொடை நகரத்திற்கு அருகாமையில் இருக்கிறது ‘மடக்கும்பரை’ தோட்டம். அத்தோட்டத்திற்கு 1911ஆம் ஆண்டு குமரன் பெரியகங்காணி தனது குடும்பம் உட்பட, தமது ஆளுகைக்கு உட்பட்ட தொழிளார்களையும் அழைத்துக் கொண்டு வந்தார்.

குமரன் கங்காணியின் இரண்டாவது பையனான சுப்பிரமணியத்திற்கு, கண்டி பள்ளேகலை புதுத் தோட்டத்தின் பெரியகங்காணியாரின் மகளான செல்லாச்சி அம்மையாரை திருமணம் செய்து வைத்தார்கள். அவர்களுக்கு ‘நிஷ்கலானி’என அழைக்கப்பட்ட இராஜேந்திரன் என்ற மகன் இருந்தார். இவர் சிறிது காலம் வட்டகொடை தபால் நிலையத்தில் உப அதிபராக கடமையாற்றினார்.

அடுத்தது பெண், பெயர் ‘சரசு’ என்று அழைக்கப்பட்ட சாரதம்பாள். அடுத்தவர் கவிக் குயிலோன் ‘சி.எஸ். காந்தி’, அடுத்து ரவீந்திரன் இவர் மெக்கானிக்காக கடமையாற்றினார்.

கடைசிப் பிள்ளை இராஜேஸ்வரன். இவர் வீரகேசரி நிறுவனத்தில் பதிப்பு பகுதியில் கடமையாற்றினார், அவரும் காலமானார். குமரன் பெரியகங்காணியாக இருந்தபோது, அவரது இரண்டாவது மகனான சுப்பிரமணியம் கண்டி ‘டிரிண்டி’ கல்லூரியில் படித்தமையினாலும், ஆங்கிலத்தில் பேசுவதிலும், எழுதுவதிலும் திறமையாக இருந்தபடியினாலும் அவருக்கு மடக்கும்பரைத் தோட்டத்திலே ‘கண்டக்டர்’ பதவி தரப்பட்டது. சி.சுப்ரமணியம் கவிப் புனைவதில் கெட்டிக்காரர்.

இவரது ஆக்கங்கள் அக்காலத்தில் ‘சுதேசமித்திரன், விகடதூதன், ஆனந்தபோதனி’ போன்ற இந்திய சஞ்சிகைகளில் வெளிவந்துள்ளன. அதுமட்டுமல்ல, இலங்கையில் பிரசித்தமாக வெளிவந்து கொண்டிருந்த ‘வீரகேசரி’வார இதழிலும் வெளியாகியுள்ளது. இவர் தம் சொந்தப் பெயரிலும்,‘ஜெயவீரன்’ என்ற புனைபெயரிலும் ஆக்கங்களை எழுதியுள்ளார்.

மலையக மக்களிடையே தோன்றிய கவிவானர்களில் ஒருவரான ‘சி.சுப்பிரமணியத்தின் பெயர் பாடநூல்களில்கூட வந்துள்ளது.

இவரது கவியின் ஆளுமையில் ஊறித் தோய்ந்தபடியினால்தான் அம்மானைப் போலவே மருமகனும் கவிஞரானார். சி.சுப்பிரமணியம் முன்பு ஒருதடவை முன்னாள் பாரதப் பிரதமர் ‘இந்திராகாந்தி அம்மையாரைப்போற்றி யாத்த செய்யுளை பார்ப்போம்.

இந்திரா காந்தி

சீர்மேவு ஜெயசீலி !

யொளிர்கருணை

தியங்கமணி கமலவேணி

தார்மேவு சமதர்மம்

நடுவுநிலை புரந்தருளும்

சாந்தமயமான சொரூபி !

பார்மேவு புண்ணியை!

புகழேந்துத் திண்ணியை

பாரத்திபன் நேருவின் புத்திரி !

கார்மேவு பூத்தமலர் தாரகை

இந்திரா காந்தி

காசினியில் வாழி ! சதாவாழி !! வாழி !!!

என ஆரம்பமாகும் இந்திரா காந்தி அம்மையாரைப் பற்றிய நீண்ட கவிதையை அவர் படைத்திருந்தார். இந்த செய்யுள் நடையினை தற்கால கவிவாணர்கள் எழுத மலைத்து விடுவார்கள். என்று மட்டும் நன்கு புரிகின்றது.

வட்டகொடை மடக்கும்பரை மேற்பிரிவு தோட்டத்தி பெரிய கங்காணியாரான குமரன் கங்காணியின் இரண்டாவது புதல்வாரன சுப்பிரமணியத்திற்கும் செல்லாச்சியம்மைக்கும் மூன்றாவது பிள்ளையாக, 1933ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30ஆம் திகதி (30.06.1933) மகனாக பிறந்தார். அவரது ஆரம்பப் பாடசாலை மடக்கும்பரை தொங்க கணக்கு தோட்டப் பாடசாலை யாகும். அதன் பிறகு, தலவாக்கலை சுமண மகாவித்தியாலயம் தமிழ் பிரிவிலும், ஹட்டன் ஹைலன்ட்ஸ் கல்லூரியிலும் கல் வியை தொடர்ந்தார்.

குமரன் பெரிய கங்காணியாரின் ‘பெரிய வீட்டில்’ (கங்காணியார் வீட்டை இங்கு ள்ள மக்கள் இப்படித்தான் அழைப்பார்கள்) மூத்த மகள் தெய்வானையும், அவரது மூன்று பிள்ளைகளும், இரண்டாவது மகன் சுப்பிரமணியம் அவரது குடும்பம், மூன்றாவது மகனான சின்னையா அவரது குடும்பத்தார் அனைவரும் ஒரே இல்லத்திலே, ஒன்றுபட்டு அனைவரும் வியக்கும் வண்ணம் வாழ்ந்தவர்கள்.

சி.வி.வேலுப்பிள்ளையின் குடும்பத்தார்களுக்கு மரியாதையும் மதிப்பும் எப்போதுமே இருந்துவந்தது. அதனால், மாமனாரது பிள்ளைகளுக்கு அவர்தான் ஆங்கில ‘டியூசன் ஆசிரியர்’ அவரைக்கண்டதும் அவரது தாய்மாமன் பிள்ளைகள் பெட்டிப் பாம்பாய் ஆகிவிடுவார்கள். அதிலும், காந்தி அவர்களுக்கு, அவர் மீது பயத்துடனும், பெரிய மரியாதையும் அதிகமிருந்தது.

கவிதை எழுதக் கற்றுக் கொடுத்த கவி

ஒருதடவை சி.வி.அவர்கள் எப்போதும் தன்னை மதித்து தன்னுடனே இருக்கும் தனது அம்மான் மகன் சி.எஸ்.காந்தியிடம் “பெரியவனானதும் என்ன தொழில் செய்ய விருப்பம்…?” எனக் கேட்டார். அதற்கு அவர் “ஆசிரியர் தொழில்..!” என்றார் பெருமிதமாக.

“நீ ஏன் கவிதை எழுதக் கூடாது…?”

“எனக்குத்தான் கவிதை எழுதத் தெரியாதே….!” என தயங்கித் தயங்கிக் காந்தி கூறியதும் சி.வி. சிரித்து விட்டார். பின்பு, “உன் பாடப் புத்தகம் ஒன்றை எடுத்துவா…” எனப் பணித்தார். அவரிடம் பாலபோதனி கொடுக்கப்பட்டது. அதில் உள்ள பாடல் ஒன்றை சுட்டிக்காட்டி அதனை அவர் வாசித் தும் காட்டினார்.

“காலை எழுந்தவுடன் படிப்பு பின்பு

கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு

மாலை முழுவதும் விளையாட்டு —

என்று

வழக்கப் படுத்திக் கொள்ளுப் பாப்பா”

வாசித்து முடிந்ததும் “கவிதையை நன்றாகப் பார்..” என்றார். அதனை விரலை வைத்தே விளக்கினார். “இதில் முதல் அடி ‘காலை’ என ஆரம்பமாகின்றது. மூன்றாம் அடி ‘மாலை’ எனத் தொடங்குவதைப் பார். இதில், காலை, மாலை என்பன எதுகை மோனை.” என்றார்.

மேலும் நன்றாக கவனி…! முதல் அடி ‘காலை’ என ஆரம்பமாகின்றது. இரண்டாவது அடியோ ‘கனிவு’ எனத் தொடங்குகின்றது. இதில், முதலெழுத்து ‘க’ வாகும். இரண்டாவது அடியின் முதலெழுத்து ‘க..,கா..,கி’ ஒரே எழுத்துக்கள். இப்படித்தான் கவிதை அமைய வேண்டும்.” என்றார் கவி சி.வி.வேலுப்பிள்ளை. இதன் பிறகு தெளிவு பெற் றார் கவிஞர் சி.எஸ்.காந்தி.

‘கவிதை ஒன்றை எழுதிக் காட்டு’ என சி.வி. அவர்கள் பணித்ததும் அறைக்குள் சென்றார் காந்தி. சிறிது நேரத்தின் பின் வந்தவர் ஒரு தாளை அவரிடம் நீட்டினார். ஆச்சரியப்பட் டார். உரத்தக் குரலில் கவிதை நடையில் வாசித்தார்.

காந்தியின் இலக்கிய பணியினைப் கௌரவிக்கும் முகமாக, 1993ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 13ஆம் திகதி கொட்டகலையில் நடைபெற்ற நுவரெலிய பிரதேச தமிழ் சாகித்திய விழாவில் அவருக்கு பொன்னாடை போர்த்தப்பட்டு, கேடயமும் பரிசாக அளிக்கப்பட்டது. அத்தோடு, இந்து சமய பண்பாட்டு அமைச்சினால் ‘தமிழ் மணி’எனும் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

இவரது ஆங்கிலப் புலமையையும், மொழி பெயர்ப்பு ஆற்றலையும் அறிந்திருந்த மலைய இளைஞர் பேரவையின் பொதுச் செயலாளர் வி.எல். பெரைரா, தமது ஸ்தாபணத்தின் மாத வெளியீடான ‘தாக்கம்’ பத்தி ரிக்கையின் ஆசிரியராகவும் அத்தோடு, இவ்வமைப்பின் தொழிற்சங்கமாகிய ‘விவசாய தொழிலாளர் சங்கத்தின்’ பிரதான பிரசார பீரங்கியாகவும் கடமை புரிந்தார்.

ஹட்டனில் நடைபெற்ற ஒரு புத்தக வெளியீட்டு விழாவிற்கு தலைமை தாங்கியவர் “மலையகம் இலக்கியத்தில் ஒரு பாலைவ னம்.” என்று கூறியதற்கு கடுமையாக அதனை ஆட்சேபித்து உரையாற்றினார்.

பின்னர், தலைமைப் பீடத்துடன் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டால் அதலிருந்து விலகினார். பின்பு, மீண்டும் 2002ஆம் ஆண்டு வீரகேசரியில் இணைந்தார். வெளிநாட்டு செய்தி மொழி பெயர்ப்பாளராகவும் கடமையாற்றினார். சில ஆண்டுகளின் பின் அதிலிருந்து விலகி மீண்டும் மடக்கும்பரை வந்துவிட்டார்.

காந்தி தமது மனைவி மக்களுடன் வந்தார். அவரது துணைவியார் சரளமாக தமிழ், சிங்களம், ஆங்கிலம் மொழிகளில் உரையாடுவார். இதன் காரணமாக பலர் அவர் தமிழர் என்றே நினைத்தார்கள். அனால், அவர் சிங்கள கிருஸ்தவ சமூகத் தைச் சேர்ந்தவர். ஆனால், அவரது பிள்ளைகளின் பெயர்கள்:

மகள்: ஏன் கவிதா, வீட்டில் செல்ல பெயர் ‘டோட்டி’

மகன்: அரவிந். என்னதான் மனைவி சிங்கள சமூகத்தினராகவும், கிருஸ்துவராக இருந்தாலும் தமது பிள்ளைகளின் பெயர்களை தமிழிலே வைத்தார்.

மடக்கும்பரையிலுள்ள தமது இல்லத்தில் ஆங்கில பிரத்தியோக வகுப்பினை நடாத்தினார். அவரிடம் ஆங்கிலம் பயின்ற மாணவர்களில் இப்போது பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் எம்.திலகராஜூ ஒருவராகும். நாளாவட்டத்தில், அவர்களது பரம்பரை இல்லத்தை தோட்ட நிர்வாகம் கையகப்படுத்திவிட்டது. அதன்பின்பே காந்தி தமது குடும்பத்தாரோடு கொழும்பில் குடியேறிவிட்டார். சுடரொளி பத்திரிக்கையில் இணைந்தார்.

இப்பத்திரிக்கையின் வார இதழில் தமது எழுதி வைத்திருந்த கவிதைப் படைப்புகளை வெளியிட்டு தமது ஆசைகளை நிறைவேற்றிக் கொண்டார். இவர் தனது இறுதி காலம்வரையில் வத்தளையில் வாழ்ந்து வந்தார்.

“கவிஞன் ஒரு குடிகாரன்” என்ற கண்ணதாசனின் எழுத்தினைப்போல் சற்று மதுவிற்கு அடிமையானார். இதன் காரணமாகவே இறுதியில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில்; 26.06.2016 அன்று காலை 9மணியளவில் மகரகம புற்றுநோய் வைத்திய சாலையில் அவரது உயிர் பிரிந்தது. அவரது உடல் மகரகமயில், தெகிவளை வீதியி ல் அமைந்திருக்கும் கூட்டுறவு மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

மூத்த எழுத்தாளர் அந்தனி ஜீவா தலைமையில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில், மடக்கம்பரை மண்ணின் மக்கள் சார்பாக மட்டுமின்றி, தனது அரம்பகால ஆங்கில ஆசானுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாகவும் எழுத்தாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.திலகராஜ் அஞ்சலி உரையாற்றினார்.

இறுதிக் கிரியைகள் 27.06.2016 திங்கட்கிழமை எந்தவித மத அனுஷ்ட்டான ங்களும் இல்லாது மிகவும் எளிமையாக நடைபெற்று, மகரகம மாநகரசபை பொது மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. அச்சர சுத்தமாக தமிழும், சிங்களமும் ஆங்கிலமும் பேசுவதில் வள்ளவரும், அமைதியும், ஆழ்ந்த நோக்கும் கொண்ட மலையகத்தின் கவி இளவள் சி.எஸ்.காந்தியின் உடல் தீயில் கருகிப் போனாலும், அவரது புகழுடம்பு என்றும் அவரை நினைவு படுத்திக் கொண்டே இருக்கும்.

தனது மகளின் திருமணத்தில் மருமகன், மனைவி, மகனுடன்

தந்தையுடன் தாயின் மடியில் குழந்தையாக சி.எஸ்.காந்தி

பரம்பரை பெரிய கங்காணியார் வீடு இப்போதைய நிலை.


நன்றி - வீரகேசரி
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates