![]() |
எட்மன்ட் ஹேவாவிதாரன |
இராணுவ நீதிமன்றத்தின் அநீதியான விசாரணையால் பாதிக்கப்பட்ட இன்னொரு முக்கியமான பிரமுகர் அநகாரிக தர்மபாலாவின் இளைய சகோதரர்களில் ஒருவரான எட்மன்ட் ஹேவாவிதாரன (Edmund Hewawitharana). எட்மன்ட் மதுவொழிப்பு இயக்கத்தின் முக்கிய செயற்பாட்டாளர்களில் ஒருவர். இலங்கையின் சுதந்திர போராட்டத்தின் ஒரு வீரராரகவே சிங்களவர்கள் மத்தியில் மதிக்கப்படுகிறார். மேலும் அவர் இலங்கைப் பாதுகாப்புப் படையின் (Ceylon Defence Force - CDF) உறுப்பினர். இந்தப் படை பிரிட்டிஷ் இராணுவத்தின் அவசரத் தேவைக்காக 1910இல் உருவாக்கப்பட்ட இந்தப்படையைச் சேர்ந்தவர்கள் தயார் நிலையில் இருப்பார்கள்.
எட்மண்டின் தந்தையார் டொன் கரோலிஸ் ஹேவாவிதாரண புறக்கோட்டையில் செல்வந்த வர்த்தகர். அவருக்கு சொந்தமான பிரபல தளபாட வியாபாரக் கடை கொழும்பு கெய்சர் வீதியில் அமைந்திருந்தது. இன்றும் அந்தக் கட்டடம் அதே இடத்தில் டொன் கரோலிஸ் சகோதர்கள் (H. Don Carolis & Sons Ltd) என்கிற பெயரில். 150 வருடத்துக்கும் மேலாக ஒரு கம்பனியாக இன்று வரை இயங்கி வருகிறது. இலங்கையில் மட்டுமல்லாது வெளிநாடுகளுடனும் தளபாட வர்த்தகத்தில் பல வருடங்களாக ஈடுபட்டுவரும் கம்பனி அது.
கரோலிஸ் இறந்தததன் பின்னர் இந்த வர்த்தகத்தை 1908 இல்பொறுப்பேற்றவர் இளைய மகனான எட்மன்ட். மூத்த சகோதரான டேவிட் ஹேவாவிதாரண எனப்படும் அநகாரிக்க தர்மபால அப்போது முழுமையாக சமய, சமூக நடவடிக்கைகளில் தன்னை அர்ப்பணித்திருந்தார். இன்னொரு சகோதரரான சார்ல்ஸ் அல்விஸ் ஹேவாவிதாரண வைத்தியத்துறை கற்று அத்துரையிலேயே பணியாற்றினார். சார்ல்ஸ் அல்விஸ் 1915இல் கைது செய்யப்பட்டபோதும் அவர் பின்னர் விடுவிக்கப்பட்டார்.
கலவரம் நிகழ்ந்த போது அநகாரிக தர்மபால நாட்டில் இருக்கவில்லை அவர் இந்தியாவில் இருந்தார். அவரின் சகோதர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதன் பின்னியில் அவரைப் பழி வாங்கும் நோக்கமும் இருந்தது என்பது சிங்களத் தரப்பு வாதம். அதில் உண்மையும் இருக்கலாம் என்பதே எட்மன்ட் விடயத்தில் பிரிட்டிஷ் ஆட்சியினர் நடந்துகொண்ட முறை தெளிவுறுத்துகிறது.
![]() |
கெய்சர் வீதியிலுள்ள "கிறிஸ்டல் பேலஸ்" இன்று... |
கிறிஸ்டல் பேலஸ் தாக்குதல்
எட்மன்ட் ஹேவாவிதாரண பொறுப்பேற்றிருந்த கெய்சர் வீதியிலுள்ள “டொன் கரோலிஸ்” தளபாட கடை (இல.58) அமைந்துள்ள அதே வீதியில் ஒரு சில மீட்டர்கள் தொலைவில் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்குச் சொந்தமான “கிறிஸ்டல் பேலஸ்” இல.100-104 இலக்கத்தில் (Crystal Palace) என்கிற பிரபல கடை அமைந்திருந்தது. இன்றும் அதே இடத்தில் அந்தக் கடைகள் இருக்கின்றன.
ஜூன் 1ஆம் திகதி கலவரத்தின் போது கிறிஸ்டல் பெலசை தாக்கி உடைத்து, கலவரக்காரர்களைத் தூண்டிவிட்டதாகவும், கொள்ளையடித்ததாகவும், அக்கலவரக் காரர்களுக்கு தலைமை தாங்கியதாகவும் எட்மன்ட் மீது மீது குற்றம் சுமத்தப்பட்டது. அதுபோக தேசத்துரோகம் போன்ற குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டது.
மூன்று நாள் விசாரணையில் இரு தரப்பிலும் சாட்சிகள் விசாரிக்கப்பட்டன. இறுதியில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது. அன்று பரபரப்பாக பேசப்பட்ட சம்பவங்களில் இதுவும் ஒன்று. எட்மன்டுக்கு எதிரான பல பொய் சாட்சிகள் கூறி நீதித்துறை உண்மைக்குப் புறம்பாக திசைதிருப்பப்பட்டதாக ஆர்மண்ட் டீ சூசா தனது நூலில் விளக்குகிறார்.
“கிறிஸ்டல் பேலஸ் அன்றைய நாட்களில் வெளிநாடுகளில் இருந்து கண்ணாடிகள் இருக்குமதி செய்து வியாபாரம் செய்துவரும் ஒரு கடை. எட்மண்டுக்கு அது ஒரு தொழில் போட்டியுள்ள கடையும் அல்ல. அந்த சம்பவம் நடந்தது மதியம் ஒரு மணிக்கு என்கின்றன அவருக்கு எதிரான சாட்சிகள். வாகனத்தில் சண்டியர்களை அழைத்துவந்து எட்மன்ட் அந்தக் கடையை உடைக்கச் சொன்னதைக் கண்டதாக கூறுகிறார்கள் அவர்கள். சன நெரிசலும், கரத்தைகளும் நிறைந்த அந்தத் தெருவில் அந்த நேரத்தில் அங்கு அப்படி வாகனங்களில் வருவதற்கான சாத்தியம் இல்லை. அப்படியும் கடையை உடைக்கச் சொல்ல கட்டளையிட வேண்டுமெனில் அவரது கடையில் இருந்தபடியே கட்டளையிட்டிருக்க முடியும்.
கிறிஸ்டல் பேலஸ் உடைக்கப்பட்டது மதியத்துக்கு முன்னர் என்று பலர் கூறிய செய்திகள் அடுத்த நாள் பத்திரிகைகளிலும் வெளிவந்திருக்கின்றது. நகர சபை உறுப்பினர் டொக்டர் ரத்தினம், இராணுவ லெப்டினன்ட் டபிள்யு.ஏ.டெப், இன்னும் சில போலீசார் கூட அந்த சம்பவங்களைப் பார்த்திருக்கின்றனர். அவர்கள் உதவியும் கேட்டிருக்கின்றனர். அந்த இடத்தில் இவர்கள் எவரும் எட்மன்டை எவரும் காணவில்லை. டொக்டர் ரத்தினம் அன்றைய தினம் கிறிஸ்டல் பேலஸ்சின் உரிமையாளரை முற்பகல் 11க்கு முன்னர் சந்தித்ததாகவும் முற்றிலும் உடைக்கப்பட்டு, சூறையாடப்பட்ட தனது கடையை அவர் தன்னிடம் காட்டியதாகவும் கூறியிருக்கிறார். எட்மன்ட் ஒரு மணிக்கு வந்து கடையை உடைத்தார் என்பது இந்த வாக்குமூலத்துக்கு நேரெதிரான தகவல்.
எட்மன்ட் மதுவொழிப்பு இயக்கத்தின் தீவிர செயற்பாட்டாளர் மட்டுமல்ல, அவர் அவ்வியக்கத்தின் செயற்பாடுகளுக்கு ஏராளமாக நிதிப் பங்களிப்பு வழங்கியவர். அவரை அறிந்த எந்த இலங்கையர்களோ, ஆங்கிலேயர்களோ அவர் இப்படி ஒரு காரியத்தில் ஈடுபட்டிருப்பார் என்று நம்பக்கூட மாட்டார்கள்.”
கெய்சர் வீதியிலுள்ள டொன் கரோலிஸ் சகோதர்கள் (H. Don Carolis & Sons Ltd) இன்று... |
“புறக்கோட்டைப் பகுதியிலிருந்து வந்த முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த பிரபல சண்டியர் ஒருவரின் தலைமையிலேயே அந்த இடத்தில் கடை உடைப்புகளும் கொள்ளைகளும் நிகழ்ந்தன” என்று கலவரம் பற்றி வெளியான பொன்னம்பலம் இராமநாதனின் நூலில் தெரிவிக்கப்படுகிறது. அவர்கள் இரும்புக் கம்பிகளையும், தடிகளையும் கொண்டுவந்து அங்குள்ள கடைகளை உடைத்தார்கள் என்றும், அதே கும்பலால் கிறிஸ்டல் பெலசும் தாக்கப்பட்டதாக அந்த நூலில் சில சாட்சியங்களுடன் எடுத்துரைக்கிறார்.
இலங்கையில் மிஷனரி பாடசாலைகளின் ஆக்கிரமிப்புக்கு எதிராக பௌத்த மறுமலர்ச்சிப் பணிகளுக்கு என்று ஆரம்பிக்கப்பட்ட மகாபோதி சங்கத்தின் நிறுவனர் அநகாரிக்க தர்மபால அந்த அமைப்பின் நிர்வாகிகளில் ஒருவர் எட்மன்ட். அரசுக்கு எதிரான சதியை இந்த அமைப்பு மேற்கொள்வதாக சந்தேகித்தது பிரிட்டிஷ் அரசு. வழக்கின் போதும் எட்மண்டின் மகாபோதி சங்க செயற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டன. இத்தகைய காரணங்கள் எட்மன்ட் மீது பழி சுமத்த இலகுவானது. கலவரத்துக்கும் அவரது இந்த பின்னணிக்கும் முடிச்சு போடுவது தவறானது என்று பல பௌத்த அமைப்புகள் முறைப்பாடுகள் செய்தன. ஆனால் அரசாங்கத்தால் அவை நிராகரிக்கப்பட்டன. துறைசார் நிபுணத்துவம் இல்லாத இராணுவ நீதிமன்றத்துக்கு சாட்சிகளை கையாளுவதற்கான அனுபவம் இல்லாது இருந்ததன் விளைவுகளே இத்தகைய பிழையான அவசரத் தீர்ப்புகள்.
எட்மண்டுக்கு ஆதரவாக அனுப்பப்பட்ட முறைப்பாட்டுக் கடிதங்களில் ஒன்று பிரபல கத்தோலிக்கரான பேராசிரியர் சீ.டபிள்யு வேன் கேசல் 1915 ஒக்டோபர் 7 அன்று ஆளுநருக்கு அனுப்பிய கடிதம்.
“குற்றம் சாட்டப்பட்ட எட்மன்ட் ஹேவாவிதாரண இப்படி ஒரு காரியத்தை செய்திருக்க முடியாதவர். அவரை நான் சிறு பராயம் முதல் நன்றாக அறிவேன். அவரின் நடத்தை, அவரின் முந்தய செயற்பாடுகள், அவரின் நிலை என்பவற்றைக் கணக்கிலெடுக்கும்போது இப்படியான ஒரு வெட்கம்கெட்ட செயலில் அவர் ஈடுபட்டிருக்க முடியாது....
அவர் ஒரு பௌத்தர் தான். பிற்காலங்களில் வன்முறையாளர்களாக ஆன பௌத்தர்களில் ஒருவர் அல்ல அவர். கிறிஸ்டல் பேலஸ் மற்றும் டொன் கரோலிஸ் ஆகிய இரண்டும் வியாபாரப் போட்டியுள்ள கடைகளும் இல்லை. அவை இரண்டும் வெவ்வேறு பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள். இந்தத் தீர்ப்பின் மீதான முறைப்பாடுகளை கவனத்தில் எடுக்கும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.....”
மரணமா? கொலையா?
எட்மன்ட் ஹேவாவிதாரணவுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்டார். யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு மாற்ற வேண்டாம் என்றும் வேறேதும் சிறைச்சாலையில் வைத்திருக்கும்படியும் கோரிக்கை விடுக்கப்பட்டபோதும் அதுவும் நிராகரிக்கப்பட்டது. அதன் பின்னர் யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார். யாழ் சிறைச்சாலை அன்றைய காலத்தில் சிங்களவர்களுக்கு பீதியைத் தந்த சிறைச்சாலை. அதன் தூய்மையின்மை, நோய்வாய்ப்படுதல் என்பன பற்றி ஏற்கெனவே அறியப்பட்டிருந்தது. ஏற்கெனவே சில கைதிகள் அங்கு நோய்வாய்ப்பட்டு இறந்து போனார்கள்.
எட்மன்ட் அங்கு நோய்வாய்ப்பட்டு மோசமான நிலைக்கு உள்ளானார். எந்தவித சிகிச்சையும் வழங்கப்படாத நிலையில் வெறும் சிமெந்து தரையில் மோசமான பாயில் படுக்கையில் கிடத்தப்பட்டார். பல நாட்களின் பின்னர் தான் ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டார். அவரது சகோதரரான டொக்டர் சீ.ஏ. ஹேவாவிதாரன தனது சகோதரரின் நிலையைப் பார்வையிட அனுமதிக்குமாறு காலனித்துவ செயலாளர் ஆர்.ஈ.ஸ்டப்ஸ்ஸிடம் கோரிக்கை விடுத்த போதும் எட்மன்ட் இறப்பதற்கு ஐந்து நாட்களுக்கு முன்னர் தான் அனுமதி வழங்கப்பட்டது. அப்போது காலம் கடந்திருந்தது. அந்த ஐந்து நாட்களும் டொக்டர் சீ.ஏ. ஹேவாவிதாரனவும், எட்மண்டின் மனைவியும் யாழ்ப்பாணம் சென்று அவரைக் கவனித்தார்கள். 1915 நவம்பர் 19 அன்று ஐந்து மாதங்கள் சிறையில் வாடிய நிலையில் 42 வது வயதில் எட்மன்ட் சிறையிலேயே இறந்து போனார்.
மக்களவையில் உத்தியோகபற்றற்ற உறுப்பினர்கள் சேர்ந்து இது தொடர்பில் ஆட்கொணர்வு மனுவை கோரினர். அது நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர் பிரிவுக் கவுன்சிலும் மேன் முறையீடு செய்யப்பட்டது. அந்த காலப்பகுதியில் பிரித்தானியாவில் விடுமுறை காலமாதலால் நவம்பர் இறுதி வரை விசாரணைக்கு எடுப்பதற்கான சாத்தியங்கள் இருக்கவில்லை.

பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. ஆனாலும் அன்றைய காலனித்துவ நாடுகளின் செயலாளராக இருந்த வால்டர் லோங் (Walter Long) அது குறித்து மேலதிக நீதி விசாரணை நடத்துவதை நிராகரித்தார்.
மனிதாபிமான அடிப்படையில் இந்த வழக்கை தீர விசாரித்து விடுவிக்கும்படி விடுத்த கோரிக்கையை தம்மால் பரிசீலிக்க முடியாது என்றும் அதற்கான காரணம் பிரிவுக்கவுன்சிலில் மேன்முறையீடு செய்யப்பட்டிருக்கும் வழக்கு என்பதால் ஒன்றும் செய்ய முடியாது என்று ஹரி கிரீசி அறிவித்தார். இதற்கிடையில் சகோதரர் டொக்டர் ஹேவாவிதாரண யாழ்ப்பாணத்தில் இருந்த நிலையில் அவருக்கும் மக்களவை உறுப்பினர்களுக்குமிடையிலான தொடர்புகளும் குன்றியதால் விடுதலைக்கான முயற்சிகளில் தடங்கல்கள் ஏற்பட்டிருந்தன. இறுதியில் எட்மன்ட் தரப்பில் ஆட்கொணர்வு மனுவை விலக்கிக் கொள்வதாக அறிவித்ததன் காரணமாக ஆளுநர் முடிவுக்கு வந்தார். குறிப்பிட்ட கடிதம் உரிய அதிகாரிகளால் கையெழுத்திட்டு வந்தடைந்ததும் விடுவிக்கும் ஆணையை தான் பிறப்பிப்பதாக அறிவித்தார். அந்த கையெழுத்திட்ட கடிதம் ஆளுநர் மாளிகைக்கு வந்தடைந்த போது எட்மன்ட் ஹேவாவிதாரணவின் மரணச் செய்தியும் வந்தடைந்தது.
அவரது இறுதிச் சடங்கிற்கு எந்தவித தாள வாத்தியங்களும் இசைக்கக்கூடாது என்று உத்தரவிடப்பட்டது. மக்களின் அனுதாபம் மேலிடும் என்று அவர்கள் கருதியிருக்கலாம். ஆனால் அவர்களின் எதிர்பார்ப்பு வீணானது அவரது இறுதிச் சடங்கு மிகப் பெரிய அளவில், பெருந்திரளான மக்களுடன், ஒரு தேசிய வீரருக்குரிய மரியாதையுடன் நிகழ்த்தப்பட்டது. கலந்துகொண்ட பிரமுகர்களின் பெயர்களை வெளியிடவிடாது தடுக்க தணிக்கை அதிகாரி முற்பட்ட போதும் ஊடக பிரதிநிதிகளின் அழுத்தத்தின் விளைவாக அந்த தணிக்கை கைவிட நேர்ந்தது.
அநகாரிக்க தர்மபால தனது நாட்குறிப்பில் “எனது சகோதரனின் இறுதி நிகழ்வில் கலந்துகொள்ளக் கூட எனக்கு பாக்கியம் கிடைக்கவில்லை” என்று குறிப்பிடுகிறார். ஆங்கிலேயே ஆட்சியாளர்களுக்கு எதிராக பின்னர் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுப் பட்டியலில் எட்மன்ட்டின் மரணம் குறித்த விடயமும் உள்ளடங்கும். பொன்னம்பலம் இராமநாதன் தனது நூலில் குறிப்பிடும் போது “எட்மன்ட் குற்றம் செய்தார் என்பதற்கு எந்தவித ஆதாரங்களும் இறுதிவரை நிரூபிக்கப்படவில்லை.” என்றார். அதேவேளை பின்னர் புதிதாக வந்த ஆளுநர் வில்லியம் மனிங் பிரபு; ஹேவாவிதாரன குடும்பத்தினருக்கு ஏற்பட்ட அநீதிக்கு மன்னிப்பு கோரி கடிதம் எழுதியிருந்தார். மனிங் அம்மையார் ஹேவாவிதாரன குடும்பத்தின் நெருக்கமான நன்பியானார்.
எட்மன்ட் ஒரு நிரபராதி என்பது அன்றே நிரூபிக்கப்பட்டது. தாம் இழைத்தது தவறு என்று பிரிட்டிஷ் ஆட்சியாளர்களும் ஒப்புக்கொண்டது மட்டுமன்றி மன்னிப்பும் கோரியிருக்கிறார்கள். அவற்றுக்கு எந்த அர்த்தத்தையும் எட்மண்டின் மரணம் தரவில்லை. அவர் கைது செய்யப்பட்டார். சிறைக்கு தள்ளப்பட்டார். வழக்கு தொடரப்பட்டார். குற்றவாளியாக்கப்பட்டார். கடை உடைப்புடன், தேசத்துரோகக் குற்றச்சாட்டும் சுமத்துப்பட்டு கடூழிய ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டார். சிறையில் நோயாளியாக்கப்பட்டு அங்கேயே சாகடிக்கப்பட்டார்.
தொடரும்...
நன்றி - தினக்குரல்
பின்வரிசையில் : சைமன்ஹேவாவிதாரண, ஜேக்கப் ஹேவாவிதாரண, சீ.ஏ.ஹேவாவிதாரண, எட்மன்ட் ஹேவாவிதாரண,
நடு வரிசை : எஸ்.கே.முனசிங்க, மல்லிகா ஹேவாவிதாரண (அனகாரிகவின் தாய்), நளின் முனசிங்க, தொன் கரோலிஸ் ஹேவாவிதாரண முதலி (அனகாரிகவின் தந்தை), சுமணா ஜெயசூரிய, சுஜாதா ஹேவாவிதாரண
முன் வரிசை : சனத் முனசிங்க, பியதாச முனசிங்க, நீல் ஹேவாவிதாரண, ராஜா ஹேவாவிதாரண
அநகாரிக தர்மபால பரம்பரையினர் இன்று வரை செலுத்திவரும் அரசியல் வகிபாகம் பற்றி சுருக்கமாக:
டொன் கரோலிஸ் ஹேவாவிதாரண (1833-1906)- மல்லிகா தர்ம குணவர்தன (1846-1936) ஆகியோருக்கு ஐந்து பிள்ளைகள்.
- டேவிட் ஹேவாவிதாரண (1864-1933) (அநகாரிக தர்மபால என பின்னர் பெயர் மாற்றப்பட்டவர்)
- எட்மன்ட் ஹேவாவிதாரண (1870-1915)
- சைமன் அலக்சாண்டர்ஹேவாவிதாரண (1913-1904)
- சார்ல்ஸ் அல்விஸ் ஹேவாவிதாரண (1876-1929)
- டோனா ஏஞ்சலினா ஹேவாவிதாரண ()
இவர்களின் கடைசியாக பிறந்த பெண் டோனா ஏஞ்சலினா ஹேவாவிதாரண பிற் காலத்தில் மாத்தறையைச் சேர்ந்த ஜாகோப் முனசிங்கவை மணமுடித்தார். அவர்களுக்கு பிறந்த நான்கு குழந்தைகளில் மூத்த மகன் சனத் முனசிங்கவுக்குப் பிறந்தவர் தான் மங்கள முணசிங்க என்று அறியப்பட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பிரமுகர்.
![]() |
மங்கள முனசிங்க, சுசில் முனசிங்க, அனில் முனசிங்க |
இனப்பிரச்சினைத் தீர்வு குறித்து ஆராய்வதற்காக இவர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவுக்கு மங்கள முனசிங்க தெரிவுக் குழு (1991-1993) என்று பிரபலமாக அழைக்கப்பட்டது. மேலும் அவர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்யின் பாராளுமன்ற உறுப்பினராகவும், இங்கிலாந்து, இந்தியா நாடுகளில் இலங்கைக்கான உயர்ஸ்தானியாகராகவும் பணியாற்றியிருக்கிறார்.
டோனா எஞ்சலினாவுக்குப் பிறந்த நான்காவது மகனான பியதாச முனசிங்கவுக்குப் பிறந்த நான்கு பேரில் இருவர் பாராளுமன்ற உறுப்பினர்கள். ஒருவர் அனில் முனசிங்க மற்றவர் சுசில் முனசிங்க.
சுசில் முனசிங்க (1930-2012) ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக மட்டுமன்றி மேல்மாகாண முதலமைச்சராகவும் இருந்திருக்கிறார்.
அனில் முனசிங்க (1927-2002) ஒரு இடதுசாரி ட்ரொஸ்கிஸ்ட் வழியைப் பின்பற்றியவர் பின்னர் லங்கா சம சமாஜக் கட்சியிலிருந்து விலகி ஸ்ரீ.ல.சு.க வில் இணைந்து பாராளுமன்ற உறுப்பினராகவும், போக்குவரத்து அமைச்சராகவும், உப சபாநாயகராகவும் இருந்திருக்கிறார்.
http://www.rootsweb.ancestry.com/~lkawgw/gen3007.htm
http://www.rootsweb.ancestry.com/~lkawgw/gen3007.htm
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...