Headlines News :
முகப்பு » » அணைந்த செந் நட்சத்திரம் தோழர் தயா வன்னியாராச்சி – என்.சரவணன்

அணைந்த செந் நட்சத்திரம் தோழர் தயா வன்னியாராச்சி – என்.சரவணன்


மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) மூத்த தலைவர்களில் ஒருவரான தோழர் தயா வன்னி ஆராச்சி அவரது 68 வது வயதில் இயற்கை எய்துள்ளார். 1978 இல் நடத்தப்பட்ட ஜே.வி.பியின் முதலாவது பொது மாநாட்டின் போது பொதுச் செயலாளராக தெரிவு செய்யப்பட்டவர் தோழர் தயா வன்னி ஆராச்சி அவர்கள். 

ஜே.வி.பியின் பொது மாநாட்டின் போது உறுப்பினர்களின் அனுமதியுடன் முதலாவது தடவையாக தெரிவுசெய்யப்பட்டவர் அவர். 1968 இல் வீரகெட்டிய மத்திய மகா வித்தியாலயத்தில் மாணவராக கல்வி கற்றுக்கொண்டிருக்கும் போதெ ஜே.வி.பியுடன் இணைந்து பணியாற்றத் தொடங்கிவிட்டார்.

காமினி பாஸ், விஜேதாச லியனாராச்சி, பேண்டிஸ் அபேகுணவர்த்தன, தஹநாயக்க போன்ற ஜே.வி.பி தலைவர்களுடன் நெருங்கி பணியாற்றத் தொடங்கிய காலம் அது. 1971 ஜே.வி.பி கிளர்ச்சி மோசமாக நசுக்கப்பட்டு பலர் கொல்லப்பட்டும், காதுக்கும் உள்ளானார்கள். தோழர் தயா லியனாராச்சி தவறை இறுதிவரை ஒத்துக்கொள்ளாததால் குற்ற விசாரணை ஆணைக்குழுவினால் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு தண்டனை அனுபவித்தார். அதுமட்டுமன்றி சிறைக்குள் நிகழ்ந்த அரசியல் தயாரிப்புப் பணிகளிலும் பங்காற்றியவர். 6 ஆண்டுகளுக்குப் பின்னர் 1977 நவம்பர் மாதம் அவர் விடுதலையானார். விடுதலையானதும் தனது குடும்பப் பொறுப்பின் காரணமாக கொழும்பு புறக்கோட்டையில் மூட்டை தூக்கும் தொழிலைச் செய்தார். அவரது இரு சகோதரர்கள் ஜே.வி.பிக்காக கிளர்ச்சியின் போது பலியானார்கள். மீண்டும் இரண்டாவது கிளர்ச்சியின் போது அடுத்த இரு சகோதரர்கள் இரண்டு ஆண்டுகால சிறையனுபவித்தார்கள். 1977இல் மீண்டும் ஜே.வி.பியை கட்டியெழுப்பும் பணியில் தலைமை தாங்கியவர்களும் தய வன்னியாராச்சியும் ஒருவர். அதன் தற்காலிக பொதுச்செயலாளராக பணியாற்றிய உபதிஸ்ஸ கமனாயக்கவிற்குப் பின்னர் தோழர் தயா 1978 இல் பொதுச்செயலாளராக தெரிவானார். பல சந்தர்ப்பங்களில் ஜே.வி.பி தமது செயலாளராக ஒருவரை வெளியில் அறிமுகபடுத்தி செயலாற்றுகின்ற போதும் இரகசிய செயலாளராக வேறொருவர் அக்கட்சிக்குள் செயல்படுவது பரகசியம். அப்படி இரகசிய செயலாளராகவும் தோழர் தயா வன்னியாராச்சி குறிப்பிட்ட காலம் இருந்து வந்தார் என்றும் தெரியவருகிறது.

1983 கலவரத்தைத் தொடர்ந்து ஜே.ஆர். அரசாங்கம் ஜே.வி.பி.யை தடை செய்தது. அந்தத் தடையோடு ஜே.வி.பி தலைமறைவு, இரகசிய அரசியலுக்கு தள்ளப்பட்டது. அத்தோடு தயா வன்னியாராச்சி முழுநேர அரசியலிலிருந்து ஒதுங்கி ஒரு ஆங்கில ஆசிரியராக கடமையாற்றத் தொடங்கினார். இறுதி வரை ஒரு ஆங்கில ஆசிரியராகவே பணியாற்றியபோதும், அவரது கடந்த கால அரசியலின் காரணமாக மாறி மாறி வந்த அரசாங்கங்கள் அவரை சந்தேகத்துடனே பார்த்ததுடன் அரசியல் பழிவாங்கலுக்கும் உள்ளானார். 1987-1989 ஜே.வி.பி கிளர்ச்சியின் போது அவரை கைது செய்து இரகசிய முகாமில் தடுத்து வைத்தது அரசாங்கம். ஆனால் எந்த குற்றச்சாட்டையும் பதிவு செய்ய முடியாத நிலையில் அவரை விடுவித்தது.

அவரது சகோதரர் வன்னிஆராச்சி பி.பி.சிக்கு அளித்த பேட்டியில் “சிறையில் இருந்த காலத்தில் அண்ணனுக்கும், சோமவன்சவுக்கும் விஜேவீர குழாய் வழியாக ஸ்பானிஸ் மொழி கற்றுகொடுத்ததாக கூறுவார். அவருக்கு 11 மொழிகள் தெரிந்திருந்தது.” என்கிறார்.

ராஜபக்ஷ அரசாங்கத்தை தூக்கியெறிவதற்கான அரசியல் பணியில் கடந்த காலங்களில் தனது முன்னாள் தோழர்களுடன் இணைந்து உழைத்திருந்தார். தனது இறுதிக் காலங்களில் முன்னிலை சோஷலிச கட்சியுடன் அவர் நெருக்கமாக இருந்தார்.

அன்றைய ஜே.வி.பி பல தடவைகள் பிளவுண்டு பல்வேறு இயக்கங்களாக ஆன போதிலும் அந்த சகல இயக்கங்களாலும் மதிக்கப்படும் ஒருவராக தோழர் தயா வன்னியாராச்சி திகழ்கிறார் என்றே கூற வேண்டும். ஜே.வி.பி மட்டுமன்றி ஏனைய இடதுசாரி இயக்கங்களாலும் மதிக்கப்படுபவர் அவர்.
 

நன்றி - தினக்குரல்
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates