Headlines News :
முகப்பு » » மலையகத் தமிழ் மக்கள் இலங்கையில் இரண்டாவது தேசியமாக திகழ்ந்தனர் - அ.லோரன்ஸ்

மலையகத் தமிழ் மக்கள் இலங்கையில் இரண்டாவது தேசியமாக திகழ்ந்தனர் - அ.லோரன்ஸ்


இன்று வடக்கு கிழக்குத் தமிழ் மக்களினதும் முஸ்லிம் மக்களினதும் பிரச்சினை முனைப்பாக காணப்படுகின்றது. தேசிய ரீதியில் மாத்திரமல்ல, சர்வதேச கவனத்தையும் ஈர்த்துள்ளது. இப்பிரச்சினையைத் தீர்க்கும்படி சர்வதேசச் சமூகங்கள் வலியுறுத்தும் அளவிற்கு நிலைமை வளர்ச்சியடைந்துள்ளது. பல தசாப்தங்களாக இழுபடும் இப்பிரச்சினை வடக்கு கிழக்கு மக்களினதும் தனித்துவம் அங்கீகரிக்கப்படுவதன் மூலம், அவர்களுக்கான அதிகாரப் பரவலாக்கல் அலகினை ஏற்படுத்துவதன் மூலம, அவர்களது சுய நிர்ணய உரிமை அங்கிகரீக்கப்பட்டு அம்மக்களின் அபிலாசைகளுக்கு ஏற்பத் தீர்த்து வைக்கப்பட வேண்டும். அதே நேரத்தில் மலையக மக்களின் பிரச்சினை தற்போது முனைப்பாக இல்லாதபடியால, அதனைப் புறக்கணிப்பது, நீண்ட கால நோக்கில் சிக்கலை ஏற்படுத்துவதாக அமையும்.

அவர்கள் அடிப்படை உரிமைகள் புறக்கணிக்கப்பட்ட நிலையிலேயே வாழ்கிறார்கள். அவர்களின் கைகளால் உருவாக்கப்பட்ட மலையகத்திலேயே அவர்கள் அந்நியமாக்கப்பட்டுள்ளார்கள். ஓரங்குல நிலம் தானும் வழங்கப்படாததன் மூலம் அவர்கள் உருவாக்கிய மலையகத்திலேயே ஒரு சிறுவிட் டைத் தானும் சொந்தமாக வைத்திருக்கும் அடிப்படை உரிமையை இலங்கையில் இதுவரை காலமும் மாறி மாறி வந்த அரசாங்கங்களும், அரசும் வழங்காதொழித்துள்ளது. அது மட்டுமன்றி 1948ஆம் ஆண்டு பிரஜாவுரிமைச் சட்டம் இந்நாட்டில் வாழ்வதற்கிருந்த உரிமையைப் பறித்துவிட்டது.

இந்த உரிமைப் பறிப்பு, இன்றுவரையில் நவீனபாணியில், இவர்களை ஒரு அடிமை நிலையில், அடிப்படையுரிமைகள் இழந்த நிலையில் வைத்துள்ளது. இலங்கையின் சனத்தொகைப் புள்ளி விபரங்களை எடுத்து நோக்கும் போது, மலையக மக்கள் இந்நாட்டின் ஏனைய தேசிய இனங்களைவிட, சனத்தொகை அடிப்படையில் இரண்டாம் நிலையில் இருந்துள்ளார்கள். இந்த நிலைமை திட்டமிட்ட குடியேற்றங் களாலும், மற்றும் பல்வேறு குடியுரிமை ஒப்பந்தங்களாலும் தேசிய இனங்களின் கடைசி ஸ்தாபனத்திற்கும் அவர்களை தள்ளிவிட்டது. இது அவர்களை இந்த நாட்டின் தேசிய இனமாக அங்கீகரிக்க வேண்டிவரும், என்று எதிர்பார்த்து திட்டமிட்ட தேசிய இனமாக வளராமல், தடுப்பதற்கான கபட நாடகமாகும்.

புள்ளி விபர அட்டவணை Il மலையகத் தமிழ் மக்கள் 1881 ஆம் ஆண்டிலிருந்து 1931 வரை பெரும்பான்மைத் தேசிய இனமாகிய சிங்கள மக்களுக்கு அடுத்து பெரும்பான்மையாக வாழ்வதைச் சுட்டிக் காட்டுகிறது. 1953இலிருந்து 1971ம் ஆண்டு வரை மலையக மக்கள், முஸ்லிம் மக்களை விட ஜனத்தொகையில் கூடுதலாக இருந்ததன் மூலம் இலங்கையின் மூன்றாவது தேசிய இனமாக வாழ்ந்துவந்தனர். 1981 புள்ளி விபரத்தின்படி பல திட்டமிட்ட ஆள் கடத்தல் ஒப்பந்தங்கள் மூலம் திட்டமிடப்பட்ட குடியேற்றங்கள் மூலம் 5.5 சதவீதம் என்ற அடிப்படையில் இலங்கையில் 4வது நிலையிலுள்ள தேசிய இனம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இது ஒரு வகையான திட்டமிடப்பட்ட இன ஒழிப்பு நடவடிக்கை என்றே கூறவேண்டும். இந்த மக்கள் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டதன் மூலமும், நாடு கடத்தல் மற்றும் பல்வேறு ஒப்பந்தங்கள் மூலமும் அரச முன்னின்று நடத்திய திட்டமிட்ட குடியேற்றங்கள் மூலமும் இனரீதியாகவும், பிரதேச ரீதியாகவும், இவர்களது பலம் குறைக்கப்பட்டுள்ளது.

"மலையகம் : சமகால அரசியல் - அரசியல்" தீர்வு நூலில் இருந்து நன்றியுடன்
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates