தோட்டத்தொழிலாளர்களுக்கும் 2500 ரூபா கொடுப்பனவை வழங்க வேண்டுமென்று அரசாங்கம் அறிவித்தும் அதனை வழங்குவதற்கு பெருந்தோட்டக் கம்பனிகள் முன்வரவில்லை. இது அரசாங்க சார்பு மலையக அமைச்சர்களை இக்கட்டான நிலைக்குத்தள்ளியுள்ளது.
கடந்த வரவு செலவுத் திட்டத்தின் போது அரசாங்கத்தினால் தனியார்துறை ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்ட 2500 ரூபா கொடுப்பனவை தோட்டத்தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டுமென்று அறிவித்திருந்தது.
அத்துடன் 2500 ரூபாவை கட்டாயம் வழங்க வேண்டுமென்று வலியுறுத்தும் சட்டம் பாராளுமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
இந்தக் கொடுப்பனவு 2016 ஜனவரி முதல் வழங்கப்படுமெனக் கூறப்பட்டது. பின்னர் ஏப்ரல் மாத சம்பளத்துடன் தோட்டக்கம்பனிகள் வழங்குமென்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும் இதுவரை வழங்கப்படவில்லை.
தோட்டத்தொழிலாளருக்கு கூட்டு ஒப்பந்தம் மூலம் வழங்கப்பட வேண்டிய சம்பள உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை இழுத்தடிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையிலேயே அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட 2500 ரூபாவை இடைக்கால நிவாரணமாக நாளொன்றுக்கு 100 ரூபா வீதம் வழங்கப்பட வேண்டுமென்று கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக பல்வேறு பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. ஆனால் எதுவும் நடைபெறவில்லை.
இந்த நிலையில் கடந்த 20 ஆம் திகதி மாலை அலரி மாளிகையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. பிரதமர் ரணில் தலைமையில் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில் தமிழ் முற்போக்கு கூட்டணித்தலைவர்களான மனோகணேசன், பி.திகாம்பரம், வே.இராதாகிருஷ்ணன், தொழில் அமைச்சர் ஜோன் செனவிரத்ன, கூட்டு ஒப்பந்த தொழிற்சங்க பிரதிநிதிகள், தோட்டக் கம்பனிகளின் பிரதிநிதிகள் மற்றும் தொழில் ஆணையாளர் ஆகியோர் கலந்து கொண்டனர். அந்தக்`கூட்டத்தில் எந்தவிதமான தீர்மானமும் எட்டப்படவில்லை. இதனைத் தொடர்ந்து கடந்த செவ்வாய்க்கிழமை மற்றுமொரு கூட்டம் நடைபெற ஏற்பாடாகி இருந்தது.
2500 ரூபா கொடுப்பனவு வழங்கப்படா விட்டால் இம்மாதம் 25 ஆம் திகதி முதல் வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தமிழ் முற்போக்கு கூட்டணி கடந்த முதலாம் திகதி தலவாக்கலையில் நடைபெற்ற மே தினக்கூட்டத்தில் அறிவித்திருந்தது.
இந்த நிலையில் இந்தக்காலப்பகுதியில் பல பேச்சுவார்த்தைகளும் இடம்பெற்றன. அத்துடன் தமிழ் முற்போக்குக் கூட்டணியால் கடந்த 24 ஆம் திகதி வரை முதலாளிமார் சம்மேளனத்துக்கு காலக்கெடு விதிக்கப்பட்டிருந்தது.
இதன் ஒரு கட்டமாகவே கடந்த செவ்வாய்க்கிழமை 24 ஆம் திகதி பிரதமர் தலைமையில் ஒரு பேச்சுவார்த்தை நடைபெறுவதற்கு ஏற்பாடாகி இருந்தது. இந்தப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளது. முதலாளிமார் சம்மேளனம் தம்மிடம் போதிய நிதி இல்லையென்றும் எனவே 2500 ரூபா வழங்க முடியாத நிலையிலுள்ளதாகவும் தெரிவித்து வந்தது. எனினும் கடன் பெற்றாவது தொழிலாளருக்கு நாளொன்றுக்கு 100 ரூபா வீதம் மாதமொன்றுக்கு 2500 ரூபாவை வழங்குமாறு முதலாளிமார் சம்மேளனத்துக்கு பிரதமர் அறிவுறுத்தியுள்ளதாக தெரிய வருகிறது.
ஆனால் கம்பனிகள் பிடிவாதமாக உள்ளதுடன் அரசின் சிபாரிசை ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.
இதனைத் தொடர்ந்தே தோட்டத்தொழிலாளர்களுக்கு நியாயமான முறையில் கிடைக்க வேண்டிய சம்பள அதிகரிப்பை வலியுறுத்தியும் முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலும் கடந்த வியாழனன்று கொழும்பு கோட்டை ரயில் நிலையம் முன்பாக சத்தியாக்கிர ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஏற்கனவே தோட்டத்தொழிலாளர்களின் வேலை நிறுத்தப்போட்டத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
ஆனால் தோட்டத்தொழிலாளர்களின் பொருளாதார நிலையை கருத்திற்கொண்டு அவர்களை மேலும் பொருளாதார சிரமங்களுக்கு உள்ளாக்குவதை தவிர்ப்பதற்காகவுமே அந்த திட்டம் கைவிடப்பட்டதாக தமிழ் முற்போக்குக்கூட்டணியின் முக்கியஸ்தர் ஒருவர் கூறினார்.
வியாழனன்று கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர். எனினும், இந்த ஆர்ப்பாட்டம் பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் மற்றும் அரசாங்கத்திடம் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பது ஒருபுறம் இருக்க, தொழிலாளருக்கு நியாயமான முறையில் வழங்கப்பட வேண்டிய 2500 ரூபா கொடுப்பனவை மேலும் தாமதம் செய்யாமல் உடனடியாக வழங்க வேண்டும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்.
இதில் கலந்து கொண்ட தமிழ் முற்போக்குக் கூட்டணித் தலைவர்கள், தோட்டக்கம்பனிகளுக்கு மேலும் 14 நாட்கள் காலக்கெடு ஒன்றை விதித்துள்ளனர்.
இந்த 14 நாட்களுக்குள் பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் 2500 ரூபா கொடுப்பனவை வழங்கவேண்டும்.
அவ்வாறு வழங்கப்படாவிட்டால் 14நாள் காலக்கெடுவின் இறுதியில் தோட்டத்தொழிலாளர்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபடுவர்.
இப்போராட்டத்தில் தோட்டத்தொழிலாளர்கள் மட்டுமன்றி நாட்டிலுள்ள ஏனைய அரச துறை, பொதுத்துறை ஊழியர்களும் இந்தப்போராட்டத்தில் கலந்துகொள்வர் என்று தெரிவித்தனர்.
வியாழனன்று நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டம் பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்திடம் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது ஒருபுறமிருக்க மீண்டும் ஒரு காலக்கெடுவை தமிழ்முற்போக்கு கூட்டணி முதலாளிமார் சம்மேளனத்துக்கு விதித்துள்ளமை அதன் இயலாமையை வெளிப்படுத்துவதாகவே அமைந்துள்ளது.
2500ரூபாவை தோட்டத்தொழிலாளருக்கு கட்டாயம் வழங்க வேண்டுமென்று பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டதுடன் வர்த்தமானியிலும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை வழங்குவதற்கு முதலாளிமார் சம்மேளனம் பிடிவாதமாக மறுப்பதேன்?
முதலாளிமார் சம்மேளனத்திற்கு சட்டரீதியாக சாதகமாகவுள்ள பிடிமானம் என்ன? அரசாங்கத்தின் உத்தரவை மறுதலிக்கும் வகையிலான அந்த சட்ட அனுகூலத்தை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க தமிழ்முற்போக்குக் கூட்டணி சிந்திக்காதது ஏன்?
தொடர்ந்தும் தோட்டத்தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களில் ஈடுபடவேண்டுமா? தீர்வு எப்போது?
நன்றி - veerakesari
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...