இலங்கையில் அமைச்சுகள் மற்றும் திணைக்களங்களில் மாத்திரமே செயலாற்றி வந்த சிற்றூழியர்கள் இன்றைய கால கட்டத்தில் பல்வேறு துறைகளில் வியாபித்து தமது தொழில்களை செவ்வனே செய்து வருவதை பாராட்டும் அதேவேளையில், ஒரு தொழிலின் சிறப்புத் தன்மையையும் அதனோடு இணைந்ததான பல்வேறு முரண்பாட்டு செயல் நடவடிக்கைகளையும் இங்கு அலசி ஆராயப்பட வேண்டியது எமது கடப்பாடாகும்.
இன்றைய நிலையில் அரச சேவையில் இணைந்துள்ள சிற்றூழிய சேவையாளர்களை பாடசாலைகளில் வாசிகசாலை பொறுப்பாளர், வாசிகசாலை உதவியாளர்கள், ஆய்வுகூட பொறுப்பாளர், விஞ்ஞான ஆய்வுகூட உதவியாளர், அலுவலக உதவியாளர், காவல் ஊழியர் மற்றும் இரசாயன ஆய்வுகூட பொறுப்பாளர், உதவியாளர் மற்றும் தொழிலாளர்கள் என பல்வேறு வகுதிக்குள் அடக்கலாம். அத்தோடு இவ்வகையானோர் பாடசாலைகளில் மாத்திரமல்லாது ஆசிரியர் கலாசாலைகள், கல்வியற் கல்லூரிகள், வைத்தியசாலைகள், உதவி அரசாங்க அதிபர் காரியாலயங்கள், தபால் நிலையங்கள், புகையிரத நிலையங்கள், அமைச்சுகள் மற்றும் பல்வேறுபட்ட திணைக்களங்கள் என்பனவற்றில் கடமையாற்றி வருகின்றமையை யாவரும் அறிந்ததே.
இருப்பினுங்கூட பாடசாலைகள் மற்றும் அமைச்சுகள், திணைக்களங்களில் கடமைபுரியும் உத்தியோக நிலை பதவிகளுக்கும் சிற்றூழிய சேவையாளர்களுக்கும் பணிகள் மற்றும் நிர்வாக ரீதியான செயற்பாடுகளில் பாரிய வித்தியாச நிலைமைகள் காணப்படுகின்றன. பாடசாலைகளில் சிற்றூழியர்களின் கடமை நேரம் முற்பகல் 6.45 மணி தொடக்கம் பிற்பகல் 3.45 மணி வரையிலான காலப் பகுதியாகும். சில சந்தர்ப்பங்களில் ஒரு சில மாவட்டங்களில் மாத்திரம் அமைவிடம், சூழல், காலநிலை என்பவற்றுக்கேற்ப வேலை நேரம் மாறியிருக்கும் இவ் ஊழியர்களிடையே சம்பள முரண்பாடுகளும் காணப்படுகின்றன. அமய முறையில் வேலை செய்வோருக்கு குறிப்பிட்ட தொகையும் நிரந்தர சிற்றூழியர்களுக்கு அவர்களின் கால எல்லைக்கேற்ப, கல்வித்தகைமைக்கேற்ப வேறு விதமாகவும் காணப்படுகின்றன. பதவி நிலைக்கேற்பவும் மாறுபடுகின்றன.
அத்தோடு, ஊவா மாகாண சபை கல்வியமைச்சு செயலாளரினுடைய 19, நவம்பர் 2015ஆம் திகதியிடப்பட்ட 9/பி.மு.உ. கடிதப்படி இவர்களுக்கான வேலை நேரம் தெளிவாக குறிக்கப்பட்டு சகல அதிபர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. இவ்விடயம் உள்ளக சுற்று நிருப இலக்கம் 18/2015இல் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், ஊவா மாகாண சபைக்குட்பட்ட பாடசாலைகளில் சேவைபுரியும் மேற்குறிப்பிட்ட பதவிகளை வகிப்பவர்கள் பாடசாலை சூழலில் குறிப்பிட்ட சில பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் இது அமைச்சுக்கு தெரியவந்துள்ளதாகவும் அதனை நீக்கிக்கொள்வதனை கருத்திற்கொண்டே இச்சுற்று நிருபம் வெளியிடப்படுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, பாடசாலைகளில் கடமைபுரியும் சிற்றூழியர் எனப்படுபவர்கள் பாடசாலை உத்தியோகத்தர்களின் ஒரு பகுதியினர் எனவும் சிற்றூழியர்களை ஏற்புடைய பெயர்களில் அழைத்தல், மாணவர்களுக்கு அறிவுறுத்தல் செய்தல், ஏற்புடைய உடை அணிதல் மற்றும் கற்றலில் ஈடுபடுவதை தவிர்த்தல், குறிப்பிட்ட நேரத்துக்கு கட்டாயமாக சமுகமளித்தல், செல்லுதல் என்பன அச்சுற்றுநிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், கடமைப்பகிர்வு அதிபரினால் எழுத்துமூலம் வழங்கப்படல் மற்றும் பாடசாலை நேரத்துக்கு பின் அல்லது விடுமுறைகாலத்தில் இச்சிற்றூழியர்கள் கையொப்பமிடும் ஆவணத்தினை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வைப்பிடமொன்றை பெற்றுக்கொள்ள வேண்டுமெனவும் இச்சுற்றுநிருபத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, அவர்களின் வேலைப்பகிர்வாக அதிபரின் உத்தியோக அறையை சுத்தம் செய்தல், வகுப்பறைச் சுத்தம், நடைமுறைப்படுத்தல், சூழல் சுத்தம், பராமரித்தல், கோவைகளை அலுவலக தேவை நிமித்தம் எடுத்துச் செல்லுதல், தகவல் பரிமாற்றத்துக்கு பயன்படுத்தல் மற்றும் அவரவருக்கு கொடுக்கப்பட்ட பதவிநிலை தகுதிக்கேற்ப அவர்களுக்கு கொடுக்கப்பட்ட அறைகளில் கடமைகளைச் செய்தல் என்பனவும் அடங்குகின்றன.
மேலும், வாசிகசாலை சேவகர்களின் கடமையாக நூலகம் திறத்தல், மூடுதல் (குறிப்பிட்ட நேரத்துக்கு), நூலகத்தை சுத்தம் செய்தல், பராமரித்தல், புத்தகங்களை பாதுகாத்தல், அலுமாரிகள் மற்றும் இறாக்கைகளை பேணுதல், பத்திரிகை பொதிகளை எடுத்தல், அதிபர் மற்றும் வாசிகசாலை நிர்வாகியினால் கொடுக்கப்படும் கடமைகளை சரிவரச் செய்தல் என்பன அடங்குகின்றன.
இதேவேளை, ஆய்வுகூட சேவகர்களின் கடமையாக பாவனைக்குத் தேவையான உபகரணங்களை தெரிவு செய்து வழங்கல், மாதிரிகளை தயார் செய்தல், விஞ்ஞான ஆசிரியருக்கு உதவுதல், தினந்தோறும் பாவிக்கும் இயந்திரம் மற்றும் திரவங்களை பராமரித்தல் தளபாடங்களை பராமரித்தல், அதிபரினால் வழங்கப்படும் பதவிக்குரிய வேலைகளைச் செய்தல் என்பன அடங்குகின்றன.
அத்தோடு பாடசாலை காவலர்கள் மாலை 6 மணிக்கு முன்பதாக கடமைக் குச் சமுகமளித்து மறுநாட்காலை 6 மணியாகும்போது கட்டிடம், தோட்டம், மற்றும் வேலிகளை பரிசீலனை செய்து சேதம் ஏற்படவில்லை என உறுதி செய்தல், நேரப்பதிவை பிழையின்றிப் பேணல், பாடசாலை ஊழியர் கடமைக்கு வரும் வரை காத்திருத்தல், ஏதாவது குறையிருப்பின் அதிபர் அல்லது ஆசிரியர் விடுதியிலிருக்கும் ஆசிரியர்களிடம் முறையிடல், மது அருந்துதல், புகைத்தல் என்பனவற்றை தவிர்த்தல், அதிபரின் ஆலோசனையை கடைபிடித்தல், கடமை க்கு சமுகமளித்தல் மற்றும் கடமைநேரம் முடியும் வரை பாடசாலையிலிருந்து வெளியேறாமல் இருத்தல், கடமை நேரத்தில் வெளியாரை காணியினுள் வைத்திருத்தல், களவாடல், அதிபர், ஆசிரியர் தொடர்பாடுகளை வெளியாருக்கு தெரிவித்தல், ஏனையோருக்கு பரப்புதல், பாடசாலைக்கு வருகைதரும் வெளியா ளர் தொடர்பாக அறிக்கைகளை வைத்தி ருத்தல் போன்றவை சம்பந்தமாகவும் இச்சுற்றுநிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்தோடு, நிலைமை இவ்வாறிருக்கும்போது ஒருசில பாடசாலைகளில் இவர்களின் செயற்பாடு தலைகீழாக மாறியுள்ளது. சுற்று நிருபத்துக்கு முரண்பாடான முறையில் இவர்களின் தொழிற்பாடுகள் அமைந்து வருவது கவலைக்குரிய விடயமாகும் அத்தோடு, இவர்களின் வேதனம் பல்வேறு வகையில் வித்தியாசப்பட்டதாக காணப்படுகின்றது.
ஒருசில விஞ்ஞான ஆய்வுகூட உதவியாளருக்கு ஆரம்ப சம்பளமாக 13,060 ரூபாவும் தொழிலாளர்களுக்கு ஆரம்ப சம்பளமாக 11,730 ரூபாவும் அத்தோடு அலவன்ஸும் கிடைக்கிறது. அண்மையில் நியமனம் வழங்கப்பட்ட காவலருக்கு 19,815 ரூபாவும் கிடைக்கிறது.
ஆய்வுகூட உதவியாளருக்கு 19,815 ரூபா அளவிலும் தொழிலாளருக்கு 18,595 ரூபா அளவிலும் கிடைக்கிறது. இதற்கு மேலாக நிரந்த காவலருக்கு ரூபாய் 32,000 ரூபா மட்டிலும் சம்பளம் கிடைக்கிறது. காலம், நியமன வகுதிக்கேற்ப சம்பள அளவுத்திட்டம் மாறுபாடாக அமைந்துள்ளதோடு ஆசிரிய உதவியாளருக்கும் இவர்களிடையே பாரியளவு சம்பள வித்தியாசம் காணப்படுகிறது.
இவ்வகையான செயற்பாடு ஆசிரியர் உதவியாளர்கள் மத்தியில் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. தகுதி, தரத்துக்கேற்ப ஆசிரிய உதவியாளரின் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும்.
இதுவே பொருத்தமான கற்றலுக்கு உந்துகோலாக அமையும்.
அதுமட்டுமல்லாது ஒரு சில நகரத்தை அண்மித்த பதுளை மாவட்ட பெரிய பாடசாலைகளில் 6பேர் தொடக்கம் 15பேர் வரையிலான சிற்றூழியர்கள் கடமை புரிகின்றனர். சிறிய பாடசாலைகளுக்குக்கூட இரண்டு காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். காவலர்களை நியமிக்கும்போது பாடசாலையின் தரம் மற்றும் பௌதீகவள நிலைமை, மாணவர் எண்ணிக்கை, அமைவிடம், ஆசிரியர் எண்ணிக்கை என்பன கணக்கிலெடுக்க வேண்டும். ஆயினும,; இன்று இவை யாவும் கருத்திற்கொள்ளாது மாகாணசபை மூலம் பல்வேறு நியமனங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அரசியல்வாதிகள் தங்கள் இருப்பை தக்க வைத்துக்கொள்வதற்காக தனக்கு ஆதரவாக தேர்தலில் பிரசாரம் செய்தல்களுக்கு கூடியளவு முன்னுரிமை அளித்து வருகின்றனர். இவர்களின் கல்வித்தகைமை பரிசீலிக்கப்படுகின்றதா? இவர்கள் முறையாக தனது கடமைகளைச் செய்கின்றார்களா? ஒருசிலர் அவ்வாறு நடந்து கொள்வதில்லை. பண்டாரவளை கல்வி வலயத்தில் அதிபர், உதவி அதிபர், சிற்றூழியர்கள் கைகலப்பில் ஈடுபட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. பசறை கல்வி வலயத்தில் அதிபர் தனக்கு அதிமான வேலைப்பளுவை கொடுக்கின்றனர். என்ற பதத்தில் அதிபருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்த சம்பவங்களும் ஒழுக்க ரீதியான முரண்பாடான சம்பவங்களும் நடந்தேறியுள்ளன. அத்தோடு அதிபர், ஆசிரியர்களுடன் முரண்பாட்டுத் தன்மையும் ஒரு சில பாடசாலைகளில் அனைவரும் குழுவாக இருந்து பொழுது போக்குவதையும் எந்த விதமான வேலைப்பகிர்வும் முறையாக வழங்கப்படாமலும் இருந்து வருகின்றமை அவதானிக்க முடிகின்றது. ஒருசில பாடசாலைகளில் இவர்கள் அதிபர்,ஆசிரியர்களின் அதிகாரங்களை கையிலெடுத்து மாணவர்களை தண்டிப்பதும் நடந்தேறியுள்ளது. பாடசாலை நிர்வாக விடயங்களை சமூகத்துக்கு எடுத்துச் சென்று ஒருசில பாடசாலைகளில் பல்வேறு பிரச்சினைகளையும் குறிப்பிட்ட ஒரு சிலர் தோற்றுவித்துள்ளனர். இரவு நேரங்களில் காவல் தொழிலில் ஈடுபடும் ஒருசில காவலர்கள் கடமை நேரத்தில் மது அருந்தி இருப்பதனையும் காணமுடிகின்றது.
மேலும், இவ்வகையான செயற்பாடுகளுக்கு ஒருசில அதிபர்களும் உதவியளித்துள்ளனர் தகவல்கள் கசிந்துள்ளன. ஒருசில அதிபர்கள் சிற்றூழியர்களுக்கு வேலைப்பகிர்வை வழங்கவும் தயக்கம் காட்டி வருகின்றனர். நாம் ஏன் சங்கடத்தில் மாட்டிக்கொள்வோம் எனும் தோரணையில் இருந்து வருகின்றனர்.
இவ்வகையான செயற்பாடானது எமது மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளையும் பாடசாலை அபிவிருத்தியையும் வெகுவாக பாதிக்கின்றது. அண்மையில்கூட பாடசாலைக் காவலாளி ஒருவர் மாகாண சபை உறுப்பினர் ஒருவரின் தேவை நிமித்தம் பாடசாலை காவல் தொழிலிருந்து விடுபட்டு அதிபருக்கு முன்னறிவித்தல் கொடுக்காமல்; மாகாண சபைக்கு உறுப்பினரின் வேண்டுகோள்கிணங்க கடமை நிமித்தம் சென்றுள்ளதாகவும் அவர் வேளை செய்யும் இடம் புரியாத புதிராகவும் அவருக்கான சம்பளம் குறிப்பிட்ட பாடசாலைகளில் வழங்கப்படுவதாகவும் அவர் பெற்றுக்கொள்ளும் லீவு சேவை விபரம் இதுவரை அதிபருக்கு தெரியபடுத்தவில்லை எனவும் விடயத்தை மேற்கோள் காட்டி சம்பந்தப்பட்ட அதிபர் இது சம்பந்தமாக தனது கருத்துகளை எடுத்தியம்பியுள்ளார்.
இதேவேளை, இந்த நியமங்களை வழங்கிய கல்வியமைச்சு இவர்களது முரண்பாடுகளை தீர்த்து சிறந்த முறையில் இவர்கள் குறிப்பிட்ட நிறுவனத்தில் சேவையாற்ற வழிசமைப்பார்களா? இதேவேளை குறிப்பிட்ட ஒருசிலரின் நடவடிக்கைகளை முன் வைத்து அணைத்து ஊழியர்களையும் நாம் குறைகூற முடியாது. ஆகவே, சரியானவரை இணங்கண்டு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது பாடசாலை நிர்வாகத்தினரினதும் கல்வி அதிகாரிகளினதும் கடமையல்லவா? இவர்களின் இவ்வகையான முரண்பாடுகளை தீர்ப்பதானது பாடசாலை அபிவிருத்திக்கும் மாணவர்களின் கல்வி விருத்திக்கும் செய்யக்கூடிய கடமை என்பதை மக்களின் எதிர்பார்ப்பாக இருந்து வருகின்றது.
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...