Headlines News :
முகப்பு » , » வட்டத்துக்குள் வரையறுக்க முடியாத வழிகாட்டி அமரர் வி.டி. தர்மலிங்கம் : 19ஆவது சிரார்த்த தினம் இன்று ப.செல்வராஜ்

வட்டத்துக்குள் வரையறுக்க முடியாத வழிகாட்டி அமரர் வி.டி. தர்மலிங்கம் : 19ஆவது சிரார்த்த தினம் இன்று ப.செல்வராஜ்

எந்த ஒரு சமூக வழிகாட்டிகளையும் அவர்கள் ஆன்மீகம் சார்ந்தவர்களாக சமூக செயற்பாடுகள் சார்ந்தவர்களாக அல்லது அறிவியல் கல்வித்துறை சார்ந்தவர்களாக இருந்தாலும் சரி அல்லது வேறு எந்த கலை கலாசார சமூக நலன் சார்ந்த செயற்பாடுகளில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டவர்களாக இருந்தாலும் சரி இவ்வாறானவர்களை ஒரு வட்டத்துக்குள் வரையறுக்க முடியாது. 

இவ்வாறான சுயநலம் தவிர்ந்தவர்களாக குடும்ப நட்பு நலம் சார்ந்தவர்களாக அல்லது தமது சேவைகளை ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள் வரையறுத்துக் கொள்ளாதவர்களாக தமது சேவைகளை தொடர்ந்திருப்பார்கள். தமது சொந்த நலன்களை விடவும் சமூக நலனுக்கே முதலிடம் கொடுத்தவர்களாக வாழ்ந்திருப்பார்கள். 

தமது சொந்த நலனை விடவும் சமூக நலனுக்கு முதலிடம் கொடுத்து வாழ்ந்த இவ்வாறானவர்களை அவர்களது குடும்பமோ நண்பர்கள் கூட்டமோ உறவுகளோ அல்லது அவர்கள் சார்ந்த கட்சியோ சொந்தம் கொண்டாட முடியாதவர்களாக முழுக்க முழுக்க இவ்வாறானவர்கள் ஒரு சமூகத்தின் சொத்தாகி விடுகிறார்கள். 

இவ்வாறு ஒரு வட்டத்துக்குள் வரையறுக்கப்பட முடியாத வழிகாட்டிகளில் வி.டி. என்ற இரு எழுத்துக்களால் அடையாளம் காணப்பட்ட அமரர் வி.டி.தர்மலிங்கம் தன்னை இறுக்கமாகப் பதிந்து கொண்டு விட்டார். 

வெளிப்படையான பேச்சும் ஒளிவு மறைவில்லாத விமர்சனங்களும் இயல்பான எளிமையான வாழ்க்கை முறையுமே இவரது சமூக அடையாளத்துக்கு பிரதானமான அடித்தளமாக அமைந்தன. 

தன்னை உருவாக்கிய சமூகத்தின் வாடை இம்மி அளவும் தன்னை விட்டு அகன்று விடக்கூடாது என்பதில் அடம் கொண்டவராக இருந்த இவர் தன் சமூக அடையாளங்களான பாரம்பரிய கலைகளை வளர்த்து காப்பாற்றுவதில் அக்கறையோடு செயற்பட்டு வந்தார். 

ஒரு சமூகத்தின் உண்மையான அடையாளம் அது சார்ந்த கலை வடிவங்களிலேயே முழுமையாகத் தங்கியுள்ளது. 

அவ்வாறான கலை வடிவங்கள் அழியும் போது அது சார்ந்த சமூகத்தின் அடையாளங்களும் பலவீனமாகின்றன என்பது இவரது ஆழமான கருத்தாக இருந்ததால்தான் தனது கல்வி பணிகளுக்கும் அப்பால் மலையகக் கலைகளான காமன் கூத்து, பொன்னர் சங்கர், அருச்சுனன் தபசு போன்ற பாரம்பரிய கலைகளை வளர்த்து காப்பாற்றுவதில் ஆர்வமும் அக்கறையும் கொண்டிருந்தார். 

தனது கல்விப் பணியை கண்டிப்போடும் கலைப்பணியை ஆர்வத்தோடும் மேற்கொண்ட இவர் பிற்காலத்தில் அரசியல் தொழிற்சங்க துறையில் ஈடுபட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்ட போது அதனையும் உளசுத்தியோடும் மனச்சாட்சியோடும் சமூக உணர்வோடும் அர்ப்பணிப்போடும் செய்து முடித்தார். 

மலையக மக்கள் முன்னணியின் சிரேஷ்ட உப தலைவராகவும் மத்திய மாகாண சபை உறுப்பினராகவும் அவருக்கு அரசியல் அங்கீகாரம் கிடைத்த கால கட்டத்தில் தன்னை ஒரு கட்சிக்கு மாத்திரம் உரியவராக ஒரு போதும் கட்டுப்படுத்தி செயற்பட்டது இல்லை என்பதற்கு உதாரணங்கள் தேவையில்லை. தன்னை ஒரு சமூகத்திற்கு உரியவராகக் காட்டிக் கொள்வதிலேயே அவர் அக்கறை காட்டி வந்தார். இதனால்தான் வி.டி.தர்மலிங்கம் மலையக மக்கள் விரும்பிய தலைவர்களில் ஒருவராகினார். 

மலையகத்தில் உண்மை உயிர் வாழும் வரை தியாகங்கள் மதிக்கப்படும் வரை சேவைகள் கெளரவிக்கப்படும் வரை இவ்வாறான சமூக வழிகாட்டிகளும் உயிர் வாழ்ந்துகொண்டுதான் இருப்பார்கள். 

நன்றி - வீரகேசரி
Share this post :

+ comments + 1 comments

12:02 PM

நன்றி மலையகம் இணையத்திற்கு

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates