தோட்டத் தொழிலாளர்களின் சம்பளஉயர்வுக்கான கூட்டுஒப்பந்தம் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை கைச்சாத்திடப்படுகிறது. அதன்படி கடந்த 04.04.2013 இல் கைச்சாத்திடப்பட்ட கூட்டு ஒப்பந்தம் கடந்த 31.03.2015ஆம் திகதியுடன் காலாவதியாகியுள்ளது. இதற்கமைய தற்பொழுது நடைமுறையில் உள்ள சம்பள முறையின்படி அடிப்படை நாள் சம்பளம் 450 ரூபாவாகும். இந்த அடிப்படை சம்பளத்திற்கு மட்டுமே ஊழியர் சேமலாப நிதி (EPF), ஊழியர் நம்பிக்கை நிதி (EPF) வழங்கப்படுகிறது. நாளாந்த வரவுக்கான கொடுப்பனவாக 140 ரூபாவும், தேயிலை விலையேற்றத்திற்கமைய 30ரூபாவுமாக மொத்தசம்பளம் 620 ரூபா வழங்கப்படுகிறது.
இதன்படி 620 ரூபா மொத்தச் சம்பளத்தை தொழிலாளி ஒருவர் பெறவேண்டுமானால், அவர் நிர்வாகத்தால் கொடுக்கப்பட்ட வேலை நாட்களில் 75 சதவீதமான வேலை நாட்களை பூர்த்தி செய்திருக்க வேண்டும். உதாரணமாக ஒருமாதத்தில் தோட்ட நிர்வாகம் 25 நாட்கள் வேலை வழங்கியிருந்தால், வழங்கப்பட்ட வேலை நாட்களில் 75 வீத வருகை கொடுப்பனவை பெறுவதற்கு தொழிலாளி ஒருவர் 19 நாட்கள் வேலை செய்திருக்கவேண்டும்.
கடந்த மார்ச், 2015இல் மீண்டும் புதுப்பிக்கப்படவேண்டிய கூட்டு ஒப்பந்தம் கடந்த 31.03.2016 அன்றுடன் ஒரு வருடத்தைக் கடந்துள்ள நிலையில், இதுவரை புதுப்பிக்கப்படவில்லை. தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பாக தோட்ட முதலாளிமார் சம்மேளனத்திற்கும், தொழிற் சங்கங்களுக்கும் இடையில் ஒருவருடகாலமாக இடம்பெற்று வந்த பல கலந்துரையாடல்கள் எவ்வித முன்னேற்றகரமான முடிவுமின்றி காணப்படுகின்றது.
தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்க முடியாமைக்கு உலகசந்தையில் தற்போது காணப்படும் தேயிலைக்கான குறைந்தவிலை, ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி, அதிகரித்த உற்பத்திச்செலவு, தேயிலை உற்பத்தி நாடுகளின் போட்டி என்பன காரணங்களாக முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்தப் பின்னணியுடன், தேயிலை தொடர்பான அண்மைய அறிக்கைகளை நோக்குவோமாயின், அவை பின்வருமாறு பதிவு செய்யப்பட்டுள்ளன. 2014ஆம் வருடத்தில் தேயிலை வருமானம் மற்றும் உற்பத்தியானது இலங்கை வரலாற்றில் ஆகக் கூடியதான 327.8 மில்லியன் கிலோகிராம் தேயிலையை ஏற்றுமதி செய்துள்ளது. இதன் பணப் பெறுமதி 219.9 பில்லியன் ரூபாவாகும். 2013 இல் இது 199.4 பில்லியன் ரூபாவாகும்.
இலங்கை தேயிலை விற்பனையாளர்களின் (Ceylon Tea Brokers) அண்மைய ஆய்வு மதிப்பீடுகளின்படி, 2016ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்துக்கான மொத்த தேயிலையின் அளவானது மீள் ஏற்றுமதி செய்வதற்காக இறக்குமதிசெய்யப்படும் தேயிலையையும் சேர்த்து 23.61 Mn.Kg ஆகும். கடந்த ஆண்டின் இதேகாலப் பகுதியுடன் ஒப்பிடும்போது 0.29 Mn.Kg சாடையான வீழ்ச்சியுடன் 47.74 Mn.Kg பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இலங்கையிலிருந்து தேயிலையை பாரியளவில் இறக்குமதி செய்யும் முதலாவது நாடாக ஈராக் உள்ளதுடன் ரஷ்யா, ஈரான் என்பன இதற்கடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.
ஏற்றுமதி விடயத்தில் குறிப்பிடத்தக்க விடயம் யாதெனில், துருக்கிக்கான தொடர்ச்சியான ஏற்றுமதியானது கடந்த ஆண்டு இதேகாலப் பகுதியுடன் ஒப்பிடும்போது 3.05Mn.Kg இனால் வீழ்ச்சியடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகசந்தையில் தேயிலையின் விலை அதிகரிக்கும்போது, இலாபத்தின் ஒருபகுதி தோட்டத் தொழிலாளர்களுக்கு பங்கிடப்படவில்லை. அதேவேளை மீள் உற்பத்திக்கு முதலீடு செய்யப்படவுமில்லை. உற்பத்தியை அதிகரிக்க வேண்டுமாயின், மீள்நடுகை மற்றும் இடை நடுகை இன்றியமையாதது. ஆயினும் நடைமுறையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மீள்நடுகை முறையின்படி ஏறத்தாழ 2க்கு 3 வீதமாக அமைந்தால்தான் இத்துறையில் நிலையான வளர்ச்சியை ஏற்படுத்தலாம். ஆனால், நிகழ்கால நடைமுறையின்படி இது 0.5க்கு 0.7 வீதமாகவே உள்ளதாக கூறப்படுகிறது. தேயிலைப் பயிர்ச்செய்கைக்கு புதிய நிலங்கள் கிடைப்பதில்லை. மாறாக பெருந்தோட்டப் பயிர்நிலங்கள் பல்வேறு தேவைகளுக்காக பயன்படுத்தப்படுகின்ற அதேவேளை, 50 வீதமான பெருந்தோட்ட பயிர்நிலப்பரப்பு பராமரிப்பற்ற நிலையில் காடுகளாக மாறியுள்ளன.
தேயிலை நிலங்கள் பல தசாப்தங்களாக பயிர்ச்செய்கைக்கு உட்படுத்தப்பட்டு வந்துள்ளதனால் மண் வளமற்றதாகியுள்ளதுடன், மண்ணரிப்புக்கு உட்பட்டுள்ளன. எனவே நிலத்தையும் தேயிலை செடிகளையும் வளமானதாக மாற்றுவதற்கு அல்லது புதுப்பிப்பதற்கு நிலத்தைப் பதப்படுத்தல், தேயிலைச் செடிகளின் முறையான பராமரிப்பு, குறைந்த விளைச்சலைக் கொண்ட தேயிலைத் தோட்டங்கள், தேயிலையின் அதிகரித்த உற்பத்திச் செலவு, முறையான பசளை உபயோகம், உற்பத்தியை அதிகரிப்பதற்கான புதிய வகை மறுநடுகைகள் என்பவற்றில் நடைமுறையில் உள்ள பாதகத் தன்மைகளை ஆராய்ந்து தேயிலைத் தொழிற்றுறை நீண்டகாலத்தக்கு நிலைத்திருக்கும் தன்மைக்கு பாதகமான விடயங்களை அறிந்து, பின்பற்ற வேண்டிய சாதகமான மாற்று உபாயங்களை பயன்படுத்தவேண்டும்.
அதாவது, தேயிலைபயிர்ச் செய்கையில் தேயிலைதோட்டம் முதல் தொழிற்சாலை வரையிலான அனைத்து செயற்பாடுகளையும் மென்மேலும் வினைத்திறன் உடையதாக்குவது அவசியமானதாகும்.
மேலும் தொழிலாளர்களின் நிலைமைகளை நோக்குவோமாயின், இன்றுள்ள இளம் சந்ததியினர் தமது பெற்றோரைவிட கல்வி கற்றவர்களாக இருப்பதனால் அவர்கள் தமது பெற்றோரைப் பின்பற்றி தேயிலை உற்பத்தியில் ஈடுபட விருப்பமின்றி, வெளி இடங்களில் தொழில் தேடிச் செல்கின்றனர். காரணம், தேயிலை உற்பத்தியானது பெரும்பாலும் உடல் உழைப்பாளர்களைக் கொண்ட பழமையான முறைகளைக் கொண்ட ஒரு உற்பத்தித்துறையாக உள்ளது.
எனவே, ஏலவே தேயிலை உற்பத்தியில் அனுபவமிக்க இவர்களுக்கு உற்பத்திக்கான புதிய தொழில்நுட்பத்துடனான திறன்தேர்ச்சி மற்றும் அறிவை மேம்படுத்தும் பயிற்சிகளை வழங்குவது அவசியம்.
அதேவேளை, நவீனதொழில் பாதுகாப்பு உடை மற்றும் உபகரணங்கள்: (முதுகு கூடை, தொப்பி, கையுறை உட்பட பாதுகாப்பு உடை) என்பவற்றை வழங்கி, இவ் உற்பத்தியில் ஈடுபடுகின்ற தொழிலாளர்களுக்கு உரிய தொழில் கௌரவத்தையும், சமூக அந்தஸ்தையும் ஏற்படுத்த வேண்டும். இவற்றுடன் தொழிலாளர்களது இருப்பிடவசதிகள், நீர், சுகாதாரம், வைத்தியசாலை வசதிகள், சேமநலன் என்பனவும் மேம்படுத்தப்பட வேண்டும்.
இவ்விடயங்களுடன் ஏற்கனவே தேயிலை தொழிற்றுறை தொடர்பாக மேற்கொண்ட ஆய்வுகளின்படி முன்வைக்கப்பட்டுள்ள விடயங்கள் உட்பட புதிய தேவைகள் மற்றும் சவால்களை கருத்திற் கொண்டு தொழிற்றுறையின் நீடித்து நிலைத்திருக்கக்கூடிய தன்மைகளைக் கொண்ட ஆக்கபூர்வமான மாற்று நடவடிக்கைகள், உபாயங்கள் உருவாக்கப்படவேண்டும். இந்த பாரிய கூட்டுப் பொறுப்பு அரசு, தோட்டமுதலாளிமார் சம்மேளனம், பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகள், அரசியல்வாதிகள், தொழிற்சங்கவாதிகள், தொழிலாளர்கள் ஆகியோருடையதாகும்.
நன்றி - veerakesari
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...