Headlines News :
முகப்பு » » வரலாற்றுச் சான்றாக வெளிவந்துள்ள "வெண்கட்டி"

வரலாற்றுச் சான்றாக வெளிவந்துள்ள "வெண்கட்டி"இலங்கைக் கல்விச் சமூக சம்மேளனத்தின் ஓராண்டு பூர்த்தியினை முன்னிட்டு ''வெண்கட்டி' என்னும் ஆண்டு மலரினை அவ்வமைப்பினர் வெளியிட்டுள்ளனர்.

ஒரு வரலாற்று சான்றாக ஆண்டு மலரை வெளியிட்டுள்ளமை சிலாகித்து பேசப்பட வேண்டிய ஒன்றாகும். இத்தகைய காத்திரமான ஆண்டு மலரினை வெளியிட்ட இலங்கைக் கல்விச் சமூக சம்மேளனத்தின் ஊவா மாகாண

குழுவின் உழைப்பு அளப்பரியதாகும்.

வெண்கட்டி இதழானது தன் வாழ்நாள் சாதனைகளை நினைவூட்டி ஓர் அழகிய அட்டைப்படத்தினை தாங்கியிருந்தது.
அஞ்ஞான இருண்மை மிகு
கரும்பலகையில்
எழுதுவதால் தேய்ந்து
கொண்டே
ஞான ஒளி தருகிறது
வெண்கட்டி.
உலகம் உள்ளங்கையில்
அப்படியெனின்
வெண்கட்டி
முற்றிலுமே தேய்ந்து விட்டதா?
என சிந்தித்துக் கொண்டிருந்த வேளையில், இல்லை நான் வேறுவடிவில் உங்களுடன் இருக்கிறேன் என அட்டைப்படம் எங்களை அழைத்துச் செல்கிறது.

'நாம் நேற்று கற்பித்ததைப்போலவே இன்றும் கற்பிப்போமானால் சிறார்களின் எதிர்காலத்தை திருடுபவர்களாகி விடுகிறோம்' என்ற ஜோன்டூயியின் கூற்றுக்கிணங்க எமக்கு புது வெளிச்சத்தை காட்ட வந்திருப்பது மனதிற்கு ஆறுதலை தருகிறது.

வெண்கட்டியின் வெளிச்சத்தில் உள்ளே செல்லும்போது இலங்கைக் கல்விச் சமூக சம்மேளனத்தின் தலைவர் லெனின் மதிவானத்தின் ஆசிச் செய்தி வெறுமனே வாழ்க வளர்க என சம்பிரதாயபூர்வமான ஒரு வாழ்த்துரையை வழங்கி விட்டு ஒதுங்கிக் கொள்வதாக அல்லாமல், நீண்ட பயணம் வெல்லட்டும் என மலையக மக்களின் வாழ்வி யல் நீண்ட பயணத்தின் கொடுமைகளை நினைவுறுத்துவதுடன் அடையவேண்டிய தூரத்தின் எல்லையினையும் அந்த தூரத்தை அடைவதற்கான வழிகாட்டலையும் செய்வதாக அமைந்திருந்தது. மக்களின் சமூக விடுதலைக்கான ஒரேவழி முற்போக்கு மார்க்சிய கோட்பாடுகள் என வலியுறுத்தும் அவர், அந்த முற்போக்கு மார்க்சிய கோட்பாடுகளை எமது பண்பாட்டுக்கேற்ப வளர்த்தெடுக்க தவறிவிட்டதன் குறையையும் சுட்டிக்காட்டத் தவறவில்லை.

மேலும், இது குறித்து சுய விமர்சனம் செய்யவேண்டிய தேவையின் அவசியத்தையும் எமது சிந்தனை, செயற்பாடுகள், போராட்டங்கள் யாவும் வாழ்வதற்கான போராட்டங்களாக மட்டுமன்றி வாழ்க்கை முறையை மாற்றுவதற்காக அமையவேண்டும்' என்பதனையும் அவரது வரிகள் வலியுறுத்தி நிற்கின்றன. அந்தவகையில் எம்மக்களின் விடுதலைக்கான ஒரு புதிய பண்பாட்டினை உருவாக்கவேண்டிய அவசியத்தை வலியுறுத்துவதாக அந்த வாழ்த்துரை அமைந்துள்ளது.

தலைவர் கூறுவதுபோல் ஒரு முற்போக்கு ஜனநாயக சக்திகளின்; ஒன்றிணைப்பால் இந்த கல்விச் சமூக சம்மேளனம் உருவானது என்பதன் அர்த்தத்தை இன்னும் ஆழமாக்குவதாக சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ஆர். சங்கரமணிவண்ணனின் கருத்து அமைந்துள்ளது. இதனை அவரது கூற்றுக்களினூடாகவே தருவது பொருந்தும்.

'எமது வாழ்வு சிதைந்து விடுவதற்கான அனைத்து சாத்தியங்களும் மேலோங்கிய நிலையில் எமது வாழ்வின் மீட்டுருவாக்கத்திற்காக அசுர வேகத்துடன் செயற்பட வேண்டிய தேவை எம் முன் உள்ளது' எம்மக்களை மீட்டெடுப்பதற்கான ஓர் அவசரம் அவரது வார்த்தைகளில் வெளிப்படுகிறது. எம் மக்களில் வாழ்வியலை, முன்னேற்றத்தை சிதைக்க சில பண்டாரிப் படைகளின் அட்டகாசத்தை அறிவால் வெற்றி கொள்ள அழைக்கும் ஒரு குரல் வெளிப்படுகிறது.

எம் மக்கள் மீதான சமுதாய அக்கறையுடனான ஒரு பார்வையை பத்திராதிபர் எம்.எஸ். இங்கர்சாலின் உணர்வுகள் இவ்வாறு பிரவாகம் கொள்கின்றது. 'தன்னலமற்று இந்த நாட்டுக்காக உழைத்த மக்கள் கல்வி வளர்ச்சியில் இவ்விதம் கொண்டுள்ள கரிசனை வஞ்சிக்கப்பட்டு விட்டோம் என்ற அவலக்குரலாக இல்லாமல் தமது சமூக இருப்பை தாம் சார்ந்த சமூக பொறுப்புடன் வெளிப்படுத்த விளைவது இதழின் தனித்துவ அம்சம்.'

விழாவினையும், விழா மலரினையும் செவ்வனே முன்னின்று வழிநடத்திய ஊவாமாகாண இணைப்பாளரான எம்.மதன்ராஜ், 'தமக்கான கேந்திரங்களை இழந்துள்ள நிலையில் மீண்டுமொரு புனரமைப்புக்கான இதயம் நிறைந்த நம்பிக்கையுடன்' என தம் முயற்சிகளை முன்னெடுத்த அம்சம் பற்றிக் குறிப்பிடுகின்றார். 'சிகரங்கள் நிரம்பிய மலையகத்தில் அறிவு வேட்கைக்கு இந்நூல் விடியலை ஏற்படுத்த சற்று உறுதுணைப்புரியும்' என்ற நம்பிக்கையுடன் மலர் குழுத் தலைவர் மனோகரன் ஒரு நம்பிக்கை ஒளியை காட்டுகிறார்.

அவரது வார்த்தைகளில் குறிப்பிட்ட சிகரங்கள் என்ற சொல் வெறுமனே கல்லையும் மண்ணையும் குறிப்பதாக எனக்கு தோன்றவில்லை. இன்று கல்வித்துறையிலே பல சிகரங்கள் பல இடங்களில் நிமிர்ந்து உயர்ந்து நிற்பதையும் அந்த சிகரங்களின் உச்சியில் பொருத்தப்பட்டுள்ள அலைவாங்கிக் கருவிகள் அம்மக்களை நோக்கி ஒரு விசேட அலை வீச்சை ஏற்படுத்த வேண்டுமென வேண்டுகோள் விடுவதாக அமைந்துள்ளது.

வெண்கட்டி ஆண்டு மலரில் பெரும் சொத்துக்கள் நிறைந்த பெட்டகம் ஒன்று உள்ளே மறைந்திருப்பது தெரிகிறது. இம்மலரில் மொத்தமாக இருபத்து நான்கு கட்டு ரைகள், பதின்மூன்று கவிதைகள், ஆறு சிறுகதைகள், கனதியான தகவல்களை தாங்கி நிற்கின்றது. வசதி கருதி இவற்றை ஒவ்வொரு தொகுதியாக்கி பார்ப்பது இலகுவாக இருக்கும்.

இந்த மலரின் மணத்தில் புதிய ஒரு பாய்ச்சலை நூலின் சமர்ப்பணம் வழங்குகிறது. மலையக தோட்ட மக்களின் கல்விப்புரட்சியின் பொருட்டு தன்னை அர்ப்பணித்து உழைத்த பல சவால்களை எதிர்கொண்ட ஓர் ஆசிரிய பெருந்தகையான அமரர் எஸ்.திருச்செந்தூரனுக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டிருப்பதும் அவரின் ஆசிரியப் பணியின் உன்னதத்தை தாங்கி முதலாவது கட்டுரை அமைந்திருப்பதும் நல்ல சிந்தனையின் வெளிப்பாட்டினை வெளிப்படுத்துகின்றது.

இம்மலர் தாங்கி வந்துள்ள இருபத்துநான்கு கட்டுரைகளுமே தனித்தனியாக குறக்கு வெட்டுப்பார்வையின் மூலம் நோக்கவேண்டியவை. அதற்கான தருணம் இதுவல்ல என்பதால் அவற்றை பற்றிய தகவல்களை மட்டும் குறிப்பிட்டுச் செல்கிறேன்.

இக்கட்டுரைகளில் ஆறு கட்டுரைகள் கல்வித்துறை சார்ந்த கருத்துக்களை கொண்டவை. மலையக தமிழரின் வரலாறு சார்ந்த ஒரு கட்டுரை, மலையக மக்களின் பண்பாட்டு மாற்றுத் தளத்தின் அசைக்க முடியாத ஓர் ஆளுமை தலாத்துஓயா கே. கணேஸ் குறித்த ஓர் ஆவணப்பதிவாக லெனின் மதிவாணத்தின் கட்டுரை அமைந்திருக்கின்றது, பெண்ணியம் சார்ந்த பெண்களின் விடுதலைகுறித்த மிக முக்கிய ஒரு கருவூலமாக கோ. மீனாட்சியம்மாளின் 'ஸ்ரீகளுக்கு சம சுதந்திரம்' எனும் கட்டுரை அமைந்திருக்கின்றது. அத்தோடு இலக்கியம் சார்ந்த அருமையான நயம்பொருந்திய ஐந்து கட்டுரைகள் பொதுவான நாட்டு நடப்புகள், அபிவிருத்தி தொடர்பாக மூன்று கட்டுரைகள், மொழி மற்றும் கலாசார தகவல்களடங்கிய நான்கு கட்டுரைகள் என காத்திரமான ஒரு கட்டுரைத் தொகுப்பு அமைந்துள்ளது.

சமூகத்தின் மானிட உணர்வுகளையும், விடுதலைக்கான வியூகங்களையும் கலைப்பூர்வமாக வெளிப்படுத்தும் படைப்புக்களில் சிறுகதைகளுக்கு ஒரு தனியிடம் உண்டு. இம்மலரும் ஆறு சிறுகதைகளை தனக்குள்ளே கொண்டுள்ளது.

அவற்றுள் மனிதநேய எழுத்தாளரான நந்தினி சேவியரின் 'மனிதம்' என்ற சிறுகதை குறித்துக் காட்ட வேண்டியதொன்றாகும். சிறுகதைகளும், மண்வாசனை எழுத்தாளர்களான தமிழ்செல்வம் மாசிலாமணியின் 'ஊற்றுக்கான் தோட்டம்' இலங்கேஸ்வரனின் 'இவர் நம்ம சேர்', மலையக சிறுகதைப் பரப்பில் தனக்கென ஓர் இடத்தை அழுத்தமாக பிடித்துக்கொண்ட இளம் எழுத்தாளர் சிவனுமனோகரனின் 'வகுப்பறைக் காவியங்கள்' புதிய தலைமுறை பிரவேசத்தின் அடையாளமான எட்வர்ட்டின் 'பௌர்ணமியில் ஓர் அமாவாசை' ஆகிய சிறுகதைகள் அமைந்துள்ளன.

தமிழ் இலக்கிய கலாசாரத்தின் ஆணிவேர் கவிதைகள். கூர்மிகு சொற்களால் நறுக்நறுக்கென்று குத்தி முனையை கிள்ளும் ஆற்றல் படைத்தவை. அவ்வாறான கவிதைகள் பதிமூன்று இந்த மலரின் மனத்தை மேலும் மெருகூட்டுகின்றன. லுணுகலை ஸ்ரீயின் 'ஒப்பனையில்லாக் காணி ஒரு சாணும் வேணாம்' மறைந்த அதிபர் ந.இளங்கோவின் 'இனியொரு விதி செய்வோம்', ஏ.எம்.ஜாதித்தின் 'சுற்றுலாக்காரனின் கவிதை', கி.குலசேகரனின் 'சாதிப்பேயை விரட்டுவோம்'.

கவிஞர் அஸ்மினின் 'இங்கே கோழி இறைச்சி விற்கப்படும்', கவிஞர் அருண் வெங்கடேசின் 'நம்மை நாமே மாற்றுவோம்', துவாரகன்னின் 'இரண்டு' மேமன்கவியின் 'கொழும்பு நகரப் புறாக்கள்' கவிஞர் நீலா பாலனின் குறும்பாக்கள், ஆசுகவி அன்புடீன் வழிப்பொருள். மேலும் இவ்வாண்டு மலரின் படைப்புக்கள் ஒவ்வொன்றையும் ஆழமான குறுக்குப் பார்வை பார்க்க வேண்டிய ஒரு அவசியமும் உள்ளது. தமிழோவியனின் 'சத்தியம் நிச்ச யம் வெல்லும்' என்றும் மொழி வரதனின் 'ஓர் அன்பு வேண்டுகோள் ' இராதா மணாளனின் 'ஊருக்கு உபதேசம் செய்யாதே' ஆகிய கவிதைகள் சுவாரஷ்யமான செய்தி களை எமக்கு தருகின்றன.

மொத்தத்தில் வெண்கட்டி ஒரு நல்ல வெளிச்சத்தை காட்டும். தம் பணிக்கு ஒரு நல்ல அடையாளத்தை வழங்கியி ருக்கிறது. இலங்கை கல்விச் சமூக சம்மேளனத்தின் அரிய முயற்சியால் வெளிவந்துள்ள இந்த ஆண்டுமலர், மலையக தொழிலாளர் வர்க்கம் சார்ந்த சகலரும் வாசிக்கவேண்டிய நூல்கள் பலவற்றுள் இதுவும் ஒன்று என்று குறிப்பிடும் அளவிற்கு ஓர் இடத்தைத் பிடித்துள்ளது.

நன்றி - veerakesari
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates