“1915 கலவர நிகழ்வு இலங்கையின் வரலாற்று யுகத்தை இரண்டாக பிரித்த பிரிகோடாக குறிப்பிடலாம்” என்று குமாரி ஜெயவர்த்தன தொழிலாளர் வர்க்கத்தின் எழுச்சி என்கிற தனது நூலில் குறிப்பிடுகிறார். அதற்கான விரிவான காரணங்களையும் அதில் விளக்குகிறார். இனத்துவம், மதம், சாதி, வர்க்கம், தேசியம் என பல்வேறு முக்கிய காரணிகளின் பாத்திரம் இதில் அடங்கும்.
“மரக்கல”காரர்களுக்கு எதிரான வெறுப்புணர்ச்சியானது சிங்கள மக்கள் மத்தியில் வளர்த்தெடுக்கப்பட்ட இனவாத மதவாத விளக்கங்களின் பிரதிபலிப்பே. பௌத்த மறுமலர்ச்சி, சிங்கள நாளிதழ்கள், அநகாரிக்க தர்மபாலவின் பேச்சுக்கள் என்பனவற்றால் இவை தூண்டப்பட்டிருந்தன என்று அவர் அந்த நூலில் மேலும் குறிப்பிடுகிறார்.
அநகாரிக்க தர்மபாலவை இலக்கு வைத்து ஆங்கிலேயர்கள் பழி தீர்த்ததற்கான பின்புலம் ஒன்று இருந்தது. ஆங்கிலேயர்களை பல வருடங்களாக தொடர்ச்சியாக சீண்டி, சிங்களவர்களை ஆங்கிலேயர்களுக்கு எதிராக தூண்டிவிட்டவர்களில் அநகாரிக்க தர்மபாலவின் பங்கு பாரியது. எழுத்தாலும், பேச்சுக்களாலும் சிங்கள பௌத்த அரசியல் செயற்பாடுகளாலும் பெரும் பிரச்சாரத்தை ஆங்கிலேயர்களுக்கு எதிராக மேற்கொண்டு வந்தவர் அவர்.
சிங்கள பௌத்தயா பத்திரிகையில் தர்மபால எழுதி வந்த தொடர் பத்தி “அறிந்துகொள்ள வேண்டியவை” (“தென கத்த யுத்து கறுனு”) எனும் தலைப்பில் நீண்டகாலமாக வெளிவந்தது. சிங்களத்தில் இன்றும் அது ஒரு தொகுப்பு நூலாக கிடைக்கிறது. அந்த தொடரில் அவர் தொடர்ச்சியாக ஆங்கிலேயர்களுக்கு எதிராக கடுமையான சொல்லாடல்களைப் பயன்படுத்தி வந்திருக்கிறார். அவரைக் கைது செய்வதற்கும் அதனைத்தான் ஆங்கிலேயர்கள் ஆதாரமாகக் காட்டினார்கள். பற சுத்தா என்று ஆங்கிலேயர்களை திட்டியமை ஒரு முக்கிய ஆதாரமாக பயன்படுத்தப்பட்டது.
யாப்பு சீர்திருத்தம் கோரிய இலங்கையர்களுக்கு ஆதரவாக பிரித்தானியாவில் அன்றைய தொழிற்கட்சியின் ஆதரவு தொடர்ந்து இருந்தது. 1915 நிகழ்வுகலைத் தொடர்ந்து நடந்த அடக்குமுறைகள் குறித்து தொடர்ச்சியாக பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பி விவாதத்தை உண்டு பன்னுபவர்கலாகவும் அவர்கள் இருந்தார்கள். அவர்களின் அரசியல் அழுத்தங்களின் காரணமாக ஆங்கிலேய ஆட்சியாளர்களின் கொடூர நடவடிக்கைகள் சற்று கட்டுபடுத்தப்பட்டன என்றே கூறலாம். 1912ஆம் ஆண்டு ஒரு முறை அநகாரிக்க தர்மபாலாவுக்கு எதிராக தேசத்துரோக குற்றச்சாட்டு சுமத்தி வழக்கு தொடர இருந்த சந்தர்ப்பத்தில் அது சாத்தியப்படவில்லை. இது தொடர்பில் அரசாங்கத்துக்கு ஆலோசனை வழங்கிய பொலிஸ் மா அதிபர் “குற்றச்சாட்டை சாதகமான முறையில் சுமத்தி தண்டனை நிறைவேற்ற இருந்த நிலையில் அது “குரூரமானது” என்று இங்கிலாந்து கருதுகிறது. இங்கிலாந்தில் இதுபோன்றவை குறித்து கேள்வி எழுப்பும் வரையில் இப்படியான முடிவுகளை கைவிடவேண்டி ஏற்பட்டுள்ளது” என்று குறிப்பிடுகிறார். தொளிர்கட்சியுடன் இலங்கை தலைவர்கள் கொண்டிருந்த தொடர்புகள் இலங்கையில் இருந்த ஆங்கில ஆட்சியாளர்களுக்கு தலையிடியாகவே இருந்தது. அவர்களுக்கு இடையிலான தொடர்புகளை துண்டிக்க பல முயற்சிகளை மேற்கொண்டார்கள் ஆங்கிலேய ஆட்சியாளர்கள். டீ.பி.ஜயதிலக்கவுக்கு அன்றைய தொழிற்கட்சி தலைவர் ஜோர்ஜ் லான்ஸ்பெரி அனுப்பிய கடிதத்தை இடைமறித்த பொலிசார் அதனை “இவர்களின் நட்புக்கு இதோ இன்னொரு சாட்சி”என்று கூறி குடியேற்ற செயலாளருக்கு அனுப்பிவைத்தனர்.
தனது பத்திரிகையை ஆங்கிலேயர்களுக்கு எதிராக பயன்படுத்தியது போல அவர் மதுவொழிப்பு இயக்கத்தையும் ஆங்கிலேயர்களுக்கு எதிரான பிரசாரத்திற்காகப் பயன்படுத்தினார். அன்றைய பொலிஸ் மா அதிபர் எச்.டவ்ப்கின் தனது இரகசிய அறிக்கையில் இப்படிக் குறிப்பிட்டார்.
“மதுவொழிப்பு இயக்கமானது ஒரு தேசியவாத அரசியலை முன்னெடுத்துவருகிறது. உண்மையில் மதுவொழிப்பு பிரச்சாரம் என்கிற போர்வையில் அரசியல் பிரசாரமே இங்கு முன்னெடுத்து வருகிறது." (1915 இல.14502 இரகசிய அறிக்கை – இலங்கை தேசிய சுவடிக்கூடம்)
அவர் சிறை மீண்டு இலங்கை திரும்பியதன் பின்னரும் அவர் தொடர்ச்சியாக புலனாய்வுப் பிரிவினரால் கண்காணிக்கப்பட்டார். பின்தொடரப்பட்டார். அவர் பேசும் கூட்டங்கள் பற்றிய குறிப்பெடுப்பதற்கென்று பொலிஸ் அதிகாரிகள் அனுப்பப்ட்டிருந்தார்கள். அப்படி எடுக்கப்பட்ட இரகசிய அறிக்கைகளில் குறிப்பிடப்பட்ட சில குறிப்புகள் இவை.
• 11 மாலை 3.௦௦ மருதானை டார்லி வீதியிலுள்ள சந்தாகார மண்டபத்தில் நிகழ்த்தப்பட்ட கூட்டத்தில் தர்மபால “பௌத்த காலம்” குறித்து ஒரு உரையை ஆற்றினார். பல தொழிலாளர்கள் இதில் பங்குபற்றியிருந்தார்கள்.
ஐரோப்பியர்களை “பற சுத்தா” என்று அழைத்ததற்காக தன்னை 6 வருடங்கள் கல்கத்தாவில் சிறையில் வைத்திருந்ததாகவும், அங்கு தன்னை கண்காணிக்க 3 போலீசார் சதா இருந்ததாகவும் தெரிவித்தார்.
அதுவரை நிறுத்தப்பட்டிருந்த “சிங்கள பௌத்தயா” பத்திரிகையை மீண்டும் ஆரம்பிக்கவிருப்பதாகவும். அதனை வெளியிட்டு சிக்கலில் மாட்டிக்கொள்ளவேண்டாம் என்று தனக்கு நெருங்கியவர்கள் பலர் எச்சரிக்கை செய்வதாகவும், ஆனால் தான் நிச்சயம் அதனை வெளியிடுவதாகவும் தெரிவித்தார்.
• 16 அன்று மாலை 5.௦௦ அதே மண்டபத்தில் அதே தலைப்பில் உரையாற்றினார். 300க்கும் அதிகமான தொழிலாளர்களும், எழுதுவினைஞர்களும், பிக்குமார்களும் கலந்து கண்டார்கள்.
கிறிஸ்தவ மதத்தை நிந்தனை செய்யும் மோசமான சொற்களை அவர் பிரயோகித்தார்.
“தற்போதைய அரசாங்கம் முழுதும் பௌத்த அரசாங்கமாக மாற வேண்டும். ஆளுநரும் பௌத்தராக இருத்தல் வேண்டும், காலனித்துவ செயலாளரும் ஏனைய அதிகாரிகளும் பௌத்தர்களாக இருத்தல் வேண்டும்.” என்றும் அங்கு அவர் குறிப்பிட்டார்.
ஒரு காலத்தில் இந்தியாவிலுள்ள ஆபத்தான நபர் என்று நேருவை ஆங்கிலேயர்கள் அறிவித்தார்கள். அதுபோல ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டத்தின் பிரதான, ஆபத்தான நபராக தர்மபாலவைக் கருதினார்கள்.
ஆங்கிலேயர்களை “பற சுத்தா” என்று சகல இடங்களிலும் அவர் திட்டித் தீர்த்தார். திரும்பத் திரும்ப அந்த சொல்லைப் பாவித்தார். அந்த அந்த சொல் பரவலாக வெள்ளையர்களை இழிவாக நிறுவுகின்ற சொல்லாக பிரபலமாகியிருந்தது. வெள்ளையர்களுக்கு ஆத்திரமூட்டும் இந்த சொல் தர்மபாலாவுக்கு எதிராக 1915 க்கு முன்னரே நடவடிக்கை எடுப்பதற்கு காரணமானது. இது குறித்து தர்மபால சிங்கள பௌத்தயாவில் இப்படி எழுதுகிறார்
“6 வருடங்களுக்கு முன்னர் அனுராதபுரத்தில் இருந்த காலத்தில் அங்காங்கு நான் ஆற்றிய உரைகளின் போது வெள்ளையர்களால் சிங்களவர்களுக்கு நேர்ந்துள்ள கதி குறித்து குறிப்பிட்டேன். அதனை கேட்டுக்கொண்டிருந்த ஒருவர் பொலிசில் அது குறித்து முறைப்பாடு செய்தார். ப்ரேயன் எனும் நீதவான் எனக்கு அழைப்பாணை விடுத்ததால் நான் அவரை சந்தித்தேன். ஆங்கிலேயர்களை நீ ஏன் திட்டுகிறாய் என்று கேட்டார். நான் எவரையும் திட்டுவதில்லை எனது உரைகளில் ‘பற சுத்தா” என்று ஆங்கிலேயர்களை குறிப்பிடுவேன், மற்றும்படி எதுவும் இல்லை என்றேன். அது நிந்தனை தானே என்றார். நான் அவருக்கு “பற சுத்தா” என்பதன் விளக்கத்தை அளித்தேன். “பற” என்பதன் ஆங்கில அர்த்தம் பொறீன் (வெளிநாட்டவர் / அந்நியர்) என்று அர்த்தம். கருப்பு, நீல, பஞ்சவர்ண நிறத்தில் இல்லாததாலும், இந்த நாட்டவரல்லாததாலும் வெள்ளையர் என்று அழைக்கிறோம். எனவே “பற சுத்தா” என்பது எமது மொழிவழக்கில் உள்ளடக்கபட்டுவிட்ட ஒன்று என்று பிரேயனுக்கு விளக்கினேன்.” (அறிந்துகொள்ள வேண்டியவை ப.75)
சிங்களவர்களை விழிப்புணர்வை ஏற்படுத்துதல் எனும் பேரில் அவர் சிங்கள பௌத்தர்களை உணர்வை சீண்டும் வகையில் திட்டித் தீர்த்தார்.
அநகாரிக்க தர்மபாலாவின் ஆங்கிலேய எதிர்ப்பானது போகப்போக ஏனைய சமூகங்களுக்கு எதிராக திரும்பிக்கொண்டிருந்தது. இலங்கை ஒரு தூய சிங்கள பௌத்தர்களின் நாடாக ஆக வேண்டும் என்கிற நிலையை படிப்படியாக எடுத்தார். அதன் விளைவு சிங்கள பௌத்தர்கள் தவிர்ந்த அனைவரையும் அவரின் அரசியல் சொல்லாடலின் மூலம் அந்நியராக்கினார். சிங்கள நாட்டை ஆக்கிரமிக்க வந்தவர்களாகவும், சொத்துக்களை சூறையாட வந்தவர்களாகவும், சிங்கள பௌத்தர்களின் பண்பாட்டை சிதைக்க வந்தவர்களாகவும் “அந்நியர்கள்” மீது குற்றம் சாட்டினார். அதற்கு இடம் கொடுத்த சிங்களவர்களை அவமானப்படுத்தினார். இனி இது நேரக்கூடாது என்றும், இனிமேல் இடம்கொடுக்கக் கூடாது என்றும் எச்சரிக்கை செய்தார்.
அவரின் சூத்திரத்தின் படி தமிழர்கள் மகாவம்சத்து கதைகளின் படி ஆக்கிரமிப்பாளர்கள். முஸ்லிம்களும் பொருளாதார, பண்பாட்டு ஆக்கிரமிப்பாளர்கள், இந்தியர்களும் அப்படியே. உடனடி எதிரியான ஆங்கிலேயர்கள் மோசமான ஆக்கிரமிப்பாளர்கள்.
ஒரு கால கட்டத்தில் தமிழ்நாட்டில் அயோத்திதாச பண்டிதர், ஒல்கொட் போன்றோருடன் சேர்ந்து ஒடுக்கப்பட்ட சாதியினரின் மீட்சிக்காகவும், சாதி எதிர்ப்புக்காகவும் பணிபுரிந்த அநகாரிக்க தர்மபால பிற் காலத்தில் ‘சிங்கள பௌத்த’ பண்பாட்டைக் காக்க வேண்டும், என்கிற தூய்மைவாத நிலைப்பாட்டின் காரணமாக இனவாதியாகவும், மத வாதியாகவும் மட்டுமல்ல சாதிவாதியாகவும் மாறினார். ஆரியத்தையும், பிராமணியத்தையும் தூக்கிப்பிடித்தார். அவரது எழுத்துக்களில் சாதியத்தை சிங்கள சமூகம் பாதுகாக்கவேண்டும் என்று வலியுறுத்தினார். சிங்கள பௌத்தயாவில் இப்படி எழுதுகிறார்.
“மரக்கல” இனத்தவர்கள் ஐக்கியமாக இணைந்து தமது மதத்தலங்களில் கலந்துரையாடுகிறார்கள். நாளாந்தம் அவர்கள் தமது சுய மரபுகளையும், சடங்குகளையும் முறையாக பின்பற்றுகிறார்கள். ரிக்க்ஷோ ஓட்டும் தமிழர்கள் அதிகாலை எழுந்து உடல் ஸ்நானம் செய்து சுத்தமான உடையணிந்து சாம்பலை உடலில் தடவிக்கொண்டு தமது பணிகளை தொடங்குகிறார்கள். இவர்கள் எல்லோரும் தத்தமது குல, மத, சாதி வழக்கப்படி ஒழுகுகிறார்கள். அந்தகோ... இந்த சோம்பேறி, குருட்டுத்தனமான, ஈனத்தனமான சிங்களவன் மட்டும் “எட் ஹோம்”, “ஹனிமூன்” நடத்திக்கொண்டு, கேக், ஷேம்பயின், ஓலைத்தொப்பி, மோர்னிங்கோர்ட், டிரஸ்சூட், கவும், டுவிட்கெப் பயன்படுத்திக்கொண்டு கையில் இருக்கின்ற காசைக் கறியாக்கிக்கொண்டு வெள்ளையனுக்கு ஏவல் செய்துகொண்டு காலம் கடத்துகிறான்.” (அறிந்துகொள்ள வேண்டியவை)
ஏறத்தாழ இதே காலப்பகுதியில் ஆறுமுகநாவலர் “சைவ வினாவிடை” எழுதி ஆதிக்க சாதியம், ஆணாதிக்கம் போன்றவற்றை நிறுவும் வகையில் எடுத்த பணிகளைப் போல அநகாரிக்க தர்மபாலவும் 1898இல் “கிஹி தின சரியாவ” எனும் பெயரில் ஒரு ஒழுக்கக் கோவை கைநூலை வெளியிட்டார். அதில் அவர் நாளாந்தம் உண்பது, மலங்களிப்பது தொடங்கி தேசியக் கடமைகள் வரை வரையறுக்கிறார். அதில் இனத்துவ, சாதிய ஒழுக்கங்களும் உள்ளடங்கும். அதில் “சிங்கள ஆடைகள்” எனும் தலைப்பின் கீழ் “ஹம்பயாக்கள்”அணிவதைப் போன்ற சாரங்களை (லுங்கி) அணியக்கூடாது, பறங்கியர்களைப் போல காற்சட்டை அணியக்கூடாது என்று 3, 4 விதிகளில் குறிப்பிடுகிறார்.
“சிங்களப் பெயர்கள்” என்கிற தலைப்பின் கீழ் இப்படித் தொடங்குகிறார்,
“சிங்களவர்கள் வங்க தேசத்தில் சிங்கபுரத்திலிருந்து இந்த தேசத்துக்கு வந்த ஆரிய இனம். நமது கோத்திரப் பெயர்கள் அந்த பண்பாட்டின் படியும், மொழியின் படியும் சூட்டப்படவேண்டியவை. வியாச, அனுராத, சிங்கபாகு, சுரநிமல, கோத்தபாய, அபய, சோனுத்தர, மகாநாம, நந்தமித்திர, திகாபய, சுமண, ரந்தேவ, திஸ்ஸ, பியதாச, தேவனம்பியதிஸ்ஸ, விஜயவர்தன, ஸ்ரீ சங்கபோதி, பராக்கிரம, விக்கிரம, நரேந்திரசிங்க, மகிந்த போன்ற ஆண்களின் பெயர்களும், விஜாயி, சிங்கவள்ளி, லீலாவதி, அனுலா, சங்கமித்த, லீலா, ரூபாவதி, பிரபாவதி, ரத்னாவளி, சினேகலதா போன்ற பெண்களின் பெயர்களும் நமது மூதாதையர் போல வைக்கப்பட வேண்டும். தற்போது பயன்படுத்தப்பட்டுவரும் கரோலிஸ், அந்திரயாஸ், ஜகொலிஸ், ஜுவானிஸ், ஹரமானிஸ், பஸ்தியான், வில்லியம், அல்லஸ், லிவேரா, டயஸ், பெரேரா, பீரிஸ், சரம், பெர்னாண்டோ, கத்தரீனா, ஜூஸ்தினா, பவுஸ்தினா, கிலேரா, மங்கோ, அங்கோ போன்ற பறங்கிப் பெயர்களைக் கைவிட வேண்டும்”
அநகாரிக்க தமபால தனது இளம் வயதிலேயே ஹேவாவிதாரன டேவிட் என்கிற இயற்பெயரை மாற்றி தர்மபால என்று மாற்றிக்கொண்ட கதையை இதற்கு முன்னர் பார்த்தோம்.
கல்கத்தாவில் 6 ஆண்டுகால சிறைவாழ்க்கையை அனுபவித்துவிட்டு இலங்கை திரும்பியதன் பின்னர் அவர் மகாபோதி நிலையத்தில் நடத்திய ஒரு கூட்டத்தில் இப்படி உரையாற்றினார்.
“பற சுத்தா தடைசெய்திருந்த சிங்கள பௌத்தயாவை ஆரம்பிக்கப் போகிறேன். தேசத்துக்காகவும், இனத்துக்காகவும், மதத்துக்காகவும் பணியாற்ற முன்வர இஷ்டமானவர்கள் என் முன்னால் வாருங்கள்” என்றதும். ஒரு இளைஞர் முன்னால் சென்றார்.
“உனது பெயர்?’ – “ஹரமானிஸ்”
“காட்டு யானையே! (வல் அலிய) தடிமாடே! அந்நியப் பெயரை வைக்காதே! உனது பெயர் இன்றிலிருந்து சோமசேன, உனது கடமை பத்திரிகையை அச்சு செய்து விநியோகிப்பது.”
இன்னொரு இளைஞரும் முன்வந்தார்.
“நீ யார்?” – “ஜாகோலிஸ்”
“காட்டு யானையே! அந்த பெயரை பாவிப்பதற்கு வெட்கமில்லையா? இன்றிலிருந்து உனது பெயர் சுகததாச உபயவிக்கிரம. பத்திரிகையை தொகுக்கும் பணி உன்னுடையது.”
இப்படித்தான் அவர் அன்று சிங்கள பௌத்தயா பத்திரிகையை புனரமைப்பதற்கான நிர்வாகத்தை தெரிந்தார். அதுபோல ஆங்கிலேய எதிர்ப்பை சகல மட்டங்களிலும் பிரயோகித்தார்.
இப்படிப்பட்ட சிங்கள பௌத்த தூய்மைவாத போக்கு ஆங்கிலேயர்களை கொதிப்படையச் செய்ததுடன், ஏனைய இனங்களுக்கு எதிரான வெறுப்புணர்ச்சியையும் சிங்களவர்களில் விதைத்தது.
தொடரும்.
நன்றி - தினக்குரல்
நன்றி - தினக்குரல்
பிற்குறிப்பு:
சிங்களத்தில் “பற” என்று நிந்தனை செய்வது குறித்து தமிழர்கள் மத்தியில் பிழையான விளக்கம் நிலவுவதை அவதானிக்க முடிகிறது. உதாரணத்திற்கு தமிழில் “பற நாயே!” என்று நிந்தனை செய்வது ஒரு சாதியச் சாடலே. ஆனால் சிங்களத்தில் "பற பல்லா" எனும்போது அதன் அர்த்தம் “அந்நிய” (பிற) என்பது தான். “பற சுத்தா” என்பதன் அர்த்தம் கூட “அந்நிய வெள்ளையனே” என்பது தான். அதே “பற தெமலா”, “பற ஹம்பயா” என்று தமிழர்களையும், முஸ்லிம்களையும் அழைக்கத் தொடங்கியதன் ஆரம்பமும் கூட “அந்நிய” என்கிற அர்த்தத்தில் தான். அது இன்று மிகவும் நிந்தனைக்குரிய மோசமான ஒரு சொல்லாக மாறியிருக்கிறது.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...