Headlines News :
முகப்பு » , » "மலையகக் குருவி" இணையத்தளத்தின் புனைவின் நோக்கம்! - என்.சரவணன்

"மலையகக் குருவி" இணையத்தளத்தின் புனைவின் நோக்கம்! - என்.சரவணன்





மலையகக் குருவி நண்பர்களே!
“ஷெல்பி எடுப்பது உங்கள் இஸ்டம் ஆனால் மக்களுக்கோ அது கஷ்டம்..ஊடகவியலாளர் சரவண நடராசா” என்கிற தலைப்பில் ஒரு செய்தியை வெளியிட்டிருக்கிறீர்கள். இது மிகவும் தவறான ஊடக முன்னுதாரணம் நண்பர்களே.
அப்படி ஒரு கருத்தை நான் வெளியிட்டதில்லை. செய்தியிடுவதில் உள்ள அவசரத்தில் நீங்கள் பல தவறுகளை விட்டுள்ளீர்கள் என்பதை அடையாளம் காணக்கூடியதாக உள்ளது.


முகநூலில் இருந்து எடுக்கப்பட்டிருந்த மூலம்
  • -    அந்த தலைப்பிலான கட்டுரை வீரகேசரியில் வெளியாகியிருந்த ஒன்று. அதனை நமதுமலையகம் நன்றியுடன் வெளியிட்டிருந்தது. நமது மலையகத்திலிருந்து அந்த கட்டுரையை எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தேன். அக்கட்டுரையில் இருந்த ஒரு சில வரிகளை // என்கிற மேற்கோளுடனேயே பகிர்ந்தேருந்தேன். அப்படியிருக்க அந்த மேற்கோளோ, அந்த கட்டுரையின் தலைப்போ, கட்டுரையின் மூலத்தையோ, அதனை எழுதியவரையோ பற்றி அலட்டிக்கொள்ளாதது அதிர்ச்சியளிக்கிறது. ஊடகங்களுக்கோ ஊடகவியலாளர்களுக்கோ இருக்கக்கூடாத அலட்சியம் இது. பொறுப்புணர்ச்சி மீது சந்தேகம்கொள்ளவைக்கும் செயல் இது.

  • -    இன்னொருவர் வெளியிட்ட கருத்தை எனது கருத்தை நான் களவாடியதாக ஆகிவிடுவது மட்டுமல்ல. அந்த கருத்து என் கருத்தாகவும் அர்த்தப்படுத்திவிடும்.

  • -    கூடவே நான் கூறாத என் கருத்தை எனது படத்துடன் பகிர்ந்திருக்கிறீர்கள். என்ன நியாயம். (மேலும் எனது பெயர் "சரவண" இல்லை. "சரவணன்" )

  • -    அதையே உங்கள் முகநூல் பக்கத்திலும் பகிர்ந்திருக்கிறீர்கள். அதற்கு பலர் லைக் இட்டு சென்றுள்ளனர். சிலர் அதனை பகிர்ந்துள்ளனனர். இது அபத்தம் இல்லையா.

  • -    குறிப்பிட்ட அந்த “சம்பளப் போராட்டம்” குறித்து எனக்கு தனிப்பட்ட வேறு கருத்துக்களும் விமர்சனங்களும் உண்டு. அதனை நான் உடனடியாக வெளியாடததற்குக் காரணம் அது குறித்து நீண்ட விமர்சனம் எழுத வேண்டியிருக்கும். அதற்கு உரிய நேரம், உழைப்பு, சக்தியை செலவிட உடனடியாக தயாரில்லாதது தான். மேலும் அப்படி எழுதும் பட்சத்தில் வெளிவரும் வாதங்களுக்கு பொறுப்புடன் பதிலளிக்கும் கடப்பாடும் என் மீது விழுந்துவிடும். அதனை எதிர்கொள்வதற்கான நேரமும், சக்தியும் என்னிடம் இப்போது இல்லை. எனவே ஒதுங்கி நின்று அவதானித்து வந்தேன்.
சமகால ஊடககங்கள் தமது internet traffic, rank, rate என்பவற்றை அதிகரிப்பதர்காகப் படும் பாட்டை நான் அவதானித்தே வருகிறேன். பரபரப்பையும், கிளுகிளுப்பையும் ஏற்படுத்துவதற்காக எத்தகைய ஊடக விபச்சாரத்தையும் செய்யத் தயாராக பலர் இன்று இணையத்தள ஊடகங்களை தொடங்கியுள்ளனர். எந்த ஊடக தர்மமுமற்ற, போதிய ஊடக அனுபவமுமற்ற, சமூக பொறுப்பற்ற, வெறும் வர்த்தக நோக்கங்களுக்காக எதனையும் விற்கத் துணிந்த அற்ப இணையத்தளங்களை நாளாந்தம் கண்டு கடந்து வருகிறோம்.

நண்பர்களே “மலையகக் குருவி” யை ஒரு தோழமை இணையத்தளமாவே கருதி வருகிறேன். மலையகத்துக்கான பல நூற்றுக்கணக்கான இணையத்தளங்களின் தேவையை நான் வலியுறுத்தியே வருகிறேன். அவற்றில் பொறுப்பு மிகுந்த ஊடகங்களுடன் நான் தோழமை உணர்வுடன் ஒத்துழைத்தும் வருகிறேன். இப்படி ஒரு செய்தியை வெளியிட்டதன் பின்னணியில் ஏதும் காழ்ப்போ, சதியோ இருக்காது என்பது என் நம்பிக்கை. ஒரு ஊடகவியலாளனாக “மலையகக் குருவி” யில் காணப்பட்ட சில சிக்கல்களையும் உங்களில் ஒருவருடன் சுட்டிக்காட்டியுமுள்ளேன். ஆனால் நீங்களும் மூன்றாம்தர செய்தித் தளங்கள் என்கிற பெயரை எடுத்து விடாதபடி இருப்பது முக்கியம் என்பது எனது அவா. 

இந்த மறுப்பை "மலையகக் குருவி"யில் நீங்கள் வெளியிட்டு. குறித்த செய்தியையும் நீக்கும்படி தோழமையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

-என்.சரவணன்
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates