Headlines News :
முகப்பு » , , , , » சேர் பொன் இராமநாதனின் வகிபாகம் (1915 கண்டி கலகம் –34) - என்.சரவணன்

சேர் பொன் இராமநாதனின் வகிபாகம் (1915 கண்டி கலகம் –34) - என்.சரவணன்


1915 சம்பவங்களையும் விளைவுகளையும் ஆராயும் போது சேர்.பொன் இராமநாதன் தவிர்க்க முடியாத பாத்திரமாவார். இராமநாதன் பற்றி சற்று மேலதிக தகவல்களுடன் ஆராய்வது இங்கு பொருத்தமாக இருக்கும்.

இன்றளவிலும் சாதாரண சிங்கள மக்கள் இலங்கையின் தேசியத் தலைவர்கள் வரிசையில் வைத்துப் போற்றும் நபர் சேர் பொன் இராமநாதன். தேர்ந்த பல சிங்கள தேசியவாதிகளால் கூட அவரை புறக்கணிக்க  முடிவதில்லை. சிங்களப் பாடப் புத்தகங்களிலும், வரலாற்று நூல்களிலும் அவருக்கு உரிய இடத்தை வழங்கியுள்ளனர். அவரது சகோதரர் சேர் பொன் அருணாச்சலத்தையும் சேர்த்து “பொன்னம்பலம் சகோதரர்கள்” என்றே அவர்கள் மரியாதை செலுத்துகின்றனர். கொழும்பு காலி முகத்திடலருகில் உள்ள பழைய பாராளுமன்றத்தின் முன்னால் அவருக்கு சிலை வைக்கப்பட்டுள்ளதை இன்றும் காணலாம். அவர்கள் இருவரின் வகிபாகமும் இலங்கையின் சுதந்திர வரலாற்றில் இன்றிமையாதது என்பது நாம் அறிவோம். 

1915 கலவரத்தின் போதும் அதன் பின்னர் இலங்கையர்களுக்கு நீதி கேட்டும் அவர் ஆற்றிய பாத்திரம் மிகவும் முக்கியமானது. அது ஒரு முக்கிய வரலாற்றுப் பதிவு.  1915 இல் அவருக்கு வயது 64.

சேர் பொன் இராமநாதன் சிங்கள பௌத்த மறுமலர்ச்சியிலும் ஆற்றிய பங்கு குறிப்பிடத்தக்கது. அதுபோல அவர் 1883 இல் நடந்த கொட்டாஞ்சேனைக் கலவரத்தைத் தொடர்ந்து 1885 இல் அரசாங்க சபையில் வெசாக் நாளை விடுமுறை நாளாக அறிவிக்குமாறு அவர் உரையாற்றி, அந்த நாளை விடுமுறை நாளாக்கி வென்று கொடுத்தார். பௌத்த விகாரைகள் சட்டத்தை நிறைவேற்றுவதிலும் அவர் ஆற்றிய பாத்திரத்தை இன்றும் சிங்கள ஆய்வாளர்கள் பலர் நன்றியுடன் நினைவு கூருகின்றனர்.

சரியாக 130 ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது 1886இல் பௌத்த பாடசாலைகளுக்கான அறக்கட்டளையை ஒல்கொட்டுடன் சேர்ந்து தொடக்கியது மட்டுமன்றி அந்த அறக்கட்டளைக்கு 15 ஆயிரம் ரூபாவை அன்று அளித்தார். அந்த அறக்கட்டளையின் இணைப்பொருளாலர்களாக ஒல்கொட்டும், இராமநாதனும் நியமிக்கப்பட்டார்கள். ஆங்கிலேய மிஷனரி பாடசாலைகளுக்கு மாற்றாக சுதேச பாடசாலைகளை ஆரம்பிக்கும் நோக்கில், இது சைவ – பௌத்த பாடசாலை அறக்கட்டளையாக இயங்கும் என்றே அவர் நம்பினார். ஆனால் அந்த அறக்கட்டளையின் மூலம் ஆனந்தா நாலந்தா – மகிந்தா – விசாகா போன்ற பௌத்த பாடசாலைகள், அறநெறிப்பாடசாலைகள், பௌத்த நூலகங்கள், பௌத்த அச்சகம் ஆரம்பிக்கப்பட்டன, பௌத்த சஞ்சிகைகள் பௌத்த நூல்கள் வெளியிடப்பட்டன. அதேவேளை சிங்கள பௌத்தத்துக்கு அனைத்தும் செலவிடப்பட்டபோதும் அவர் எதிர்பார்த்தபடி தமிழ் - சைவ பாடசாலைகளுக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை. இதன் விளைவாக அவர் தான் வழங்கிய 15 ஆயிரம் ரூபாவில் 5 ஆயிரம் ரூபாவை மட்டும் மீளப் பெற்றுக்கொண்டு யாழ்ப்பாணத்தில் இந்துக் கல்லூரியை ஆரம்பிக்கப் புறப்பட்டார். 1923 இல் சைவ வித்தியா விருத்திச் சங்கத்தை அமைத்து அதன் தலைவராக செயல்பட்டு யாழ்ப்பாண மாவட்டம் முழுவதும் சைவத் தமிழ்ப் பாடசாலைகளை நிறுவினார். யாழ்ப்பாணத்தில் இராமநாதன் பெண்கள் கல்லூரி, பரமேஸ்வரா ஆண்கள் கல்லூரி என்பன சிறந்த உதாரணங்கள்.

இலங்கையில் பௌத்த மறுமலர்ச்சியில் பாரிய பாத்திரமாற்றிய பிரம்மஞான சங்கம் உருவாக்கப்பட்டபோது ஒல்கொட் போன்றே இராமநாதனும் அதன் ஸ்தாபகர்களில் ஒருவர். அவ்வமைப்பின் வளர்ச்சியில் பங்கெடுத்தார். அந்த சங்கத்தின் பிரச்சாரங்களின் போது “சிங்கள உதடுகள் சிங்களத்தில் பேசாது போனால் யார் தான் பேசுவர். சொந்த மொழியன்றி எப்படி உயர் அறிவை வளர்த்துக்கொள்வது” என்றார். “சிங்களத்தில் பெருமையுடன் பேச முன்வராத எவரும் சிங்களவர் அல்லர்” என்றார்.
சேர் பொன்னம்பலம் இராமநாதன்

யாரின் பிரதிநிதி?

அவரது இறுதிக் காலங்களில் ஒரு வைதீக – பழமைவாத - யாழ் - சைவ - உயர் வேளாள – படித்த – மேட்டுக்குடி – ஆணாதிக்கத்தனத்தின் பிரதிநிதியாக ஆன போதும் அவரின் ஆரம்பகால பாத்திரம் அவ்வாறு இருக்கவில்லை. 1921 இல் பிரித்தானிய அரசின் சேர் பட்டத்தைப் பெற்றுக்கொண்ட போது அவரது வயது 70. சுதேசிகளுக்கு சுதந்திரம் தேவையில்லை, சீர்திருத்தமே போதும் என்கிற சமரச சீர்திருத்தவாதியாகவே இருந்தார். ஆறுமுகநாவலர் மற்றும் சைவ மறுமலர்ச்சி என்பவற்றின் உற்பத்தியே பொன்னம்பலம் இராமநாதன் என்றால் அது மிகையாகாது. 1879 ஆம் ஆண்டு இலங்கையின் சட்டசபைக்கு முதல் தடவை நியமிக்கப்பட்ட போது அவரது வயது 28 மட்டுமே. அதிலிருந்து சரியாக 50 ஆண்டுகாலம் அதாவது அவர் இறக்கும் காலம் வரை அரசியல் வாழ்க்கையில் ஈடுபட்டார்.

1911 ஆம் ஆண்டில் நடைபெற்ற இலங்கையின் சட்டசபைக்கான முதலாவது தேர்தல் நடந்தபோது முழு இலங்கையரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே உறுப்பினராக இராமநாதன் தெரிவு செய்யப்பட்டார். இந்தத் தேர்தலின் போது இராமநாதனுடன் போட்டியிட்ட மார்கஸ் பெர்னாண்டோவை சிங்கள மேட்டுக்குடியினர் தோற்கடித்து இராமநாதனை வெல்லச் செய்ததன் தலையாய காரணம் இராமநாதன் ஒரு உயர்த்தப்பட்ட வெள்ளாள சாதியைச் சேர்ந்தவர் என்பது தான். மார்க்ஸ் பெர்னாண்டோ சிங்களவராக இருந்தபோதும் அவர் ஒரு சிங்கள கராவ (தமிழில் கரையார் சமூகம்) சாதியைச் சேர்ந்தவர் என்பதாலேயே அவரை ஓரம் கட்டினர். இனத்துவத்தை விட சாதி அடையாளத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்த காலமது.

இராமநாதன் தனது அரசியல் களத்தை பிற்காலத்தில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு மாற்றியது அவரது அடையாள அரசியலின் நீட்சி தான். யாழ்ப்பாணத்தில் 50 சிங்களக் குடும்பங்களை குடியேற்றுவதற்கு எதிராக 04.12.1917 இல் அவர் உரையாற்றியிருப்பதையும் அறிய முடிகிறது.

வாக்குரிமைக்கு எதிராக

அதுபோல அரசியல் அதிகாரம் சாதாரண பொதுமக்களுக்கு போவதை அவர் பிற்காலத்தில் விரும்பியிருக்கவில்லை. படித்த, உயர் வர்க்க, உயர்சாதி, ஆண்களிடம் மட்டுமே அரசியல் அதிகாரம் இருக்கவேண்டும் என்று விரும்பினார். அதுமட்டுமன்றி டொனமூர் ஆணைக்குழு விசாரணைக் காலத்தில் அவர் வெளிப்படையாகவே சர்வஜன வாக்குரிமையை எதிர்த்தார்.
“நீங்கள் எங்கள் பெண்களை அவர் பாட்டில் இருக்க விடுங்கள். கடவுளின் விருப்பப்படி அவர்கள் இந்த உலகத்தில் கீழானவர்களாக உள்ளமை எதற்காக என்பது பற்றி நீங்கள் அறிய நியாயமில்லை. பெண்களின் முழு வாழ்க்கையும் அவர்களது கவனமும் வீட்டிலேயே இருக்க வேண்டும். அதற்கப்பால் ஒரு உலகமில்லை. வீட்டுப் பொறுப்பிற்கப்பால் அவர்கள் செல்வதற்கு இடம் கொடுக்க வேண்டாம்” என்றார்.
(சாட்சியம் இலக்கம் 101, 20.12.1927 சாட்சியமளித்தபோது)

இதே கருத்தை அவர் அரசாங்க சபை விவாதத்திலும் வெளியிட்டார்.

“ஏன் இந்த நாறிப்போன தத்துவத்தை எமக்குப் போதிக்கிறார்கள். எதற்காக எமது தொண்டைக்குள் இவற்றைத் திணிக்கிறார்கள்” என்று 1928 நவம்பர் 8 ஆம் திகதி டொனமூர் யாப்பு பற்றிய விவாதத்தின் போது உரையாற்றினார். அந்த டொனமூர் திட்டமும், சர்வஜன வாக்குரிமையும் நிறைவேற்றப்பட்டபோது அவர் உயிருடன் இருக்கவில்லை. அடுத்த இரண்டு வருடங்களில் அதாவது 1930 இல் அவர் இறந்துபோனார்.

இராமநாதன் எழுதிய ஆய்வு நூல்களும், கட்டுரைகளும் இன்றும் பல ஆய்வாளர்களால் மெச்சப்படுகின்ற போதும் மறுபுறம் அவற்றில் சில சர்ச்சைகளையும் உண்டுபண்ணியிருக்கின்றன. அவற்றில் முக்கியமானது “இலங்கைச் சோனகர் இன வரலாறு” (Ethnology of the moors) என்று அவர் எழுதிய கட்டுரை. இதனை ஆய்வுக் கட்டுரையாக அவர் 1885 இல் இலங்கைச் சட்டவாக்க சபையிலும் 1888 இல் அரச ஆசிய கழகம் - இலங்கைக் கிளை (Royal Asiatic society) முன்னிலையிலும் இராமநாதன் பகிரங்கமாக எடுத்துரைத்தார். இலங்கை வாழ் சோனகர்கள் இனத்தால் தமிழர்கள் எனவும் மதத்தால் முகம்மதியர் எனவும் அவர் அதில் விளக்கியிருந்தார்.
ஐ.எல்.எம்.அப்துல் அசீஸ்
இந்த கருத்துக்கள் அப்போது பெரும் சர்ச்சைகளை உண்டுபண்ணியிருந்தது. முஸ்லிம்கள் பற்றிய அவரது தரவுகள் குறித்து முஸ்லிம் தரப்பில் விசனத்துக்கு உள்ளானது. இலங்கையில் பௌத்த மறுமலர்ச்சி, சைவ மறுமலர்ச்சி, இஸ்லாமிய மறுமலர்ச்சி என்பன ஏறத்தாள ஒன்றுக்கொன்று கிட்டிய காலப்பகுதியில் தான் நிகழ்ந்தன. இராமனாதனின் கருத்துக்களுக்கு வினையாற்றக்கூடிய முஸ்லிம் புலமையாளர்கள் அப்போது வளர்ந்திருந்தனர்.

அப்படிப்பட்ட புலமையாளர்களில் ஒருவரான ஐ.எல்.எம்.அப்துல் அசீஸ் 1907 ஆம் ஆண்டு இராமநாதனுக்கு மறுப்பு தெரிவித்து ஒரு திறனாய்வைச் செய்திருந்தார். அப்துல் அசீஸ் முஸ்லிம் கார்டியன் என்கிற பத்திரிகையின் ஆசிரியர். மேலும் அவர் முன்னாள் சாஹிரா கல்லூரியின் அதிபர். இந்த திறனாய்வு நூல் மிகவும் விளக்கமுள்ள விரிவான நூலாகும். பல பதிப்புகளையும் தாண்டியிருக்கிறது.

"A criticism of Mr.Ramanathan's Ethnology of the 'moors' of Ceylon" (திரு. இராமநாதனது “இலங்கைச் சோனகர் இன வரலாறு” எனும் ஆராய்ச்சிக் கட்டுரைக்கான ஒருதிறனாய்வு) என்கிற ஆங்கில மூல நூலையும், அதன் தமிழ் மொழிபெயர்ப்பையும் இந்த கட்டுரையின் முடிவில் - கீழே நீங்கள் வாசிக்கலாம்.

ஆங்கிலேயர்களும் ஆங்கிலம் படித்த இலங்கையர்களும் கூட இராமநாதன் எழுதிய விளக்கங்களால் பிழையாக வழிநடத்த வாய்ப்பிருந்ததால் அப்துல் அசீஸ் ஆங்கிலத்தில் வெளியிட்ட இந்த நூல் பரவலாக விவாதங்களை ஏற்படுத்தியிருந்தன. இலங்கை முஸ்லிம்கள் யார், இந்தியாவில் இருந்து வந்தவர்கள் யார், சிங்கள வரலாற்று நூல்கள், மற்றும் ஆங்கில ஆய்வு நூல்கள் அவற்றுக்கு கொடுக்கின்ற விளக்கங்கள் என்ன, இலங்கையின் குடியியல் பரம்பலின் வளர்ச்சி போன்றவற்றை ஆதாரம் காட்டி அவர் தெளிவாக சுட்டிக்காட்டியிருந்தார்.

1915 கலவரத்தின் போது பொன்னம்பலம் இராமநாதன் வெளியிட்ட “கலவரமும் இராணுவச் சட்டமும்” (Riots and Martial Law in Ceylon – 1915 – P.Ramanathan) என்கிற நூலில் ஆரம்ப பக்கங்களில் முஸ்லிம்கள் குறித்து அவர் அளித்துள்ள விளக்கமும் கூட அவரது முன்னைய கருத்தில் மாற்றங்கள் எதுவும் இல்லை என்பதையே விளக்கின. முஸ்லிம்கள் குறித்து அவர் என்ன விளக்கங்களை அளித்தரோ அதே போன்ற விளக்கத்தைத் தான் 1915 கலவரம் குறித்து எழுதிய பலரும் விளக்கினர்.

முஸ்லிம்களின் அடையாளம் மற்றும் அவர்களில் உள்ள பல்வேறு பிரிவினர் குறித்த விளக்கம் 1915 மிகவும் அவசியமாக இருந்தது. இந்த கலவரத்திற்கு காரணமானவர்களாக குற்றம்சாட்டப்பட்டவர்கள் கரையோர முஸ்லிம்கள் என்றும், “ஹம்பயா” என்று அழைக்கப்படுபவர்கள் என்றும், தென்னிந்தியாவில் இருந்து வந்தவர்கள் என்றும் அன்று பரவலாக விளக்கமளிக்கப்பட்டது. ஏனைய முஸ்லிம் பிரிவினர் இந்த கலவரத்துடன் தொடர்பில்லை என்றும் விபரித்தார்கள். “இராணுவச் சட்டத்தின் கீழ் இலங்கையில் 100  நாட்கள்” (Hundred days in ceylon under martial law 1915- Armand de Souza) என்கிற நூலை சிங்களத்தில் மொழிபெயர்த்தவர்களும், அந்த கலவரத்தை இன்றுவரை சிங்களத்தில் அடையாளப்படுத்துபவர்களும் “மரக்கல கோலாகலய” (மரக்கல கலவரம்) என்றே விழிக்கின்றனர்.

இராமநாதன் சிங்களத் தலைவர்களை கடும் சிரத்தை எடுத்து சிறையிலிருந்துவிடுவித்தமை, முஸ்லிம்கள் பற்றிய அவர் கொண்டிருந்த அபிப்பிராயம், அவர் வெளியிட்ட நூல் என்பன இராமநாதன் மீதான அதிருப்தியையும், ஆத்திரத்தையும் இன்றுவரை தொடரச்செய்துள்ளது. முஸ்லிம்களுக்கு எதிரான மனநிலையின் நீட்சி அங்கிருந்தே தொடங்குகின்றன என்கிற அபிப்பிராயமும் கூட பல சாதாரண முஸ்லிம்கள் மத்தியில் விதைக்கப்பட்டிருக்கிறது. இது மேலதிக புனைவுகளுடன்; ‘சிங்களவர்களுடன் சேர்ந்து தமிழர்களும் நசுக்கினார்கள்’ என்கிற பிரச்சாரம் வரை விரவியுள்ளதை காணக் கூடியதாக இருக்கிறது.

இராமநாதன் இராணுவச் சட்டத்தையும் அடக்குமுறையையும் எதிர்த்து நின்றதும், பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற எடுத்த முயற்சியும் ஒருபுறமிருக்க அவர் இந்த கலவரத்தில் ஈடுபட்ட சுதேசிகள் குறித்து கண்டிக்கவில்லை என்கிற குற்றச்சாட்டு பரவலாக உண்டு

ஒரு வைதீக இராமநாதனிடம் முஸ்லிம்கள் பற்றிய விளக்கம் பிழையாக இருக்கலாம். ஆனால் கலவரத்தில் பாதிக்கப்பட்ட - குற்றமிழைக்காத இலங்கையர்களை பாதுகாக்க அவர் மேற்கொண்ட முயற்சிகள் அப்பலுக்கில்லாதவை. முஸ்லிம்களுக்கு எதிரானவராக இருந்தார் என்பதற்கான போதிய விளக்கங்கள் இதுவரை ஆதாரபூர்வமாக எங்கும் காணக்கிடைக்கவில்லை. அப்படி எவரேனும் பகிர்ந்தால் இந்த தொடரைப் பூரணப்படுத்துவதற்கான உதவியாக கருதுவேன்.

இராமநாதன் பற்றிய இன்னும் சில உண்மைகளையும் சிங்கள பௌத்த புனைவுகளையும் அடுத்த வாரம் பார்க்கலாம்.

தொடரும்...

நன்றி - தினக்குரல்



Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates