நாடு முழுவதும் (மொத்தமாக) உயிரிழப்பு: 43காணாமல் போனோர்: 16காயம்: 28 பாதிப்பு: 414,627 அரநாயக்க உயிரிழப்பு: 17காணாமல் போனோர்: 15பாதிப்பு: 1350புளத்கொஹூபிட்டிய உயிரிழப்பு: 03காணாமல் போனோர்: 13பாதிப்பு: 2221
நாட்டில் கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக பெய்த மழை, வெள்ளம் மற்றும் மண்சரிவுகள் காரணமாக பல்வேறு பகுதிகளில் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்த அனர்த்தங்களில் சிக்கி நாடளாவிய ரீதியில் (கடந்த வியாழன் வரையில்) 43பேர் உயிரிழந்துள்ளதுடன் 16 பேர் காணாமல் போயுள்ளனர். அத்துடன் 28 பேர் காயமடைந்துள்ளனர்.
மழை, வெள்ளம், மண்சரிவு காரணமாக நாடெங்கிலும் சுமார் 99ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த நான்கு இலட்சத்து ௧௪ ஆயிரத்து ௬௨௭ பேர் பாதிப்படைந்துள்ளனர்.
இவர்களில் மூன்று இலட்சம் பேர் வரை அகதி முகாம்களில் தங்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்தது.
அரநாயக்க, புளத்கொஹாபிட்டிய ஆகிய இரு பிரதேசங்களில் மட்டும் ஏற்பட்ட மண்சரிவில் புதையுண்டு உயிரிழந்தவர்களில் இதுவரை (வியாழன் வரை) 21சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரநாயக்க
கேகாலை மாவட்டத்தின் அரநாயக்க பிரதேசத்தில் இடம்பெற்ற மண்சரிவில் 3 கிராமங்கள் மண்ணில் புதையுண்டன. இந்த மண்சரிவில் ஸ்ரீபுர, எலங்க பிட்டிய மற்றும் பல்லபாகே ஆகிய கிராமங்களே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் அங்கு 17 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மொத்தமாக 120 பேர் வரை காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் 66 வீடுகள் முற்றாக மண்ணில் புதையுண்ட நிலையில் 220 வீடுகள் சேதமடைந்துள்ளன. மேலும் இந்த மண்சரிவினால் 1100 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
எலங்க பிட்டிய மலையுச்சியில் அமைந்துள்ள விகாரையொன்றே முதன்முதலாக மண்ணில் புதையுண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனைத்தொடர்ந்து ஏனைய 3 கிராமங்களும் மண்சரிவில் பாதிக்கப்பட்டுள்ளன. தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக மீட்புப்பணியில் ஈடுபட்டு வரும் பாதுகாப்புபடையினர் பெரும் சவால்களுக்கு மத்தியில் மண்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுவருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, விமானப்படையினர் அந்த பிரதேசத்தை ஹெலிகொப்டர் மூலம் கண்காணித்து வருவதுடன் மீட்புப்பணியிலும் ஈடுபட்டுவருகின்றனர்.
இதுதவிர சமூகசேவை அமைப்புகளும் பிரதேச மக்களும் இவர்களுடன் இணைந்து மீட்புப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
அரநாயக்கவில் பாதிக்கப்பட்டோருக்கு தேவையான நிவாரணங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுவருகின்றது.
இந்தச் சம்பவத்தினையடுத்து அந்தப் பிரதேசத்திற்கு 15 வைத்தியர்கள், 45 தாதிமார்கள் மற்றும் 20 அம்புலன்ஸ்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜித தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த புதன்கிழமை அரநாயக்க மண்சரிவு பிரதேசத்திற்கு சென்று பாதிப்புக்களை பார்வையிட்டதுடன் பாதிக்கப்பட்ட மக்களையும் சந்தித்தார்.
புளத்கோஹுபிட்டிய
கேகாலை மாவட்டத்தின் புளத்கோஹுபிட்டிய, களுபான தோட்டத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 10.00 மணியளவில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 16பேர் காணாமல் போயுள்ளனர். இவர்களில் மூன்று சடலங்கள் கடந்த வியாழன் வரை மீட்கப்பட்டன. காணாமல் போனவர்களை மீட்கும் பணிகளில் இராணுவத்தினரும் பொலிஸாரும் ஈடுபட்டு வருகின்றனர்
களுபான தோட்டத்தில் சுமார் 60 மீட்டர் அகலத்தையும் 150 மீட்டர் நீளத்தையும் கொண்ட மண்சரிவிலேயே இவர்கள் புதையுண்டு காணாமல் போயுள்ளனர்.
இந்த மண்சரிவில் புதையுண்ட 16 பேரில் 4ஆண்கள், 8பெண்கள் மற்றும் ஆறுமாத குழந்தையொன்றும் தரம் 05 மற்றும் 07இல் கல்விபயிலும் சிறுவர்களும் 03வயது சிறுமியும் புதையுண்டனர். மீட்கப்பட்ட சடலங்களில் ஒரு குழந்தையும் இரு ஆண்களும் அடங்கும்.
இந்த தோட்டத்தில் ஆறு லயன் காம்பராக்கள் மண்ணில் புதையுண்டதுடன் மேலும் 28 வீடுகள் சேதமடைந்துள்ளன. மேலும் மண்சரிவு ஏற்படும் அபாயத்தையடுத்து 100 பேர் வரையில் பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றப்பட்டு புளத்கோஹுபிட்டிய அக்கல வித்தியாலயத்தில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான நிவாரணங்களை வழங்குவதற்கு பிரதேச செயலாளர்கள் ஊடாக நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது.
பலாங்கொடை, இம்புல்பே பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் புதையுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், கம்பளை அட்டபாகை மொரகொல்ல தோட்டத்தில் நான்கு வீடுகள் மண்ணில் புதையுண்டதால் அந்த வீடுகளில் வசித்து வந்தவர்கள் சனசமூக நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தெல்தோட்டையில் தொழிலாளர்களின் குடியிருப்புகளில் வெடிப்புக்களுடன் நீர்க்கசிவு ஏற்பட்டதையடுத்து அங்குள்ள மக்கள் வெளியேறி பாடசாலை கட்டடமொன்றில் தஞ்சமடைந்துள்ளனர். நோர்வூட் வெஞ்சர் தோட்டத்தில் 12 குடும்பங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளன. மஸ்கெலியா நல்ல தண்ணீர் பிரதேசத்திலும் பல சேதங்கள் ஏற்பட்டன. புஸல்லாவை, ஹட்டன், நுவரெலியா போன்ற பிரதேசங்களிலும் ஆங்காங்கே மண்சரிவுகள் ஏற்பட்டன.
நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக மேலும் பல இடங்களில் மண்சரிவு ஏற்படும் அபாயங்கள் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தவிர, இரத்தினபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டன. குறிப்பாக பலாங்கொடை பெட்டிகல தோட்டத்தில் மண்சரிவு அபாயம் காரணமாக 26 குடும்பங்கள் அவர்களது குடியிருப்புகளிலிருந்து தற்காலிக கூடாரங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளன.
பதுளை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் பல இடங்களில் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. எல்ல வெல்லவாய, ஹப்புப்தளை, இதல்கஸ்ஹின்ன, வெலிமடை, நமுனுகுல, பசறை, ரோபெரி, லுணுகலை, ஸ்பிரிங்வெளி ஆகிய பிரதேசங்களில் மண்சரிவுகள் ஏற்படும் அபாயம் நிலவுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கண்டி மாவட்டத்தின் கம்பளை, நாவலப்பிட்டி, புஸல்லாவை, தெல்தோட்டை, ஹேவாஹெட்ட போன்ற பகுதிகளிலும் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.
ஏற்கனவே, ஊவா, சப்ரகமுவ, மத்திய மாகாணங்களில் பல்வேறு இடங்களில் மண்சரிவுகள் ஏற்படும் அபாயம் நிலவுவதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை மிகவும் கவனத்தில் கொள்ளவேண்டியதொரு விடயமாகும். பெரும்பாலும் மலையகப் பிரதேசங்களிலேயே மண்சரிவு அபாயங்கள் நிலவுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அனர்த்தங்கள் திடீரென ஏற்படுபவை. மண்சரிவு ஏற்படும் இடங்கள் பற்றி தேசிய கட்டட ஆராய்ச்சி நிலையம் ஆய்வுசெய்தே அதன் பெறுபேறுகளை வெளியிடுகிறது. எனவே, அவ்வாறான ஆய்வறிக்கைகளின்படி நடவடிக்கை எடுக்கவேண்டியது பொறுப்புவாய்ந்த அதிகாரிகளின் கடமையாகும்.
–தொகுப்பு: என். நெடுஞ்செழியன், இ.சதீஸ்)
நன்றி - veerakesari
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...