அரசியலில் கட்சி விட்டுத் கட்சி தாவுவது என்பது காலம் காலமாக நடைபெற்று வரும் நிகழ்வுகளாகும்.எந்த ஒரு கட்சியும் இதிலிருந்து தப்பியதில்லை. மலையகமும் விதிவிலக்கல்ல. வாக்குரிமை வழங்கப்பட்ட பின் இது மிகவும் சகஜமாகி வருகிறது. மலையக அரசியல் இந்தியாவை குறிப்பாக தமிழகத்தைப்பின்பற்றியதாகவே இருப்பதைக் காணலாம்.
தொப்புள் கொடி உறவு என்று நாமாகவே கூறிக்கொண்டு அனைத்து அம்சங்களையும் தமிழகத்தில் இருந்துதான் இறக்குமதி செய்கிறோம். வெள்ளையர்கள் எம்முன்னோரை மட்டும் அங்கிருந்து நாடு கடத்தவில்லை. சமயம், கலை, கலாசாரம், பழக்க வழக்கங்கள் எல்லாவற்றையுமே கப்பலில் ஏற்றி விட்டார்கள்.
இந்தியாவுக்கு சுதந்திரம் பெற்றுத்தந்த காங்கிரஸ் இலங்கை மற்றும் மலேசியாவிலும் உருப்பெற்றது. சுதந்திரத்திற்கு ஜே, நேருஜிக்கு ஜே என்ற கோஷங்கள் இங்கும் எழுந்தன. இப்போது 'ஜெ'க்கு (ஜெயலலிதா) ஜே என்ற கோஷத்தை எழுப்புகிறார்கள். மலையகத்தில் வீடுகள் தோறும் காந்தி, நேரு, சுபாஷ் சந்திரபோஸ் படங்கள்தான் நிறைந்திருக்கும். நகரங்களிலும் வர்த்தக நிலையங்கள். உணவகங்களுக்கும் இந்திய பெயர்களே சூட்டப்பட்டன. இன்றும் பல இடங்களில் அதனை காண லாம்.
1967 தமிழக சட்டமன்றத் தேர்தலில் அறிஞர் அண்ணா தலைமையில் திராவிட முன்னேற்ற கழகம் (தி.மு.க.) உருவாகி கூட்டணி அமைத்து காங்கிரஸ் ஆட்சியை உருத்தெரியாமல் ஆக்கியது. கர்மவீரர் என்ற புகழ் பெற்றிருந்த கிங் மேக்கர் காமராஜரை பதினேழு வயது பட்டதாரி சீனிவாசன் படுதோல்வி காணச்செய் தார்.
கடந்த ஐம்பது ஆண்டு காலமாக காங்கிரஸ் கட்சியால் அங்கு மீண்டெழ முடியவில்லை. தி.மு.க. அல்லது அ.தி.மு.க. கட்சிகளுடன் கூட்டு சேராமல் பத்து பேரைக்கூட சட்டமன்றத்துக்கு அனுப்ப முடியாமல் குஷ்பு போன்ற நடிகைகளை நம்பி காலந்தள்ளுகிறது காங்கிரஸ்.
மலையகத்தில் 'காங்கிரஸ்' என்ற கட்சியை கூறு போட பலர் முயற்சிகளை மேற்கொண்ட போதும் தி.மு.க. வைப் போல புயலுக்கும் மழைக்கும் வெய்யிலுக்கும் தாக்குப்பிடித்து அக்கட்சி நிலைத்து நிற்கிறது. மலையக மக்களை அமைப்பு ரீதியாக ஒன்றுபடுத்திய நடேசய்யர் போன்றவர்களை மறந்துவிட்டு மேலே செல்ல முடியாது. ராஜலிங்கம் சோமசுந்தரம், சி.வி.வேலுப்பிள்ளை, வீ.கே. வெள்ளையன், அஸீஸ் போன்ற பலர் காங்கிரஸின் ஆரம்ப கால வளர்ச்சிக்கு பாரிய பங்களிப்பை வழங்கி இருந்தனர்.
சௌமிய மூர்த்தி தொண்டமான் தனது இறுதிக்காலம் வரை காங்கிரஸை பல்வேறு பரிமாணங்களுக்கு இட்டுச்சென்றார். ஒரு தோட்டத்தில் தொழிலாளர்கள் ஆறு மாத கால தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர். தனது சொந்தப் பணத்தில் அவர்களுக்கு உணவளித்தார்கள் என்று கூறுவார்கள.
அரசியல் அந்தஸ்து கிடைத்தபின் தோட்டத்தொழிலாளர்கள் பலரை பாராளுமன்றத்திற்கும் மாகாண சபைகள் மற்றும் பிரதேச சபைக்கும் அனுப்பி வைத்தார். அவரது மறைவிற்குப்பின் ஆறுமுகன் தொண்டமான். அமைப்பை சீர்குலையாமல் கட்டிக்காத்து வருகிறார் என்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.
பலர் கட்சியை விட்டு வெளியேறிச்செல்வதும் சகஜமாகி வருகிறது. கட்சி சார்பில் தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெறுவார்கள். எந்த மக்கள் தங்களுக்கு வாக்களித்தார்களோ அவர்களின் அனுமதி ஏதும் இல்லாமலேயே அடுத்த கட்சிக்குத் தாவுவார்கள் அல்லது புதிய கட்சி அமைப்பார்கள்.
தன்னை வளர்த்த கட்சிக்கோ தலைமைக்கோ விசுவாசம் இல்லாமல் வாய்க்கு வந்தபடி தாறுமாறாக வசைபாடுவார்கள். 'வளர்த்த கடா மார்பில் பாய்வது' என்பார்களே அதுபோல் இவர்கள் நடந்து கொள்வார்கள்.
தேர்தல்களில் தோற்றபின் ஞானம் வந்ததைப்போல எந்தவிதமான மனக்கிலேசமும் இல்லாமல் மீண்டும் தாய்க்கட்சிக்குத் திரும்புவார்கள்.
தலைமைகளும் பல்வேறு காரணங்களுக்காக பாவமன்னிப்பு வழங்கி ஏற்றுக்கொள்ளும். வாக்களித்த மக்களும் வெட்கம், வேதனை எதுவும் இல்லாமல் மீண்டும் கூடிக் குலாவிக் கொண்டு மீண்டவர்கள் வீசுகின்ற எலும்புத் துண்டுகளுக்காகவும் பிச்சைக்காகவும் வாலா ட்டிக்கொண்டு இருப்பார்கள். ஊருக்கும் வெட்கமில்லை யாருக்கும் வெட்கமில்லை என்று இவர்களைப்பார்த்ததுதான் பாட்டெழுதினார்களோ தெரியவில்லை.
காங்கிரஸ் மட்டுமல்லாது மலையகத்தில் உள்ள பல கட்சிகளிலும் இது நடைபெற்று வருகிறது. ஆனால் காங்கிரஸ் கட்சி சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பித்த காரணத்தால் அங்கு நடைபெறும் பிளவுகளும் பிரிவுகளும் பளிச்செனத் தெரிகிறது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஜனாப் அஸீஸ் தலைமையில் ஜனநாயகத்தொழிலாளர் காங்கிரஸ் என பிளவுபட்டது. இது பாரிய தாக்கத்தை அப்போது ஏற்படுத்தி இருந்தது. ஐ.தே.க. ஆட்சிக்கு வந்தால் தொண்டமான் நியமன எம்.பி. ஸ்ரீல. சுதந்திரக்கட்சி ஆட்சியில் அஸீஸ் நியமன எம்.பி! என தேசிய அரசியலிலும் இது எதிரொலித்தது.
பின்னர் வீ.கே.வெள்ளையன் வெளியேறி தொழிலாளர் தேசிய சங்கத்தை ஆரம்பித்தார். இன்றளவும் அக்கட்சி இயங்கி வருவதை அறிவோம். வெள்ளையன் இ.தொ.கா.விலிருந்து போனவர் என்றாலும் தற்போதைய தலைவர் அமைச்சர் திகாம்பரம் எந்தக் காலத்திலும் இ.தொ.கா.வில் இருந்தவர் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. துணிந்து சவால்விட அவருக்கு முடிகின்றமைக்கு அதுவும் ஒரு காரணம்தான். மலையக மக்கள் முன்னணியின் சந்திரசேகரன் இ.தொ.கா.வில் இருந்தவர்தான்.
மாகாண சபை மற்றும் பாராளுமன்ற தேர்தலின் போது அவருக்கு இடம் வழங்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டமையே முன்னணி தோன்றக் காரணமாயிற்று. இளைஞர்கள், யுவதிகளைக் கவரக்கூடிய வகையில் அவரது செயற்பாடுகள் இருந்த காரணத்தால் இன்றளவும் முன்னணி அரசியலில் நீடிக்கிறது.
இ.தொ.கா.வின் நீண்டநாள் செயலாளர் எம்.எஸ்.செல்லசாமி பிரிந்து தனித்தொழிற்சங்கம் ஆரம்பித்த போது எழுந்த சலசலப்பு நீடிக்கவில்லை. இ.தொ.கா.வில் செல்வாக்கு மிக்கவர்களாக விளங்கிய பி.பி.தேவராஜ் டி.வி. சென்னன், ஏ.எம்.நாஜன் வாசன், எஸ்.சதாசிவம், எஸ்.ராஜரட்ணம் போன்றோர் இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியை ஆரம்பித்தனர்.
சவால் விடுக்கும் அளவு இம்முன்னணி இல்லை. தற்போது சதாசிவம் மட்டுமே முன்னணில் இருக்கிறார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸுக்கு சவால் விட்டு முதல் தடவையாக 6 பேர் எதிரணியில் வென்றுள்ளனர்.
தமிழ் முற்போக்கு முன்னணி இந்த சாதனையை செய்துள்ளது. காங்கிரஸில் இருந்து வெளியேறியவர்களினால் ஆரம்பிக்கப்பட்ட ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய சங்கம், இணைந்த கூட்டணியே தமிழ் முற்போக்கு கூட்டணி.
தாவுவதற்கு இரண்டு பலமான அமைப்புகள் இருப்பதால் இங்கிருந்து அங்கும் அங்கிருந்து இங்குமாக பலர் கட்சி மாறிய வண்ணமுள்ளனர். எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தலே இவர்களின் முக்கிய குறிக்கோளாக இருப்பதாகத் தெரிகிறது. தொழிலாளர் தேசிய சங்கத்தின் நீண்டகால தலைவர் அய்யாத்துரை இ.தொ.கா. மே தின மேடையில் அமர்ந்திருந்தார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இராஜதுரையும் அவரோடு இணைந்து கொண்டிருந்தார். நுவரெலியா பிரதேச சபையின் முன்னாள் தலைவர் மலையக மக்கள் முன்னணியின் சதாசிவமும் அங்கு பிரசன்னமாகி இருந்தார்.
தொழிலாளர் தேசிய சங்கத்தில் ஏற்கனவே பலர் சேர்த் திருந்தார்கள். முன்னர் அமைச்சர் திகாம்பரத்தோடு இருந்த மாகாண சபை உறுப்பினர் உதயா மீண்டும்
த.மு.கூ. மே தின மேடையில் இருந்தார். அமைச்சரின் வீடமைப்பு திட்ட திறப்பு விழாக்களிலும் இவர் முன் னிலை வகிக்கிறார்.
சிறு சிறு கட்சிகளையும் தொழிற்சங்கங்களையும் வைத்துக்கொண்டு மக்களைப் பிளவுபடுத்திக் கொண் டிருக்காமல் ஓரணியில் திரள்வது வரவேற்கத்தக்கது என்கிறார்கள் மக்கள்.
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...