Headlines News :
முகப்பு » , , , , » அநகாரிக்க அன்றிட்ட அத்திவாரம்! (1915 கண்டி கலகம் –33) - என்.சரவணன்

அநகாரிக்க அன்றிட்ட அத்திவாரம்! (1915 கண்டி கலகம் –33) - என்.சரவணன்

 

அநகாரிக்க தர்மபால கைது செய்யப்பட்ட விதம், அதன் பின்புலம், ஆங்கிலேயர்கள் இலக்கு வைத்ததற்கான காரணங்கள் குறித்து பார்த்தோம். அநகாரிக்க தர்மபால முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துருவாக்கத்தை சித்தாந்தமயப்படுத்துவதிலும், அதனை உறுதியாக நிலைகொள்ளச் செய்வதிலும், பரப்புவதிலும், ஐதீகமாக புனைவதிலும் பாரிய பாத்திரமாற்றினார். அந்த பாத்திரம் இந்த கலவரத்திற்கான அத்திவாரங்களில் ஒன்றாக இருந்தது உண்மையே.

இந்தத் தொடரில் அநகாரிக தர்மபாலாவின் பாத்திரம் முக்கியமாக குறிப்பிடப்பட வேண்டியவை என்பதால் பகுதி பகுதியாக வெளியிடப்பட்டு வந்தது. குறிப்பாக அவர் ஏனைய இனங்கள், மதங்கள், குறித்து வெளியிட்ட கருத்துக்கள் அத்தனையும் விரிவஞ்சி மட்டுபடுத்தியிருக்கிறேன். பதிவு பெறவேண்டியதன் முக்கியத்துவம் கருதி சில குறிப்புகளை மட்டும் பதிவு செய்கிறேன்.

சிங்கள பௌத்தர்கள் மத்தியில் அவரது கருத்துகளுக்கு இருந்த செல்வாக்கு அன்றைய காலத்தில் மாத்திரமல்ல ஒரு நூற்றாண்டின் பின்னரும் கூட அப்படியே தான் இருக்கிறது. இன்றும் ஏனைய இனங்களுக்கு எதிரான வெறுப்புணர்ச்சிக்கு பயன்படுத்தப்படும் சுலோகங்கள்; அவர் அன்று வெளியிட்டவற்றிலிருந்து தான் மேற்கோள் காட்டுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அது வெறும் முஸ்லிம்களுக்கு விரோதமாக மட்டுமல்ல ஏனைய இனத்தவர்களுக்கும், மதத்தவர்களுக்கும் எதிராகவும் தான்.

சிங்கள பௌத்தர்களே மண்ணின் மைந்தர்கள், மற்றவரெல்லாம் அந்நியர், வந்தேறு குடிகள், அரசியல், பண்பாட்டு ஆக்கிரமிப்பாளர்கள், அவர்கள் அனைவரும் சிங்கள பௌத்தர்களாக ஆக்கப்படவேண்டும் என்பன போன்ற கற்பிதங்களை உருவாக்கி நிலைபெறச் செய்ய அதிக பிரயத்தனம் கொண்டார். மதுவொழிப்பு இயக்கத்துக்கு ஊடாக ஒரு தலைமையாக அவர் உருவெடுத்த போதும் இலங்கையின் சுதந்திர இயக்கத்தின் தலைமையை அவர் எட்ட இயலாமல் போனமைக்கு அவரது இந்த வகுப்புவாத போக்கு தான் முக்கிய காரணமானது. அன்றைய “படித்த, உயர்குடித்” தலைவர்கள் அவரது தலைமையை ஏற்றுக்கொள்ளவில்லை. அதற்கான காரணம் அவர் ஏனைய சமூகங்களிலிருந்து அந்நியப்பட்டு இருந்தார் என்று பிரபல வரலாற்று ஆசிரியர் கே.எம்.டி.சில்வா தனது “இலங்கை வரலாறு” என்கிற நூலில் விளக்குகிறார். அவரின் பாத்திரம் வெற்றிகரமான உச்சகரமான காலமாகக் கருதப்படுவது 1912 - 1914 இந்தக் காலப்பகுதியில் தான் மதுவொழிப்பு இயக்கத்தை உச்ச அளவில் பயன்படுத்தி ஏனைய சிங்களத் தலைவர்களையும் சேர்த்துக்கொண்டு ஆங்கில எதிர்ப்பை முன்னெடுத்தார். நாடெங்கிலும் அதற்காகவே செய்யப்பட்ட மோட்டார் வாகனத்தில் வலம்வந்தார். இந்தக் காலப்பகுதியில் தான் தேசாதிபதியின் அழைப்பின் பேரின் அவரை சந்திக்க சென்றிருந்த வேளையில் தாமதமாக வந்த தேசாதிபதியை கடுமையாக திட்டிவிட்டு திரும்பிவந்தார். இந்த நிகழ்ச்சி அவருக்கு சிக்கல்களை ஏற்படுத்தும் என்பதை பலர் எச்சரித்திருந்தனர். அதுபோலவே இரகசிய அறிக்கைகளிலும் அவர் எந்த சூழலிலும் கைது செய்யப்படலாம் என்று இருந்தது.


1900 இல் அநகாரிக்க தர்மபால இப்படி எழுதினார்.

“நாட்டின் செல்வ வளத்தை அந்நியர்கள் எடுத்துச் செல்லும்போது எமது “மண்ணின் மைந்தர்களுக்கு”போக்கிடம் எங்கே. இந்நாட்டில் வந்து குடியேறியோர் திரும்பிச் செல்வதற்கு அவர்களுக்கு நாடு உண்டு. ஆனால், சிங்களவர் செல்வதற்கு எந்த நாடும் இல்லை. அந்நியர்கள் குதூகலிக்கும் பொது மண்ணின் மைந்தர்கள் இழப்புக்கு ஆளாவது என்ன நியாயம். இங்கிலாந்துக்கு இரவலர் வருவதைத் தடுப்பதற்கு அந்நியர் தடைச்சட்டம் ஒன்று அந் நாட்டில் உள்ளது. ஆனால் உதவியற்ற, அப்பாவிச் சிங்களக் கிராமவாசி அவரது மூதாதயறது நாட்டின் செல்வத்தைத் திருடும் அந்நிய மோசடியாளருக்கு இரையாகின்றான்.”

அவர் கலவரம் நிகழ்ந்த அதே 1915ஆம் ஆண்டு முஸ்லிம்கள் குறித்து இப்படி எழுதினார்.

“அந்நியரான முகமதியர் ஷைலொக்கிய வழிமுறைகளால் யூதர்கள் போன்று செல்வந்தராய் மாறினார். 2358 வருடங்களாக அந்நிய முற்றுகைகளில் இருந்து நாட்டை காப்பாற்ற இரத்தத்தை ஆறு போல் பெருக்கிய மூதாதையரைக் கொண்ட மண்ணின் மைந்தரான சிங்களவர் பிரித்தானியரின் கண்களில் நாடோடிகளாய்த் தெரிகின்றனர். தென்னிந்திய முகமதியர் இலங்கைக்கு வந்து, வியாபாரத்தில் எத்தகைய அனுபவமுமற்ற, உதாசீனம் செய்யப்பட்ட கிராமவாசியைக் காண்கின்றான். இதன் விளைவு முகமதியன் முன்னேறுகிறார். “மண்ணின் மைந்தன்” பின்தள்ளப்படுகிறான்.” 

24.07.1903 திகதியிடப்பட்ட ஒரு கடிதத்தை இங்கிலாந்து அரசருக்கு எழுதிய கடிதத்தில் ஒரு இடத்தில் இப்படிக் குறிப்பிடுகிறார்.
“பாரம்பரிய வரலாற்றுப் பெருமையை காத்து அற்புதமான இதிகாசத்தைக் கொண்ட ஆரிய வம்சத்து சிங்களவர்கள் அமைதியாக வாழ்ந்து வந்தார்கள்...
முஸ்லிம் மதத்து ஆக்கிரமிப்பாளர்களையும், கிறிஸ்தவர்கள் சிலரையும் திருப்திபடுத்துவதற்காக 2220 ஆண்டு காலமாக இந்த நாட்டில் உறுதியுடன் நிலைபெற்ற மதப் பண்பாட்டு சூழலை சிதைப்பது உசிதமல்ல.
மதுக்கடைகள், இறைச்சிக்கடைகள், அந்நிய மத வழிபாட்டுத் தளங்கள் என்பனவற்றை இந்த பாரம்பரியமிக்க நாட்டிலிருந்து அப்புறப்படுத்துவதே பௌத்தர்களாகிய எங்களின் கோரிக்கை...”

19.08.1911 வெளியான சிங்கள பௌத்தா பத்திரிகையில் இப்படி எழுதுகிறார்.
“இந்த கிறிஸ்தவ பாவக்காரர்கள் இந்தத் தீவை மாட்டிறைச்சி உண்ணச் செய்து சூத்திர, சண்டாள தீட்டுக்குரியவர்களாக ஆக்கி விட்டார்கள். மரக்கல முஸ்லிம்கள் பன்றி இறைச்சி உண்பதில்லை. பிராமணர்களிலும் சில கோத்திரத்துக்குரியவர்கள் காளிக்கு பலி கொடுத்த ஆட்டு இறைச்சியை உண்பார்கள். இப்படியான பாவக்காரர்களோடு சிங்கள பௌத்தர்களும் சேர்ந்து பாவக்கார சோம்பேறிகளாக ஆகிவிட்டார்கள்.”

20.09.1911 சிங்கள பௌத்தயா பத்திரிகையில் தனது கட்டுரையில் இப்படி குறிப்பிடுகிறார்.
“துட்டகைமுனு காலத்தில் சிங்கள இனம் தமிழர்களால் மட்டுமே கொடுமைபடுத்தப்பட்டது. ஆனால் இப்போது ஐரோப்பியர்களாலும், ஹம்பயாக்களாலும், பார்சி, போறா, நாட்டுக்கோட்டை, ஆப்கான் போன்ற பல்வேறுபட்ட பரதேசிகளால் பெரும் இன்னல்களுக்கு உள்ளாகி வருகிறோம்.... இந்த அந்நியர்கள் சிங்களவர்கள் மூடர்கள் என்பதை உணர்ந்து வைத்துள்ளார்கள்.”
11.09.1911 சிங்கள பௌத்தயாவில் இப்படி கூறுகிறார்.
"புறக்கோட்டையில் சிற்றுண்டி, மற்றும் உணவு விற்பனைக் கடைகளின் சொந்தக்காரர்களில் பெரும்பாலானோர் பரவர், பம்பாய், மரக்கல முஸ்லிம் போன்றோரே. ஓலைத்தொப்பி, டை, கொலர், கோட், கவும் போன்றவற்றை விற்பனை செய்யும் பக்கீர் தம்பி, முகமது லெப்பை, பரவர் இனத்து பெரேரா, மிருண்டா, மெல் போன்றவர்கள் கூட அவற்றை அணிவதில்லை. ஆனால் அதை இந்த மோட்டுச் சிங்களவர் அணிகிறார்கள்.... அதனால் தான் இந்த ஹம்பயாக்கள் சிங்களவர்களைப் பார்த்து “சிங்களவர் மூடர்கள்.. பணியாரம் உண்ண சூரர்கள்...” (“சிங்களயா மோடயா, கெவும் கண்ட யோதயா”) என்கிறார்கள்.”
30.12.1911 சிங்கள பௌத்தயாவில் தமிழர் முஸ்லிம்களை இப்படி சாடுகிறார்.
“பரதேசிகளான அந்நிய மிலேச்சத் தமிழர்கள், சோனகர்கள் என்போருக்கு அடிபணிந்து பின்பற்றத் தொடங்கியதிலிருந்து சிங்கள இனம் சரியத் தொடங்கிவிட்டது.”
இதே பத்திரிகையில் இன்னொரு இடத்தில் இப்படி கூறுகிறார்.
“தேயிலை, இறப்பர் உற்பத்தி ஆங்கிலேயர்களின் கைகளுக்கு சென்றுவிட்டது. வர்த்தகம், வியாபாரம் மரக்கல முஸ்லிம்கள், தமிழர்கள் கைகளுக்கு சென்றுவிட்டது. நம்மை அழிக்கும் சாராய வியாபாரத்தை மாத்திரம் சிங்களவர்களால் நடத்தப்படுவது ஏன்..?”
13.01.1912 வெளியான சிங்கள பௌத்தயாவில் “சிங்கள பௌத்த சட்டசபை உறுப்பினர் வேண்டும்!” என்கிற தலைப்பில் எழுதிய கட்டுரையில் இவ்வாறு குறிப்பிடுகிறார்.
“தமிழர்களுக்கு தென்னிந்தியா உண்டு. மரக்கல முஸ்லிம்களுக்கு தென்னிந்தியா, கோச்சி, ஹைதராபாத், மிசர் போன்ற இடங்கள் உண்டு, பறங்கியருக்கு ஒல்லாந்துக்கு போய்விட முடியும். சிங்களவர்களுக்கு இந்தத் தீவை விட்டால் வேறெங்கு இடமுண்டு.”
சிங்கள பௌத்தயா பத்திரிகையை அநகாரிக்க தர்மபாலவின் சீடர்கள் அதனை கிரமமாக வெளிவரும் வகையில் பார்த்துக்கொண்டார்கள். அநகாரிக்க தர்மபால இல்லாத காலங்களில் அவருக்குப் பதிலாக இயங்கியவர்களில் முக்கியமானவர் பியதாச சிறிசேன.

சிங்கள பௌத்தயா பத்திரிகையின் ஆசிரியராக பணியாற்றிய பிரபல எழுத்தாளர் பியதாச சிறிசேன” ஹம்பயாக்களோடும் (மரக்கல முஸ்லிம்களைக் குறிக்கிறது), கொச்சியர்களோடும், வேறு வெளிநாட்டவர்களுடனும் கொடுக்கல் வாங்கள் எதுவும் செய்துகொள்ளாதீர்கள் என்று 1909 இல் எழுதினார். தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும், ஐரோப்பியர்களுக்கும் எதிராக சிங்கள பௌத்தயா பத்திரிகையில் நிறைய எழுதித் தள்ளினார் அநகாரிக்க தர்மபால.

1915 ஆம் ஆண்டு கலவரம் முடிந்த பின் 15.06.1915இல் அவர் எழுதிய குறிப்பில் (தர்மபால கடிதங்கள் – குருகே வெளியீடு) இப்படி குறிப்பிடுகிறார். (கவனிக்க: முதலாம் உலக யுத்த காலம் இது)
“...பிரித்தானியர்களுக்கு ஜெர்மானியர்கள் எவ்வாறோ சிங்களவர்களுக்கு முஸ்லிம்களும் அவ்வாறே. சிங்களவர்களைப் பொறுத்தவரை முஸ்லிம்கள் சமயத்தாலும், இனத்தாலும், மொழியாலும் அந்நியர்களே., பௌத்த சமயம் இல்லாவிடின் சிங்களவர்களுக்கு மரணமே மிச்சம். முழுத் தேசமும் முஸ்லிம்களுக்கு எதிராக எழுச்சியுற்றுவிட்டது. இதற்கு பொருளாதாரம், ஆன்மீகம் என்பனவே காரணங்கள்...”
சிங்கள மக்கள் மத்தியில் இன்றும் நிலவும் பல்வேறு ஐதீகங்களினதும், புனைவுகளினதும் தோற்றம் எங்கிருந்து உருவாகி, உறுதிபெற்றிருக்கிறது என்பதை இத்தகைய கருத்துகளில் இருந்து உணர முடியும்.

இத்தகைய புனைவுகள் ஓரிரு தடவைகள் கூறப்படும் போது அவற்றுக்கு வெறும் திரிபு என்கிற பெறுமானம் மட்டுமே எஞ்சும். ஆனால் தொடர்ச்சியாக மீண்டும் மீண்டும் ஒரே புனைவை பல நூற்றுக்கணக்கான தடவைகள் கூறுகின்ற போது அதற்கு ஒரு நம்பகத் தன்மையும் அந்தஸ்தும் கிடைத்து விடுகிறது. அது பரவலாக சகல மட்டங்களிலும் பரப்பப்பட்டு நிலைநிறுத்தப்பட்டு விடுகிறது. இலங்கையின் இனத்துவ முரண்பாடுகள் கூர்மை பெறுவதற்கும் இன்றும் சிங்கள பௌத்த பெரும்பான்மை மக்கள் இனத்துவேச வழியில் வழிகாட்டப்பட்டிருப்பதும் இத்தகைய பாதையில் தான். இன்று அரச இயந்திரம், சிவில் சமூகம் உட்பட சகல அங்கங்களிலும் சிங்கள, பௌத்த பேரினவாதம் நிருவனமயப்பட்டிருப்பது இந்த போக்கில் தான்.
அனகாரிக்கவின் இறுதிச் சடங்கு

அநகாரிக தர்மபால கல்கத்தாவில் சிறைவைக்கப்பட்டு 6 ஆண்டுகளின் பின்னர் விடுதலை செய்யப்பட்டார். இந்த ஆறு ஆண்டுகளில் அவரது ஒர்மம் கணிசமான அளவு தளர்ந்தது என்றே கூற வேண்டும். அது ஆங்கிலேயர்களுக்கு கிடைத்த சொற்ப வெற்றி எனலாம். 1921 ஏப்ரல் வரை அவருக்கு இலங்கை வரக் கிடைக்கவில்லை. இந்த இடைக்காலத்தில் இலங்கை அரசியலில் இருந்தும் கணிசமான அளவு அந்நியப்பட்டிருந்தார். அது போல இலங்கை அரசியலிலும் பெரும் திருப்புமுனைகளை ஏற்படுத்திய காலமிது. 1915 கலவரத்தின் விளைவுகள், இலங்கை தேசிய காங்கிரசின் உருவாக்கம், மனிங் சீர்திருத்தம் போன்றனவும் இந்த இடைக்காலத்தில் நிகழ்ந்திருந்தன.

தன்னோடு மதுவொழிப்பு இயக்கத்தை முன்னெடுத்தவர்கள் பலர் வெறும் சீர்திருத்தவாதிகளாகவும் குறுகியிருந்தனர். வர்க்க சமரசவாதிகளாகவும் ஆகியிருந்தனர். இதனைக் கண்ட அநகாரிக்க மிகவும் விரக்தியுற்றிருந்தார்.

சிறைமீண்டு அவர் இலங்கை வந்ததும் 20க்கும் மேற்பட்ட கூட்டங்களை அவர் ஒழுங்கு செய்திருந்தார். அவற்றை கண்காணிக்கச் சென்றிருந்த ஆங்கிலப் புலனாய்வுப் பிரிவினரின் குறிப்பைக் கொண்டு அன்றைய IGP வெளியிட்ட இரகசிய அறிக்கைகளில் ஒன்றில் அவர் பற்றி இப்படி குறிப்பிடப்பட்டிருந்தது.

"இன்று அவர் கணக்கிலேடுக்கக்கூடிய நபர் அல்ல. அவரால் எந்தவித தாக்கத்தையும் இப்போது செய்ய முடியாது. அவரைப் பின்பற்றியவர்களும், ஆதரவாளர்களும் இப்போது அவருடன் இல்லை. 1915 க்கு முன்னர் அவர் பலரால் கவரப்பட்ட, பலரை தூண்டக்கூடிய ஒரு தலைவர்."

இப்படி ஆங்கிலேயர்கள் கூட அனாகாரிக்க தர்மபால ஒரு செல்லாக்காசு என்பதை திட்டவட்டமாக நம்பினார்கள்.

பொன்னம்பலம் இராமநாதன் கூட ஆங்கிலேய தேசாதிபதிக்கு எழுதிய கடிதமொன்றில் இப்படிக் குறிப்பிடுகிறார்.
"அவரை நான் இளமை காலத்திலிருந்தே அறிவேன். அவர் ஒரு துறவி. ஆனால் கடுப்புமிக்கவர். அவரது திட்டல்களுக்கு சாதாரணர்கள் மட்டுமல்ல, பௌத்த துறவிகள் கூட விதிவிலக்கல்ல. ஆனால் இந்த நாட்டு மக்கள் கடந்த 20 வருட காலமாக அவருக்கு செவிகொடுக்க விரும்பவில்லை. இலங்கைக்குள் அவரின் தாக்கம் பூஜ்ஜியமே."
இப்படி கூறிய பொன்னம்பலம் குறித்து இருவேறுவிதமான கருத்துக்களை சிங்கள எழுத்துக்களில் காண முடிகிறது. இப்படிக் கூறிய பொன்னம்பலத்தை சிலர் திட்டித் தீர்த்தனர். மற்றைய பகுதியினர் தர்மபாலாவின் விடுதலை செய்யவதற்காக பொன்னம்பலம் முயற்சி செய்தபோது இப்படி எல்லாம் தர்மபாலாவைப் பற்றிக் கூற வேண்டி வந்தது என்றனர்.

அனகாரிக்கவின் "சிங்கள பௌத்தயா" பத்திரிகையை மாத்திரம் நிறுத்தவில்லை. அவரது இனவாத பிரச்சாரங்களும் தொடர்ந்தன. ஆனால் தேசிய அரசியலில் குறிப்பிடத்தக்க தலைமை பாத்திரம் அவரால் வகிக்க இயலாது இருந்தது. வெளிநாடுகளுக்கு விஜயம் செய்து பௌத்த மத பிரச்சாரங்களை மேற்கொண்டார். 1929 இல் தனது சகோதரர் டொக்டர் சீ.ஏ.ஹேவாவிதாரணவின் மரணம் அவரை மிகவும் பாதித்திருந்தது. அவரது இறுதிச் சடங்கின் போது உடலை வீட்டுக்கு கொண்டுவந்ததும் அவர் சிறுபிள்ளையைப் போல அழுதுப் புலம்பினார். அனகாரிக்கவுக்கு எப்போதும் உற்ற துணையாக இருந்தவர் அவரது சகோதரர். தன்னை கொழும்பில் வந்து சந்திக்கும்படி அநகாரிக்க தர்மபாலவிடமிருந்து வந்த தந்திச் செய்தி கிடைத்ததும் வரும் வழியிலேயே அவர் இறந்தார்.

அதன் பின்னர் அதிக காலத்தை இந்தியாவில் புத்தகயாவில் செலவிட்டார். புத்தகயாவை பௌத்தர்களுக்கு மீட்டெடுப்பதில் தொடர்ச்சியாக போராடி வெற்றிபெற்றார். இலங்கைக்கு அவ்வப்போது வந்து போனார். 13.07.1931 அன்று அவர் பௌத்த பிக்குவாக தீட்சை பெற்று சிறி தேவமித்த தம்மபால என்கிற பெயரை தனக்கு சூட்டிக்கொண்டார். தனது இறுதிக் கால விருப்பமாக இருந்தது; அடுத்த ஜன்மத்தில் புத்தர் பிறந்த மண்ணில் பிறக்க வேண்டும் என்பதே. இலங்கையில் அல்ல. அடுத்த இரண்டு ஆண்டுகளில் அதாவது 29.04.1933 இல் அவரது 69வது வயதில் புத்தகயாவில் மரணமானார். இலங்கைக்கு அவரது உடல் கொண்டு வரப்படவில்லை. அதற்குள் அவரது உடல் சேதமடைந்துவிடும் என்பதால் அவறது உடலை இந்தியாவிலேயே தகனம் செய்ததுடன், அஸ்தியின் ஒருபகுதி வாரணாசி இசிபதனாராமயவில் வைக்கப்பட்டது. இன்னொரு பகுதி இலங்கைக்கு கொண்டுவரப்பட்டது.

தொடரும்.


Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates