இலங்கை பெருந்தோட்ட வரலாற்றில் பெரும் பங்கை வகித்தவர்களில் தோட்ட சேவையாளர்களும் உள்ளடங்குவர். ஏறக்குறைய 200 வருட பெருந்தோட்ட வரலாற்றில் பின்னிப் பிணைந்து தொழில் புரிபவர்கள் தோட்ட சேவையாளர்கள். இவர்களின் பிரச்சினையை எந்தவோர் அரசியல்வாதியும் கண்டு கொள்ளாமல் இருப்பது வேதனை அளிக்கின்றது.
காலனித்துவ ஆட்சி காலத்திலிருந்து இவர்களும் பெருந்தோட்டத்துறைக்கு தமது அர்ப்பணிப்பை வழங்கி வந்துள்ளதுடன், தொடர்ந்தும் வழங்கி வருகின்றனர். ஆனால், வேலைக்கேற்ற சம்பளம் கிடைப்பதை தவிர, வேறெந்த வகையிலும் இவர்களுக்கு எவ்வித உதவியோ அல்லது சலுகைகளோ கிடைப்பதில்லை.
இன்று பெருந்தோட்டத்துறையில் தொழில் புரியவர்கள் பெரும்பாலும் தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளே, இவர்கள் தமது வாழ்நாளில் தோட்டத்திற்கு சொந்தமான வீடுகளிலே வாழ்கின்றனர்.
இவர்கள் தோட்டத்திலிருந்து விலகும் போது தமக்கென ஒரு வீடு இல்லாமல் பெரும் பிரச்சினைக்கு முகம் கொடுக்கின்றனர். தமது வாழ்நாளில் சம்பாதித்த பணத்தில் சகல தேவைகளையும் செய்ய வேண்டியுள்ளது. இதனால் இவர்கள் பொருளாதார கஷ்டத்திற்கு ஆளாகி வாழ்கின்றனர்.
அறுபது வயது வரை தோட்டங்களில் வேலை செய்து விட்டு, மீண்டும் தொழில் தேடி அலைகின்றனர். அறுபது வயது வரை குடும்பத்துடன் வாழ்ந்தவர்கள், அறுபது வயதிற்குப் பிறகு குடும்பத்தை விட்டுப் பிரிந்து வெளி மாகாணங்களுக்கு வேலை தேடிச் செல்கின்றனர்.
உதாரணமாக இன்று கொழும்பில் மாடி வீடுகளில் ( F LATS ) பாதுகாப்பு உத்தி யோத்தர்களாகவும் கடைகளில் கணக்கெழுதவும் இன்னும் பல தொழில் செய்து குடும்பங்களை காப்பாற்றுகின்றனர்.
இவர்களுக்கென்று ஒரு காணித்துண்டு இருந்தால் அவர்கள் அதன் மூலம் ஏதாவது வருவாய் தரும் தொழில்களை செய்வர். ஆனால், அவர்களுக்கு சொந்தமான காணி நிலம் இல்லை என்பதால் அவர்களின் இறுதிக்கால வாழ்வு பெரும் துன்பகரத்தில் முடிகின்றது.
இந்நிலை நீடிக்கக் கூடாது என்பதற்காக தோட்ட சேவையாளர்களுக்கு காணி நிலம் வேண்டும் என்ற கோரிக்கை 1977 ஆம் ஆண்டு சுமார் 40 வருட காலமாக சகல அரசியல் வாதிகளிடமும் முன் வைக்கப்பட்டது. ஆனால், அத்திட்டம் எதுவும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.
முன்னாள் பெருந்தோட்ட அமைச்சர் காலஞ்சென்ற ரஞ்சன் விஜயரட்ணவினால் தோட்ட சேவையாளர்களுக்கு கட்டாயம் காணிகள் வழங்கப்பட வேண்டும் என்ற திட்டத்தை கொண்டுவந்து அப்புத்தளை விகாரகலை, கினிகத்தேன, கரேலினா தோட்டங்களிலும் பத்தனை மவுன்ட் வேர்னன் தோட்டத்திலும் காணிகளை ஒதுக்கி பயனாளிகளையும் தெரிவு செய்தார். ஆனால், நம்மவர்கள் திட்டங்களுக்கு எதிராக குரல் எழுப்பியதால் அத்திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை.
ஆனால், இன்று அக்காணிகள் பெரும்பான்மையினர் குடியேறி மாடி வீடுகளாக உயர்ந்து நிற்கின்றன. அதன் பின்னரும் அரசாங்கம் மூலம் தோட்டசேவையாளர் சங்கம் பேச்சுவார்த்தை நடத்தியது. அதன் காரணமாக முன்னாள் பிரதமர் டி. எம். ஜயரட்ணவினால் இதற்கான நடவடிக்கை எடுக்கப்படவிருந்த போது, தாமும் பங்குதாரராக வேண்டும் என பல மலையக தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்தன.
அதன் காரணமாக எட்டு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, தோட்ட சேவையாளர்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டன. ஒவ்வொரு தோட்டத்திலும் காணி பெற தகுதியானவர்களின் எண்ணிக்கையும் பெருந்தோட்ட கம்பனிகள் வழங்கக் கூடிய காணிகளின் தொகையையும் பெற்றனர், ஆனால், அதுவும் பின்னர் நடைமுறைக்கு வரவில்லை. பின்னர் 2014ஆம் ஆண்டு பெருந்தோட்ட அமைச்சராக இருந்த மஹிந்த சமரசிங்க தோட்ட சேவையாளர்களுக்கு காணி வழங்க வேண்டும் என்று கூறி ஒரு திட்டத்தை வகுத்தார்.
மத்துகம நகரில் ஒரு கூட்டமும் தலவாக்கலை தேயிலை ஆராய்ச்சி நிலைய மண்டபத்திலும் கூட்டம் நடத்தி இத்திட்டத்தை நானுஓயா எடின்பரோ ( நீலகிரி ) தோட்டத்திலிருந்து ஆரம்பிக்கப்படுவதாக உறுதி மொழி வழங்கினார். ஆனால், ஆண்டுகள் இரண்டு போய் இதுவரை எவ்வித முடிவும் தெரியவில்லை. கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் காற்றோடு கலந்து விட்டன.
இதன் பிறகு கடந்த ஜனாதிபதி தேர்தலிலும் பின்னர் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலிலும் மலையக அரசியல் வாதிகள் தோட்ட சேவையாளர்களுக்கு தொழிலாளர்களுடன் சேர்ந்து காணிகள் வழங்குவோம் என்று ஒவ்வொரு தேர்தல் மேடையிலும் முழங்கினர்.
அது மட்டுமல்ல, அரசியல்வாதிகள் பாராளுமன்ற தேர்தல் காலத்தில் தோட்ட சேவையாளர்களை தமது காரியாலயங்களுக்கும் வேறு மண்டபங்களுக்கும் அழைத்து விருந்தளித்து வாக்களிக்குமாறு கேட்டனர்.
அப்போது கூட தாங்கள் பதவிக்கு வந்தால் நிச்சயமாக தோட்ட சேவையாளர்களுக்கு காணி கொடுப்போம் என்று உறுதிப்பட கூறினர்.
அதற்குப் பிறகு அவர்கள் யாவரும் வெகு நிதானமாக வாய் திறக்காமல் இருக்கின்றனர்.
இன்று எத்தனையோ தோட்டங்களில் வீடமைப்பு திட்டங்கள் ஆரம்பிக்கப்படுகின்றன. அவ்வாறான திட்டங்களில் ஐந்து தோட்ட உத்தியோகத்தர்களுக்கு காணி வழங்கினால் அதுவே சிறந்த திட்டமாக அமைந்துவிடும். கடைசியாக ஓய்வு பெற்றவர்களை இனங்கண்டு இத்திட்டங்களை நிறைவேற்ற முடியும். இவ்விடயத்தில் மலையக தலைவர்கள் கவனம் செலுத்தவேண்டும். தோட்ட சேவையாளர்களும் வாக்காளர்கள் தான். அவர்களுக்கும் சேவை செய்ய வேண்டிய பொறுப்பு மலையக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமைச்சர்களுக்கும் உண்டு என்பதை மறந்துவிடக் கூடாது
''உப்பென்றும் சீனியென்றும் உள்நாட்டு சேவையென்றும் செப்பித்திரிவார்களடி கிளியே செயலில் செய்தறியாரடி" என்ற பாரதியின் பாடலுக்கு கட்டியம் கட்டிவிடக் கூடாது.
நன்றி - veerakesari
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...