சம்பள உயர்வு விவகாரத்தில் தகுந்த நேரத்தில் அதை ப்பெற்றுக்கொடுப்போம் என இ.தொ.கா கூறி வந்தாலும் தமிழ் முற்போக்குக்கூட்டணியினரோ இம்மாதம் 24 ஆம் திகதி வரை கம்பனிகளுக்கும் அரசாங்கத்திற்கும் காலக்கெடு விதித்து நாடு தழுவிய போராட்டத்திற்கு தொழிலாளர்களை அழைத்துள்ளனர். கடந்த ஒரு வருட காலமாக தொழிலாளர்களின் சம்பள விவகாரம் தொடர்பில் அக்கறையுடன் எத்தனை பேச்சுக்கள் இடம்பெற்றன ? இதில் தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் பிரதிநிதிகள் அரசாங்கம் தருவதாகக்கூறிய 2500 ரூபாவை பெற்றுக்கொடுக்க எத்தகைய அழுத்தங்களை பிரயோகித்தார்கள் என்பதை பார்த்தால் ஒன்றுமே நடக்கவில்லை என்றுதான் கூற வேண்டியுள்ளது. கூட்டு ஒப்பந்தம் காலாவதியாகி ஒரு வருடம் கடந்த நிலையில் அதையும் விமர்சித்துக்கொண்டு தாம் பெற்றுத்தருவதாகக்கூறிய நாளாந்தம் 100 ரூபாவையும் பெற்றுத்தருவதற்குரிய அழுத்தங்களை அரசாங்கத்திற்கு கொடுக்காமல் மே தின மேடையில் தொழிலாளர்களை ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்திற்கு அழைத்தமை நியாயமாக இருக்கின்றதா? ஏற்கனவே ஆயிரம் ரூபா வேதனத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும் என இதே தமிழ் முற்போக்குக்கூட்டணி பிரதிநிதிகள் தலவாக்கலையில் வீதியில் அமர்ந்து கோஷம் எழுப்பி விட்டு படங்களுக்கு போஸ் கொடுத்து விட்டு எழுந்து போய் விட்டனர். தற்போது அதே போன்றதொரு சம்பவம்தான் 25 ஆம் திகதியும் நடக்கப்போகின்றதோ தெரியவில்லை.
பதவியை துறந்தால் என்ன?
இப்படி தொழிலாளர்கள் வீதிக்கு இறங்கினால்தான் அவர்களுக்கு உரிமைகளும் சம்பளப்பிரச்சினையும் தீரும் என்றால் பிறகு எதற்கு அவர்கள் வாக்களித்து பிரதிநிதிகளை பாராளுமன்றிற்கு அனுப்ப வேண்டும்? இதில் கூட்டணியின் தலைவர் மனோ கணேசனை விட்டு விடுவோம் ஏனைய அனைவரும் பெருந்தோட்டத்தொழிலாளர்களின் வாக்குகளினால் பாராளுமன்றத்தை அலங்கரிப்பவர்கள். இப்படியிருக்கும் போது அந்த 2500 ரூபா சம்பளத்தைப்பெற்றுக்கொடுக்க இந்த பிரதிநிதிகள் என்ன செய்தார்கள்? மறுபக்கம் இரண்டு அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர்கள் (மனோ ,திகா) ,ஒரு இராஜாங்க அமைச்சர் (ராதா) 3 பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்டுள்ள கூட்டணி அத்தகைய வலு பெறுவதற்கு பின்புலமாக தொழிலாளர்களே இருந்துள்ளனர் என்பதை தலைவர் மனோ கணேசன் நன்றாக அறிந்திருக்கிறார். தொழிலாளர்களாலேயே நாம் தொழிலாளர்களுக்காகவே நாம் என தேர்தல் மேடைகளில் முழங்கி விட்டு இப்போது தமது பதவிகளை தக்க வைத்து கொண்டு தொழிலாளர்களை அடையாள வேலை நிறுத்தத்திற்கு அழைப்பது நேர்மையானதாக இருக்கின்றதா? உண்மையிலேயே நல்லாட்சி அரசாங்கத்திற்கு இவர்களின் பங்களிப்பு தேவை என்றால் தமது பதவிகளை துறந்து அந்த அழுத்தத்தை பிரயோகிக்கலாமே அதை விடுத்து சுமையை மீண்டும் மீண்டும் ஏன் தொழிலாளர்களின் தலையில் தூக்கி வைக்க வேண்டும்? தாம் கேட்ட தொகை மட்டுமா முக்கியம்?
இதே வேளை தமிழ் முற்போக்குக்கூட்டணியானது தாம் முன் வைத்ததாக கூறும் 2500 ரூபா சம்பளத்தொகையை பெற்றுக்கொடுத்து விட்டால் போதும் என்ற மனநிலையிலேயே இருந்து வருகிறது. அப்படியானால் கூட்டு ஒப்பந்த தொகை வேண்டாம் என்கிறார்களா ?ஏன் அது குறித்து அவர்கள் அரசாங்கத்திடம் பேச முடியாது? கூட்டு ஒப்பந்தத்தை செய்வதற்கு தொழிற்சங்க அமைப்புகள், கம்பனிகள் இருக்கின்றன என்பது உண்மை தான் ஆனாலும் தொழிலாளர்களுக்கு அந்த பக்கம் நியாயமான சம்பளம் கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையை இவர்களும் அரசாங்கத்திற்கு தாராளமாக வைக்க முடியுமே? கூட்டு ஒப்பந்த பேச்சு வார்த்தைகளில் இ.தொ.காவும் ஏனைய அமைப்புகளும் விலகினால் நாம் பேசுவோம் என்று தமிழ் முற்போக்குக்கூட்டணி தெரிவிக்கின்றது நாளாந்தம் 100 ரூபாய் சம்பளத்தையே இவர்களால் பெற்றுக்கொடுக்க முடியாத போது ஆகக்குறைந்தது 800 ரூபா வரை சரி இவர்கள் போவார்களா ? அது மட்டுமன்றி சம்பள உயர்வு பிரச்சினையில் பிரதிநிதிகளின் அணுகுமுறைகள் பற்றி தொழிலாளர்கள் தெளிவாகவே இருக்கின்றனர். இந்நிலையில் கடந்த வரும் முன்னெடுக்கப்பட்ட மெதுவாக பணி செய்யும் போராட்டம் தோல்வியில் முடிந்தது. அதில் தொழிலாளர்களுக்கு நம்பிக்கையில்லை அப்படியிருக்கும் போது ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடத்தி விட்டால் உடனடியாக 2500 ரூபா கிடைத்து விடும் என்பதற்கு என்ன உத்தரவாதம்? இதை தமிழ் முற்போக்குக்கூட்டணி பொறுப்பேற்குமா? இப்படியான பல கேள்விகளுக்கு கூட்டணி பதில் கூற வேண்டியுள்ளது.
நன்றி -(சூரியகாந்தி)11/05/16
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...