மலையக மக்களின் பாரிய பிரச்சினைகளில் ஒன்றாக வீடும் காணியும் காணப்படுகின்றது. இலங்கையில் இவர்கள் நிரந்தரக் குடிகளாக வாழத்தொடங்கி இருநூறு வருடங்களை அண்மித்துள்ளது. எனினும் இம்மக்களுக்கு இன்றுவரையும் ஏனைய சமூகங்களுக்கு இருக்கின்ற வீட்டுரிமை மற்றும் காணியுரிமை என்பன கிடைக்காமலேயே உள்ளது.
1996 ஆம் ஆண்டு அமரர் சந்திரசேகரனின் முயற்சியினால் இம்மக்களுக்கு வீடமைப்புத் திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இது ஏழு பேர்ச் நிலத்தில் தனிவீடுகள் என்ற கொள்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.
இதன்கீழ் சுமார் 30,000 35,000 வீடுகள் வரை அமைக்கப்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த வீடுகள் தோட்டக் காணிகளில் கட்டப்பட்டுள்ளதுடன், 30,000 ரூபா கடன் அடிப்படையில் வழங்கப்பட்டு, அக்கடனை முழுமையாக திருப்பித் செலுத்தி முடிந்தவுடன் வீடுகளுக்கான உறுதிப்பத்திரம் வழங்கப்படும் என அந்நாட்களில் இம்மக்களுக்கு உறுதி மொழிகளும் வழங்கப்பட்டன. எனினும் இவ்வீட்டு உரிமையாளர்களில் 90 வீதத்திற்கும் மேலானோர் இவ்வீடுகளுக்கான கடனை திருப்பிச் செலுத்தி முடித்துள்ளனர். ஆனால், இதுவரையில் ஒரு வீட்டுக்கேனும் காணி உறுதிப் பத்திரம் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், ஏழு பேர்ச் காணி என்பதன் அளவு யாது என்பது அரசியல் வாதிகளுக்கோ அல்லது மக்களுக்கோ விளங்கவில்லை என்பதேயாகும். முதலில் பேர்ச் அளவீடு பற்றி கவனம் செலுத்துதல் வேண்டும்.
அப்போதுதான் 1996 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட காணிகளின் அளவுகளை மக்கள் அறிந்துகொள்ள முடியும். 01 பேர்ச் காணி என்பது 16.25 அடி நீள அகலம் கொண்ட ஒரு பகுதியாகும். அதாவது 264.0625 சதுர அடிகளைக் குறிக்கும். இதுபோன்ற 07 துண்டுகளே 07 பேர்ச் என்பதன் அர்த்தமாகும்.
அவ்வாறாயின் 07 பேர்ச் காணியின் மொத்தப் பரப்புளவு 1848.4375 சதுர அடிகளாகும். இந்த அளவு காணி எந்தவொரு தோட்டத் தொழிலாளருக்கும் வழங்கப்படவில்லை என்பதை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். தோட்டத் தொழிலாளர்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் 3 5 பேர்ச்சுக்கும் இடைப்பட்ட காணித்துண்டுகளே பெருவாரியாக வழங்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. இதனை பார்க்கும்போது இவர்களுக்கு அந்த நாட்களில் வழங்கப்பட்ட காணிகள் 07 பேர்ச் அளவுடையன அல்ல என்பதை விளங்கிக்கொள்ள முடியும்.
இதனைத் தொடர்ந்து 2000 ஆம் ஆண்டளவில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தோட்டத் தொழிலாளர்களுக்கான வீட்டுத் திட்டம் ஒன்றினை ஆரம்பித்தது. இது தொடர்மாடி லயக் குடியிருப்புத் திட்டம் என அறியப்படுகின்றது.
இது முன்னர் மக்கள் வாழ்ந்த லயன் முறை வீடமைப்பு திட்டத்திலிருந்து சற்று மாறுபட்டிருந்தது. ஒரு விராந்தை, ஒரு அறை மற்றும் சமையலறை என்பன அடங்கியிருந்த லயன் வீடும், அரைக்காம்பிரா எனும் மற்றுமொரு வகை லயன் குடியிருப்பில் ஒரு காம்பிரா மற்றும் குசினி என்பன காணப்பட்டன. இதற்கு மேலாக பொதுவில் கட்டப்பட்ட 3 5 பொது மலசலகூடங்கள், பொது குழாய் என்பனவும் காணப்பட்டன.
இந்த வகை குடியிருப்புகளில் மேலே சொன்ன முதலாம் வகை குடியிருப்பானது 10 அடி அகலமும் 32 அடி நீளமும் கொண்டதாக காணப்பட்டன. அதனை பேர்ச் அளவில் பார்க்கும்போது 1.21183 பேர்ச் பரப்பளவினையே கொண்டிருந்தது. இரண்டாவது வகை அதில் அரைவாசியாக காணப்பட்டது.
இதிலிருந்து சற்று மாற்றமான வகையில் அமைக்கப்பட்ட தொடர்மாடி லயன்களில் 01 விராந்தை, ஒரு குசினி, 02 காம்பிராக்கள், மலசலகூடம் மற்றும் குளியலறை என்பன காணப்படுகின்றன. எனினும் நிலப்பயன்பாடு என்பதை பார்க்கும்போது இவ்வீடுகள் 22 அடி நீளம் மற்றும் 11 அகலம் கொண்டதாக உள்ளது. இதனை பேர்ச் அளவில் பார்க்கும்போது 0.91645 பேர்ச் பரப்பளவிலேயே கட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த வீட்டில் முன் விராந்தையில் இருந்தே மேல் மாடிக்கான படிக்கட்டும் செல்கின்றது என்பதோடு இதன் அகலம் சுமார் 2.5 அடிகளாகும்.
அதேபோன்று சமையலறையில் புகைப்போக்கியும் சுமார் 2.5 அடி நீள அகலம் கொண்டவகையில் உருவாக்கப்பட்டுள்ளமையும் கவனத்தில் கொள்ளல் வேண்டும். இதன்படி பார்க்கும்போது இந்த வீடமைப்புத் திட்டத்திலும் தொழிலாளர்களுக்கு 07 பேர்ச் காணி வழங்கப்படவில்லை என்பதே தெளிவு.
இதற்குப் பின்னர் தற்போது ஆட்சியில் உள்ள நல்லாட்சி அரசாங்கம் மீண்டும் தோட்டத் தொழிலாளர்களுக்கு 07 பேர்ச் காணியில் சொந்த வீடுகளை அமைத்துக் கொடுப்போம் என்ற வாக்குறுதியினை வழங்கி 16 மாதங்கள் நிறைவடைந்துள்ளது. கடந்தவருடம் ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி பதவியேற்ற புதிய அரசாங்கத்தில் மலையக புதிய கிராமங்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சு என்ற புதியதோர் அமைச்சு உருவாக்கப்பட்டு அதன் அமைச்சராக பழனி திகாம்பரம் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த வருடம் நிறைவடையும் வரையில் சுமார் 400 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டப்பட்டதோடு தற்போது ஆங்காங்கே அவை மக்களின் உரிமைக்காக கையளிக்கப்பட்டு வருகின்றமை முக்கியமான அம்சமாகும். இதே காலத்தில் சுமார் ஆயிரம் பேருக்கு 'பசுமைபொன் காணி உறுதி பத்திரம்' என்ற ஒன்றின் மூலம் காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த ஆவணத்தை வாசிக்கும்போது எமக்கு தெரிந்த ஒரு விடயம் இது காணி உறுதிப்பத்திரம் என்பதாகவே இல்லை என்பதேயாகும். இதில் குறிப்பிடப்பட்டுள்ள எல்லை விபரிப்புக்கள், உரிமையாளர் மற்றும் உரிமை வழங்கப்பட்டுள்ள விதம் என்பன அவ்வாறே காணப்படுகின்றன.
இந்தக் காணிகள் அனைத்தும் பெருந்தோட்டக் கம்பனிகளுக்கு குத்தகை அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளதோடு இவற்றை அவர்களின் அனுமதியின்றி இன்னொருவருக்கு உடைமையாக்குவதற்கு முடியாது. எனினும் இங்கு வழங்கப்பட்ட உரித்துப் பத்திரங்களில் அவ்வாறான நிலையே காணப்படுகின்றது.
இது இவ்வாறிருக்க இவர்கள் கட்டிக்கொடுத்திருக்கும் வீடுகள் ஏனைய வீடுகளைவிடவும் சற்று சிறப்பாக உள்ளதோடு இங்கு 01 விராந்தை, 02 படுக்கையறைகள், ஒரு சமையலறை மற்றும் உள்ளக மலசலகூடம், குளியலறை வசதிகள் காணப்படுவதோடு, வெளியில் பெல்கனி என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் நிழல் மாடம் ஒன்றும் உள்ளது. எனினும் இவ்வீடுகள் அமைக்கப்பட்டுள்ள விதத்தினை பார்க்கும் பெரும்பாலான இடங்களில் முதல் வீட்டுக்கும் இரண்டாவது வீட்டுக்கும் இடையில் வெறும் 5 அடிகள் இடைவெளி காணப்படுவதோடு, வீட்டுக்கு போதியளவு முற்றமோ சுயதொழில் செய்கைக்கான இடவசதிகளோ காணப்படவில்லை.
இவ்வீடுகள் 3.5 பேர்ச் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.
இதன்மூலம் தெளிவாவது 21 ஆம்நூற்றாண்டிலும் இத்தொழிலாளர்களுக்கு முழுமையான 07 பேர்ச் காணி என்பதும் கிடைக்காமல் உள்ளது. மேலும் அரசாங்கம் வழங்கிய உறுதி மொழியான 07 பேர்ச் காணியினை அமைச்சர்கள் பெற்றுக்கொடுக்கவில்லை. ஆனால் இவர்கள் வீடுகளை கட்டிக்கொடுக்கிறார்கள். இந்த வீடுகளுக்கும் வீட்டு உறுதிப்பத்திரம் சட்டப்பூர்வமாக வழங்கப்படவில்லை.
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...