இயற்கையின் கோர தாண்டவத்தால் பெருந்தோட்ட தொழிலாளர்கள் அடிக்கடி பல்வேறு பிரச்சினைகளையும், உயிரிழப்புக்களையும், சொத்து இழப்புக்களையும் எதிர்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக மண்சரிவுகள், வெள்ளப்பெருக்குகள், கடும் மழை மற்றும் லயன் அறைகள் திடீர் தீ அனர்த்தங்களுக்கு உள்ளாகுதல் என்பவற்றுடன் மறுபக்கத்தில் தொடர்ந்து கொண்டிருக்கும் குளவி கொட்டல் போன்றவற்றாலும் பாதிக்கப்படுகின்றனர்.
அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் இன்னும் தற்காலிக குடிசைகளில் தமது வாழ்க்கையை நடத்தும் துர்ப்பாக்கிய நிலைமைக்குத் தள்ளப்பட்டிருப்பது கவலைக்குரிய விடயமாகும்.
கொஸ்லந்தை, மீரியபெத்தையில் இடம்பெற்ற கோரமான மண்சரிவைப்பற்றி நாம் இன்னும் மறந்து விடவில்லை.
அதைப்பற்றி தொடர்ந்தும் விவாதித்துக் கொண்டிருக்கும் நிலையில் கடந்த வாரம், அதாவது 25.09.2015 அன்று வெள்ளிக்கிழமை மாலை 2.00 மணியளவில் கொத்மலை பிரதேசத்திற்கு உட்பட்ட இறம்பொடை, வெதமுல்லை பிரிவைச் சேர்ந்த கயிறுகட்டி (லில்லிஸ்லேண்ட்) தோட்டத்தில் பாரிய மண்சரிவு ஏற்பட்டது.
இந்த மண்சரிவில் தோட்டத் தொழிலாளர்களின் லயன் குடியிருப்புக்கள் புதையுண்டதுடன், தொழிலாளர் குடும்பங்களும் மண்சரிவில் சிக்கின. இதில் 7 பேர் சடலங்களாக மீட்கப்பட்டனர்.
மண்ணில் புதையுண்டு மீட்கப்பட்டவர்கள் இன்னும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த அனர்த்தத்தில் 9 குடும்பங்களைச் சேர்ந்த 30 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அந்தப் பகுதியைச் சேர்ந்த சுமார் 300 பேர் அகதிகளாக அன்றைய தினம் கோயில்களிலும், பாடசாலைகளிலும் தங்கவைக்கப்பட்டனர் கொஸ்லந்தை மீரியபெத்தை சம்பவத்திற்கு இன்னும் உரிய காரணங்கள் கண்டுபிடிக்கப்படாமல் இருக்கின்ற ஒரு சூழ்நிலையில் இந்த மண்சரிவு அனர்த்தம் மேலும் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வை கேள்விக்குறியாக்கியுள்ளது.
ஒருபுறத்தில் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதனம் இன்னும் தீர்மானிக்கப்படாமல் இழுபறி நிலையில் இருக்கின்றது.
இப்படி தொடர்ச்சியாக எமது சமூகம் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்த வண்ணம் வாழ்ந்துகொண்டிருக்கின்றது.
குறித்த தினம் பிற்பகல் 2.00 மணியளவில் இந்தப் பகுதியில் பாரிய இடியுடன் கூடிய மின்னல் ஏற்பட்டுள்ளது. வழமைக்கு மாறாக அதிக மழை பெய்துள்ளது. மின்னல் தாக்கிய சில நொடிகளில் பாரிய மண்சரிவு எற்பட்டுள்ளது. இதனை சற்றும் எதிர்;பாராத பாதிப்புக்குள்ளான குடியிருப்பாளர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடியுள்ளனர். ஆனாலும், மண்சரிவு பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டது. உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்த தொழிலாளர்களின் உதவியுடன் மண்ணில் புதையுண்;டவர்களை மீட்கும் பணி ஆரம்பமானது.
அதன்போது 6 சடலங்கள் கிடைக்கப்பெற்றன. அன்றைய தினம் மாலை 5.30 மணியளவில் இராணுவத்தினரும் மீட்புப் பணிகளில் ஈடுபடுவதற்காக அங்கு வருகை தந்தனர்.
ஆனால், அவர்களால் மீட்புப் பணிகளை முன்னெடுக்க முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டது. காரணம் மின்சாரம் முழுமையாக துண்டிக்கப்பட்டிருந்;த காரணத்தால் போதிய வெளிச்சம் இல்லாமல் போய்விட்டது.
எனவே, மீட்பு பணிகளை அடுத்த நாள் மேற்கொள்வதென தீர்;மானிக்கப்பட்டு அன்றைய தினம் மீட்புப் பணிகள் இடைநிறுத்தப்பட்டன. மீண்டும் மறுநாள் மீட்புப் பணிகள் தொடர்ந்தன.
மீட்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு காலை 9.45 மணியளவில் கடைசியாக ஒரு சிறுமியின் சடலம் மீட்கப்பட்டது.
இதன் மூலம் உயிரிழப்பு 7 ஆக அதிகரித்தது. லோகநாயகி (48 வயது), காந்திமதி (23 வயது), எஸ். லட்சுமி (67 வயது), புவனா (6 வயது), சுபானி (9 வயது), அருண் (4 வயது), ரூபினி (2 வயது) ஆகியோரே உயிரிழந்தவர்களாவர்.
இந்த சம்பவத்தையடுத்து லில்லிஸ்லேண்ட் தோட்டம் மட்டுமன்றி மலையகமே சோகத்தில் மூழ்கியது. உயிரிழந்தவர்களின் சடலங்கள் மேற்படி தோட்டத்தின் வாசிகசாலையில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தன.
தோட்ட மக்கள் மட்டுமன்றி வெளியிடங்களிலிருந்தும் பெரும் எண்ணிக்கையானவர்கள் வந்திருந்து அஞ்சலி செலுத்தினர்.
ஞாயிற்றுக்கிழமை மாலை தோட்ட பொது மயானத்தில் சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டன.
அனர்த்தம் இடம்பெற்றதை அறிந்ததும் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் எனப் பலரும் சென்று பார்வையிட்டுள்ளனர்.
இது இவ்வாறிருக்க கொத்மலை பிரதேச செய லாளரிடம் தற்போதைய நிலைமை தொடர்பாக வினவியபொழுது அவர் கூறியதாவது,
கொத்மலை வெதமுல்ல இறம்பொடை கயிறுகட்டி தோட்டத்தில் (லில்லிஸ்லேண்ட்;) ஏற்பட்ட மண்சரிவையடுத்து அந்த பகுதிக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவன அதிகாரிகள் வருகை தந்து, அங்கு ஆய்வுகளை மேற்கொண்டபின்பு 19 குடியிருப்புகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு பிரதேச செயலாளருக்கும், தோட்ட நிர்வாகத்திற்கும் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக நாம் தோட்ட நிர்வாகத்திடம் கேட்டபோது, தேவையான காணியை விரைவாக பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக தோட்ட நிர்வாகம் உறுதியளித்துள்ளது. எனவே அதற்கான ஏற்பாடுகளை நாம் முன்னெடுக்கவுள்ளோம்.
அதேநேரம் குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டு அகதிகளாக தங்கவைக்கப்பட்டிருந்த சுமார் 300 பேரை அவர்களது பாதுகாப்பான வீடுகளுக்கு கடந்த 27ஆம் திகதி அனுப்பி வைத்துள்ளதாகவும், தற்பொழுது 9 குடும்பங்களை சேர்ந்த 30 பேர் வெதமுல்ல வாசிகசாலையிலும், சனசமூக நிலையத்திலும் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும், ஒரு சிலர் தமது உறவினர்களின் வீடுகளிலும் தங்கியுள்ளதாகவும் கொத்மலை பிரதேச செயலாளர் கே.எஸ்.பி.சேனாநாயக்க மேலும் தெரிவித்தார்.
இறம்பொடை தமிழ் மகாவித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தவர்களே இவ்வாறு அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். பாடசாலையின் கற்பித்தல் ;நடவடிக்கையை தடையின்றி கொண்டுசெல்லும் நோக்கத்துடனேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்பொழுது பாடசாலை வழமைபோல இயங்க ஆரம்பித்துள்ளது.
வெதமுல்ல வாசிகசாலை மற்றும்; சனசமூக நிலையம் என்பவற்றில்; ; தங்கவைக்கப்பட்டுள்ளவர்களுக்கு தேவையான உணவு ஏற்பாடுகளையும் அத்தியாவசிய தேவைகளையும் கொத்மலை பிரதேச செயலகமும் தோட்ட நிர்வாகமும் இணைந்து மேற்கொண்டு வருகின்றன.
மேலும் இலங்கை செஞ்சிலுவை சங்கம் மற்றும் சமூக சேவை அமைப்புகளும் மேலதிக உதவிகளை செய்து வருகின்றன. பாதிக்கப்பட்ட 30 பேருக்கும் புதிய ஆடைகளே தற்போது தேவைப்படுவதாகவும், பாவித்த ஆடைகள் கொண்டுவருவதை தவிர்த்துக் கொள்ளுமாறும் பிரதேச செயலாளர் கே.எஸ்.பி.சேனாநாயக்க வேண்டுகோள் ஒன்றை விடுக்கின்றார்.
தோட்ட நிர்வாகமும், கொத்மலை பிரதேச செயலகமும், சம்பந்தப்பட்ட அமைச்சும் இணைந்து உடனடியாக தங்களுக்கான குடியிருப்பு வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
இந்த வேண்டுகோளை மிகவிரைவில் நிறைவேற்றுவதற்கு எமது அரசியல் தலைவர்களும், அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரதும் எதிர்பார்ப்பாக உள்ளது. இதற்கு சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
ஆனால், தொடர்ச்சியாக எமது சமூக உறவுகள் இதுபோன்று மடிந்து கொண்டிருக்கின்றார்கள். இதற்கான தீர்வுதான் என்ன? இன்னும் பல இடங்களில் இவ்வாறான அனர்த்தங்கள்; எதிர்காலத்தில் நிச்சயமாக ஏற்படக்கூடும். காரணம் எமது உறவுகளின் குடியிருப்புகள் அனைத்தும் மழை அடிவாரத்தை அண்டிய பகுதிகளிலேயே அமைந்துள்ளன.
இன்னும் எத்தனை உயிர்கள் இதுபோன்ற அனர்த்தங்களில்; தமது உயிரை பலி கொடுக்க காத்திருக்கின்றனரோ தெரியவில்லை. எனவே, உடனடியாக இதனை ஒரு அவசர நிலையாக கருதி இவ்வாறன அனர்த்தம் நிறைந்த பகுதிகளில் வசித்து வருகின்ற பெருந்தோட்ட தொழிலாளர்களை அங்கிருந்து அகற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இல்லாவிட்டால,; எமது சமூகத்தின் எதிர்கால இருப்பு கேள்விக்குறியாக மாறிவிடும். வீடமைப்பு திட்டம் இன்னும் விரைவுபடுத்தப்பட வேண்டும். அதற்கான திட்டம் தேசிய மட்டத்தில் தயாரிக்கப்பட்டு அமுல்படுத்தப்பட வேண்டும். இதில் கட்சி தொழிற்சங்க பேதங்களை மறந்து அனைவரும் ஒன்றுபட்டு செயலாற்ற முன்வர வேண்டும்.
மேலும் மீரியபெத்தை வீடமைப்பு திட்டம் மந்தகதியில் நடைபெற்றுவருவதாக தகவல்கள் வெளிவருகின்றன. இது தொடர்பாக ஆராய்வதற்கு அண்மையில் அமைச்சர் பழனி திகாம்பரத்தின் உத்தரவின்படி குழு ஒன்று அந்த பகுதிக்;கு விஜயம் செய்து வீடமைப்பு திட்டத்தை விரைவுபடுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...