Headlines News :
முகப்பு » , , , » 1915 கண்டி கலகம்: நூற்றாண்டு நிறைவு – தொடர் - என்.சரவணன்

1915 கண்டி கலகம்: நூற்றாண்டு நிறைவு – தொடர் - என்.சரவணன்


இலங்கையின் முதலாவது சிங்கள - முஸ்லிம் கலவரம் நிகழ்ந்து இந்த வருடத்துடன் நூற்றாண்டு ஆகிவிட்டது. “கண்டிக் கலவரம்” என்று அழைக்கப்படும் அந்தக் கலவரம் இலங்கையின் சரித்திரத்தில் மிகவும் முக்கியமான ஒன்று. இலங்கையின் முதலாவது இனக்கலவரமாக கொள்ளப்படும் அந்த கலவரம் பற்றிய தொடர் இன்று முதல் தொடராக வெளிவருகிறது.

ஆங்கிலேய காலனித்துவ ஏகாதிபத்தியம் இந்த கலவரத்தில் ஆற்றிய பாத்திரம் பல பயங்கரங்களை உட்கொண்டது. தமது பிரித்தாழும் சூழ்ச்சியை பேணி தமது காலனித்துவ இருப்பை உறுதிசெய்வதற்காக இந்த கலவரத்தை சூட்சுமமாக பயன்படுத்திக்கொண்டனர் ஆங்கிலேயர்கள்.

பௌத்த மறுமலர்ச்சிக்கு சிங்கள தேசிய முலாம் பூசப்பட்டு ஏனைய இனத்தவர்களுக்கும், மதத்தவர்களுக்கும் எதிரான வெறுப்புணர்ச்சி ஏற்படுத்தப்பட்டது எப்படி? ஆங்கிலேய ஏகாதிபத்தியத்துக்கு எதிரான எழுச்சியானது ஏனைய சிங்கள பௌத்தர்கள் அல்லாதவர்களுக்கு எதிரான எழுச்சியாக உருமாற்றம் கண்டது எப்படி? இதில் அன்றைய சுதேச நிலப்பிரபுத்துவ வர்க்கத்தின் நலன்கள் என்ன? சுதேசிகளின் இன முரண்பாட்டை பட்டை தீட்டுவதற்கு இந்த கலவரத்தை ஆங்கில காலனித்துவத்துவம் எப்படி பயன்படுத்திக்கொண்டது? அன்றைய உலக சூழல் இந்த கலவரத்துக்கு மறைமுக தாக்கத்தை செலுத்தியது எவ்வாறு?

இதனால் இலங்கைக்கு நேர்ந்த வரலாற்றுப் பக்கவிளைவுகள் என்ன? அன்றைய தேசியவாதத்தின் பேரால் சிங்கள பௌத்த பேரினவாதம் தம்மை கட்டமைத்துக்கொண்டது எப்படி? சோனகர்களாக அறியப்பட்டவர்கள் முஸ்லிம் அடையாள அரசியலுக்குள் தள்ளப்பட்டது எவ்வாறு? சிங்கள தேச உருவாக்கம் தன்னை வடிமைத்துக் கொள்வதற்கும் இந்த கலவரத்துக்கும் உள்ள தொடர்பு என்ன? இது போன்ற விடயங்களை அலசுகின்றது இந்த தொடர்.

சிங்கள பௌத்த தேசியவாதம், இனவாதமாகவும், பேரினவாதமாகவும், பின்னர் அதன் நீட்சியாக பாசிசமாகவும் வரலாற்றுப்போக்கில் மாற்றம் கண்டபடி வளர்ச்சியுற்ற போக்கையும் அதன் பாரதூரமான விளைவுகளையும் நம் நாடு கடந்துவந்திருக்கிறது. இனவாதம் தன்னளவில் பட்டைதீட்டிக்கொண்டு வடிவ மாற்றம் கண்டு வந்த போக்கின் முக்கிய காலகட்டமாக உணரப்படுவது அநகாரிக்க தர்மபாலாவின் காலம். அப்படிப்பட்ட காலகட்டத்தில் நடந்தேறியது தான் கண்டிக் கலவரம்.

இந்த கலவரம் குறித்து ஏராளமான நூல்கள், ஆய்வுக் கட்டுரைகள் வெளிவந்திருக்கின்றன. ஆனால் அவை அனைத்துமே சிங்களத்திலேயே வெளிவந்திருக்கின்றன. அவை பக்க சார்பானதாகவே இருந்திருக்கின்றன. ஆங்கிலத்தில் ஒரு சில நூல்கள் மற்றும் பல கட்டுரைகளும் வெளிவந்திருக்கிறன. அவற்றில் பெரும்பாலானவை சிங்கள சாய்வுடயவை. தமிழில் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சில கட்டுரைகள் வெளிவந்திருக்கின்றன. இன்றுவரை முழுமையான ஒரு தொகுப்பு இந்த கலவரம் குறித்து தமிழில் வெளிவரவில்லை என்றே கூறலாம்.

சிங்கள ஆங்கில மூலாதாரங்களை ஆராயாமல் இதுகுறித்த ஆய்வு சாத்தியமில்லை. அதேவேளை திரும்பத் திரும்ப சிங்கள சாய்வுள்ள ஆய்வுகளே பல நூற்றுக்கணக்கில் வெளிவந்துள்ள நிலையில் அடுத்த நிலை ஆய்வாளர்களுக்கு புனையப்பட்ட தகவல்களும், கருத்துக்களுமே மீண்டும் மீண்டும் கிடைத்தவண்ணமுள்ளன. அந்த புனைவுகளே உண்மை போல அடுத்த சந்ததிக்கு எஞ்சச்செய்கின்ற போக்கு நீடிக்கிறது. அந்த கலவரத்தைப் பற்றிய உண்மையை வெளிக்கொணர்வதற்காவே இந்த தொடர் எழுதப்படுகிறது. தமிழில் இதுவரை வெளிவராத பல தகவல்கள் இந்த தொடரில் முதல் தடவையாக வெளிவரும்.

சுதேச சக்திகளின் இன, மத, வர்க்க நலன்களுக்கும் ஆங்கில காலனித்துவ ஏகாதிபத்தியத்திய நலன்களுக்கும் இடையில் நடந்த போராகவும் ஒரு வகையில் இதனை புரிந்துகொள்ளலாம்.

1883 மார்ச் 25ல் கிறிஸ்தவர்களுக்கும் பெளத்தர்களுக்குமிடையில் ஓர் கலவரம் நிகழ்ந்தது. அதனை கொட்டாஞ்சேனை கலவரம் என்பார்கள். இதனை ஒரு மதக் கலவரமாகவே நாம் குறிப்பிடலாம். 1939 இல் நிகழ்ந்த நாவலப்பிட்டி கலவரத்தை இலங்கையின் முதலாவது சிங்கள-தமிழ் இனக்கலவரமாக அடையாளப்படுத்தப்பட முடியும். ஆனால் முதலாவது இனக்கலவரமாக அறியப்படும் கலவரம் 1915 மே - ஜூன் மாதங்களில் நடந்த இந்த கண்டிக் கலவரமே. நாடு முழுவதும் வேகமாக பரவிய கலவரம் இது. பல நாட்களாக இடம்பெற்ற கலவரம். பல சேதங்களையும், இழப்புகளையும் உருவாக்கியது இது. இராணுவ பலத்தைக் கொண்டு மோசமாக நசுக்கப்பட்ட கலவரம் இது. போதாக்குறைக்கு ஆங்கிலேய ஆட்சியாளர்கள் இதனை நசுக்க இந்தியாவிலிருந்தும் படையினரை இறக்கினார்கள்.

டீ. எஸ் சேனானாயக்கா, ஆர் டயஸ் பண்டாரநாயக்கா, டீ. எஸ் விஜேவர்தனா, டொக்டர் நெயிசர் பெரேரா, ஈ. டீ. த சில்வா, எச் அமரசூரிய, ஏ. எச். மொலமூறே உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் சிறைபிடிக்கப்பட்டார்கள். அவர்களை விடுவிப்பதற்காக சே.பொன்.இராமநாதன் இங்கிலாந்து சென்று பேச்சுவார்த்தைகள் நடத்தி அச்சிங்களத் தலைவர்களை விடுவித்தார். சிறைபிடிக்கப்பட்டவர்களில் சிலருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.  அநகாரிக்க தர்மபால இந்தியாவிலேயே பல வருடங்களுக்கு சிறை வைக்கப்பட்டார். 

இந்த கலவரத்தின் அனுபவங்கள் தமிழ், முஸ்லிம் சிறுபான்மை இனங்களுக்கு ஒரு வரலாற்றுப் பாடமாகும் என்று கூறலாம். அதேவேளை பேரினவாதத் தரப்பும் இது தமது இனத்துக்கு நேர்ந்த கொடுமைக்கு சிறந்த உதாரணம் என்கிறது. இந்த வருடத்தை அனுஷ்டிக்கிறது. இலங்கையின் தேர்ந்த இனவாதியாக அறியப்படும் நளின் டி சில்வா சமீபத்தில் எழுதிய கட்டுரையொன்றில் இப்படி குறிப்பிடுகிறார்.
“...நூறாண்டுகளுக்கு ஒரு முறை சிங்களவர்களின் சுதந்திரம் படிப்படியாக பறிபோயிருக்கிறது. 1815, 1915, 2015 ஆகிய ஆண்டுகள் சிங்களவர்களுக்கு முக்கிய ஆண்டுகள். 1815இல் கண்டி ஒப்பந்தத்தின் மூலம் நம் உரிமைகளை ஆங்கிலேயர்கள் பறித்துக்கொண்டனர். 1915இல் மீண்டும் முஸ்லிம்களை பயன்படுத்தி நம்மை நசுக்கினார்கள் ஆங்கிலேயர்கள். இப்போது 2015 ஜனவரி 8 அன்று எஞ்சியுள்ள உரிமைகளையும் தமிழர், முஸ்லிம்களை பயன்படுத்தி அந்நிய நாடுகள் ராஜபக்சவை வீழ்த்தி தமது நலன்களில் வெற்றிகண்டார்கள்...”
ஆக சிங்கள பேரினவாத தரப்பு இதனை எதிர்மாறாகவே விளங்கிக்கொண்டுள்ளது. பரப்பிவருகிறது. திரித்துவருகிறது.

நூறாண்டுகள் நிறைவின் பின்னரும் கற்ற பாடங்களில் இருந்து நாடு விமோசனம் பெறவில்லை. மாறாக இந்த நூறாவது ஆண்டில் மேலும் அச்சம் தலை தூக்கியிருக்கிறது. பொறுமையும், விட்டுக்கொடுப்புகளும் சீண்டிப் பார்க்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. எனவே தான் இந்த தொடர் அந்த வரலாற்றைப் பதிவு செய்யும் நோக்குடன் தொகுக்கப்படுகிறது. அடுத்த இதழில் சந்திப்போம்.
(தொடரும்...)Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates