Headlines News :
முகப்பு » » பெருந்தோட்ட சமூகத்தில் ஆசிரியர் பணி - இரா.சிவலிங்கம்

பெருந்தோட்ட சமூகத்தில் ஆசிரியர் பணி - இரா.சிவலிங்கம்


ஒரு பிள்ளைக்கு நல்ல பெற்றோரும், நல்ல ஆசிரியரும் கிடைத்து விட்டால் அந்த பிள்ளையின் வாழ்க்கை நல்ல நிலைமையை அடையும் என்பதில் எந்தவிதமான மாற்று கருத்தும் கிடையாது. இன்று நாட்டில் 2,25,000 ஆசிரியர்கள் உள்ளனர். இதில் பெருந்தோட்டப் பகுதியில் சுமார் 10,000 ஆசிரியர்கள் இருக்கின்றனர். காலத்துக்கு காலம் பல்வேறு வகையான ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படுகின்றன.

க.பொ.த உயர்தரத்தில் 3 பாடங்களில் சித்தி பெற்றவர்களே பெரும்பாலும் ஆசிரியர் சேவைக்கு உள்வாங்கப்படுகின்றனர். இவர்கள் பட்டதாரி ஆசிரியர்களாகவும், பயிலுநர் ஆசிரியர்களாகவும், தொண்டர் ஆசிரியர்களாகவும், ஆசிரியர் உதவியாளர்களாகவும் தொடர்ச்சியாக நியமனம் பெற்று வருகின்றனர்.

காலஞ்சென்ற சி.டபிள்யூ.டபிள்யூ. கன்னங்கராவினால்; அறிமுகப்படுத்தப்பட்ட இலவச கல்விக் கொள்கையின் பலன் பெருந்தோட்டச் சமூகத்திற்கு 30 வருடங்களின் பின்னரே கிடைத்தது. இதன் பின்பே மலையக சமூகத்துக்கு கல்வித் துறையில் பிரவேசிக்க வாய்ப்பு கிடைக்கப் பெற்றது.

இந்த 30 வருடங்களின் பின்னடைவு இன்றும் பெருந்தோட்ட மக்களின் வாழ்வியலின் சகல அம்சங்களிலும் வியாபித்துக் கொண்டிருக்கின்றது. அதாவது சமூக, பொருளாதார, அரசியல், கலாசார காரணிகளில் பாரியளவு தாக்கத்தை செலுத்தி வருகின்றது.

ஆசிரியர் தொழிலானது ஒரு புனிதமான, போற்றத்தக்க, மதிக்கத்தக்க, கௌரவமான தொழிலாகும். சில நாடுகளில் ஆசிரியர் தொழில் எல்லோருக்கும் கிடைப்பதில்லை. இவ்வாறான தொழிலை பெற்றுக்கொண்டவர்கள் மிகவும் நேர்மையுடனும் இதய சுத்தியுடனும், அர்ப்பணிப்புடனும், தியாக மனப்பான்மையுடனும், சமூக உணர்வுடனும் இந்த ஆசிரியர் தொழிலை செய்ய வேண்டும். நியமனம் பெற்ற ஆசிரியர்கள், அதிபர்கள், கல்வி அதிகாரிகள், ஆசிரிய ஆலோசகர்கள், கல்விப் பணியாளர்கள், கல்வியோடு தொடர்புடைய உத்தியோகத்தர்களில் எத்தனைபேர் தங்களுடைய சேவைக்காலத்தில் நியாயமாக உழைத்து முழுமனத் திருப்தியோடு ஓய்வு பெறுகின்றார்கள் என்பது கேள்விக்குறியே?
அபிவிருத்தியடைந்த நாடுகளில் ஆசிரியர்கள், பொறியியலாளர்கள், மருத்துவர்கள் போன்றோர் சமமான வாண்மை தொழில் துறையை சார்ந்தவர்களாவர். பிற வாண்மைத் தொழிற்றுறைகளில் தொழிற்றுறையினராக வருவதற்குத் தர நிர்ணயங்கள் இருப்பின் அவை ஆசிரியர்களுக்கும் பொருந்தும்.

இந்த நாடுகளில் ஆசிரியராவதற்குத் தேவையான அடிப்படை தகைமைகள் மற்றும் பயிற்சிகள்பற்றி குறிப்பிடப்பட்டுள்ளன. அந்த தகைமைகளை ஈட்டுகின்றவர்களுக்கே ஆசிரியர் என்ற தொழில் சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை உரிய ஆசிரியர் ஆணைக்குழுவினால் வழங்கப்படுகின்றது. அந்த நாடுகளில் வாண்மைத் தொழில் ஆசிரியராவதற்கு நியமனம் மட்டும் கவனத்தில் கொள்ளப்படுவது இல்லை. அவர் ஆசிரியர் வாண்மைத் தொழில் துறையினராக பதிவு செய்து கொள்வது அவசியமாகும். அனுமதிப் பத்திரம் பெறுவதன் மூலமே ஆசிரியராகலாம். அதன் பின்பு தான் விரும்புகின்ற நகர்ப்புற, கிராமப்புற மற்றும் அதிக பின்தங்கிய பிரதேசமொன்றின் பாடசாலைக்கு நியமனம் பெற்றுச் செல்ல முடியும்.

பாடசாலையொன்றுக்கு ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான முறைமையின் அடிப்படையில் சம்பளம் தீர்மானிக்கப்படும். வெற்றிடங்கள் நிரப்புவதற்கு இலகுவான பாடசாலைகளில் சம்பளம் குறைவாகும். வெற்றிடம் நிரப்ப முடியாதவைகளில் சம்பளம் அதிகமாகும். இந்நிலை எவ்வாறெனில், இலங்கையில் வேலை செய்யும்போது கிடைக்கும் வருமானத்தை விட பல மடங்கு அதிகமாகும்.

சில வருடங்களின் பின்னர் (மூன்று வருடத்தில்) ஆசிரியரின் தொழில் சான்றிதழ் புதுப்பிக்கப்படல் வேண்டும். இதன் பொருட்டு பூர்த்தி செய்யவேண்டிய தகைமைகளை உரிய ஆசிரியர் அறிவதுடன் அவை ஆசிரியர் ஆணைக்குழுவினால் காலத்திற்கு காலம் வெளியிடப்படும்.

ஆனால், இன்று பெருந்தோட்டப் பிரதேசத்திலே 10,000 மேற்பட்ட ஆசிரியர்கள் தொழிலில் உள்ளனர். இதில் எத்தனை ஆசிரியர்கள் தமது ஆசிரியர் சேவையை அர்ப்பணிப்புடன் செய்கின்றார்கள் என்பது கேள்விக்குறியாகும்.

இலங்கையிலுள்ள ஏனைய சமூகங்களோடு சமூக, பொருளாதார, அரசியல், கலாசார காரணி போன்ற சகல அம்சங்களிலும் பின்னடைவை சந்தித்துக் கொண்டு வாழும் பெருந்தோட்டச் சமூகத்தினை கட்டியெழுப்புவதற்கு பெருந்தோட்ட ஆசிரியர் சமூகம் முன்வர வேண்டும் என்ற பொதுவான அழைப்பு விடுக்கப்படுகின்றது.

பெருந்தோட்டப் பிரதேசத்தில் இவ்வாறு எத்தனை ஆசிரியர்கள் தங்களுடைய பாடங்களில் 100 சதவீதப் பெறுபேற்றைக் பெற்றுக் கொடுக்கின்றார்கள் என்பதை ஆய்வு செய்து பார்க்க வேண்டியது காலத்தின் தேவையாகும்.

தரம் 1 – 5 வரையான வகுப்புக்களில் உள்ள ஆசிரியர்களின் கற்பித்தல் ஓரளவு சிறப்பாக இருந்தாலும் பெருந்தோட்டப் பிரதேச பாடசாலைகளில் இன்னும் பல்வேறு குறைபாடுகள் பல்வேறு மட்டங்களில் காணப்படுவதை அவதானிக்கலாம். பாடசாலைகளில் வகுப்பறை கற்பித்தல் நடைபெறுகின்றதே தவிர, தனியான வகுப்பறை, கற்றல், கற்பித்தல் நடைபெற வில்லை என்பது குறிப்படத்தக்கது.

ஒவ்வொரு தனி மாணவனையும் கவனத்தில் எடுத்து அந்த மாணவனின் உடல் உள தேவைகளை அறிந்து கற்பிப்பதுடன், அவனது அறிவு, திறன், மனப்பாங்கு என்பவற்றை கவனத்தில் கொண்டு படிப்பிக்கத் தொடங்குகின்றார்களோ அன்றுதான் அந்த வகுப்பிலுள்ள சகல மாணவர்களும் சிறப்பாக கற்பார்கள்.

சில ஆசிரியர்கள் மிகவும் அர்ப்பணிப்போடும், சேவை மனப்பாங்கோடும் கற்பிப்பதை காணமுடிகின்றது. இவ்வாறான ஆசிரியர்களை கல்வி அதிகாரிகள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள், சமூகத்திலுள்ளவர்கள் ஊக்குவித்து பாராட்டி கௌரவிக்க வேண்டும்.

இன்று ஆசிரியர் சேவையானது ஒரு சமூக ரீதியான சேவையாக இல்லாமல் ஒரு தனிமனித முன்னேற்ற வியாபார ரீதியான சேவையாக மாறிக்கொண்டு வருகின்றது. தனியார் கல்வி கூடங்கள் பல்கி பெருகி விட்டன. ஒரு சில தனியார் கல்வி நிறுவனங்கள் பணத்தையே மையமாகக் கொண்டு கற்பிக்கின்றன. அந்த நிறுவனங்கள் மாணவர்களின் ஒழுக்கம், முன்னேற்றம் என்பவற்றை கவனிப்பது மிகவும் குறைவு. தனக்கு வருமானம் கிடைத்தால் போதும் என்ற மனநிலையில் கற்பிக்கின்றார்கள்.

நகரங்களைப் போன்றே பெருந்தோட்டப் பகுதிகளிலும் தனியார் கல்வி நிறுவனங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு போட்டிப் போட்டுக் கொண்டு தொடங்கினாலும் கூட தேசிய மட்ட பரீட்சைகளிலே மாணவர்களின் பெறுபேற்று வீதம் அதிகரிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு பாடத்திற்கு 300 ரூபா தொடக்கம் 1000 ரூபா வரை கட்டணமாக அறவிடப்பட்டு தனியார் கல்வி நிறுவனங்களில் கற்பிக்கப்படுகின்றன. ஆனால், இந்த பணத்திற்கான சேவையானது அனைத்து மாணவர்களுக்கும் சென்றடைகின்றதா? என்பது கேள்விக்குறியே.

சில ஆசிரியர்கள் தங்களுடைய தனியார் வகுப்புக்களில் மிகவும் கண்ணும் கருத்துமாக கற்பிப்பதாகச் சொல்லப்படுகின்றது. இருப்பினும், பல தனியார் வகுப்புக்களுக்குச் செல்கின்ற மாணவர்களின் க.பொ.த சாதாரணத்தரத்தில் கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம், தமிழ் மொழி, வரலாறு ஆகிய பாடங்களில் சித்தி பெறுகின்ற சத வீதம் மிகவும் தாழ்ந்த மட்டத்தில் காணப்படுகின்றது.

சில ஆசிரியர்கள் தங்களுடைய தனியார் வகுப்பிற்கு கொடுக்கின்ற முக்கியத்துவத்தை பாடசாலையில் தங்களுடைய கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளுக்கு கொடுப்பது இல்லை. ஒரு சில ஆசிரியர்கள் பாடசாலையை ஒரு பகுதி நேர தொழிலாகவும், தனியார் வகுப்புக்களை முழு நேர தொழிலாகவும் கொண்டுள்ளதை அவதானிக்கலாம். பாடசாலையிலேயே அவர்களுடைய தனியார் வகுப்பிற்கான சகல விடயங்களும் ஆரம்பிக்கப்படுவதையும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

பெருந்தோட்டத்துறை பெற்றோர்களும் தங்களுடைய பிள்ளைகளை மேலதிக வகுப்புக்களுக்கு அனுப்பினாலும் பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்களுடைய கல்வித் தகைமைகள், தகுதி, கற்பித்தல் அனுபவங்கள், கற்பிக்கும் முறை, போன்றவற்றை ஆராய்வதில்லை. வெறுமனே ஒருவர் ஏதாவது ஒரு பாடத்திற்கு தனியார் வகுப்பை தொடங்கினால் தங்களுடையப் பிள்ளைகளையும் அதில் சேர்த்து பணத்தைக் கொடுத்து அனுப்புகின்றார்கள். இந்நிலைமை மாற வேண்டும்.

குறிப்பாக, க.பொ.த சாதாரணத் தரத்தில் கல்வி பயிலும் மாணவர்களில் இன்றும் தாய் மொழிப் பாடத்தில் கூட சித்தி பெறத் தவறி விடுவதைக் காணக்கூடியதாக உள்ளது. ஆசிரியர்கள் வெறுமனே தங்களுடைய வாயையும், வெண்கட்டியையும், பாடப்புத்தகத்தையும், மட்டும் நம்பி இருக்கக் கூடாது. மேலதிக அறிவை தினமும் தேட வேண்டும். தொடர்ந்து கற்க வேண்டும். இன்றைய தொழினுட்ப யுகத்திற்கு ஏற்ப தங்களுடைய கற்பித்தல் முறைகளை தயார்படுத்த வேண்டும்.

இலங்கையின் கல்வி கொள்கைப்படி பல்வேறு கற்பித்தல் முறைகள் காலத்துக்கு காலம் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. உதாரணமாக 5E கற்பித்தல் முறையை குறிப்பிடலாம் இந்த முறையை பயன்படுத்தி பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு, இம்முறையைப் பற்றிய பூரணமான அறிவு இல்லாமையினால் அவர்கள் எல்லா பாடங்களையும் வாசித்து விளங்கப்படுத்துவதை தவிர வேறொரு புதிய கற்பித்தல் முறைகளையும் வகுப்ப றையில் காண முடியாதுள்ளது.

பல ஆசிரியர்கள் பெறுபேறுகள் குறைவடையும்போது, மாணவர்கள், பெற்றோர்கள்பற்றி பல்வேறு குறைபாடுகளை முன் வைக்கின்றார்களே தவிர, தம்முடைய ஆசிரியர் தொழிலில் உள்ள கற்பித்தல் முறைகளிலுள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு தவறிவிடுகின்றார்கள். தாம் சம்பளம் பெறுவது சமூகத்தில் கௌரவமாக வாழ்வதற்கு, தம் குடும்பம் சிறப்பாக இருப்பதற்கு, தங்களுடைய பிள்ளைகள் படித்து முன்னேற்றுவதற்கு தன்னை அர்ப்பணிக்க வேண்டும். ஒரு மாணவனுடைய முன்னேற்றத்திலேயே ஆசிரியர் தொழிலின் மகிமை தங்கியுள்ளது.

நன்றி - வீரகேசரி
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates