Headlines News :
முகப்பு » » உள்ளூராட்சி தேர்தலுக்கு முன் மீள்பரிசீலனை செய்யப்பட வேண்டிய தொகுதி நிர்ணயம் - செழியன்

உள்ளூராட்சி தேர்தலுக்கு முன் மீள்பரிசீலனை செய்யப்பட வேண்டிய தொகுதி நிர்ணயம் - செழியன்


நாட்டின் அரச நிருவாகம் ஓரிடத்தில் மட்டும் குவிந்து கிடக்காமல் பிரதேச மட்டத்தில் பன்முகப்படுத்தப்படுதல் வேண்டும் என்ற அடிப்படையிலேயே பிரதேச செயலக முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது. 1989 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக பதவியேற்ற ஆர். பிரேமதாச, இந்தக் குறிக்கோளை அடிப்படையாக கொண்டு பிரதேச செயலக முறைமையினை கொண்டு வந்தார்.

நாட்டில் ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தில் இருந்த ( 1656 – 1796) கச்சேரி முறையை (மாவட்ட செயலகம் ) மாற்றி பிரதேச மட்டத்தில் நிர்வாகம் பன்முகப்படுத்தப்பட வேண்டுமென்ற அடிப்படையிலேயே உதவி அரசாங்க அதிபர் பிரிவு ( A.G.A. Divison ) பிரதேச செயலகங்களாக ( Divisional Secretary Division ) மாற்றியமைக்கப்பட்டன. முன்னர் அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் கச்சேரி என்பனவற்றால் மேற்கொள்ளப்பட்ட பணிகள் அனைத்தும் மாவட்ட செயலகங்களின் கீழ் கொண்டு வரப்பட்டன.

நாட்டிலுள்ள 25 மாவட்டங்களிலும் மொத்தமாக 333 பிரதேச செயலகங்கள் உள்ளன. இந்த மாவட்டங்களில் 3 தொடக்கம் 27 வரையிலான பிரதேச செயலகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி மாவட்டத்தில் குறைந்தளவாக மூன்று பிரதேச செயலகங்களும் குருநாகல் மாவட்டத்தில் ஆகக்கூடுதலாக 27 பிரதேச செயலகங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி மாவட்டம் சுமார் 1237. 11 ச.கி.மீ. பரப்பளவைக் கொண்டுள்ளதுடன் அங்கு ( 2007 கணக்கெடுப்பின்படி ) சுமார் இரண்டு இலட்சம் மக்கள் வசிக்கின்றனர். இங்கு மூன்று பிரதேச செயலகங்கள் இருக்கின்றன. இந்த மாவட்டத்திலிருந்து ஒரு பாராளுமன்ற உறுப்பினர் தெரிவு செய்யப்படுவதுடன் 95 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளையும் கொண்டுள்ளது.
குருநாகல் மாவட்டம் 4812.7 ச.கி.மீ பரப்பளவைக் கொண்டது. மக்கள் தொகை 14,52,369 ஆகும். இம்மாவட்டத்தில் 14 பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவதுடன் 1610 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளையும் கொண்ட மாவட்டமாகும்.

அந்த வகையில் மத்திய மலைநாட்டை உள்ளடக்கிய நுவரெலியா மாவட்டம் பல்வேறு வகைகளில் ஒரு முக்கியத்துவம் பெற்ற மாவட்டமாகக் காணப்படுகின்றது. இயற்கை அமைவு, காலநிலை, பொருளாதார பயிர்ச்செய்கை, சுற்றுலா, அரசியல் உள்ளிட்ட பல்வேறு வகைகளிலும் முக்கியத்துவம் பெறுகிறது. மாவட்டத்தின் மொத்த பரப்பளவு 1,720.5 ச.கி.மீ. ஆகும். இலங்கையின் மொத்த பரப்பளவில் 2.7% வீதத்தை கொண்டுள்ளது.

2012 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி நுவரெலியா மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 7,11,664 ஆகும். எனினும் இந்த மாவட்டத்தில் ஐந்து பிரதேச செயலகங்களே இருக்கின்றன. மாவட்டத்திலுள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப பிரதேச செயலகங்கள் அமையப் பெறவில்லை என்பது வெட்ட வெளிச்சமாகும்.

உதாரணமாக நுவரெலியா மாவட்டத்திலுள்ள நுவரெலியா – மஸ்கெலியா தேர்தல் தொகுதியை எடுத்துக்கொண்டால் அங்கு இரண்டு பிரதேச செயலகங்களே இருக்கின்றன. ஒன்று நுவரெலியா மற்றையது அம்பகமுவ ஆகும். நுவரெலியா பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பிரதேசத்தில் சுமார் 2,12,094 பேரும் அம்பகமுவ பிரதேச செயலக பிரதேசத்தில் 2,05,738 பேரும் வசிக்கின்றனர். சுமார் 2 இலட்சம் பேருக்கு ஒரு பிரதேச செயலகம் என்ற அடிப்படையிலேயே இங்கு அமைந்துள்ளது.

இது மக்கள் தொகைக்கு அல்லது பரப்பளவுக்கு ஏற்ற வகையில் அமையப்பெறவில்லை என்பது வெளிப்படையாகும். எனவே, இந்த பிரதேச செயலகங்களினால் தமது செயற்பாடுகளை இலகுபடுத்த முடியாத நிலைமையே காணப்படுகிறது.

40 ஆயிரம் மக்களை கொண்ட அல்லது 40 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளைக் கொண்டதாகவே ஒரு பிரதேச செயலாளர் பிரிவு அமையப்பெற்றுள்ளது. ஆனால், நுவரெலியா மற்றும் அம்பகமுவ பிரதேச செயலாளர் பிரிவுகளில் இந்த நிலைமை எதிர்மாறாகவே உள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் வெலிஓயா செயலாளர் பிரிவு 6,904 பேருக்காகவும் யாழ்ப்பாண மாவட்டத்தில் நெடுந்தீவு பிரதேச செயலாளர் பிரிவு 3,824 பேருக்காகவும் திருகோணமலை மாவட்டத்தின் மொரவெவ பிரதேச செயலாளர் பிரிவு 7,968 பேருக்காகவும் அமைக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் நுவரெலியா மாவட்டத்தில் புதிய பிரதேச செயலகங்களை உருவாக்குவதற்கு மேலே குறிப்பிடப்பட்டுள்ள மக்கள் தொகை அடிப்படையில் இல்லாவிட்டாலும் குறைந்தபட்சம் 80 ஆயிரத்துக்கு ஒரு பிரதேச செயலகம் என்ற அடிப்படையிலாவது நிறுவ முடியும் நிறுவப்பட வேண்டும்.

அதன் படி புதிய பிரதேச செயலகங்களை ஹட்டன், நோர்வூட், மஸ்கெலியா, தலவாக்கலை, நானுஓயா, கந்தப்பளை போன்ற இடங்களில் அமைத்தால் அப்பிரதேச மக்கள் பெரிதும் நன்மையடைய முடியும்.

தற்போது தலவாக்கலை, டயகம, கந்தப்பளை போன்ற தூர இடங்களிலுள்ள மக்கள் கூட தமது தேவைகளுக்காக நுவரெலியாவிலுள்ள பிரதேச செயலகத்துக்கே செல்ல வேண்டியுள்ளது. அதேபோன்று மஸ்கெலியா, பொகவந்தலாவை, ஹட்டன் பிரதேச மக்கள் அனைவரும் தூர இடத்திலுள்ள கினிகத்தேனைக்கே ( அம்பகமுவ ) செல்ல வேண்டிய நிலைமை காண்படுகிறது. இதனால் பண விரயமும் நேரமும் அதிகமாகின்றது.

பொதுவாக இதனால் தோட்டத்தொழிலாளர்களே பாதிப்புக்குள்ளாகின்றனர். முன்னரெல்லாம் தமது அனைத்துத் தேவைகளுக்கும் தோட்ட நிர்வாகத்தையே தொழிலாளர்கள் நம்பி இருந்தனர். பிறப்பு, இறப்பு, திருமண பதிவு, சுகாதாரம், கல்வி, உணவு என அனைத்தையும் தோட்ட நிருவாகங்களே கவனித்துக்கொண்டன. ஆனால் இவை அனைத்தையும் பெறுவதற்கு தற்போது கிராம உத்தியோகத்தர் மற்றும் பிரதேச செயலகம் என்பவற்றுக்கே செல்ல வேண்டியுள்ளது.

அது மட்டுமின்றி உள்ளூராட்சி மன்றங்கள் மாகாண சபை, பாராளுமன்றம் என்பவற்றுக்கு பிரதி நிதிகளைத் தெரிவு செய்வதற்காக வாக்களிக்கும் உரிமையையும் பெற்றுள்ளனர். எனவே, பிரதேச செயலகங்கள் தமது செயற்பாடுகளை விரிவுபடுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன. எனவே நுவரெலியா மஸ்கெலியா தேர்தல் தொகுதியில் மட்டுமின்றி நுவரெலியா மாவட்டத்தில் அனைத்துப் பகுதிகளிலும் 10 முதல் 12 புதிய பிரதேச செயலகங்களை அமைக்க வேண்டும்.

குறிப்பாக இந்திய வம்சாவளி பெருந்தோட்ட மக்கள் அதிகமாக உள்ள பிரதேசங்களிலும் இது தொடர்பாக மீள் பரிசீலனை செய்யப்பட வேண்டும்.

இவ்வாறான நிலையில் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் அடுத்த வருடம் மார்ச் மாதமளவில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அண்மையில் எதிர்வரும் மார்ச் மாதம் உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடைபெறுமென்று உறுதிபடத் தெரிவித்திருந்தார்.

எனினும் இந்தத்தேர்தல் எந்த முறைமையின் கீழ் நடைபெறுமென்பது பற்றி இதுவரை அறிவிக்கப்படவில்லை. தற்போது நடைமுறையிலுள்ள விகிதாசார தேர்தல் முறையிலா ? அல்லது புதிய தொகுதிவாரி அடிப்படையிலா என்பது பற்றி அறிவிக்கப்படவில்லை.

எந்த முறைமையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறப் போகின்றது என்பது தொடர்பில் பொதுமக்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

நாட்டிலுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக் காலம் முடிவடைந்த நிலையில் அனைத்தும் கலைக்கப்பட்டு தேர்தலை எதிர்கொண்டுள்ளன.

அனைத்து உள்ளூராட்சி மன்றங்களுக்கும் ஒரே சமயத்தில் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படியே எதிர்வரும் மார்ச் மாதம் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான புதிய தேர்தல் முறைமை ஏற்கனவே பராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதற்கமைய மார்ச் மாதம் நடைபெறவுள்ள தேர்தல் புதிய முறைமையில் நடத்தப்பட வேண்டும். இது இவ்வாறிருக்க தொகுதி எல்லை நிர்ணயம் முறையாக மேற்கொள்ளப்படவில்லை என்று முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டன.

இந்த தொகுதி நிர்ணயம் அதாவது எல்லை ஒழுங்கமைப்பில் பக்கச்சார்பு இடம்பெற்றதாக கூறப்பட்டது. இதன் அடிப்படையில் எல்லை நிர்ணயத்தை அரசாங்கம் மீள்பரிசீலனை செய்வதற்கும் தீர்மானித்துள்ளது.

நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற, மாகாண உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளூராட்சித் தேர்தல் எல்லை சீர்திருத்த அமைச்சரவை உபகுழுவை சந்தித்து நுவரெலியா மாவட்டத்தில் எல்லை மீள் திருத்தங்களை மேற்கொள்வதற்கு ஆவன செய்ய வேண்டும்.

இந்த சந்தர்ப்பத்தை தவறவிட்டால் இனியொரு சந்தர்ப்பம் கிடைப்பது அரிது. எனவே இதை மலையகத் தலைமைகள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கட்சி அரசியல் பேதங்களுக்கு அப்பால் இவ்விடயத்தில் மலையக தலைவர்கள் கவனமெடுப்பது அவசியமாகும்.

நன்றி - வீரகேசரி

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates