தோட்டத் தொழிலாளர்களின் லயன் குடியிருப்புக்களுக்குப் பதிலாக புதிய வீடுகளை அமைத்துக்கொடுக்க வேண்டிய காலம் வந்துவிட்டது. லயன் குடியிருப்புக்களின் ஆயுட்காலம் எப்போதோ முடிந்து விட்டது. 200 வருட கால ப.ைழமை வாய்ந்த லயன்கள் இத்தனை வருடங்கள் தாக்குப்பிடித்திருப்பதே பெரிய விடயம்தான்.
அக்கரப்பத்தனை ஊட்டுவள்ளி பிரேமோர் (குடமல்லி) தோட்டத்தில் கடந்த செவ்வாய் இரவு 8.30 மணியளவில் ஏற்பட்ட தீ அனர்த்தத்தினால் 06 இலக்க லயன்குடியிருப்பு தொகுதியிலுள்ள 08 குடியிருப்புக்கள் முற்றாக எரிந்து சாம்பராயின.
முதலாவது குடியிருப்பிலேயே முதலில் தீ ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து ஏனைய குடியிருப்புக்களுக்கும் தீ பரவியுள்ளது. தீயை அணைப்பதற்கு வீட்டு உரிமையாளர்களும் அயலவர்களும் மேற்கொண்ட முயற்சிகளும் பயனற்றுப்போனதாக அங்குள்ளவர்கள் தெரிவித்தனர்.
எனினும் குறித்த சில வீடுகளில் இருந்த பொருட்களை மட்டுமே மீட்க முடிந்ததாக வீட்டு உரிமையாளர்கள் கூறினர். வீட்டு உபகரணங்கள், முக்கிய ஆவணங்கள், தங்க ஆபரணங்கள், உடைகள், வீட்டுப்பாவனைப் பொருட்கள், பிள்ளைகளின் பாடசாலை சீருடைகள், பாடப்புத்தகங்கள் உள்ளிட்ட அனைத்துப்பொருட்களும் தீயினால் சாம்பராகியுள்ளன. இவற்றின் பெறுமதி பல இலட்சங்களாகும்.
தீ விபத்தினால் 8 குடும்பங்களைச் சேர்ந்த 43 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 15 ஆண்கள், 19 பெண்கள் மற்றும் 9 பிள்ளைகள் ஆகியோர் அடங்குவர். உடைமைகளையும் உறைவிடங்களையும் இழந்த இவர்கள் தற்காலிகமாக பிரேமோர் தமிழ் வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான உணவுப்பொருட்கள், பாவனைப் பொருட்கள் போன்றவற்றை அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் அக்கரப்பத்தனை நகர வர்த்தகர்கள் போன்றோர் வழங்குகின்றனர்.
இந்த விபத்து தொடர்பாக அக்கரப்பத்தனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். எனினும் தீ அனர்த்தத்துக்கான காரணம் என்னவென்று இதுவரை அறிவிக்கப்படவில்லை.
பொதுவாக பெருந்தோட்ட லயன் குடியிருப்புக்கள் மிகவும் பழைமை வாய்ந்தவை. பெரும்பாலும் மண் சுவர்களாலும் மரச்சட்டங்களாலும் அமைக்கப்பட்டவையாகும். அது மட்டுமின்றி வெகு இலகுவில் தீப் பற்றக்கூடிய அமைப்பினையும் கொண்டுள்ளன. ஒரு குடியிருப்பில் தீப்பற்றினால் சடுதியான ஏனைய குடியிருப்புக்களுக்கும் தீ பரவும் நிலையைக் கொண்டுள்ளது. ஒரு லயன் குடியிருப்புத் தொடரில் 16 முதல் 24 வரையிலான குடியிருப்புக்கள் உள்ளன. எனவே இலகுவாக தீ பரவும் நிலையே காணப்படுகிறது.
தனித்தனி வீடுகளாக இருந்தால் இவ்வாறான அனர்த்தங்கள் குறைவாகவே இருக்கும்.
கடந்த காலங்களில் டயகம, பொகவந்தலாவை, மஸ்கெலியா, பத்தனை, பூண்டுலோயா போன்ற பல பகுதிகளில் இவ்வாறான அனர்த்தங்கள் பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தியமைக்கு இதுவே காரணமாகும். எவ்வாறெனினும் லயன் தொடர் குடியிருப்புகளுக்குப் பதிலாக தனித்தனி புதிய வீடுகள் அமைத்துக்கொடுக்கப்பட வேண்டியது அவசியம் என்பதை இது போன்ற தீ அனர்த்தங்கள் உணர்த்துகின்றன. எனவே, மலையகத்தில் லயன் முறையை ஒழித்து தனித்தனி வீடுகளை அமைத்துக் கொடுக்கும் திட்டத்தை அரசாங்கம் விரைவுபடுத்த வேண்டும்.
–அக்கரப்பத்தனை நிருபர்
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...