இந்நாட்டில் வாழும் ஒவ்வொரு மனிதனும்
தனது அடையாளத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு தனக்கென்று ஒரு முகவரியைக் கொண்டிருக்கின்றான்.
அவனது அனைத்து கடிதப் போக்குவரத்தும் இதன் மூலம் நிகழ்கின்றது. இது அவனது உரிமையாகும்.
ஆனால், மலையக தோட்டப் பகுதிகளிலுள்ள
தொழிலாளர்கள் நிரந்தர முகவரியின்றி வாழும் நிலையே காணப்படுகிறது. இது பெரும் கவலைக்குரிய
விடயமாகும்.
இவர்களுக்கு ஒரு நிரந்தர முகவரி இல்லாததால்
தபால் விநியோகம்முதல் அனைத்துத் தொடர்புகளுக்கும் பல பிரச்சினைகளை எதிர்கொள்ளவேண்டிய
நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். குறித்த ஒரு நபரின் பெயருக்கு அனுப்பப்படும் கடிதம்
அதே பெயரிலுள்ள இன்னொருவருக்குச் சென்று விடுகின்றது. அவ்வாறு கைமாறிச் செல்லும்
கடிதங்களோ, ஆவணங்களோ
அல்லது காசுக் கட்டளைகளோ திருப்பி கிடைப்பதற்கான வாய்ப்பே இல்லாமல் போய்விடுகின்றது.
சிலவேளை இதனை பெறுபவர் தம்முடையதில்லை என்று அறிந்திருந்தபோதிலும் உரியவரிடம் வழங்குவதில்லை.
படித்த இளைஞர்,
யுவதிகள் தொழில் வாய்ப்புகளுக்கு விண்ணப்பித்து
நேர்முகப்பரீட்சைக்கான கடிதங்கள் வரும்போது அவை குறித்த நேரத்தில் குறிப்பிட்ட நபருக்கு
கிடைப்பதில்லை. இவ்வாறான நிலைமையால் பலர் தொழில் வாய்ப்புக்களை இழந்துள்ளமையும்
சுட்டிக்காட்டத்தக்கது.
இவ்வாறான நிலைமை மலையகத்தில் உள்ள இளைஞர், யுவதிகளின் வேலையில்லாப் பிரச்சினைகளுக்கு
ஒரு காரணமாக உள்ளது என்றால் மறுப்பதற்கில்லை. பொதுவாக, ஒரு தோட்டத்திற்கு ஒரு தபால் விநியோகஸ்தரே சேவையில் ஈடுபடுத்தப்படுகிறார்.
இவர் காலையில் தபால் நிலையத்தில் தபாலைப் பெற்று தோட்ட காரியாலயத்தில் ஒப்படைத்து
விடுவார். அவை மாலை 4.00 மணியளவில் “பெரட்டுகளத்தில்” சம்பந்தப்பட்ட தொழிலாளர்களிடம் ஒப்படைக்கப்படும். இந்த கடிதங்கள், காசுக்கட்டளைகள் உள்ளடங்கலான பதிவுத்
தபால்களும் உரிய நபருக்கு உரிய நேரத்தில் கிடைப்பதில்லை. இதனால் பாதிக்கப்பட்ட
பலர் உள்ளனர். காசுக்கட்டளைகள் மிகவும் பிந்தி கிடைப்பதுடன், பதிவுத் தபால்கள் கிடைக்காமல்போன பல
சந்தர்ப்பங்களும் உண்டு. ஆனால், தேர்தல் காலங்களில் மாத்திரம் தொழிலாளர்களுக்கான வாக்காளர் அட்டைகள்
உரியவர்களிடம் முறையாக கிடைத்து விடுகின்றன. ஏனென்றால், அக்காலத்தில் மேலதிகமாக தபால் ஊழியர்கள் வேலையில் ஈடுபடுத்தப்படுவர்.
தோட்டப்பகுதியில் உள்ள பாடசாலைகளுக்கும்
இந்நிலையே காணப்படுகின்றது. காலையில் தோட்ட தபால் ஊழியர் தபால் நிலையத்தில் தபால்களைப்
பெற்று வந்து தோட்டக்காரியாலயத்தில் ஒப்படைத்ததும் பாடசாலை மாணவர்கள் சென்றுதான்
பெற்றுக் கொள்ள வேண்டும். இங்கு பாடசாலை மாணவர்களும் தபாற்காரர்களாக மாற்றப்படுகின்றனர்.
அதேவேளை, தோட்டப்பகுதிகளை அண்மித்த பிரதேசத்தில் தபால் நிலையம் காணப்படுவதில்லை.
மிக நீண்ட தூரம் சென்று தங்கள் தபால்களை, பெற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. காசுக்கட்டளைகள், பதிவுத் தபால்கள் போன்றவற்றைப் பெற்றுக்கொள்ள
ஒரு நாள் விடுமுறை பெற்றே செல்ல வேண்டியுள்ளது. இதனால் ஒரு நாள் சம்பளத்தை இழக்க
வேண்டியுள்ளது.
தேர்தல் காலங்களில் இவர்களுக்கு பல
பதிவு தபால்கள் வரும். அதைப் பெற்றுக் கொள்ள தபால் நிலையம் சென்றால் அவை கட்சியின்
தேர்தல் விஞ்ஞாபனமாக காணப்படும். இதனால் இவர்கள் ஒரு நாள் சம்பளத்தை இழக்கவேண்டிய
நிலைக்கு உட்படுகின்றனர்.
2003 தொடக்கம் 2004 வரை தோட்ட உட்கட்டமைப்பு
அமைச்சரினால் சுமார் 100 க்கும் மேற்பட்ட முகவர் தபால் நிலையங்கள் பெருந்தோட்டப்பகுதிகளில்
அமைக்கப்பட்டன. அவற்றில் பல தபால் நிலையங்கள் தற்போது மூடப்பட்டுள்ளன. சில திறக்கப்படவே
இல்லை. சில தபால் நிலையங்களுக்கான அத்திவாரம் மாத்திரம் போடப்பட்ட நிலையில் காணப்படுகின்றன.
தற்போது சில முகவர் தபால் நிலையங்கள் வீடுகளாக மாறி உள்ளன.
சிறந்த திட்டமிடலுடன் இவை அமைக்கப்படாததே
இதற்குக் காரணமாகும். புதிதாக திறக்கப்பட்ட தபால் நிலையங்களில் வேலைக்கு அமர்த்தப்பட்ட
சிலர் இன்று தொழில் வாய்ப்புகளை இழந்துள்ளனர். அவர்களுக்கு முறையான சம்பளம் வழங்கப்படாமையே
இதற்குக் காரணம். அரச நிதியில் பல கோடி ரூபாய்களை செலவு செய்து கட்டப்பட்ட இந்த
முகவர் தபால் நிலையங்கள் தற்போது மூடப்பட்டுள்ளன. அதில் உள்ள பொருட்கள் நாசமாக்கப்பட்டுள்ளன.
இவ்வாறான செயற்றிட்டங்கள் மலையக தோட்டப் புறங்களில் ஆரம்பிக்கப்பட்ட போதும் அவை
முறையாக நடாத்தப்படாமையினால் பல செயற்றிட்டங்கள் செயற்பாடின்றி முடங்கி கிடக்கின்றன.
அக்கால தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு
தபால் நிலையங்களை கட்டி தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்கவில்லை. தபால் திணைக்களம்
இவற்றை பொறுப்பேற்காததால் இவை முகவர் நிலையமாக செயற்பட்டு வந்தன. தொழில் புரிவோர்
இதனை சுய தொழிலாக புரிய வேண்டிய நிலையும் அதற்கான நிவாரணம், உதவிகள், முறையான திட்டம் இன்மையும் இதன் பின்னடைவிற்கு காரணமாகும்.
அண்மையில் புதிய நியமனங்கள் வழங்கப்பட்டபோதிலும், அவை இன்னும் முழுமையடையவில்லை. குறிப்பிட்ட
சில தோட்டங்களுக்கு மாத்திரமே தபால் சேவகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதுவும்
வெற்றிபெறவில்லை. இவை அனைத்திற்கும் முக்கிய காரணமாக காணப்படுவது இவர்களின் வீடுகளுக்கு
இலக்கமிடப்பட்டு, முறையாக
முகவரி வழங்கப்படாமையேயாகும்.
முறையான, நிரந்தர முகவரி இல்லாததால்தான் தபால் திணைக்களம் இவ்வளவு காலமாக தனது
சேவையை வழங்கவில்லை என தெரியவருகின்றது. தற்போது நியமனம் பெற்றுள்ள தபால் ஊழியர்களுக்கு
குறிப்பிட்ட நபரிடம் தபால்களை வழங்க முடியாத நிலை தோன்றி உள்ளது. இதற்கு காரணம்
ஒரே பெயரில் பலர் காணப்படுகின்றமையா கும்.
தபால் சேவையை முறையாக செயற்படுத்த வேண்டுமானால்
தோட்டத்தில் உள்ள வீதிகளுக்கு பெயரிட்டு இலக்கமிட்டு தனியான முகவரியை வழங்க
வேண்டும். தற்போது சில தோட்டங்களில் இச்செயற்பாடு அரசசார்பற்ற நிறுவனங்களினால்
செயற்படுத்தப்பட்டுள்ளன. முகவரியே இல்லாமல் காணப்படும் இச்சமுதாயத்திற்கு முகவரியை
பெற்றுக்கொள்ள சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுப்பார்களா?
2008ஆம் ஆண்டு காலப்பகுதியில் மலையகத்தில்
350 தபால் ஊழியர்கள் நியமிக்கப்பட்டார்கள். இவர்களில் மாத்தறை மாவட்டத்தில் 05
பேரும், காலி மாவட்டத்தில்
04 பேரும், இரத்தினபுரி
மாவட்டத்தில் 16 பேரும், கொழும்பு மாவட்டத்தில் 07 பேரும், கண்டி மாவட்டத்தில் 20 பேரும், பதுளை மாவட்டத்தில் 116 பேரும், கேகாலை மாவட்டத்தில் 11 பேரும், நுவரெலியா மாவட்டத்தில் 138 பேரும், மாத்தளை மாவட்டத்தில் 13 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 13 பேரும் அடங்குவர்.
இந்த நியமனம் மலையகத்திற்கு போதுமானதாக
இல்லை. இரண்டாம் கட்டமாக மேலும் தபால் ஊழியர்கள் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டபோதும்
அது தொடர்பில், எந்த அரசாங்கமும்
நடவடி க்கை எதுவும் எடுக்கவில்லை. தற்போது தோட்டங்கள் தோறும் கிராம எழுச்சி திட்டங்கள்
அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம் வீடுகளுக்கு இலக்கமிட்டு பாதைகளுக்கும்
பெயரிட்டு தோட்ட மக்களுக்கு முகவரியைப் பெற்றுக் கொடுக்க முடியும். இதனை சம்பந்தப்பட்டவர்கள்
முன்னெடுக்க வேண்டி யது அவசியமானதாகும்.
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...