கலவரத்துக்கு அடிப்படையான பல்வேறு காரணங்கள் தொழிற்பட்டிருந்த போதும், முஸ்லிம்களின் படிப்படியான தேசிய எழுச்சியின் மீது மேலெழத் தொடங்கியிருந்த வெறுப்புணர்ச்சி சற்று கூர்மையுடன் கவனிக்கப்பட வேண்டியது.
ஒவ்வொரு இனத்தினதும் அடையாள இருப்பை உறுதிசெய்யும் அளவுகோல்களில் அதன் பூர்வீகத் தன்மைக்கு முக்கிய இடம் உண்டு. அப்படிப்பட்ட வரலாற்று அளவுகோல் இனப் பெருமிதங்களையும் கூட கொண்டிருக்க முடியும். முஸ்லிம்களைப் பொறுத்தளவில் மதப் பெருமிதங்களையும் சேர்த்தே கொண்டிருப்பதில் ஆச்சரியம் இல்லை.
முஸ்லிம் மக்களின் அடையாளம் குறித்து ஆழமாக பேசுவது இக்கட்டுரையின் வேலை அல்ல. ஆனால் 1915 கலகம் நிகழ்ந்த காலப்பகுதியில் சிங்கள தேச அடையாளத்தின் பேரெழுச்சியும், முஸ்லிம் தேச உருவாக்கத்திற்கான கூறுகளையும் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.
19 ஆம் நூற்ற்றாண்டின் இறுதியில் தோற்றம்பெற்ற புதிய வர்க்கங்கள் உள்நாட்டில் புதிய பூர்ஷ்வா வர்க்கத்தைத் தோற்றுவித்தது. ஆங்கிலக் கல்வி, தொழிற்துறை வளர்ச்சி என்பனவற்றை நுகர்ந்த மத்திய தர வகுப்பு உருவானது. புதிய வர்க்கங்களின் தோற்றமும் வர்த்தகத்துறையில் எழுந்த போட்டா போட்டியும் இக்காலத்தின் முக்கிய அரசியல், சமூக, பொருளாதார விளைவுகளை ஏற்படுத்தின.
இந்த வர்க்கப் போட்டி தமக்கிடையேயான வர்த்தக போட்டியாக எழுவதற்குப் பதிலாக இன முரண்பாடுகளாக நிலைமாற்றப் பட்டதன் பின்னணி என்ன என்று ஆராய வேண்டியிருக்கிறது. அதே காலத்தில் காலனித்துவத்துக்கும், கிறிஸ்தவ மதத்துக்கும் எதிரான சிறு எழுச்சி அந்நியர்களுக்கு எதிரான மனநிலையாக தோற்றுவிக்கப்பட்டு அதுவே முஸ்லிம்களுக்கும், எதிராக திருப்பப்பட்டதன் பின்னணியில் இந்த வியாபார போட்டி பின்புலத்தில் இயங்கியது. முஸ்லிம்களின் வர்த்தக வளர்ச்சியை சகிக்க மறுக்கும் வர்க்க மனநிலை இன வெறுப்பை நோக்கி திசை திருப்பப்பட்டது.
முஸ்லிம்களின் அடையாளம் பற்றிய ஐதீகங்களும், புனைவுகளும் அந்த காலப்பகுதியில் தாராளமாகவே முஸ்லிம் அல்லாதவர்களால் பரப்பட்டது.
முஸ்லிம்கள் தனியான இனமா அல்லது அல்லது ஏனைய இனங்களோடு கலந்து வாழும் மதக் குழுமமா என்கிற சர்ச்சை நெடுங்காலமாகவே இருந்து வருகிறது. மதத்தோடு சேர்த்து தேசிய அடையாள தனித்துவத்தைக் கொண்ட ஒரே இனமாக முஸ்லிம்கள் உள்ளனர். முஸ்லிம்கள் இஸ்லாமியர்களாகவும், இஸ்லாமியர்கள் அனைவரும் முஸ்லிம்களாகவும் அடையாளப்படுத்தப்படும் தனித்துவமான நிலை முஸ்லிம்களுக்கு உரியது. இலங்கையில் சிங்களவர்கள் அனைவரும் பௌத்தர்களாகவோ, தமிழர்கள் அனைவரும் இந்துக்களாகவோ அடையாளப்படுத்தப்படுவதில்லை.
தமிழ் பேசுவதால் தமிழ் அடையாளத்துக்குள் உள்ளடங்க வேண்டியவர்கள் என்றும் “இஸ்லாமியத் தமிழர்கள்” என்கிற அடையாளத் திணிப்பும் இன்றைய நிலையில் காலாவதியான ஒன்றே.
அடையாள சர்ச்சை
பிரித்தானியர் இலங்கையின் சுதேச மக்களுக்கு அரசியல் பிரதிநிதித்துவத்தை வழங்க முன்வந்த வேளை முஸ்லிம்கள் தமக்கான பிரதிநிதித்துவத்தை கோரினர். ஆனால் சேர் பொன் இராமநாதன் “முஸ்லிம்கள் தனியொரு இனம் அல்ல, தமிழர்களின் வழித்தோன்றல், அவர்களுக்கு பிரத்தியேகமான பிரதிநிதித்துவம் அவசியமில்லை, அவர்கள் “இஸ்லாமிய தமிழர்கள்” என்று குறிப்பிடலாம் என பிரித்தானிய அரசாங்கத்திடம் அறிக்கையிட்டார். இதனை எதிர்த்த ஐ.எல்.எம். அப்துல் அஸீஸ் போன்ற முஸ்லிம் தலைவர்கள் முஸ்லிம்களின் வரலாறு, பூர்வீகம் மற்றும் பாரம்பரியத்தையும் தகுந்த ஆதாரங்களுடன் முன்வைத்தனர்.
இந்த கலவரத்துக்கு கருத்துப் பின்னணியை வளர்த்தெடுத்த அநகாரிக தர்மபால கூட ஹம்பயோ என்று அழைத்ததன் பின்னணியும் அது தான். இன்றைய பொது பல சேனா போன்ற அமைப்புகள் “மரக்கலயோ” என்று நிந்திப்பதன் பின்புலமும் இது தான். ஒரு காலக்கட்டத்தில் இந்த பதங்களுக்கு ஏற்புடைய அர்த்த முக்கியத்துவம் இருந்தன என்பதும் மறுப்பதற்கில்லை.
இவ்வாறு அடையாளப் பதங்கள் எனப்படுவது காலப்போக்கில் அந்த இனத்தினை சாடுவதற்கோ, அவமானத்துக்குள்ளாக்குவதற்கோ, கிண்டல் செய்வதற்காவோ பயன் படுத்தப்பட்டு வந்திருக்கிறது.
“...தமிழர்களும், மரக்கல, ஹம்பயாக்களும், கொச்சிகளும், போறகாரன்கள் அனைவரும் ஒன்றே என கூறுவார்கள்...” என்று இந்த காலப்பகுதியில் அநகாரிக்க தர்மபால குறிப்பிட்டதையும் இந்த இடத்தில் நினைவுக்கு கொண்டுவரலாம்.
தமிழில் சோனகர் (யோனகர்) , (ஆங்கிலத்தில் MOORS), என்கிற பதத்தைத் தவிர சிங்கள மொழியில் யோனக மினிசு , ஹம்பயோ, மரக்கலயோ எனப் பல்வேறு பதங்கள் கொண்டு இலங்கை வாழ் முஸ்லிம்களை அழைத்து வந்திருக்கின்றனர். இதைவிட முகமதியர் என்றும் அழைக்கப்பட்டு வந்திருக்கிறனர்.
தனது சுயத்தைப் பேணுவதற்கான உரிமை அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் போது எழுச்சியுறுவதும், தற்காத்துக்கொள்வதற்காக அடையாளமொன்றின் கீழ் ஒன்றிணைவது ஒன்றும் ஆச்சரியமல்ல. எதிர்கால இருப்புக்காக ஒரு சுய வலிமைக்கான முஸ்தீபு நடக்கவே செய்யும்.
ஐரோப்பியர்கள் கடல் வழிகளைக் கைப்பற்றும் வரை உலகக் கடல் வாணிகம் அராபியர்களிடமே இருந்திருக்கிறது என்று வரலாற்று ஆதாரங்கள் கூறுகின்றன. அவ்வாறு ஏற்பட்ட தொடர்பால் கடற்கரை வணிகர்கள் மதம் மாறி மரக்கலராயர்கள் (மரக்காயர்கள்) ஆனார்கள் என்கின்றன சில ஆய்வுகள். சிங்களத்தில் “மரக்கல மினிசுன்” என்று அழைப்பதற்குப் பின்னால் “மரக்கலத்தில் வந்தோர்” அல்லது “கள்ளத்தோணிகள்” என்று உறுதியாக நிறுவும் முயற்சிப் போக்கு உள்ளடங்கியுள்ளது.
இலங்கையில் பொதுவாக எந்த பகுதியிலும் வைத்திய சாலையில் பிறக்கின்ற முஸ்லிம் குழந்தைகளுக்கு பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தில் தமிழ் பதிவில் இலங்கை சோனகர் என்றும் சிங்கள பதிவில் லங்கா சோனகர் என்றும் பதியப்பட்டு வருகின்றன.
ஆனால் கந்தளாய் பிரதேசத்தில் மட்டும் அங்கு வைத்தியசாலையில் பிறக்கின்ற முஸ்லிம் குழந்தைகளின் பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தில் அண்மைக் காலங்களாக லங்கா மரக்கல எனக் பதிவு செய்ப்பட்டிருகிறது. லங்கா மரக்கல என்பது கட்டுமரம் அல்லது கள்ளத்தோணி என்கிற அர்த்தம் கொள்ளப்படுகிறது. ஆரம்பத்தில் மறக்கலன்களை வைத்து வர்த்தகம் செய்து வந்த முஸ்லிம்களை குறிப்பதாக இந்த சொல் இருந்தாலும், 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் முஸ்லிம்களை அந்நியராக சித்திரிப்பதற்காகவும், அவமானப்படுத்துவதற்காகவும் மரக்கல என்று அழைக்கத்தொடங்கினார்கள். 1915இல் இனக்கலவரம் குறித்த தேசியசுவடிகூட பதிவேடுகள் கூட “மரக்கல கலவரம்” (සිංහල මරක්කල කෝලාහලය) என்றே எழுதப்பட்டது. இலங்கை முஸ்லிம்கள் “கள்ள தோணி” என்று சாதி பெயர் பதிய படுவதாக கந்தளாய் பிரதேச முஸ்லிம்கள் தெரிவிப்பதாக முறையிட்டிருந்த பத்திரிகை செய்திகளும் சமீபத்தில் வெளிவந்திருந்தது.
இலங்கையில் “கராவ” சாதியினரை “மரக்கல” என்றே அழைக்கப்பட்டும் வந்திருக்கிறார்கள். தமிழ் சாதியமைப்பில் உள்ள “கரையார்” சாதிக்கு நிகராக கொள்ளப்படும் இந்த “கராவ” எனும் மீனவ சாதியினரை மரக்கல என்று அழைக்கப்பட்டு வந்திருக்கிறார்கள். இன்றும் கராவ சாதியை சேர்ந்தவர்களுக்கு “மரக்கலகே” என்று தொடங்குகிற பெயர்களையும் காணலாம். ஆனால் இந்த சிங்கள கராவ சாதியைச் சேர்ந்த புதிய தலைமுறையினருக்கு “மரக்கலகே..” என்று தொடர்கிற பெயர்கள் வைக்கப்படுவதில்லை. அதன் காரணம் “மரக்கல” என்பதன் அர்த்தம் வேறு அரசியல் பரிமாணத்தை சென்றடைந்துவிட்டதுதான் காரணம்.
ஹம்பயா என்கிற சொல் பற்றிய வரலாற்றுப் பின்புலம் குறித்து பல்வேறு கதைகளை ஆய்வாளர்கள் முன்வைத்து வந்திருக்கிறபோதும் இது தான் அதற்கான காரணப் பெயர் என்று எவரும் உறுதியாக கூற முடியாது போயிருக்கிறது. முஸ்லிம்களை இழிவாக அழைக்கின்ற பழிச்சொல்லாக புழக்கத்தில் இன்றுவரை இருந்துவருகிறது. பெரும்பாலான சிங்கள பௌத்தர்களும் முஸ்லிம்களை ஹம்பயா என்று இழிவாக அழைப்பதற்கூடாக இன்பம் காண்கின்றனர் என்றே கூறலாம்.
ஹம்பயா என்று அழைக்கப்படுபவர்கள் யார்? என்று ஆராய்ந்தால் இலங்கையின் கரையோரங்களில் வாழும் சோனகர்களை ஹம்பயா என்றும் மத்திய பகுதியில் வாழ்ந்து வருபவர்களை மரக்கல அல்லது யோனக மினிசு என்றும் சிங்கள மக்கள் பொதுவாக அழைப்பதையும் காணலாம்.
அதே வேளை இலங்கையின் சனத்தொகைக் கணிப்பீட்டு அறிக்கைகள் எப்போது வெளியாகினாலும் இன ரீதியான கணக்கெடுப்புகளில் “சோனகர்”என்றே அடையாளப்படுத்தப்படுகிறது.
சிங்கள பௌத்த பேரினவாத எழுச்சி இந்த அடையாளத்தை எப்படி கையாண்டது. என்னவெல்லாம் புனைந்தது. முஸ்லிம்களுக்கு எதிரான ஐதீகங்களை எப்படி கட்டமைத்தது, அது எப்படி கண்டி கலகத்தை மோசமாக்கியது என்பதை இனி ஆராய்வோம்.
(தொடரும்...)
நன்றி - தினக்குரல்
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...