Headlines News :
முகப்பு » » இரத்தினபுரியில் தமிழ்ப் பாடசாலை அமைக்கப்படும் பிரதியமைச்சர் உறுதி

இரத்தினபுரியில் தமிழ்ப் பாடசாலை அமைக்கப்படும் பிரதியமைச்சர் உறுதி


இரத்தினபுரி நகரில் சகல வசதிகளும் கொண்ட தமிழ்ப் பாடசாலையொன்று அமைக்கப்பட வேண்டுமென இரத்தினபுரி மாவட்ட தமிழ் மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இக்கோரிக்கையானது ஒவ்வொரு தேர்தலின் போதும் குறிப்பாக பாராளுமன்றம் மற்றும் மாகாண சபைத்தேர்தலின் போதும் முன்வைக்கப்படும். ஆனால் அதனை ஏற்று வாக்குகளை பெற்றுக்கொள்ளும் அரசியல்வாதிகள் பலரும் அதன் பின்னர் அது குறித்து எவ்விதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்வதில்லை. இதனால் இம்மாவட்ட தமிழ் மக்கள் விரக்தி நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

இந்த நிலையில்தான் இரத்தினபுரி மாவட்ட தமிழ் மாணவர்கள் நலன் கருதி சகல வசதிகளும் கொண்ட தமிழ் பாடசாலை ஒன்று அமைக்கப்படுமென மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் பிரதி அமைச்சரும் முன்னாள் ஊடகத்துறை அமைச்சின் செயலாளருமான கருணாரட்ன பரண விதான தெரிவித்துள்ளார்.

அவர் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் பிரதியமைச்சராக பதவியேற்ற பின்னர் அவருக்கு பாராட்டு விழாவொன்று இரத்தினபுரி சைவ பரிபாலன மகா சபையின் தலைவர்கள் ஒருவரான எம். நருலேஸ்வரன் தலைமையில் இரத்தினபுரியில் நடைபெற்றது. அதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

தான் தேர்தலில் வெற்றி பெற்றாலும் வெற்றி பெறா விட்டாலும் இரத்தினபுரி வாழ் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைக்கு செவி சாய்ப்பேன் என்று பிரதியமைச்சர் உறுதியளித்திருந்தார். இவ்வாறான நிலையில் கருணாரட்ன பரண வித்தான தேர்தலில் வெற்றி பெற்று பிரதியமைச்சராகவும் பதவியேற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இரத்தினபுரி நகரிலுள்ள தமிழ் மகா வித்தியாலயத்தில் போதிய இடவசதிகள் இல்லை. விளையாட்டு மைதானமொன்று அமைக்க காணியில்லை. 2003 ஆம் ஆண்டில் மண் சரிவு அபாயத்துக்குள்ளான இப்பாடசாலை இடமாற்றப்பட வேண்டுமென அப்போது கோரிக்கை விடுக்கப்பட்ட போது மலையக தலைமைகள் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார்கள். நடைமுறையில் எதுவுமே சாத்தியப்படவில்லை. மண் சரிவு அபாயத்துக்குள்ளான அக்கட்டடத்தை அகற்றி பின்னர் அவ்விடத்தில் புதிய கட்டடமொன்று அமைப்பட்டதே தவிர இப்பாடசாலை வேறிடத்திற்கு இடமாற்றப்படவில்லை.

இப்பாடசாலையை இடமாற்றம் செய்வதற்கு வேறு ஒரு காரணமும் உள்ளது. அதாவது நகர பொது மயமான பூமிக்கு அண்மையில் இப்பாடசாலை காணப்படுவதனால் இப்பாடசாலையை மயானப்பாடசாலை என பலரும் கூறுவர். குறிப்பாக சிங்கள மக்களிடையே இப்பாடசாலை மயானப்பாடசாலை என்று கூறினால்தான் அறிந்து கொள்ளுமளவிற்கு காணப்பட்டது.

இதன் பின்னர் இப்பெயரை மாற்ற வேண்டும் அல்லது இப்பாடசாலையை வேறிடத்திற்கு கொண்டு செல்ல வேண்டுமென மக்களிடையே தீவிரமான கோரிக்கை காணப்பட்டது. கடந்த சப்ரகமுவ மாகாண சபைத் தேர்தலிலும் விசேட கோரிக்கையாக இது முன்வைக்கப்பட்டது.

இரத்தினபுரியில் தனியான சகல வசதிகளையும் கொண்ட பாடசாலை ஒன்று அமைக்கப்படுமென்ற கோரிக்கையை சில தமிழ் அரசியல்வாதிகள் தமது கொள்கை பிரகடனத்திலும் குறிப்பிட்டிருந்தனர்.

சப்ரகமுவ மாகாண சபைத்தேர்தலின் பின்னர் இ.தொ.கா. சார்பாக ஒருவர் தெரிவு செய்யப்பட்டார். தேர்தலின் பின்னர் இரத்தினபுரி தமிழ் மகா வித்தியாலயத்திற்கு விஜயம் செய்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் நிலைமையை அவதானித்த பின்னர் காணி பெற்றுக்கொடுப்பதாக உறுதி கூறியதுடன் இதற்கென பிரத்தியேகமான ஒரு குழுவையும் நியமித்தார். அதன் பின்னரும் மக்களுக்கு உரிய பலன் கிடைக்கவில்லை. இத்தேர்தலில் மலையக கூட்டணி ஒன்று அமைக்கப்பெற்றே தேர்தலில் போட்டியிட்டனர். எனினும் தேர்தலின் பின்னர் கூட்டணியும் சிதறிப்போனது. இரத்தினபுரி வாழ் மக்களின் கோரிக்கையும் கைவிடப்பட்டது என்றே கூறப்படுகிறது. குறிப்பாக முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தனியாக தமிழ்ப் பாடசாலை ஒன்று அமைத்தால் அதன் காரணமாக தமது அரசியல் எதிர்காலம் பாதிக்கப்படுமெனக் கருதிய சில பெரும்பான்மையின அரசியல்வாதிகள் இதற்கு பல்வேறு முட்டுக்கட்டைகளைப் போட்டனர்.

இதன் பின்னர் இரத்தினபுரி தமிழ் பாடசாலை 1,000 பாடசாலைத்திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்டு அவசர அவசரமாக தகவல் தொழில் நுட்ப கட்டடமொன்று அமைக்கப்பட்டது.

இப்பாடசாலைக்கென கட்டடம் அமைக்க காணி இல்லாத நிலையில் இந்த செயல் திட்டமும் கைவிடப்பட்ட நிலையில் புதிய அரசாங்கம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் பதவியேற்ற பின்னர் கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.இராதாகிருஷ்ணன் இப்பாடசாலையின் விஞ்ஞான கல்லூரியாக தரமுயர்த்துவதாக கூறியதுடன் புதிய பெயர்ப் பலகையையும் திறந்து வைத்து உபகரணங்களையும் கையளித்துள்ளார்.

பொதுத்தேர்தலின் பின்னர் மீண்டும் வீ.இராதாகிருஷ்ணன் கல்வி இராஜாங்க அமைச்சராக பதவியேற்றுள்ள நிலையில் இப்பாடசாலையின் எதிர்காலம் குறித்து சரியான தகவல்கள் கிடைக்கவில்லை.

இவ்வாறான சூழ்நிலையில் இப்பாடசாலைக்கு புறம்பாக சகல வசதிகளும் கொண்ட தனியான தமிழ் வித்தியாலயமொன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனைக்கமைய அமைக்கப்படும் என்று பிரதியமைச்சர் கருணாரட்ண பரணவித்தான உறுதியளித்துள்ளார்.

இரத்தினபுரி வாழ் தமிழ் மக்கள் தமது பிள்ளைகளை உயர்தர விஞ்ஞானம், கணிதப்பிரிவுகளில் கற்பிக்க வைக்க பல்வேறு சிரமங்களை அனுபவிக்கின்றனர். மத்திய மாகாண தமிழ் பாடசாலைகளையே சப்ரகமுவ மாகாண தமிழ் மாணவர்கள் நம்பியிருக்க வேண்டியுள்ளதுடன் சிலவேளைகளில் அம்மாகாண பாடசாலைகளிலும் சப்ரகமுவ மாகாண தமிழ் மாணவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இதனால் இம்மாகாணத்திலுள்ள தகுதியுள்ள மாணவர்கள் தமது உயர்கல்வியை இடைநடுவில் கைவிட்டு விடுகின்றனர். இரத்தினபுரியில் தனியான விஞ்ஞான / கணிதப்பிரிவு பாடசாலை ஒன்று அமைக்கப்படும் பட்சத்தில் அதனால் தோட்ட மாணவர்கள் பெரும் நன்மையை பெறுவார்கள். பிரதியமைச்சர்களின் முயற்சி வெற்றிய ளிக்க வேண்டும்.  


-பெல்மதுலை நிருபர்

நன்றி - வீரகேசரி

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates