நீண்ட இழுபறியில் இருக்கும் தோட்டத்தொழிலாளர்களின் சம்பளப்பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் தொழிலாளருக்கு நாட் சம்பளமாக 770 ரூபாவை வழங்குமாறு யோசனை தெரிவிப்பதாக தொழில், தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் டபிள்யூ.டி.ஜே.செனவிரத்ன கடந்த சில தினங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார். தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் ஆகிய இரு தரப்பினருக்குமே அநீதி ஏற்படாத வகையில் ஓர் இணக்கப்பாட்டுக்கு வந்து கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட நடவடிக்கை எடுக்குமாறும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
அமைச்சரின் இந்த யோசனையை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று இ.தொ.கா. தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான முத்து சிவலிங்கம் தெரிவித்தார். அமைச்சர் செனவிரத்னவின் சம்பள அறிவிப்பை ஏற்றுக்கொள்வீரா என்று வினவியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், தோட்டத் தொழிலாளரின் சம்பள உயர்வு தொடர்பில் நாம் ஒரு தெளிவான நிலைப்பாட்டினை கொண்டிருக்கிறோம். நாட் சம்பளமாக 1000 ரூபா வழங்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். அதிலிருந்து நாம் பின்வாங்குவதாக இல்லை.
தொழில் அமைச்சர் 770 ரூபாவை நாள் சம்பளமாக வழங்கலாம் என்ற யோசனையை முன்வைத்திருக்கிறார்.
இது அவரது கருத்தாகும். அமைச்சரின் யோசனைப்படி சம்பள உயர்வை ஏற்றுக்கொள்வதானால் ஏற்கனவே அதற்கு இணக்கம் தெரிவித்திருப்போம். ஆனால் 1000 ரூபாவை நாட்சம்பளமாகப் பெறுவதே எமது திட்டமாக உள்ளது.
எமது பொதுச்செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் நாடு திரும்பியதும் இதுபற்றி கலந்தாலோசிக்கவுள்ளோம். அதன் பின்னர் இடம்பெறும் பேச்சுவார்த்தையின் போது இ.தொ.கா.வின் திட்டத்தை முன்வைப்போம். இவ்வாறு அவர் கூறினார்.
பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்துடன் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் மூன்று அமைப்புக்களில் இ.தொ.கா. பிரதான இடத்தினை வகிப்பதுடன், ஏனைய தொழிற்சங்கங்களை விட அதிக எண்ணிக்கையான தொழிலாளர்களை அங்கத்தவர்களாக கொண்டுள்ளது. கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் ஏனைய தொழிற்சங்கங்களாக இலங்கை தேசிய தோட்டத்தொழிலாளர் சங்கம், பெருந்தோட்டத்தொழிற்சங்க கூட்டுக்கமிட்டி என்பன உள்ளன.
கடந்த 2013–2015க்கான கூட்டு ஒப்பந்தம் கடந்த மார்ச் 31 ஆம் திகதியுடன் காலாவதியானது. எனவே புதிய கூட்டு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டு அது 2015 ஏப்ரல் 01ம் ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வந்திருக்க வேண்டும். ஆனால் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பாக முதலாளிமார் சம்மேளனத்துக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்படாததால் இன்றுவரை புதிய கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுமில்லை. தொழிலாளருக்கு கடந்த 6 மாதங்களுக்கு மேலாக சம்பள உயர்வு கிடைக்கவுமில்லை.
தோட்டத்தொழிலாளருக்கு நாட் சம்பளமாக 1000 ரூபா வழங்கப்பட்ட வேண்டுமென்று இ.தொ.கா. முன்வைத்த கோரிக்கையே இதற்குக் காரணமாகும்.
உலகச்சந்தையில் தேயிலையின் விலை மிகவும் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் அதனால் தோட்டங்களை நடத்த முடியாத அளவுக்கு நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளதாகவும் பெருந்தோட்டக் கம்பனிகள் கூறி வருகின்றன. இதனால் 1000 ரூபா சம்பள உயர்வை வழங்க முடியாதெனக் கூறுகின்றன. எவ்வாறெனினும் தொழிற்சங்கங்களுக்கும் முதலாளிமார் சம்மேளனத்துக்கிமிடையிலும் பல கட்டங்களாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற போதிலும் தீர்வு எட்டப்படவில்லை. இறுதியாக கடந்த 30 ஆம் திகதி தொழிற்சங்கங்களுக்கும் முதலாளிமார் சம்மேளனத்துக்குமிடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அந்தப் பேச்சுவார்த்தையும் இணக்கப்பாடின்றி முடிவடைந்தது.
அந்தப் பேச்சுவார்த்தையில் இ.தொ.கா. தலைவர்கள், இ.தே.தோ.தோ. சங்கத் தலைவர்கள், பெருந்தோட்டத்தொழிற்சங்க கூட்டுக்கமிட்டியின் பொதுச்செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முதலாளிமார் சம்மேளனத்தின் சார்பில் அதன் பணிப்பாளர் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இந்தப் பேச்சுவார்த்தை தொழிலமைச்சர் டபிள்யூ டி.ஜே. செனவிரத்ன தலைமையில் இடம்பெற்றது.
அங்கு நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது முதலாளிமார் சம்மேளனம் சம்பளத்தை உயர்த்திக்கொடுப்பது பற்றி எதுவும் கூறவில்லை என்றே கூறப்படுகிறது.
ஆனால் தொழிற்சங்கங்கள் 1000 ரூபா சம்பள உயர்வை வலியுறுத்தியுள்ளன. எனினும் முதலாளிமார் சம்மேளனம் வரவுக்கான கொடுப்பனவை 100 ரூபாவால் அதிகரித்துக்கொடுக்க முன்வந்ததாகவும் அதனைத் தொழிற்சங்கங்கள் நிராகரித்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. எனவே அன்றைய பேச்சுவார்த்தை இணக்கப்பாடின்றியே முடிவுக்கு வந்தது. தொழில் அமைச்சர் டபிள்யூ.டி.ஜே. செனவிரத்னவின் யோசனையின்படி தொழிலாளர்களின் நாள் சம்பளம் பின்வருமாறு அமைந்திருந்தது. அடிப்படை சம்பளம் 500 ரூபா, வருகைக்கான கொடுப்பனவு 240 ரூபா, தேயிலை விலைக்கான கொடுப்பனவு 30 ரூபா ஆக மொத்த நாட் சம்பளம் 770 ரூபாவாகும்.
பழைய கூட்டு ஒப்பந்தத்தின்படி (2013– 2015) அடிப்படை சம்பளம் 450 ரூபா விலைக்கான கொடுப்பனவு 30 ரூபா, ஊக்குவிப்பு கொடுப்பனவு 140 ரூபா ஆக மொத்த சம்பளம் 620 ரூபாவாகும்.
இதன்படி நாளொன்றுக்கான சம்பளத்தில் 150 ரூபா மாத்திரமே அதிகரிப்புச் செய்வதற்காக யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. ஆனால் தொழிற்சங்கங்கள் முன் வைத்தது 1000 ரூபாவாகும். அந்த அடிப்படையில் 1000 ரூபா சம்பள கோரிக்கையில் ஓரளவேனும் இது பூர்த்தி செய்வதாக இல்லையென்று தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
பெருந்தோட்டத் தொழிற்றுறை தற்போது ஓர் இக்கட்டான நிலையில் இருப்பதை அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது. கடந்த 7 மாதங்களுக்கு மேலாக தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்களுக்கும் முதலாளிமார் சம்மேளனத்துக்கும் இடையிலான கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவில்லை.
தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வும் இதுவரை கிடைக்கவில்லை. தற்போது வாழ்க்கைக் செலவு அதிகரித்துக் காணப்படும் நிலையில், கிடைக்கும் வருமானம் போதுமானதாக இல்லாததால் தொழிலாளர்கள் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர். உலக சந்தையில் தேயிலையின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால் தொழிற்சங்கங்கள் கேட்கும் தொகையை கொடுக்க முடியாதிருப்பதாக பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் தெரிவித்து வருகின்றது.
இந்த இக்கட்டான நிலையில் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் இருதலைக்கொள்ளிகளாய் கைகளைப் பிசைந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தோட்டத்தொழிலாளருக்கு 1000 ரூபா பெற்றுக்கொடுக்க வேண்டுமென்ற முனைப்பில் இன்றுவரை செயற்பட்டு வருகிறது. எனவே, விரைவில் மீண்டும் ஒரு பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு தோட்டத்தொழிலாளருக்கு நியாயமான சம்பள உயர்வை பெற்றுக் கொடுக்க வேண்டும்.
நன்றி வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...