அமைச்சரான பிறகு இப்போதெல்லாம் ஜனநாயக மக்கள் முன்னணியின் மற்றும் தமிழ் முற்போக்குக்கூட்டணி தலைவர் மனோ கணேசனின் பத்திரிகை அறிக்கைகளை அடிக்கடி காணமுடியாதுள்ளது.
காரணம் என்னவெனில் அவர் பொறுப்பேற்றிருக்கும் அமைச்சு அப்படியானது. எதிர்கட்சி வரிசையில் இருக்கும் போது எதை வேண்டுமானாலும் பேசி வரலாம் ஆனால் ஆளுங்கட்சியில் அதுவும் அமைச்சரான பிறகு தான் சவால்கள் கண்முன்னே தெரியவரும். தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சின் கீழ் அரசகருமமொழிகள் திணைக்களம் வருகிறது. சகல அரச மற்றும் தனியார் நிறுவனங்களிலும் அரச கருமமொழி கொள்கையை அமுல்படுத்தி ஒருவர் தனது தாய்மொழியில் சேவையை பெற்றுத்தர வழிசெய்வேன் என அண்மையில் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்திருந்தார்.
அவர் தானாக வந்து இதை தெரிவிக்கவில்லை. கல்வி அமைச்சினால் தமிழ் மொழி முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு வருவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டிய பிறகு அது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் கூறும் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார். முன்பு எல்லாம் இன ஐக்கியம் ,மொழி தொடர்பாக எவரும் நேர்மறையாக பேசிய மறு நிமிடமே அவர் பக்கம் இருந்து ஊடக அறிக்கை வருவதை எல்லோரும் கண்கூடாக கண்டிருக்கிறோம் தானே?
தமிழ் மொழி அமுலாக்கம்
எமது நாட்டில் 97 கல்வி நிர்வாக வலயங்கள் உள்ளன. அதில் 24 தமிழ் மொழி நிர்வாக வலயங்களாக இருந்த போதும் அங்கு தமிழ் மொழிக்கு எந்த வித மரியாதையும் கிடையாது.குறித்த வலயங்கள் சிலவற்றில் வலயக்கல்வி பணிப்பாளர்களாக தமிழர்கள் இருந்தாலும் அவர்களே கடிதங்களை சிங்கள மொழியிலேயே பாடசாலைகளுக்கு அனுப்புகின்றனர். மேலும் தமது பெயர் ,பதவி நிலைகளை சிங்கள மொழியில் சீல் செய்து தயாரித்து வைத்துக்கொண்டு அதையே கடிதங்களுக்குக்கீழே வைக்கின்றனர். இதில் நுவரெலியா மாவட்டத்தின் அட்டன் கல்வி வலயமும் ஒன்று. இந்த 24 கல்வி வலயங்களிலிருந்தும் பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் அறிவுறுத்தல்கள், கடிதங்கள் தனி சிங்களத்தில் இருக்கின்றன.
தமிழ் மொழி பெயர்ப்பு இருப்பதில்லை சில வேளைகளில் தமிழ் மொழி பெயர்ப்புகள் ஒன்று அல்லது இரண்டு வாரங்களுக்குப்பின்னரே கிடைக்கக்கூடியதாக இருக்கும். கல்வி அமைச்சில் நடைபெறும் கூட்டங்கள் கூட தனி சிங்கள மொழியிலேயே இடம்பெறுகின்றன. கடந்த வாரம் கல்வி அமைச்சில் இடம்பெற்ற 1000 பாடசாலைகள் திட்டம் தொடர்பான கூட்டம் தனி சிங்கள மொழியிலேயே இடம்பெற்றது. இவை அனைத்தையும் சுட்டிக்காட்டி இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் , இது தொடர்பாக பல தடவைகள் சுட்டிக்காட்டியும் சில அதிகாரிகள் அசிரத்தையாக செயற்படுவதாக தெரிவித்திருந்தார்.
கால அவகாசம் தேவை
இது தொடர்பாக கருத்துத்தெரிவித்திருந்த அமைச்சர் மனோ கணேசன் மொழிக்கொள்கையை அமுல்படுத்துவதில் காலஅவகாசம் .தேவைப்படுகிறது என்றும் அதற்கான அடிப்படை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்திருக்கிறார். உண்மையில் இதே விடயத்தை அமுல்படுத்த கடும் முயற்சிகள் எடுத்திருந்த முன்னாள் தேசிய மொழிகள் சமூக ஒருமைப்பாடுகள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கடும் சவால்களை சந்தித்தார். தேசிய கீதம் தமிழில் பாடலாம் என அவர் பாராளுமன்றத்தில் கூறிய போது எதிர்ப்புகள் கிளம்பின. இறுதி வரை அவரால் மொழிக்கொள்கையை அமுல்படுத்த முடியாது போயிற்று
இந்த விடயத்தில் பெரும்பான்மை இனத்தை சேர்ந்த ஒருவருக்கே இந்த நிலைமை என்றால் சிறுபான்மை இன அமைச்சருக்கு என்னென்ன சவால்கள் எல்லாம் இருக்கின்றதோ தெரியவில்லை. பெரும்பான்மை இனத்தவர்கள் பலருடன் நெருங்கி பழகும் அமைச்சர் மனோவுக்கு இந்த விடயத்தில் உதவவும் ஆதரவு குரல் கொடுக்கவும் பலர் இருக்கலாம். ஆனால் தேசிய ரீதியில் சில முன்னெடுப்புகளுக்கு சவால்கள் காத்திருக்கின்றன. சமத்துவம்,சமூக ஒருமைப்பாடு என குரல் கொடுத்து வந்தவர் அமைச்சர் மனோ. அதற்காக பல அழுத்தங்களையும் எதிர்ப்புக்களையும் சந்தித்தவர் இல்லாவிட்டால் பலரது விமர்சனங்களையும் தாண்டி தமிழ் முற்போக்குக்கூட்டணியின் தேசிய பட்டியலுக்கு ஒரு பெரும்பான்மை இன பெண்ணின் பெயரை சிபாரிசு செய்திருப்பாரா?
24 மணித்தியால தொலைபேசி சேவை என்னவாயிற்று?
தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சு பதவி கிடைத்தவுடன் அமைச்சர் மனோ வெளியிட்ட அறிக்கையில் இந்த நாட்டின் எந்த மூலையிலும் இனி இனவாதம் என்ற பெயரில் எவரும் பாதிக்கப்படக்கூடாது என்றும் இனம்,மதம் என்ற பெயரில் பாதிக்கப்பட்ட எவரும் உடனடியாக தீர்வை பெறும் வண்ணம் 24 மணித்தியாலமும் இயங்கும் விசேட தொலை பேசி வசதிகள் ஏற்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார். மொழி அமுலாக்கல் நடவடிக்கை போன்று இதற்கும் கால அவகாசம் தேவைப்பட்டிருக்கலாம் எனினும் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். ஏனெனில் இப்போதெல்லாம் அரசியல்வாதிகள் சொல்வதை செய்யாவிட்டால் ஊடகங்கள் அதை அடிக்கடி ஞாபகப்படுத்திக்கொண்டு இருக்கும் என்பதே உண்மை.
பெல்மதுளை சம்பவம் பற்றி …
இரத்தினபுரி மாவட்டத்தின் பெல்மதுளை போபெத்த தோட்டத்தில் கடந்த வாரம் இடம்பெற்ற சம்பவத்தை நாடே அறியும். இங்குள்ள அம்மன் ஆலயத்தின் தேர்த்திருவிழா நிகழ்வுகளை ஒழுங்கமைத்துக்கொண்டிருந்த தமிழ் இளைஞர்களை பெரும்பான்மையினத்தவர்கள் திட்டமிட்டு தாக்குதல் நடத்தினர். மறுபடி தமிழ் இளைஞர்களும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் இரண்டு தமிழ் இளைஞர்களும் ஒரு பெரும்பான்மை இளைஞரும் படுகாயமுற்ற நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இரத்தினபுரி மாவட்டத்தின் பெருந்தோட்டப்பகுதி வாழ் தமிழ் மக்கள் இவ்வாறு பெரும்பான்மையினத்தவர்களால் தாக்கப்படுவது இது முதலும் அதே நேரம் கடைசியும் அல்ல. இம்முறை இடம்பெற்ற பாராளுமன்றத்தேர்தலில் இங்கு தமிழ் முற்போக்கு கூட்டணியில் போட்டியிட்ட சந்திரகுமார் என்ற இளைஞர் 30 ஆயிரம் வாக்குகளைப் பெற்றார். அப்போதே தேசிய பட்டியலில் இவருக்கு சந்தர்ப்பம் வழங்கும்படி கோரிக்கைகள் எழுந்தன. எவருமே கண்டு கொள்ளவில்லை. பலமான தமிழ் அரசியல் பிரதிநிதித்துவம் இல்லாவிடின் இவ்வாறான இனரீதியான தாக்குதல் சம்பவங்களை தடுக்கவே முடியாது. இன ,மத ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கும் போபெத்த தோட்ட மக்களுக்கு நீதி பெற்று தரும்படியாக தேசிய ரீதியான கலந்துரையாடல்கள் எதுவும் இடம்பெற்றதா? அல்லது 24 மணித்தியால தொலைபேசி வசதிகள் வந்த பிறகு தான் இவை போன்ற சம்பவங்கள் கதைக்கப்படுமா? இதற்கு யார் பதில் கூறப்போகின்றார்கள்?
தமிழ்ச்சங்க வீதிப்பலகை என்னவாயிற்று?
கொழும்பு தமிழ்ச்சங்கம் அமைந்துள்ள 57 ஆவது ஒழுங்கையை தமிழ்ச்சங்க வீதி என்ற தமிழ் பெயர்ப்பலகையை நிறுவுவதில் பலத்த சவால்கள் கடந்த ஆட்சி காலத்தில் எழுந்தது எமக்குத்தெரியும்.
கொழும்பு மாநகர சபை அனுமதி வழங்கியிருந்தும் இனவாதிகளின் எதிர்ப்பால் அந்த வீதிக்கு "தமிழ்" என்ற பெயர் வருவதற்கு தடைகள் ஏற்பட்டன. இறுதியில் தமிழ் இல்லாமலாக்கப்பட்டு " சங்க வீதி " என்ற பெயருடன் பெயர்ப்பலகை திறந்து வைக்கப்பட்டது. அச்சம்பவத்தின் போது மனோ கணேசன் அவர்கள் இப்போதைக்கு இதற்கு முற்றுப்புள்ளி வைப்போம் என்று கருத்துத்தெரிவித்திருந்தார். மொழி அமுலாக்கல் விடயத்தை தமிழ்ச்சங்க பெயர்ப்பலகை விடயத்திலிருந்தாவது அவர் ஆரம்பிப்பாரா என்பதை பொறு த்திருந்து பார்ப்போம்.
தேசியன்
சிவலிங்கம் சிவகுமாரின் முக நூலில் இருந்து...
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...