Headlines News :
முகப்பு » » மு. நித்தியானந்தனின் "கூலித்தமிழுக்கு கனடாவில் விருது!

மு. நித்தியானந்தனின் "கூலித்தமிழுக்கு கனடாவில் விருது!



மலையக மக்களின் வரலாற்றை வெளியுலக மக்களுக்கு அறிமுகம் செய்துள்ள மு. நித்தியானந்தனின் "கூலித்தமிழ் நூலுக்கு கடனாவில் இயங்கிவரும் இலக்கியத்தோட்டம் அமைப்பினர் விருது வழங்கி கௌரவத்துள்ளனர்.

இந்த விருதை பெற்றுக்கொண்ட மு. நித்தியானந்தன் ஏற்புரையும் வழங்கினார்.

2014 ஆம் ஆண்டில் வெளியான புனை கதை சாராத நூல்களில் சிறந்த நூலாக எனது ‘கூலித்தமிழ்’ நூலைத் தேர்வு செய்து, கனடா இலக்கியத் தோட்டம் வழங்கும் இந்த விருதிற்கு என் மனம் நிறைந்த மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

இந்த விருதினை ஈழத்தின் மலையக இலக்கிய மரபிற்குக் கிடைத்த பெரும் அங்கீகாரமாக, மலையக இலக்கியத்திற்கு வழங்கப்பட்ட உயர் கௌரவமாக கருதுகிறேன்.

1869 ஆம் ஆண்டு ‘கோப்பிகிருஷிக்கும்மி’ என்ற கும்மிப்பாடலை இயற்றிய ஆபிரஹாம் ஜோசப்பிலிருந்து, நடேசய்யர், சி.வி.வேலுப்பிள்ளை, இர.சிவலிங்கம், கே.கணேஷ், என்.எஸ்.எம்.ராமையா என்று மறைந்துபோன இலக்கிய ஆளுமைகளிலிருந்து,  இன்றும் மலையக இலக்கிய மரபை முன்னெடுத்துச் செல்லும் தெளிவத்தை ஜோசப், மு.சிவலிங்கம், மாத்தளை வடிவேலன், மலரன்பன் ஆக்யோரையும் நினைவிலிருத்தி இந்த விருதினைப் பெறுவதில மனநிறைவடைகிறேன்.

 மலையகமக்களின் வரலாறு குறித்தும், அவர்களின் கல்வி, சமூக, பொருளாதார நிலைமைகள் குறித்தும் மலையகத்தில் முகிழ்ந்த அறிவுஜீவிகள் ஆழ்ந்த, விரிவான ஆய்வுகளை இன்று முன்னெடுத்து வருகின்றனர் என்பது நமக்கு மகிழ்ச்சி தரும் செய்தியாகும்.

 மலையகத் தொழிற்சங்க வரலாறு குறித்து அமரர் எஸ். நடேசனும், மலையக இலக்கிய முயற்சிகள் குறித்து அமரர் சாரல்நாடனும் மேற்கொண்ட சரித்திரப்பதிவுகள் விசேஷ கவனத்திற்குரியனவாகும்.

பேராசிரியர் சோ. சந்;திரசேகரம், பேராசிரியர் எம். சின்னத்தம்பி, பேராசிரியர் எம்.எஸ். மூக்கையா, எம். வாமதேவன், அ. லோறன்ஸ்,லெனின் மதிவானம்,  பெ. முத்துலிங்கம் ஆகியோர் தொடர்ந்து இத்துறைகளில் எழுதியும் பேசியும் வருகின்றனர்.    இவை மலையக மக்கள் மத்தியில் எழுந்துள்ள அறிவுஜீவிகள் தாம் சார்ந்த சமூகத்தின் மீது கொண்டுள்ள தார்மீக அக்கறையின் வெளிப்பாடுகள் ஆகும்.

கல்விப்புலத்தில் இன்று தெம்போடும் நம்பிக்கையோடும் கால்பதித்துவரும் இளையதலைமுறையினர் இந்தப்புலமைப் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்வார்கள் என்று நம்பிக்கை கொள்ளும் நிலை இன்று சித்தித்துள்ளது.
  
 மலையக மக்களின் ஒன்றரை நூற்றாண்டுகால வாழ்வு துயர்மிக்கது; கொடூரமான சுரண்டலுக்குட்பட்டது.   இலங்கையைப் பொன் கொழிக்கும் நாடாக மாற்றிய இந்த மக்கள் கூட்டம்  இன்றும் அன்றாட நாட்சம்பள உழைப்பாளிகளாக, வறுமைக் கோட்டிற்குக் கீழ் உழலும் அவலம் இன்றும் தொடர்வது துரதிர்ஷடமானது.

தங்கள் வாழ்விடத்திற்காகவும், நாடசம்பள உயர்விற்காகவும் இன்றும் மலையக மக்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள். மண்சரிவுகளில் அந்த மக்கள் புதையுண்டு போவதும், அந்த ஏழை எளிய மக்களின் லயங்கள் தீப்பற்றி எரிவதும் போன்று தொடரும் துயர் எப்போது நீங்கும் என்று தெரியவில்லை.

ஆண்டாண்டு காலமாய் இனவன்முறைக்கும், சட்டபூர்வமான புறக்கணிப்பிற்கும் உள்ளாக்கப்பட்ட இச்சமூகத்தின் நிலை குறித்து கரிசனையும் சமூகநோக்கும் மலையக இலக்கியத்தின் அடிச்சாடாக மிளர்கிறது என்று கூறமுடியும்.

 மறைந்த என் இனிய நண்பரும் பேராசானுமான செல்வா கனகநாயகம் அவர்களின் நெறிகாட்டலில் இயங்கி வந்த கனடா இலக்கியத் தோட்டம் வழங்கிய விருதுகளில் எனக்கு விமர்சனங்கள் எதுவும் இருந்ததில்லை.

உயர்ந்த நோக்கில்,  தங்களது இயல்புகளின் எல்லைக்குள் வழங்கப்பட்ட இந்த விருதுகள் உயரிய இலக்கியப்பணிகளை என்றும் அங்கீகரித்தே வந்துள்ளன.
செல்வா கனகநாயகம் என்ற அந்தப் பெருமகனுக்கு என் இதய அஞ்சலியைச் செலுத்தி,  இந்த ஏற்புரையை முடிவு செய்கிறேன்.  

நன்றி்  - கருடன்

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates