நாளை 15 ஆம் திகதியோடு அளுத்கம கலவரம் நிகழ்ந்து ஒரு வருடம் நிறைவு பெறுகிறது. அது மட்டுமல்ல இந்த மாதத்தோடு கண்டிக் கலவரம் நிகழ்ந்து 100 வருடங்களும் ஆகின்றது. இந்த இரண்டையும் நினைவு கூறுவது என்பது வரலாற்றை தூசு தட்டி எழுப்புவது என்று அர்த்தமல்ல. மாறாக வரலாற்றில் மீள மீள நிகழ்ந்து வரும் ஒரே வகை போக்கைப் பற்றிய படிப்பினையை சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது.
அளுத்கம சம்பவத்தின் பின்னால் ஒரு சிறு சம்பவமே காரணமென மேலோட்டமாக கூறப்பட்டாலும் அது அப்படியல்ல. மிகத் துல்லியமாக அப்பட்டமாக திட்டமிடப்பட்ட ஒன்று என்பது இன்று நாட்டிலுள்ள பலர் அறிந்த பரகசியம்.
அளுத்கம தொடக்கம்
கடந்த ஆண்டு ஜூன் 12ஆம் திகதி பொசன் போயா தினம். தர்கா நகர், ஸ்ரீ விஜயராம விகாரையின் பிக்குவான அயகம சமித்த தேரோ அன்று பகல் வாகன நெரிசல் நேரத்தில் தனது சாரதியுடன் வாகனத்தில் வந்துகொண்டிருந்த வேளை வாகன சாரதி தெருவில் கதைத்துக்கொண்டிருந்த இரு இளைஞர்களை ஒதுங்குபடி மோசமான தூசன வார்த்தைகளால் திட்டியிருக்கிறார். இரு தரப்புக்கும் இடையில் நடந்த வாய்த்தகராறை அங்கு கூடிய மக்கள் சமாதானப்படுத்தி பிக்குவையும், சாரதியையும் பத்திரமாக அனுப்பி வைத்திருக்கின்றனர்.
இந்த சம்பவத்தை தனக்கு அறிமுகமுள்ள பொதுபல சேனா பிரமுகருக்கு போட்டுகொடுத்துள்ளார் சாரதி. அங்கு தான் வந்தது வினை. முஸ்லிம்களுடன் முறுகிக்கொண்டிருந்த பொதுபல இப்படி ஓர் சம்பவத்துக்காகத்தான் நெடுநாளாக காத்திருந்தது. சம்பந்தப்பட்ட பௌத்த பிக்குவை அரச வைத்தியசாலையில் அனுமதிக்க செய்து அவர் தாக்கப்பட்டு கட்டிலில் கிடக்கிறார் என்கிற பிரசாரத்தை முடுக்கி விட்டது. சிங்கள ஊடகங்களும் இந்த சம்பவத்துக்கு கை கால் வைத்து ஊதிப் பெருப்பித்து நாடு முழுவதும் பரப்பி விட்டன.
போதாததற்கு சிங்கள இனவாத சமூகத்தளங்களினூடாக பொசன் போயா தினத்தன்று பிக்குவை தாக்கி விட்டனர் என்றும், அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் வேகமாக செய்தி பரப்பப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தர்கா நகர் பகுதி பதட்ட நிலைக்கு உள்ளானது. எதுவித அசம்பாவிதமும் நடக்காதிருப்பதற்காக அங்கிருந்த முஸ்லிம் பிரமுகர்களும், சம்பந்தப்பட்ட இளைஞர்களின் குடும்பத்தினரும் சேர்ந்து அவர்களை அன்றே போலீசில் சரணடைய செய்திருக்கின்றனர். முஹமட் அஸ்தார், முஹமட் அமீன், முஹமட் அர்ஷன் ஆகியோர் அவ்வாறு ஆஜர் படுத்தப்படிருந்தனர். இந்த மூவர் பற்றிய விபரங்களை இனவாதப் பத்திரிகையான திவயின அவர்களின் விலாசங்களோடு செய்தி பிரசுரித்திருந்தது (14.06.2013).
12 ஆம் திகதி கைது செய்யப்பட்டவர்களை தாக்குவதற்காக பிக்குமார் சகிதம் வந்த பெரும் கூட்டத்தை பொலிசாரும் இராணுவமும் கட்டுப்படுத்த முடியாதிருந்தனர். இறுதியில் ஒரு சில பிக்குமாரை பொலிஸ் நிலையத்துக்குள் அனுமதித்தனர். அவர்களோ உள்ளே சென்று அந்த மூவரையும் ஆத்திரம் தீர கடுமையாக தாக்கி காயப்படுத்திவிட்டு வந்தனர். யூன் 12 sinhala BBC சேவை அந்த சம்பவங்களின் காணொளியை வெளியிட்டிருந்தது.
மிக வேகமாக இனவாத பிரசாரத்தை நாடு முழுவதும் பரப்பியது பொதுபல சேனா. மிகப்பெரிய நாசச் செயலை செய்யுமுன் அதற்கான நியாயங்களையும், கற்பிதங்களையும் முன்கூட்டியே பரப்பும் கைங்கரியத்துக்கு பழக்கப்பட்டது இலங்கையின் இனவாத வரலாறு. சம்பவம் நடந்து மூன்றே நாட்களில் 15 அன்று மாபெரும் கூட்டமொன்றை சம்பவம் நடந்த அளுத்கமவில் ஒழுங்கு செய்தது. பாரிய அளவில் கலந்துகொண்ட மக்கள் மத்தியில் உரையாற்றினார் ஞானசார தேரோ. கூட்டத்திற்கு வந்திருந்தவர்கள் பலர் வெளியிடங்களில் இருந்து பஸ்களில் இறக்கப்பட்டவர்கள். ஞானசாரவின் மோசமான இனவெறுப்பு பேச்சு குழுமியிருந்தவர்களை கரகோசம் செய்து வரவேற்கப் பண்ணியிருந்தது குறிப்பிடத்தக்கது.
“மகாசென் 969”
பொதுபல சேனாவின் முன்னணி அமைப்புகளில் ஒன்றான (front organisation) “மகாசென் 969” என்கிற பெயரிலேயே 15ஆம் திகதி அளுத்கமவில் கட்டவிழ்த்த காடைத்தனத்தை ஒழுங்கமைத்திருந்தது. அதே கூட்டத்தில் “மகாசென் 969” என்கிற பெயரில் உரிமைகோருகின்ற துண்டுபிரசுரமொன்றும் வெளியிடப்பட்டிருந்தது. அதில்
“15ஆம் திகதி யூன் 2014 பிற்பகல் முஸ்லிம் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளான பிக்குகள் உள்ளிட்ட பௌத்தர்கள் இன்னமும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். பௌத்த விகாரைகளுக்கும் சேதங்கள் விளைவிக்கப்பட்டுள்ளன.
தேசப்பற்றுள்ளவர்களே பௌத்த சீருடைகளுக்கு கை வைக்குமளவுக்கு எதிரிகள் விளைந்துள்ளார்கள். கௌரவம், பயம், வெட்கம் ஒன்றும் இல்லாமல் போய்விட்டது. இது சிறு விடயமல்ல நாளை நம்மெல்லோரையும் பாதிக்கப்போகும் விடயம்.
இது நம் சிங்கள நாடு
நாம் பிறந்து... இறக்கும் நாடு...
இதற்கு எதிராக மாவனல்லை நகரத்தில் நடத்தப்படும் விசேட சத்தியாகிரகம் நடக்கவிருக்கிறது.
தேசத்தின் இக்கட்டான காலப்பகுதியில் உங்களனைவரையும் அழைக்கிறோம்.”
“மகாசென் 969”
இந்த “மகாசென் 969” என்கிற பெயரில் வெளியிடப்படுபவை வன்முறைக்கான ரகசிய அழைப்பென்றே சந்தேகிக்கப்படுகின்றது.
தற்போது ரோஹிங்கியாவில் முஸ்லிம்கள் மீதான படுகொலையின் பின்னணியில் இருக்கும் பௌத்த அமைப்பின் பெயரும் “969” என்பதே. இந்த அமைப்பு தொடர்ச்சியாக சில வருடங்களாகவே முஸ்லிம்களின் மீதான இனப்படுகொலையை நடத்தி வருகிறது. கடந்த வருடம் இந்த “969” அமைப்பின் தலைவர் அசின் விறாத்துவை போதுபல சேனா தமது மாநாட்டுக்கு தலைமை தாங்க வந்திருந்தவர் என்பது நாமறிந்ததே. பௌத்தர்கள் அல்லாதர்வர்கள் மட்டுமல்ல, தேரவாத பௌத்தர்கள் அல்லாதவர்கள் அனைவருமே அவர்களைப் பொறுத்தளவில் எதிரிகளாகவே கருதுகின்றனர்.
“969” என்பது பௌத்த அடிப்படை மூலங்களைக் குறிக்கும் எண்கள் அவை பௌத்தம், தர்மம், சங்கம். எனவே இந்த “969” என்கிற நாமத்தை முதன்மைபடுத்த பௌத்தர்களுக்கு அறைகூவல் விடுக்கின்ற சுலோகங்களை உலக பௌத்தர்களுக்கு விரிவாக்குகிறது இந்த இயக்கம்.
*மகாசேனன் (கி.பி. 334 - 362) : பௌத்த அந்தஸ்தை நிலைநிறுத்த தமிழர்களுக்கு எதிராக போராடியதாக துட்டகைமுனுவுக்கு நிகராக மகாவம்சத்தில் போற்றப்படும் மன்னன் மகாசேனன். அக்காலத்தில் இருந்த சைவ கோயில்கள் பலவற்றை இடித்து விகாரைகளைக் கட்டியதாக வரலாறு கூறுகிறது. அப்படிப்பட்ட கோவில்களில் ஒன்று திருக்கோணேஸ்வரம். திருக்கோணேஸ்வரம் மகாசென் மன்னனால் அழிக்கப்பட்டு பின்னர் மீளகட்டப்பட்டது வரலாறு. மகாசேனனை சிலர் கடவுளாகவே வணங்குகின்றனர்.
ஆக இந்த “மகாசென் 969” என்கிற பெயரில் பௌத்தர்கள் அல்லாதவர்கள் மீதான தமது அழித்தொழிப்பு நடவடிக்கைக்கு தயார் செய்கின்றது என்றே கருத முடிகிறது.
“விழித்தெழு” நடவடிக்கை
15 ஆம் திகதி அளுத்கமவில் பொதுபல சேனாவால் நடத்தப்பட்ட கூட்டத்தின் தலைப்பு “விழித்தெழு”. இது பல ஆண்டுகளுக்கு முந்திய அநகாரிக்க தர்மபாலாவின் பிரசித்திபெற்ற இனவெறியூட்டும் உரையின் தலைப்பு. சிங்கள பௌத்தர்களை இனவெறியூட்டும் அந்த உரையின் தலைப்பை சமீப காலமாக பொதுபல சேனா சகல கூட்டங்களிலும் பாவித்துவருகிறது.
கூட்டத்தில் இனவெறியேற்றப்பட்ட மக்களும், பிக்குகளும், வெளியிடங்களில் பஸ்களில் கொண்டுவந்து இறக்கப்பட்ட ஆயுதம் தாங்கிய காடையர்களும் திட்டமிடப்பட்டபடி களத்தில் இறக்கப்பட்டார்கள். போலீசார் இவற்றை கண்டும் காணாததுபோலிருக்க பணிக்கப்பட்டிருந்தார்கள் என்றே அங்கிருந்த சாட்சியங்கள் கூறின. கண்துடைப்புக்காக தாம் தமது கடமையை செய்வதைப்போல காட்டிக்கொண்டார்கள் என்றும், கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு வன்முறையில் ஈடுபட்ட காடையர்கள் கட்டுமீறி இருந்தார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.
பல இடங்களில் பொருத்தப்பட்டிருந்த CCTVயில் பதியப்பட்டிருந்த ஆதாரங்களின்படி துப்பாக்கிகள், வாள்கள், இரும்பு ஆயுதங்கள், அலவாங்குகள், தடி பொல்லுகள், போத்தில்கள், பெட்ரோல் குண்டுகள் என இருந்திருக்கின்றன. வந்தவர்கள் அந்த பிரதேசங்களை சேர்ந்தவர்கள் இல்லை, அவர்களை எப்போதும் கண்டதும் இல்லையென சிங்கள அயலவர்களும், பாதிக்கப்பட்டவர்களும் தெரிவித்திருந்தனர். ஞானசாரவின் கூட்டத்திற்கு பஸ்களில் கொண்டுவரப்பட்டு இறக்கப்பட்டவர்களே தயாராக வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களை பிரயோகித்திருக்கக்கூடும் என்று பரவலாக சந்தேகிக்கப்படுகிறது.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி.யான மொஹமட் அஸ்லம் ஜூன் 20 அன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையின் படி
“இச் சம்பவத்தில் தமிழர் ஒருவர் உட்பட நான்கு பேர் படுகொலை செய்யப்பட்ட அதேவேளை மேலும் நான்கு பேர் சம்பவம் தொடர்பான அதிர்ச்சியால் மாரடைத்து மரணமாகினர். இதன்படி இந்த சம்பவத்தில் எட்டு பேர் உயிரிழந்திருக்கின்றனர். 170 பேர் காயமடைந்துள்ளனர். 150 வீடுகள் ,கடைகள் மற்றும் 17 பள்ளிவாசல்கள் தாக்கி அழிக்கப்பட்டுள்ளன. 370 குடும்பங்களை சேர்ந்த 2450 பேர் இடம்பெயர்ந்து அகதிகளாகியுள்ளனர். அத்துடன் இந்த சம்பவத்தால் 580 கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களுக்கு அழிவு ஏற்பட்டுள்ளது. இங்குள்ள வர்த்தக நிலையங்கள் அழிவுக்குள்ளாக்கப்பட்டுள்ளதால் சுமார் ஆயிரம் பேர் வரையிலானோர் தொழில் வாய்ப்புகளை இழந்திருக்கின்றனர். பாடசாலை மாணவர்கள் தமது அனைத்து உடைமைகளையும் அது மாத்திரம் அன்றி 272 கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளதுடன் இங்கு 86 கொள்ளைச் சம்பங்களும் நடந்தேறியுள்ளன.” என்றார்
இதனை 1983ஆம் ஆண்டுக்குப் பின் நடந்த மோசமான கலவரமென பல ஊடகங்களும் குறிப்பிடுகின்றன.
இது குறித்து அசாத் சாலி குறிப்பிடுகையில்...
“பொதுபல சேனா இன்று கூட்டம் முடிந்து ஊர்வலமாக தர்கா நகருக்கு செல்லவிருக்கின்றனர் ஏதோ ஒரு அசம்பாவிதம் நடக்கலாம் உடனேயே தடுத்து நிறுத்துங்கள் மீறி நடக்கும் அத்தனை அசம்பாவிதங்களுக்கு நீங்களும் அரசும் பொறுப்பேற்க வேண்டும் என்று பொலிஸ் மாஅதிபருக்கு எழுத்து மூலம் அறிவித்திருந்தோம். அப்படி இருந்தும் இதனை அனுமதித்தார்கள். இன்று இந்த படுகொலைகளுக்கும், சேதங்களுக்கும், இழப்புகளுக்கும் இப்போது யார் பொறுப்பேற்கப்போகிறார்கள்....
பல்கலைக்கழக மாணவர்கள் தமது கோரிக்கைகளுக்காகவும், சாதாரண அரசியல் கட்சிகள் தமது சிறிய கூட்டங்களுக்காகவும் அனுமதி கேட்டால் மறுப்பு தெரிவிக்கும் பொலிசாரும் அரசும் எப்படி இது போன்ற ஒரு இனவாத நடவடிக்கைக்கு அனுமதித்தார்கள். இப்படி நடக்கும் என்று புலனாய்வு தகவல்கள் கூட உறுதிசெய்திருந்தும். நாங்கள் எச்சரித்திருந்தும் பொலிசார் எப்படி அனுமதித்தார்கள்..." என்றார்.
ஊரடங்கு சட்டம் அமுலுக்கு கொணரப்பட்டு மக்களுக்கு உணவு கூட உள்ளே நுழையவிடாது தடுத்த போலீசார் காடையர்களை அனுமதித்தது எப்படி. வீடுகளும், கடைகளும் சூறையாடப்பட்டு, அழிக்கப்படும் வரை எங்கிருந்தார்கள். முன்கூட்டியே எச்சரிக்கை செய்யப்பட்டிருந்தும் படையினர் ஈடுபடுத்தப்படாதது ஏன்.
கோத்தபாயவின் பாத்திரம்
ஞானசார தேரோவின் உருவாக்கம் மற்றும் அவரை ஏவிவிடும் அம்பு என்பனவற்றின் பின்புலத்தில் முன்னாள் பாதுகாப்பு செயலாளருமான கோத்தபாய ராஜபக்ஷ செயல்படுவதாக பலரும் நம்புகின்றனர்.
யூன் 27ஆம் திகதி வெளியான ராவய பத்திரிகையில் “கோத்தபாயவின் நிழல்” என்கிற தலைப்பில் ராவய பத்திரிகை ஆசிரியர் விக்டர் ஐவன் எழுதிய கட்டுரையில் இப்படி எழுதிகிறார்.
“...கோத்தபாயவுக்கும் ஞானசாரவுக்கும் இடையில் உள்ள உறவு அரசாங்கத்துக்குள் உள்ள அனைவருக்கும் தெரியும்.... அரசாங்கத்தில் இருக்கும் முஸ்லிம் அமைச்சர்கள் மாத்திரமல்ல சில சிங்கள அமைச்சர்கள் கூட பொலிஸ் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு அளுத்கமவில் ஞானசாரவின் கூட்டத்திற்கு அனுமதியளிக்க வேண்டாம் என்று கூறியிருந்தும் அந்த அதிகாரிகள் அதனை செவி சாய்க்காமல் இருந்ததன் காரணம் பாதுகாப்பு செயலாளர் ஏற்கனவே வழங்கியிருந்த அனுசரனையினாலேயே”
ஞானசார தேரோ அளுத்கம சம்பவத்தின் இரண்டாவது நாள் ஊடக சந்திப்பொன்றை கூட்டி இப்படி விளக்கினார்.
“புத்தர் அங்குலிமாலாவுக்கு சொன்னது போல... நாங்கள் உங்கள் எல்லோருக்கும் கூறுவது நாங்கள் நிறுத்தியிருக்கிறோம் நீங்கள் நிறுத்திக்கொள்ளுங்கள்.” என்று மிரட்டாமல் மிரட்டினார்.
யுத்தத்தின் பின்னர் ஏறத்தாழ தமிழ் மக்களின் அரசியல் ஒரு சவாலுக்குரிய ஒன்றாக இல்லை என்று ஆனதன் பின் முஸ்லிம் மக்கள் மீது அரசியல் நீக்க நடவடிக்கை வீச்சோடு ஆரம்பிக்கப்பட்டது எனலாம்.
இனி முஸ்லிம்களே உடனடி இலக்கு
முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைக்கு ஆயத்தமாகுமுன் முஸ்லிம்களுக்கு எதிரான கற்பிதங்களை புனைந்து. பரப்பி, நிறுவ வேண்டும். ஏற்கெனவே தமிழ் மக்கள் விடயத்திலும் இந்த கருத்துப்போரை வெற்றிகரமாக நிறுவியபின்னரே அரசியல் மற்றும் ஆயுத போராட்டத்தை துணிச்சலாக நடாத்தி முடித்தது. எந்த விலையை கொடுத்தும் போரை வெற்றிகொல்லும்படி தெற்கில் கிடைத்த ஆசீர்வாதம் இந்த கருத்துப்போரின் வெற்றியின் விளைவே என்பதை புரிந்துகொள்ளவேண்டும்.
அதே வகை அணுகுமுறையே முஸ்லிம்கள் விடயத்திலும் கடைபிடிக்கிறது. முஸ்லிம்களுக்கு எதிராக இன்றல்ல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே நிறுவப்பட்ட வெறுப்புணர்ச்சி மேலிட்ட புனைவுகளை மேலதிக சேர்ப்புக்களுடன் புதுப்பித்து இன்றும் வலிமையாக நிறுவிவருகிறது.
வடக்கில் யுத்தத்தை முடித்த கையோடு தெற்கில் ஹலால் பிரச்சினையிலிருந்து அதன் அடுத்த வேட்டையைத் தொடக்கியது.
ஆக முஸ்லிம்களுக்கு எதிராக 100 வருடங்களுக்கு முன்னர் எவ்வாறு முஸ்லிம்களின் வர்த்தகத்தை சிதைப்பது என்கிற பேரில் முஸ்லிம்களுக்கு எதிரான கருத்தாக்கங்களை பரப்பி இலங்கையின் முதலாவது இனக்கலவரத்தை சிங்கள பௌத்த பேரினவாதம் நடத்தி முடித்ததோ. அதே போல அந்த கறைபடிந்த வரலாற்றின் 100வது வருட நினைவை எட்டிக்கொண்டிருக்கும் போது அதே வர்த்தக காரணங்களை மையப்படுத்தி திட்டமிட்ட பிரச்சாரங்களை ஏற்படுத்தி ஒரு கலவரத்தையும் அளுத்கமவில் ஒத்திகை பார்த்திருக்கின்றது.
இந்த இடைப்பட்ட காலப்பகுதியில் தமிழ், சிங்கள, மலையக மக்களுக்கு எதிராக பல இனவாத கருத்துக்கள் உருவாக்கப்பட்டு அவை ஆழமாக நிலைக்கச்செய்திருந்தது பேரினவாத அமைப்புமுறை. அது போல பல பெரிய, சிறிய கலவரங்களையும் வெற்றிகரமாக நடத்தியும் காட்டியிருக்கிறது.
இந்த இடைப்பட்ட காலத்தில் இனவாத அரச கட்டமைப்புக்கு பல்வேறு தலைவர்களும், கட்சிகளும் தலைமை தாங்கியிருக்கின்றன. அரசு ஒருபுறம் அரச இயந்திரத்தை சிங்கள பௌத்த கட்டமைப்பாக மாற்றும் பணியை செய்துகொண்டிருக்க; அவர்களுக்கு நிகராக இனவாத அமைப்புகள் சிங்கள பௌத்த பேரினவாத சித்தாந்தத்தை பலப்படுத்துவது, மக்கள்மயப்படுத்துவது அதனை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கடத்துவது என கடந்து வந்துள்ளது. அளுத்கம சம்பவம் ஒரு முடிவல்ல. அது ஒரு முடிவின் தொடக்கம்.
பெட்டிச் செய்தியாக இடக்கூடியது ஞானசாரவின் உரையின் சாராம்சம்
அளுத்கம கூட்டத்தில் ஞானசாரவின் உரையிலிருந்து
நமது நாட்டைக் காப்பாற்றுவதற்காக இன்றிலிருந்து அனைவரும் உத்தியோகபூர்வமற்ற போலீசாராக வேண்டும்.
இந்த நாட்டில் தமிழருக்கு தலைவர்கள் இருக்கிறார்கள். மரக்கலயன்களுக்கு தலைவர்கள் இருக்கிறார்கள்.. அய்யோ சிங்களவனுக்கு ஒரு தலைவனும் இல்லை. சிங்கவருக்கு தலைவரை இன்று உருவாக்க வேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளாகியிருக்கிறோம்.
இந்த நாட்டின் சக்கிலி அமைச்சர்கள் எங்களை இனவாதிகள் என்கிறார்கள்
நாங்கள் வீணடித்தது போதும் இனி நாங்கள் ஒன்றிணைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால் எதிகால சந்ததியினர் நம்மை நிச்சயமாக சபிப்பார்கள்
இங்கு புத்தளம், காத்தான்குடி அம்பாறையில் இருந்து வந்த சண்டியர்கள் தான் தர்கா நகரில் இருக்கிறார்கள் (கூறும்போது கூட்டத்திலிருந்து “நாங்கள் வரவா” “நாங்கள் வரவா” என்று கத்துகிற சத்தம் கேட்கிறது)
இந்த பிரதேசத்தில் இருக்கின்ற சிங்கள அரசியல்வாதிகள் சரியாக பள்ளிவாசல்களுக்கு சென்று ஆண்குறி முனைகளை வெட்டி சுன்னத் செய்துகொண்டவர்களல்ல. அப்படி செய்தால் எல்லாம் தெரிந்துவிடுமல்லவா. இன்று சிங்களவர்களை போல இருப்பவர்கள் சிங்களவர்கள் அல்ல அவர்கள் ஆண்குறிமுனை அறுத்த “தம்பியாக்கள்”
சிங்கள வாக்குளால் தெரிவு செய்யப்பட்டவர்கள் சிங்களவர்களுக்காக கதைத்திருக்கிறார்களா... (மக்கள் மத்தியிலிருந்து “இல்லை... இல்லை...” என்கிற குரல்) அப்படியென்றால் போய் உங்கட அம்மாவோட சாரிக்குள்ள போய் வாக்கைக் கொடு.... இனியாவது உங்கள் வாக்குகளால் மக்களே சிங்களவர்களை தெரிவு செய்யுங்கள், பௌத்தர்களை தெரிவு செய்யுங்கள்.
நீங்களாக அடங்காவிட்டால் நாங்கள் அடக்க வேண்டிவரும். இரத்தத்திற்கு பழக்கப்பட்டவர்கள் நாங்கள்.
இல்லையேல் நாங்கள் அளுத்கமவிலேயே தொடங்குவோம்.
இனி நீங்கள் உங்கள் நிலத்தில் ஒரு சிறு துண்டைக்கூட முஸ்லிம்களுக்கு விற்காதீர்கள்
முஸ்லிம்கள் இந்த நாட்டை கைப்பற்றப் போகிறார்கள்,
இங்குள்ள தங்கமான இளைஞர்களை நோக்கி ஒரு வார்த்தை சொன்னாள் போதும் அவர்கள் தயாராக இருக்கிறார்கள். ஆனால் ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் நாங்கள் இப்போது நிறுவனமயப்பட்டிருக்கிறோம்.
நாங்கள் பல இடங்களில் பாடம் கற்பித்திருக்கிறோம். இளைஞர்களே, யுவதிகளே உங்களுக்கு பொறுப்பு உள்ளது. உங்கள் போராட்டத்தை வீடுகளிலிருந்து தொடங்குங்கள்.
நீங்கள் அதிகம் ஆட்டம் போட்டால் அடுத்தது பேருவில, தர்காநகர், மக்கொன எதுவாகவும் இருக்கலாம் நாங்கள் எங்கள் அளவுகளை காண்பிப்போம்.
நன்றி - தினக்குரல்
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...