எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மாநகர சபை, நகரசபை, பிரதேச சபை என்ற மூன்று பிரிவுகளில் மக்கள் வாக்களிக்கவுள்ளனர்.
இந்த சபைகள் வரும் 15.5.2015 கலைக்கப்பட்டு புதிய பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படவிருக்கின்றார்கள்.
இந்த நிலையில் மலையகப் பகுதிகளில் குறிப்பாக நூரளை, தலவாக்கலை, ஹற்றன் போன்ற பகுதிகளில் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக செறிந்து வாழ்கின்ற படியால் இவர்களின் பிரதிநிதித்துவம் மாநகர சபை, நகர சபை போன்றவைகளில் தலைமைத்துவத்தை தீர்மானிக்கும் சக்தி அதிகமாக உள்ளது.
இதனால் இந்த சபைகளை நடாத்துவதற்கு தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் மிகமிக அவசியமாகின்றது.
குறிப்பாக மலையக மக்கள் 65 வீதம் வாழும் நுவரெலியா மாவட்டத்தில் மாநகர சபையில் இன்று ஆறு உறுப்பினர்கள் சிறுபான்மை இனத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகளாவர்.
மிகுதி நான்கு உறுப்பினர்களே பெரும்பான்மை இனத்தவர்கள். எனினும் மாநகர சபை முதல்வர் பெரும்பான்மை இனத்தவராக இருக்கின்ற போதும், இவர் சகல அபிவிருத்தி வேலைத் திட்டங்களையும் சிறுபான்மை இன பிரதிநிதிகளின் உதவியின் மூலமே அமுலாக்க வேண்டிய நிலையில் இருக்கின்றார்.
இந்த நிலையில் எதிர்வரும் உள்ளூராட்சி சபை தேர்தல் நடைபெறும்போது தமிழ் பிரதிநிதிகள் அல்லது சிறுபான்மை பிரதிநிதிகளை முற்றாக இல்லாது ஒழிக்கும் திட்டத்தை நுவரெலியா மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பெரும்பான்மை இன அரசியல் பிரதிநிதி மிக கச்சிதமாக, தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் எந்த பிரதிநிதியும் தெரிவு செய்ய முடியாதவாறு எல்லை மீள் திருத்தத்தை அமுலாக்க சகல ஏற்பாடுகளையும் செய்து முடித்துள்ளார்.
இது சம்பந்தமான கலந்துரையாடல்களையும் சகல சிறுபான்மை இன அரசியல் பிரதிநிதிகளிடம் தற்பொழுது நடாத்தப்பட்டு அதில் மிக கவனமாக அவர்களின் அனுமதியை பெறும் அதிர்ச்சி திட்டம் தற்பொழுது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி எதிர்காலத்தில் நாம் குறிப்பிட்ட மாநகர சபை, நகர சபைகளில் சிறுபான்மை மக்கள் அங்கத்துவத்தை பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் குறிப்பாக தோட்ட மக்கள் அனைவரையும் பிரதேச சபைக்கு உட்பட்ட பிரதேச எல்லைக்குள் மாற்றப்பட்டு பெரும்பான்மை மக்கள் கொண்ட சபையாக மாநகர சபை நகர சபைகள் மாற்றப்பட்டுள்ளது என்பதை நாம் குறிப்பிட்டே ஆகவேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.
நுவரெலியா மாநகர சபையை தனி பெரும்பான்மை சிங்கள பிரதிநிதிகள் சபையாக மாற்றியுள்ள நிலை வரும் தேர்தலில் உருவாகியுள்ளது.
தமிழ் தோட்ட தொழிலாளர்கள் அதிகமாக வாழும் பகுதிகளை நீக்கி அதற்கு பதிலாக சிங்கள மக்கள் வாழ்ந்த பிரதேச சபை பகுதியை சபையுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் தமிழ் மக்கள் அனைவரையும் பிரதேச சபைக்குள்ளேயே அடக்கும் திட்டமும் அம்பலத்திற்கு வந்துள்ளது.
எனினும் பிரதேச பகுதியில் வாழும் சிங்கள மக்களை ஒதுக்காது அவர்கள் வாழும் அந்த பிரதேச சபைக்குள் அவர்களின் பிரதிநிதித்துவத்தையும் தெரிவு செய்ய கூடிய வழிவகையையும் இவர் ஏற்படுத்தியுள்ளார் என்பதும் தெரியவருகின்றது.
இந்த இரகசிய திட்டத்தை வரும் உள்ளூர் ஆட்சி சபை தேர்தலில் நடைமுறைபடுத்த சகல ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த போதும் கடைசி நேரத்தில் இந்த விடயத்தை அறிந்த இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்னண், முன்னாள் பிரதிநிதி அமைச்சர் புத்திரசிகாமணி அவர்கள் இன்று நூரளை மாவட்ட செயலாளரிடம் நேரடியாக சென்று விபரங்களை பெற்றதோடு, நூரளை மாவட்ட செயலாளரிடம் சகல விபரங்கள் அடக்கிய ஆவணங்களை பெற்றுக் கொண்டார்கள்.
மேலதிக நடவடிக்கை எடுத்து இந்த அரசியல் இனவாதியின் திட்டத்தை தகர்க்க இந்த விடயம் தொடர்பாக உடன் பேச்சுவார்த்தையை வரும் 9ஆம்திகதி நடாத்தும் படி மாவட்ட செயலாளரிடம் கோரியுள்ளனர்.
இந்த திட்டம் முன்னாள் ஜனாதிபதி மகிந்தவின் காலத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதும் தற்பொழுது தெரிய வந்துள்ளது.
தமிழர்கள் எங்கு வாழ்ந்தாலும் அவர்களின் பிரதிநிதித்துவத்தை இல்லாதொழிக்கும் திட்டம் நீண்ட காலமாக செயல்பட்டு வந்துள்ளது என்பதேற்கு இது ஒரு உதாரணம்.
எனவே மலையக தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அதிகமாக உள்ள இந்த நுவரெலியா மாவட்ட உறுப்பினர்கள் எவ்வாறு இந்த திட்டத்தை தகர்க்க போகின்றார்கள் என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டியுள்ளது.
தன் கையை வைத்தே தனது கண்களை குத்திக்கொள்ளும் திட்டத்தை 2014 ஆம் ஆண்டு திறமையாக செயல்படுத்தியுள்ள முன்னைய அரசும் அதற்கு துணைப் போன சிறுபான்மை தலைமைகளும் சிந்தித்து இதற்கு நல்ல முடிவை செய்யவேண்டும்.
இந்த திட்டம் நுவரெலியா மாநகர சபைக்கும் மடடும் இல்லாது தலவாக்கலை மற்றும் ஹற்றன் நகர சபைக்கும் சாத்தியமாகலாம் என்பது நிச்சயம்.
ஆகவே சிறுபான்மை தமிழ் அரசியல் தலைவர்கள் உடனடியாக இந்த விடயத்தில் கவனம் செலுத்தி தமிழ் மக்கள் கடந்த காலங்களில் எவ்வாறு வாக்களித்தார்களோ அந்த பகுதியில் அவர்களின் பிரதிநிதிகளை தெரிவு செய்யக்கூடிய நிலையை ஏற்படுத்த உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இல்லையேல் வரும் காலத்தில் மாநகர மற்றும் நகர சபைகளில் தமிழ் பிரதிநித்துவம் அழிக்கப்பட்டுவிடும் இதை அரசியல் தலைமைகள் தடுத்து நிறுத்தாவிட்டால் இது கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்வதற்கு ஒப்பாகலாம்.
நன்றி - தமிழ்வின்
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...