மலையகப் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ´சொந்தக்காணியில் தனிவீடு´ எனும் அரசியல் கோரிக்கையின் அடிப்படையில் புதிய அரசாங்கத்தின் 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட்டுள்ள 300 வீடுகளுக்கான காணியுறுதிப்பத்திரங்கள் எதிர்வரும் 10ம் திகதி வழங்கப்படவுள்ளதாக பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் ஊடகப்பிரிவு விடுத்திருக்கும் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் மே 10ம் திகதி தலவாக்கலையில் நடைபெறவுள்ள தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஐம்பதாண்டு நிறைவைக் கொண்டாடும் பொன்விழா ஆரம்ப நிகழ்வு நடைபெறவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் பங்குபற்றுதலோடு இடம்பெறும் இவ்விழாவில் மேற்படி 300 வீடுகளுக்கும் மற்றும் மீரியபெத்தையில் அமைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் 75 வீடுகளுக்கும் காணியுறுதிப்பத்திரங்கள் வழங்கப்படவுள்ளன.
மீரியபெத்தை மக்களுக்கான வீடமைப்புத்திட்டம்
மீரியபெத்தையில் இடம்பெற்ற மண்சரிவு அவலத்தில் பாதிப்புற்ற 75 குடும்பங்களுக்கான வீடமைப்புக்கான அடிக்கல் கடந்த அரசாங்கத்தினால் இடப்பட்டது. எனினும் அப்போது வீடமைப்புக்காக தெரிவு செய்யப்பட்டிருந்த இடம் மக்களின் விருப்புக்கும் வசதிக்கும் அமைய இடம்பெறவில்லை என எழுந்த சர்ச்சையை அடுத்து புதிதாக உருவாக்கப்பட்ட தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சு புதிய இடத்தினைத் தெரிவு செய்து தற்போது 75 வீடுகளை நிர்மாணித்து வருகிறது. நகர அபிவிருத்தி அதிகார சபையின் ஆலோசனை வழிகாட்டலோடு இலங்கை இராணுவத்தினரால் கட்டுமாணப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் 300 வீடுகள்
மலையகப் பெருந்தோட்ட மக்களுக்கான தனி வீடுகளின் தேவை சுமார் 160000 என அடையாளம் காணப்பட்டுள்ளது. எனினும் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் மாதிரி வீடுகளாக 300 வீடுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த 300 வீடுகளும் மண்சரிவு, மண்சரிவு அபாயம் மற்றும் தீயபாயத்திற்கு உட்பட்ட வீடுகள் என அடையாளம் காணப்பட்டு தெரிவுசெய்யப்பட்டுள்ளன.
இத்தகைய ஆபத்து உள்ள வீடுகள் என சுமார் 5600 வீடுகள் தேசிய கட்டட ஆய்வு நிறுவனத்தினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவற்றில் இருந்து 300 வீடுகள் தெரிவுசெய்யப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவு செய்யம்போது மலையக மாவட்டங்கள் தோறும் பரவலாக வீட்டுத்திட்டங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.
அபாயம் காரணமாக மக்களுக்கு நன்கொடையாக இந்த வீடுகள் வழங்கப்படுகின்றன. நுவரெலியா மாவட்டம் (மஸ்கெலியா – மொக்கா, சாமிமலை- லெட்புரூக், நோர்வூட்- சென்ஜோன் டில்லரி, டிக்கோயா- டன்பார், கொட்டகலை- யுலிபீல்ட், தலவாக்கலை- ஹொலிரூட், கந்தப்பளை- கொன்கோடியா) பதுளை மாவட்டம் (எல்ல -நிவ்பேர்க், ஹப்புத்தளை- விஹாரகல) கண்டி மாவட்டம் (புசல்லாவை - சோகம) மாத்தளை மாவட்டம் (கந்தேநுவர - பிட்டகந்த) இரத்தினபுரி மாவட்டம் (நிவித்திகல- தொலஸ்வல) கேகாலை மாவட்டம் (அட்டாலே – நிவ் அராந்திரா) என மலையக மாவட்டங்கள் தோறும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.
புதிய வீடமைப்புத்திட்டத்தின் சிறப்பு அம்சங்கள்
ஏழு பேர்ச் காணியில் அமையப் பெறுகின்றது.
பெருந்தோட்ட மக்களுக்கு காணியுரித்து வழங்கும் பசுமை பூமி திட்டத்தின் கீழ் காணியுரித்துகள் வழங்கப்படுகின்றன.
வீட்டின் பரப்பளவு 550 சதுர அடி.
இரண்டு படுக்கை அறை, ஒரு சமையலறை, ஒரு வரவேற்பறை ஒரு குளியலறை என உள்வடிவமைப்பு கொண்டது.
ஒரு வீட்டின் பெறுமதி 12 லட்சம் ரூபா.
இவ்வாறு தரநிர்ணயம் செய்யப்பட்ட வீடுகளே இனி மலையக மக்களுக்காக அமைக்கப்படவேண்டும் எனும் முன்மாதிரித் திட்டமாக இந்த 375 வீடுகளும் அமைக்கப்பட்டு வருகின்றது.
மண்சரிவு மற்றும் தீ அபாயங்களில் சிக்கிக்கொண்ட மக்களுக்கு நன்கொடையாக வழங்கப்படவுள்ள நிæலையில் ஏனைய மக்களுக்கு கடன் மற்றும் நன்கொடை கலந்த திட்டங்களாக எதிர்காலத்தில் நடைபெறவுள்ளது. இந்த வீட்டத் திட்டங்களுக்கு மேலதிகமாக இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள 4000 வீடுகளை அமைப்பதற்காக பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளன.
மேலதிகமாக இந்திய அரசாங்கத்திடம் 20000 ஆயிரம் வீடுகளுக்கான உதவிகளைக் கோருவதற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்து அதற்கான விண்ணப்பம் இந்திய அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்டுள்ளது. அமைச்சர் பழனி திகாம்பரம் இந்த அமைச்சரவை பத்திரத்தை தாக்கல் செய்து ஜனாதிபதி ஊடாக இந்திய பிரதமரிடம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
கட்டப்படுகின்ற வீடுகளுக்கான காணியுறுதிப்பத்திரங்கள் அனைத்தும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சினால் அமைச்சரவை அனுமதி பெறப்பட்டு அரசாங்கத்தினால் கொள்கையளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் பெருந்தோட்ட மக்களுக்கு வீடமைப்பு காணி வழங்கும் ´பசுமை பூமி´ காணியுறுதித் திட்டத்தின் கீழ் காணியுறுதி வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...