ஜனவரி 8ஆம்
திகதியுடன் நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் பல தரப்பட்ட சவால்களை கடந்து காத்திரமான
மாற்றங்களை அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் ஏற்படுத்தி
வருவதனை அவதானிக்க முடிகின்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது
தேர்தல் விஞ்ஞாபனத்தில் வாக்குறுதி வழங்கிய அதிகமான விடயங்களை அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்திற்குள் நிறைவேற்ற முடியாது போனாலும் 19ஆவது அரசியல் திருத்தத்தை கொண்டு வருவது தொடங்கி பொருட்களின் விலை
குறைப்பு, எரிபொருள் விலை குறைப்பு, அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு உட்பட சமூக நலன் சார்ந்த விடயங்களை
அமுல்படுத்துவதில் வெற்றி கண்டுள்ளதென்பதை மறுப்பதற்கில்லை.
100 நாள் வேலைத்திட்டம் மலையக மக்கள் ஆண்டாண்டு
காலமாக எதிர்பார்த்திருந்த காணி உரிமை பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுத்தந்திருக்கின்றது.
பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு, பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க
அமைச்சு, அரச பெருந்தோட்ட கூட்டுத்தாபனம் மற்றும்
மக்கள் தோட்ட அபிவிருத்திச் சபை என்பன ஒன்றிணைந்து மலையக மக்களுக்கு சட்ட ரீதியான
காணி உரிமை வழங்கும் பசுமை பூமி திட்டத்தினை ஆரம்பித்திருக்கின்றன.
இலங்கையில் 200
வருட காலமாக தமக்கென தனியான காணி வீட்டுரிமை இன்றி முகவரி அற்றிருந்த ஒரு சமூகம்
இப்பசுமை பூமி திட்டத்தின் மூலம் சட்ட ரீதியான காணி உரிமை பத்திரத்தை பெற்றுக்
கொண்டுள்ளது. சட்ட ரீதியான முதல் காணி உறுதிப் பத்திரத்தை எல்ல, நிவ்பர்க் தோட்டத்தைச் சேர்ந்த திரு.திருமதி. சுந்தரேசன் தம்பதியினர்
பெற்றிருந்தனர். இக்காணி உரிமை பத்திரம் கணவன் – மனைவி
இருவருக்கும் உரிமையை பகிர்ந்தளிக்கின்றமையானது இன்னுமொரு சிறப்பம்சமாக பார்க்கப்படுகின்றது.
கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் பெருந்தோட்ட
கைத்தொழில் அமைச்சினதும் பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சினதும் ஏற்பாட்டில்
பண்டாரவளை நகர சபை மண்டபத்தில் வைத்து மலையகத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள
ஆயிரம் பேருக்கு பசுமை பூமி சட்ட ரீதியான காணி உரிமை பத்திரம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து
கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க காணி உரிமைப் பத்திரம் பெற்றுக்கொண்டவர்கள்
மத்தியில் உரையாற்றும் போது பல்வேறு விடயங்களை சுட்டிக் காட்டியிருந்தார். அவரது
உரையில், 1993ஆம் ஆண்டு ஜனாதிபதியாகவிருந்த ரணசிங்க
பிரேமதாஸவின் ஆட்சி காலத்தில் தோட்ட மக்களுக்கு காணி உரிமையை வழங்குவதற்கான நடவடிக்கையை
மேற்கொண்டோம்.
நானும் அப்போதைய அமைச்சர் அமரர் செளமியமூர்த்தி
தொண்டமானும் நுவரெலியாவில் வைத்து காணியுரிமை வழங்குவோமென மக்களிடம் உறுதியளித்தோம்.
எனினும், எதிர்பாராத வகையில் ஜனாதிபதி பிரேமதாஸ படுகொலை
செய்யப்பட்டார். இதனால் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியவில்லை. 20 வருடங்களின் பின்னர் நாட்டில் உருவாகியுள்ள தேசிய அரசாங்கத்தின்
ஊடான நல்லாட்சியிலே இவ்விடயம் மீண்டும் சாத்தியமாகியுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது
தேர்தல் விஞ்ஞாபனத்தில் பெருந்தோட்ட மக்களுக்கு 7பேர்ச்
காணியுரிமையை பெற்றுத் தருவதாக உறுதியளித்திருந்தார். எமது அமைச்சரவையின் தோட்ட
உட்கட்டமைப்பு அமைச்சர் பி.திகாம்பரம், இராஜாங்க அமைச்சர்களான
கே. வேலாயுதம், வே.இராதாகிருஷ்ணன் மற்றும் நிறைவேற்று
சபை உறுப்பினர் மனோ கணேசன் ஆகியோர்
ஒன்றிணைந்து பசுமை பூமி காணியுரிமை வழங்கும் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளனர்.
கைத்தொழில் அமைச்சர் லக் ஷ்மன் கிரியெல்ல, பெருந்தோட்ட
கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் வேலாயுதம் ஆகியோரின் கடுமையான உழைப்பே இத்திட்டத்தின்
வெற்றிக்கு உதவியுள்ளது.
காணியுரிமையோடு நாம் மலையகத்தில் தனி
வீட்டுத்திட்டத்தையும் நடைமுறைப்படுத்தியுள்ளோம். தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின்
ஊடாக இதுவரை 370 வீடுகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு
வீடுகளை அமைக்கும் பணிகள் துரித கதியில் இடம்பெற்று வருகின்றன. எவ்வித கடனும் இல்லாமல்
தொழிலாளர் குடும்பங்களுக்கு 12 இலட்சம் ரூபா செலவில் வீடுகளை
அமைத்துக் கொடுக்க தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த
காலங்களில் தொழிலாளர்களுக்கு முற்றிலும் இலவசமாக வீடுகள் அமைத்து கொடுக்கப்படவில்லை.
வீடுகளில் குடியேறும் போது அவர்கள் கடனாளிகளாகவே இருந்தனர்.
எமது அரசாங்கம் வீடுகளை இலவசமாக
அமைத்து கொடுப்பது மட்டுமன்றி, காணி உறுதியையும் வழங்கியுள்ளது. இந்திய
அரசாங்கத்தின் நிதியுதவியுடன் 25 ஆயிரம் வீடுகளை மலையக மக்கள் செறிந்து
வாழும் அனைத்து பகுதிகளிலும் அமைக்க உள்ளோம். தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சே இப்பணியை
பொறுப்பேற்று நிறைவேற்றவுள்ளது.
தனி வீடமைப்பு திட்டங்கள் உருவாகும்
போது அங்கே புதிய கிராமங்கள் உருவாகி புதிய சமூக கட்டமைப்பு உருவாக்கப்படும்.
வர்த்தக நிலையங்கள், விளையாட்டு மைதானங்கள், சனசமூக நிலையங்கள், கைத்தொழில் பேட்டைகள் என்பன உருவாகி
மாற்றமிகு சமூகம் அனைத்து துறை சார் வளர்ச்சியுடனும் தோற்றம் பெறும்.
பெருந்தோட்டங்களில் ஏற்படுத்தப்பட்டு
வருகின்ற வீடமைப்பு திட்டங்களுடன் அண்மைக்காலமாக அதிக பிரச்சினைகளை சர்வதேச சந்தையில்
எதிர்நோக்குகின்ற தேயிலைத் தொழிற்றுறையை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.
தொழில்நுட்ப அறிவுடன் கூடிய தேயிலை உற்பத்தியை பெருக்கி இளைஞர் யுவதிகளை சிறு உற்பத்தியாளர்களாக்கும்
சட்டதிட்டங்களை தேயிலை துறையில் உருவாக்கி தரமான தேயிலை உற்பத்தியை உறுதி செய்வதன்
மூலம் மலையக மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது
தேயிலை, இறப்பர் என்பனவற்றிற்கு நிலையான விலை பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.
காணியுரிமை பத்திரம் வழங்கப்படும்
போது மனைவியின் பெயரும் இடம்பெறுகின்றது. இதன் மூலம் பெண்களின் உரிமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மலையக மக்களுக்கு சேவை செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள 3
அமைச்சர்களும் தமது பணிகளை சிறப்பாக நிறைவேற்றுகின்றனர். இக்குழுவினர் இன்னும் 5 வருட காலத்திற்குள் இன்னும் பல மாற்றங்களை மலையகத்தில் ஏற்படுத்துவர்.
அதற்கு எமது முழுமையான ஒத்துழைப்பு உண்டு என்றார்.
பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகளால்
நிர்வகிக்கப்படுகின்ற 432 தோட்டங்களில் 24,9061 தனி வீடுகள் அமைக்கப்பட வேண்டும் என ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த 20 ஆண்டு காலத்தில் 31,761
வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இவற்றுள் 6,774
வீடுகளை தொழிலாளர்கள் தாமாக கட்டியுள்ளனர். இதன் அடிப்படையில் இன்னும் சுமார் 10 இலட்சம் பெருந்தோட்ட குடியிருப் பாளர்களது வீட்டு பிரச்சினைக்கு
தீர்வு காணப்பட வேண்டுமென பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் வேலாயுதம்
குறிப்பிட்டுள்ளார்.
அந்த வகையில் இந்திய அரசாங்கத்தின்
நிதியுதவியுடன் அமைக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்ற 25
ஆயிரம் வீடமைப்புத் திட்டத்தை தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் பி. திகாம்பரம்
மலையகத்தில் துரிதமாக நடைமுறைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம்
மலையகம் தனி வீட்டு திட்டத்தில் புதிய மைல்கல்லை எட்டக்கூடிய நிலை உருவாகும்.
இதற்கு காணிகளை ஒதுக்கி கொடுக்கும் கம்பனி நிர்வாகங்கள் உட்பட அனைத்து தரப்பினரது
துரித ஒத்துழைப்பும் அவசியமாகும்.
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...