Headlines News :
முகப்பு » » முழு உரித்துடனான காணி உறுதியே மலையக மக்களுக்கு வழங்க வேண்டும் - பெ. முத்துலிங்கம்

முழு உரித்துடனான காணி உறுதியே மலையக மக்களுக்கு வழங்க வேண்டும் - பெ. முத்துலிங்கம்


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் கடந்த ஏப்ரல் 25 ஆம் திகதி மலையக தோட்டத்தொழிலாளர்கள் சிலருக்கு 7 பேர்ச் நிலத்திற்கான தற்காலிக காணி உறுதி அமைச்சர் கே. வேலாயுதத்தின் தலைமையின் கீழ் பிரதமர் ரணிலினால் பதுளையில் வழங்கப்பட்டது.

தோட்ட மக்களைப் பொறுத்தவரை இது இரண்டாவது காணி உறுதி வழங்கல் நிகழ்வாகும். மறைந்த சௌமியமூர்த்தி தொண்டமானும் இன்றைய பிரதமரும் ஐக்கிய தேசிய அரசாங்கத்தின் கீழ் இவ்வாறான தற்காலிக காணி உறுதிப் பத்திரத்தை நுவரெலியாவைச் சார்ந்த தோட்டத் தொழிலாளர்களுக்கு தொண்ணூறுகளில் வழங்கினர். அதுவொரு வலுவற்ற காணியுறுதியாகியது.
நாட்டின் நிலமற்ற பிரஜைகளுக்கு வழங்குவதுபோல், சொந்த வீடற்ற தோட்டத் தொழிலாளர்களுக்கும் 20 பேர்ச் காணி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எண்பதுகள் முதல் மலையக தொழிற்சங்க மற்றும் சிவில் சமூகங்களினால் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

ஆனால், இக்கோரிக்கைக்கு ஆட்சியிலிருந்த அனைத்து அரசாங்கங்களும் எவ்வித நடவடிக்கைளையும் மேற்கொள்ளவில்லை. மாறாக தேர்தல்களின் போது பல உறுதிகளை அளித்து தேர்தல் முடிந்தவுடன் அதனை தட்டிக் கழிப்பதை வழமையாகக் கொண்டன.

ஆட்சி பீடமேறும் அரசாங்கத்திற்கு மலையக மக்களது வாக்குகளை பெற்றுக் கொடுத்து ஆட்சியில் அமரவைக்கும் மலையக தொழிற்சங்கங்களும், கட்சிகளும் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்காது குறிப்பிட்ட அரசாங்கத்துடன் இணைந்து ஆட்சியில் பங்ககேற்றன.

ஆனால், இன்றைய அரசாங்கத்தில் பங்கேற்றுள்ள அமைச்சர்களான கே.வேலாயுதம், பழனி திகாம்பரம் மற்றும் வே. இராதகிருஸ்ணன் போன்றோர் அமைச்சு பதவிகளை ஏற்றது முதல் மலையக மக்களுக்கு வீட்டுக்கான காணியுரிமையை வழங்க வேண்டுமென்று வலியுறுத்தி வரும் அதேவேளை, பெருந்தோட்ட இராஜாங்க அமைச்சராகவிருக்கும் கே. வேலாயுதம் தொடர் வலியுறுத்தலை மேற்கொண்டமையினால் இன்றைய அரசாங்கம் தோட்ட மக்களுக்கு 7 பேர்ச் காணி வழங்க கொள்கை ரீதியாக இணங்கியது. கொள்கை ரீதியான இணக்கம் வெற்றியாக அமைந்த போதிலும், நடைமுறையில் வழங்கப்பட்டுள்ள காணி உறுதியை வலுவானதாகப் பெற மேலும் போராட்டத்தை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

அண்மையில் வழங்கப்பட்டுள்ள தற்காலிக காணி உறுதி சிங்கள மொழியில் வழங்கப்பட்டுள்ளது. அதன் தலைப்பு பின்வருமாறு சிங்கள மொழியில் குறிப்பிடப்பட்டுள்ளது “ தோட்டத்துறை மக்கள் தற்போது வாழும் கடின லயன் காம்பிரா வாழ்க்கையிலிருந்து மீட்டு அவர்களுக்கு காணியுரிமையுடன் கூடிய உண்மையான வீட்டிற்குரிய உரிமையை பெற்றுக் கொடுத்தல் (ஜனாதிபதி கொள்கைப் பிரகடனம் 2015).

இத்தலைப்பின் கீழ் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்கூறப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் அதன் முதற் கட்டமாக கீழ் காணப்படும் முதலாவது உபபிரிவில் குறிப்பிடப்பட்ட இடத்தின் உறுதியைப் பெறும் நீங்கள் அதன் இரண்டாவது உபபிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைக்கு அமைய 2015 ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி அன்று வழங்கப்படுகின்றது. இதன்படி முதலாவது உப பிரிவில் குறிப்பிட்ட காணியின் எல்லை மற்றும் உரித்தாளர் மற்றும் காணி வழுங்குனர் யார் முதலிய விபரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இரண்டாவது உபபிரிவில் பின்வருவன குறிப்பிடப்பட்டுள்ளது.

1. இக் காணியின் உரித்து குடும்பத்தலைவர் திருமணம் முடித்து இருக்குமிடத்து திருமணம் முடித்த பிரிவினருக்கும் ( கணவன் அல்லது மனைவி) க்கும் உரித்துள்ளது
2. இக்காணியை வகுக்க முடியாது.
3. யாரேனும் மேற்கூறப்பட்ட உபபிரிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ள எல்லைகளை விட குறைந்த பகுதிக்கு உரித்துடையாராக இல்லாதிருத்தல்.
4. யாரேனும் ஒருவர் இவ்விடத்தின் வகுக்கப்படாத பகுதிக்கு உரிமையாளராக இருக்க முடியாது.
5. மேற்கூறப்பட்ட காணித்துண்டை விற்கின் தோட்டத்தொழிலாளர் வீட்டுக் கூட்டுறவு சங்கத்திற்கே விற்க முடியும்
6. குடும்பத்தின் பிள்ளைகளுக்கிடையில் உரிமை பரிமாற்றம் செய்யின் காணி வழங்கியவரின் முழுமையான கடிதமூல ஒப்புதல் பெற்றுக் கொள்ள வேண்டும்.

பெறுநர்: பெறுநர்கள் மேற் கூறப்பட்ட நிபந்தனைகளை பின்பற்ற வேண்டியுள்ளதுடன் அந்நிபந்தனைகள் மீறப்படுமாயின் நிலையாகக் காணி உறுதியை பெற்றுக் கொள்ளும் தகுதியை இழப்பர். கவனத்திற்கு: முறையான உறுதிப்பத்திரம் வழங்கும் வரை இது உரிமையை வழங்கும் சட்ட ரீதியான கடிதமாக கருதப்படும்.

மேற் கூறப்பட்டுள்ளவைகளை கருத்திற் கொள்வோமாயின், நிலையான காணியுறுதிப்பத்திரம் வழங்கும் வரை இப்பத்திரத்தை உறுதிப்பத்திரமாகக் கருத முடியும். ஆனால் கூறப்பட்டுள்ள நிபந்தனைகளை கருத்திற் கொள்கையில் இவ்வுறுதிப் பத்திரத்தை சுதந்திர உறுதிப்பத்திரமாகக் கருதமுடியாது. மாறாக இதனை கட்டுண்ட உறுதிப்பத்திரமாகவே கருதமுடியும்.

இங்கு குறிப்பிட்டுள்ள நிபந்தனை ஐந்தின்படி வீட்டுக்கடனை செலுத்திய ஒருவர் தமது வீட்டை விற்க நினைத்தால் அதனை தோட்டக் கூட்டுறவு சங்கத்திற்கே விற்க வேண்டும். அதாவது, தமது சொந்தப்பணத்தை செலவு செய்து வீட்டைக் கட்டினாலும் வீட்டை கூட்டுறவு சங்கத்திற்கே விற்க வேண்டும். நாட்டின் ஏனைய பிரஜைகளுக்கு வழங்கியுள்ள காணியுறுதிகளில் இவ்வாறு குறிப்பிடப்பட வில்லை. மேலும் தமது பிள்ளைகளுக்கு வீட்டின் உரிமையை மாற்ற விரும்பின் காணி வழங்கியவரிடமிருந்து அதாவது, இலங்கை அரச பெருந்தோட்ட யாக்கத்திடமிருந்து கடித மூல அனுமதியைப் பெற்றபின்பே வழங்க முடியும். இது ஓர் அடிப்படை மனித உரிமை மீறலாகும்.

தாம் கட்டிய வீட்டை பிள்ளைகளுக்கு வழங்கும்போது காணியை வழங்கிய நிறுவனத்திடமிருந்து அனுமதியைப் பெறவேண்டுமாயின் மற்றும் விற்கும் போது கூட்டுறவு சங்கத்திற்கு விற்க வேண்டுமாயின் அதனை சுதந்திரமான காணியுறுதிப் பத்திரம் என்று எவ்வாறு கூறமுடியும்? கடந்த காலங்களில் ட்ரஸ்ட் அமைப்பின் கீழ் கட்டிய வீடுகளுக்கும் இதேமாதிரியான நிபந்தனைகளே விதிக்கப்பட்டன. ஆனால் – வித்தியாசம் யாதெனில், நிலையான காணியுறுதி வழங்கும்வரை இதனை நிலையான காணியுறுதி ஆவணமாகக் கருதலாம் என்பதாகும். அதுவே இப்பத்திரத்தில் காணப்படும் பாரிய வேறுபாடாகும். மேலும் நிலையான காணியுறுதிப்பத்திரம் எப்போது வழங்கப்படும் என்றும் குறிப்பிடப் படவில்லை.

1993 ஆண்டு முதல் இதுநாள் வரை பல திட்டங்களின் கீழ் கட்டப்பட்ட வீடுகளுக்கு நிலையான காணியுறுதி வழங்கப்பட வில்லை. கடனை முழுமையாக மீள் செலுத்தியவர்களுக்கும் காணியுறுதி வழங்கப்படவில்லை. இதுவும் அவ்வாறு அமைந்து விடலாம். அரசாங்கத்தின் கொள்கை வகுப்போரைப் பொறுத்தவரை தோட்டத் தொழிலாளர் பரம்பரையை தொடர்ந்தும் தோட்டத் தொழிலுக்குள் கட்டி வைக்கவேண்டும் என்ற எண்ணத்தின் வெளிப்பாடே நிபந்தனைகளுடன் கூடிய இத்தற்காலிக காணியுறுதி. இக்காணியுறுதிக்காக செயற்பட்ட மலையகத்தின் தற்போதைய அமைச்சர்கள் இதனைத் தெளிவாகப் புரிந்துக்கொள்ள வேண்டும்.

மலையக மக்களின் இவ்வடிப்படை பிரச்சினை தொடர்பில் கொள்கை ரீதியாக அரசாங்கத்தை பணிய வைத்த அமைச்சர்கள், சுதந்திரமான காணியுறுதிப் பத்திரத்தை வழங்க அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். ஒரு வகையில் இதனை ஒரு முதற்கட்ட வெற்றியாக எடுத்துக் கொள்ளலாம். ஆகையால் முழுமையானதும் சுதந்திரமானதுமான காணியுறுதியை பெற்றுக் கொடுப்பதற்குத் தயாராக வேண்டும். எதிர்வரும் பொதுத் தேர்தல் அதற்கான சந்தர்ப்பமாக அமையவுள்ளது. ஆகவே, அரசாங்கத்துடன் கூட்டுச் சேர்ந்துள்ள மலையக தொழிற்சங்க, கட்சிகள் அதற்கான முனைப்புகளை முன்னெடுக்க வேண்டும்.

அதேவேளை மலையக சிவில் சமூகமும் அதற்கான பரப்புரையை மக்கள் மத்தியில் முன்னெடுக்க வேண்டும்.
நன்றி - வீரகேசரி
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates