அறிமுகம்
1978 ஆம் ஆண்டு அரசியல் அமைப்பு பல பிரச்சினைகளுக்கும் பல திருத்தங்களுக்கும் உட்பட்டதாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. 13வது திருத்தம் இதில் மிகப்பிரசித்தமானது. 18வது திருத்தம் பயங்கரமானது. சர்வாதிகாரத்திற்கு வழிகோலியது. 17ம் 19ம் திருத்தங்கள் ஓரளவுக்கு ஜனநாயகத்தை வலுப்படுத்தும் நோக்கம் கொண்டவை. இந்த நிலையில் 20வது திருத்தம் கொண்டுவரப்படவுள்ளது. இதில் மலையக மக்களின் நிலைமை என்னவாக அமையப்போகின்றது என்பது இங்கு ஆராயப்படுகின்றது.
நோக்கம்
20வது திருத்தம் கொண்டுவரப்படுவதன் நோக்கம் நடைமுறையில் உள்ள தேர்தல் முறைமையில் மாற்றத்தைக் கொண்டுவருவதற்காகும். நடைமுறையில் உள்ள முறைமை விகிதாசார விருப்பு வாக்கு முறைமை. (Proposanate Representative and Preferential System). விகிதாசார பிரதிநிதித்துவம் எனும் முறைமை இலங்கை போன்ற பல்லின மக்கள் வாழும் நாடுகளுக்கு பொருத்தமான ஒன்றாகவே தெரிகிறது.
உலகளாவிய ரீதியிலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு நடைமுறையாக இது உள்ளது. எனினும் இதன் கூடவே இலங்கையில் ஒட்டியுள்ள விருப்பு வாக்கு முறை (´மனாப்ப´ எனும் சிங்கள சொல்) உட்கட்சி ஜனநாயகத்திற்கும்; கட்சியொன்றை கொள்கை ரீதியாக கட்டியெழுப்புவதிலும் பெரும் தடைக்கல்லாக இருந்து வருகிறது. தவிரவும் கட்சியொன்றில் தொடர்பில்லாது அரசியல் செயற்பாடுகளில் இல்லாது ஒருவர் மக்கள் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்ட்டுவிடும் அவலம் இதில் உள்ளது. இதனால் நாடாளுமன்றம் பேசாமடந்தைகளின் அல்லது நாகரிமற்ற பேச்சாளர்களின், பணச் செல்வாக்கு கொண்டோரின் கூடாரமாக மாறிப்போன நிலைமையே உருவானது.
அதேநேரம் பெரிய மாவட்டம் ஒன்றின் பிரதிநிதியாக நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவு செய்யப்படுவதால் அவரது பொறுப்புக்கூறும் தன்மை அற்றுப்போகிறது. ஆங்காங்கே சிறுகசிறுக வாக்கு சேர்த்து எம்.பியாகிவிடலாம் என்ற நிலைமை. அல்லது ஒரு கட்சியில் ஒட்டி ´குதிரை ஓடி´ வென்றுவிடலாம் என்ற நிலைமை. (உதாரணம் - நுவரெலியா மாவட்டத்தில் வாக்குவங்கி அல்லாமல் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலும் ஐக்கிய தேசிய கட்சியிலும் இரண்டு குதிரை ஓட்ட தமிழ் உறுப்பினர்கள் தெரிவானார்கள்.) இவற்றுக்கெல்லாம் பரிகாரமாக விருப்புவாக்கு முறை ஒழிக்கப்படல் வேண்டும் எனும் கருத்து பரவலாக எழத் தொடங்கியதும் 20வது அரசியலமைப்புத் திருத்தத்தின் ஊடாக புதிய தேர்தல் முறைமை ஒன்றை கொண்டு வரும் தேவையும் எழுந்தது.
மலையக மக்களின் நிலை – வரலாற்றுப் பின்னணி
தேர்தல் முறைமை அல்லது அரசியலமைப்பு முறை என்று வருகிற போது இது குறித்த மலையக மக்களின் வரலாற்றுப் பின்னணி பற்றி சுருக்கமாக பார்த்துக்கொள்வது பயனுடையது. 1800களின் பின்கூறுகளில் இந்தியாவில் இருந்து இலங்கை நோக்கி அழைத்துவரப்பட்ட கூலித்தொழிலாளிகளான மக்கள் கூட்டம் 1931 சொல்பேரி கமிஷன் காலத்திலேயே வாக்களிக்கும் உரிமை பெறுகிறது.
இதன் மூலம் 1947 ஆம் ஆண்டு தேர்தலில் அதாவது இலங்கை சுதந்திரமடையும்போது 8 பேர் இந்த மக்கள் சார்பாக பாராளுமன்றத்தில் அங்கம் வகித்துள்ளார்கள். இதில் ஒருவர் பறங்கியர். ஏனையோர் மலையகத்தவர்கள். இதில் சௌமியமூர்த்தி தொண்டமானும், சி.வி.வேலுப்பிள்ளையும் அடங்குவர். மலையக மக்கள் செறிந்து வாழும் நுவரெலியா பதுளை கண்டி மாவட்டங்களில் இந்த எட்டு தொகுதிகளும் வெற்றிகொள்ளப்பட்டுள்ளன.
நுவரெலியா மாவட்டத்தில் மட்டும் இப்போது நுவரெலியா- மஸ்கெலியா எனும் அழைக்கப்படும் தொகுதி அன்று தலவாக்கலை, கொட்டகலை, நுவரெலியா மற்றும் மஸ்கெலியா என நான்காக அமைந்துகாணப்பட்டுள்ளது. மலையக மக்கள் தனித்தொகுதிகளாக வெற்றிபெற முடியாத பிரதேசங்களில் இடதுசாரி வேட்பாளர்களுக்கு தமது ஆதரவை வழங்கியுள்ளார்கள். இதில் கேகாலை, இரத்தினபுரி மாவட்டங்கள் முக்கியமானது.
இந்த நிலைமைகள் சிங்கள இனவாத தரப்புகளின் கண்ணைக்குத்தவவே 1948 ஆம் ஆண்டு குடியுரிமைச்சட்டத்தின் ஊடாக மலையக மக்களின் வாக்குரிமை இல்லாது ஒழிக்கப்பட்டது. பின்னர் 1977 முதல் 2003 வரை படிப்படியாக மீணடும் வாக்குரிமை பல்வேறு கால கட்டங்களில் கிடைக்கப் பெற்றது. அந்த இடைப்பட்ட காலப்பகுதியில் நியமன எம்.பி முறை மூலம் இரண்டு பேர் நாடாளுமன்றத்துக்கு உள்வாங்கப்பட்டு வந்துள்ளார்கள். இதில் சௌமியமூரத்தி தொண்டமான் ஐக்கிய தேசிய கட்சி அணி சார்பாகவும், ஜனாப். ஏ.ஏ.அஸீஸ் ஸ்ரீ.லங்கா சுதந்திரக்கட்சி சார்பாகவும் அந்த வாய்ப்பைப் பெற்றுவந்துள்ளனர். அண்ணாமலை எனும் தொண்டமானின் உறவினர் 1965ல் நியமிக்கப்பட்டார். அது வி.கே.வெள்ளையன் பெற்றிருக்கவேண்டிய இடம் என்பது வரலாறு.
1977 ல் நடைபெற்ற தொகுதிவாரி தேர்தல் முறையின் கீழ் நுவரெலியா, மஸ்கெலியா, தலவாக்கலை கொட்டகலை என நான்காக இருந்த தொகுதி ஒரு தொகுதியாக்கப்பட்டு ´நுவரெலியா- மஸ்கெலியா´ எனும் பல் அங்கத்தவர் (மூவர்) தொகுதியாக மாற்றப்படடது. இதில் காமினி திசாநாயக்க(ஐ.தே.க), அனுர பண்டாரநாயக்க (சு.க) மற்றும் சௌமியமூர்த்தி தொண்டமான் (இ.தொ.கா) என தெரிவாகியுள்ளார்கள். 1947ல் நான்கு மலையகத்தவர் வந்த தொகுதி ஒன்றாக்கப்பட்டு எப்படி இரண்டு சிங்களவர் ஒரு தமிழர் வரக்கூடியதாக மாற்றப்பட்டுள்ளது எனும் இனவாத இராஜதந்திர விளையாட்டை இங்கு அவதானிக்கலாம். ஏனைய மாவட்டங்கள் மலையகப் பிரதிநிதிகள் யாரும் தெரிவாகும் வாய்ப்பைப்பபெற்வில்லை.
எனினும் 1987 ல் விகிதாசார விருப்புமுறை நடைமுறைக்கு வந்ததும் மாவட்ட அடிப்படையில் பிரதிநிதிகள் தெரிவு செய்யக்கிடைத்த வாய்ப்பும், மலையக மக்களுக்கு படிப்படியாகக் கிடைக்கப்பெற்ற வாக்குரிமையும் அவர்களின் பிரதிநிதித்துவத்தை பாராளுமன்றத்தில் அதிகரிக்கச் செய்தது. இங்கு வாக்குரிமை கிடைத்தது என்பது ´நான்தான் பெற்றுக்கொடுத்தேன்´ யாரும் மார்தட்டிக்கொள்ளும் நிலைமையைவிட ஜனாதிபதியும் மக்களின் நேரடி வாக்குகளால் தெரிவாகும் முறைமை வந்ததால் இந்த மக்கள் கூட்டத்தின் வாக்குகள் அவர்களுக்கு தேவைப்பட்டதன் விளைவாக அது மீள வழங்கப்பட்டது. ஜே.ஆர் ஆரம்பித்துவைக்க பிரேமதாச மற்றும் சந்திரிக்கா இதனை நிறைவுறுத்தி வைத்தார்கள்.
மாவட்ட விகிகதாசார முறைமையின் கீழ் நுவரெலியா (5), பதுளை (2) கண்டி (1) கொழும்பு (1)என பிரதிநிதிகளை மக்கள் தெரிவு செய்யக்கூடியதாகவிருந்தது. தேசிய பட்டியலுமாக சேர்த்து மொத்தமாக ஒரு தடவை பாராளுமன்றத்தில் (2005-2010) 11 மலையக உறுப்பினர்கள் இது வரை பிரதிநிதித்தும் செய்துள்ளதே அதிகபட்சமாகும். சனத்தொகை விகிதாசாரத்தின்படி இது 14 வரை உயர்ந்திருக்கலாம். ஏனைய மலையக மாவட்டங்களில் மக்கள் வாழுகின்றபோதும் உறுப்பினர்களை பெற்றுக்கொள்ளும் எண்ணிக்கை இல்லை. அதேபோல் மலையக கட்சி ரீதியான பிளவுகள் இதனை இல்லாமல் செய்துள்ளன. உதாரணம் கண்டி மாவட்டத்தில் மலையகத் தமிழர்களும் முஸ்லிம்களும் சம எண்ணிக்கையில் வாழுகின்றபோதும் முஸ்லிம்கள் மூவர் தெரிவாகும் நிலையில் (வௌ;வேறு கட்சிகளில்) மலையகத் தமிழர் ஒருவர் கூடத் தெரிவாகாத நிலை கடந்த பாராளுமன்றத்தில் காணப்பட்டது.
புதிய முறைமையும் மலையக மக்களுக்கான சவாலும்
புதிய முறைமை அறிமுகப்படுத்தும்போது தொகுதிவாரி மற்றும் மாவட்ட விகிதாசாரம் (First Past the Post System and Proportional Representative) எனும் கலப்பு முறை பற்றி முன்மொழியப்படுகிறது. இதில் முதன்மை பெறுவது தொகுதிவாரி (FPP). இரண்டாவது தெரிவாக அமைவது மாவட்ட விகிதாசாரம். உதாரணமாக 10 உறுப்பினர்களைக் கொண்ட மாவட்டம் 7 தொகுதிகளைக் கொண்டிருக்குமானால் முதலில் 7 பேரையும் தொகுதிவாரியாக வெற்றிபெற்றவர்களை தெரிவு செய்துவிட்டு மிகுதி மூவரை அதிகபட்ச வாக்கு எடுத்து தோற்றவர்களின் வரிசையில் முழு மாவட்டத்திற்குமான பிரதிநிதிகளாக தெரிவுசெய்தல்.
இந்த முறை வரும்போது மலையக மக்கள் தெரிவாகக் கூடிய தொகுதிகள் இப்போதைக்கு (நுவரெலியா – மஸ்கெலியா) ஒன்று மாத்திரமே உள்ள நிலையில் இரண்டாம் பட்சமான மாவட்ட விகிதாசார முறைமையில் தங்கியிருக்கும் நிலைமை தோற்றம் பெறும். இது இப்போதைக்கு மாவட்டத்தில் முதலாமிடம் பெறும் சூழ்நிலைகளை இல்லாமலாக்கிவிடும். உதாரணமாக கடந்த பாராளுமன்ற தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிட்ட இ.தொ.கா முதல் 3 இடத்தையும் பெற ஐ.தே.க பட்டியலில் போட்டியிட்ட தொ.தே.ச வேட்பாளர் திகாம்பரம் முதலாம் இடத்தையும், உதிரியாக வந்து ஐ.தே.க பட்டியலில் சேர்ந்த ஸ்ரீரங்கா இரண்டாம் இடத்தையும் பெற்றனர். 2 சிங்கள வேட்பாளர்கள் ஐ.ம.சு.கூ வில் 4மற்றும் 5ம் இடங்களைப்பெற்றனர்.
இந்த நிலைமை வடக்கு கிழக்குக்கு வெளியே வாழும் முஸ்லிம் மக்கள் விடயத்திலும் ஏற்படக்கூடும். எனவே முஸ்லிம் காங்கிரஸ் தனது யோசனையில் இரண்டு வாக்குச்சீட்டுக்களை பயன்படுத்தி தொகுதிக்கு ஒன்றும் (முதன்மைத் தெரிவு) மாவட்டத்திற்கு ஒன்றும் என வாக்காளர்களிடத்திலேயே தெரிவை விடும் (தோற்றவர் பட்டியலில் இருந்து இல்லாமல்) ஒரு யோசனையை முன்வைத்துள்ளது. இது தென்னிலங்கை, மலையக தமிழ் முஸ்லிம் மக்களுக்கு மிகவும் நன்மை பயக்கும் முறைமை என தெரிந்தாலும் ´பெரும்பான்மை´ ஏற்றுக்கொள்ளாது போலத் தெரிகிறது.
இந்த நிலைமைகளின் கீழ் மலையக மக்கள் சார்பாக மலையக மக்ள் முன்னணியும் தொழிலாளர் தேசிய முன்னணியும் சிவில் சமூக உறுப்பினர்களுடன் இணைந்து கூட்டாகவும் கட்சிகள் என்ற அடிப்படையில் தனித்தும் தமது யோசனைகளை அரசாங்கத்திற்கும், ஜனாதிபதிக்கும், தேர்தல் ஆணையாளருக்கும் முன்வைத்துள்ளன. ஜனநாயக மக்கள் முன்னணியும் தமது யோசனைகளை வழங்கியுள்ளது. இ.தொ.காவும் யோசனையை வழங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. அதன் உள்ளடக்கம் என்ன என்பது பற்றி இப்போதைக்கு எந்த வெளிப்படுத்தலும் இல்லாத நிலையில் ஏனைய கட்சிகள், சிவில் சமூக அமைப்புகள் வழங்கியுள்ள யோசனைகளின் அடிப்படையில்
பின்வரும் விடயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
•நுவரெலியா- மஸ்கெலியா தொகுதி 1947ல் இருந்தவாறு நான்கு தொகுதிகளாக பிரிக்கப்படல் வேண்டும். இதற்கு போதுமான நியாங்கள் உண்டு. காரணம் 302000 வாக்காளர்கள் இங்கு உள்ளனர். இலங்கையின் சராசரி 75000 வாக்களார்களுக்கு ஒரு தொகுதியாகும். இந்த கோரிக்கையை பலரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். இந்த தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் தொடர்ச்சியாக ஆய்வு செய்துவரும் கலாநிதி. சுசந்த லியனகே போன்றவர்கள் கூட இதற்கு ஒப்புதல் அளித்துள்ளனர். கட்சி பேதம் பாராது சர்வகட்சி கூட்டங்களில் ஜனாதிபதி முன்னிலையில் இந்த விடயம் பல கட்சிகளும் ஏற்றுக்கொண்டுள்ளன.
•பதுளை, கண்டி மாவட்டங்களில் குறைந்த பட்சம் ஒரு தொகுதியேனும் மலையக பிரதிநிதி வரக்கூடியதாக அமைதல் வேண்டும். பதுளை மாவட்டத்தின் பசறை தேர்தல் தொகுதி அதிகளவில் மலையக மக்கள் வாழக்கூடிய தொகுதியாகக் காணப்படுகிறது. ஐ.தே.க. கே.வேலாயுதம் (பா.உ) அவர்களையும் ஸ்ரீ.சு.க வடிவேல் சுரேஷ் (மாகாண அமைச்சர்) தமது அமைப்பாளர்களாக நியமித்திருப்பது இங்கு அவதானிக்கத்தக்கது. கண்டி உடபலாத்த பிரதேச செயலகத்தை சார்ந்த பிரதேசம் இவ்வாறு தனித்தொகுதியாக்கப்படலாம்.
•கொழும்பு வடக்கு தற்போதைய மத்திய தொகுதியில் ஒரு பகுதியும் இணைக்கப்படுவதன் மூலம் தனித்தொகுதியாக்கப்படலாம்.
•நுவரெலியா மாவட்டம் உள்ளிட்ட பதுளை, கண்டி, மாத்தளை, இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை மற்றும் கொழும்பு மாவட்டங்களில் பல்அங்கத்தவர் தொகுதிகளை உருவாக்குவதன் மூலம் மலையக மக்களின் பிரதிநிதித்துவத்திற்கான வாய்ப்புகளை உருவாக்க முடியும். இவ்வாறு 15 தொகுதிகளை உருவாக்கலாம் என நிபுணர்கள் ஆலோசனை தெரிவிக்கின்றனர். குறிப்பாக வடக்கு கிழக்குக்கு வெளியே வாழும் தமிழ் முஸ்லிம் மக்களை உள்வாங்க இந்த ´பல்அங்கத்தவர்´ தொகுதி அவசியம் என இன்னுமொரு ஆலோசகரான (புதிய தேர்தல் முறைமை தொடர்பில் ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கும்) அசோக்க அபேகுணவர்தன தெரிவிக்கின்றார். இந்த பல் அங்கத்தவர் தொகுதிகளை தெரிவு செய்ய இருமொழி பிரதேச செயலகங்களாக செயற்பட ஜனாதிபதி சந்திரிக்கா காலத்தில் பிரகடனப்படுத்தப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்களை வழிகாட்டியாகக் கொள்ள முடியும் என தொழிலாளர் தேசிய முன்னணி தனது யோசனையில் தெரிவித்துள்ளது. இவ்வாறு 29 பிரதேச செயலகங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலதிகமாக அறிவிக்கப்படவும் இடமுண்டு. இந்த வழிகாட்ல் மூலம் தென்னிலங்கையில் வாழும் (சிலாபம், புத்தளம்) முஸ்லிம் மக்களும் (மாத்தளை இரத்தினபரி,களுத்துறை ) போன்ற பகுதியில் வாழும் மலையக மக்களும், கொழும்பு வாழ் தமிழர்களும் நன்மையடையும் சாத்தியமுள்ளது.
•இந்த உத்தேச அரசியல் யாப்பில் 255 உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்க உள்ளனர். இதில் 196 பேர் மாவட்ட விகிதாசர அடிப்படையில் தெரிவு செய்து 165 தொகுதிகளுக்கு ஒதுக்கப்பட ஏஞ்சிய 59 பேர் மாவட்ட தேசிய பட்டியல் மூலம் உள்வாங்கப்படவுள்ளனர். இத்தகைய சந்தர்ப்பத்தில் தேர்தல் தொகுதிகள் கட்டாயமாக ´மீள எல்லை நிர்ணயம்´ செய்யப்படவேண்டும். அவ்வாறு எல்லை மீள் நிர்ணயம் செய்யும்போது தொகுதியின் இனவிகிதாசாரம் பாதிக்காத வகையிலே இடம்பெறவேண்டும் என கொள்கைத் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி அதன்படி மேற்கொள்ளப்படல் வேண்டும் என மலையகக் கட்சிகள் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளன.
ஏனெனில் அரசியல்வாதிகள் மட்டத்தில் நிலவும் இனவாதம் பேசப்படும் அளவுக்கு அரச அதிகாரிகளின் இனவாதம் பேசப்படுவதில்லை. பிரதேச அரசியல்வாதிகளின் கைபொம்மைகளாக இருந்துகொண்டு சில அரச அதிகாரிகள் திட்டமிட்ட புறக்கணிப்பை கவனமாக செய்து வருகின்றனர். உதாரணமாக நுவnலியா மாநாகர சபைக்கு இப்போது தமிழ் உறுப்பினர்கள் தெரிவ செய்யப்படுகின்றனர். உப மேயர்களாகவும் (வீ. புத்திரசிகமாணி, சந்திரசேகர்) இருந்துள்ளனர். இதற்கு நுவரெலியா நகர தமிழ் வாக்குகள் மட்டுமல்லாது லவர்ஸ்லீப் எனப்படும் பீட்ரு தோட்டத்தின் ஒரு பகுதி இந்த எல்லைக்குள் அமைவது ஒரு காரணமாகும். அண்மையில் (11-5-2015) இடம்பெற்ற எல்லை மீள்நிரண்யத்தின்போது (´அத்திப்பட்டி´ அழிக்கப்பட்ட கதைபோல)´லவர்ஸ்லீப்´ தோட்டத்தை அழித்துவிட்டு நுவரெலியா மாநகர சபை எல்லை மீள்நிர்ணயம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
முடிவுரை
இந்தக் கோரிக்கைகளை மலையக் கட்சிகள் தனித்தனியாகவும், கூட்டாகவும், சிறுகட்சி மற்றும் சிறுபான்மை கட்சி அரங்கங்களின் ஊடாகவும், அரச சாரா அமைப்புகளின் ஆலோசனைக் கூட்டங்களிலும் தொடர்ச்சியாக பங்குபற்றியும் முன்வைத்துள்ளன. மலையக மக்களைப் பொருத்தமட்டில் நாட்டில் வாழும் ஏனைய மக்களோடு ஒப்பிடும் போது பிரஜை என்கிற அடிப்படை உரிமை தொடர்பில் வித்தியாசமானது.
1948 ல் குடியுரிமை பறிக்கப்பட்டிருக்காதபோது 1964 ஸ்ரீமா-சாஸ்திரி ஒப்பந்தம் செய்யப்பட்டு இந்த மக்களின் ஒரு பகுதி மீளவும் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டிருக்காதபோது இலங்கை நாட்டில் இந்த மக்களின் அரசியல் உரிமைகளும் வாழ்வாதார வாய்ப்புக்களும் வேறு ஒரு கட்டத்தை அடைந்திருக்கும் என்பது மறுக்கமுடியாத உண்மை.
இந்த இரண்டு எற்பாடுகளும் இந்த மக்களின் விருப்புக்கு மாறாக, ஜனநாயகத்திற்கு விரோதமாக, மனிதாபிமானமற்ற முறையிலே அரசியல் சுயலாபங்களுக்காக மேற்கொண்ட நடவடிக்கைகள் என்பதைப் புரிந்து கொள்ளல் வேண்டும். இத்தகைய சூழல்களை அவதானித்து, அடிப்படையில் அவற்றை நிவர்த்திக்கும் ஒரு ஏற்பாடாக இந்த இருபதாவது திருத்தத்தில் இவர்களுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டும் எனும் கோரிக்கை வலுவாக முன்வைக்கப்படுகின்றது.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...