பதுளையின் செழுமை அறிந்ததே. அதற்குக்
காரணம் பதுளையை சுற்றியுள்ள, கண்களுக்கு
குளிர்ச்சியான பச்சைப்பசேலென பரந்து விரிந்துள்ள தேயிலை தோட்டங்கள் மட்டுமல்ல,
அவை தரும் சிலுசிலுப்போடு கூடிய மாலை நேரத்து
தென்றலும் என்றால் அது மிகையாகாது. ஆனால் இவற்றையெல்லாம் மிஞ்சியும் விஞ்சியும்
அங்கு காணப்படும் வரலாற்று ஆவணங்களும் சின்னங்களும் பதுளை மக்களுக்கே தெரியாத
அவர்கள் அறிந்திராத பொக்கிஷமாகத் தான் அண்மைக் காலம் வரை பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கின்றது.
அப்படியாகப் பாதுகாத்து வைக்கப்பட்ட
ஒரு வரலாற்று ஸ்தூபி அல்லது சின்னம், கல்வெட்டு
என்று எந்தப் பெயராலும் அழைக்கப்படக்கூடிய ஒரு நினைவு சின்னம் தற்போது பதுளை
செனரத் பரணவித்தாரண பொதுநூல் நிலையத்தில் (வீல்ஸ்பார்க் அருகில் உள்ள பொது நூல்
நிலையம்) மிகவும் நேர்த்தியாக வைக்கப் பட்டிருக்கின்றது. இந்த வாசிகசாலைக்கு வரும்
வாசகர்கள் வெறுமனே பத்திரிகைகளைப் பார்த்து விட்டும், புத்தகங்களை வாசித்து விட்டும் போவோறாகவே இருக்கின்றனர். இந்த வரலாற்று
சின்னத்தைப் பற்றி அறிந்துகொள்ள எந்த ஆர்வமும் காட்டுபவர்களாக காணப்படவில்லை.
இந்த வரலாற்று சின்னம் பற்றிய நூல்கள்
அங்கு காணப்படுகின்றன. மேலும் இந்த ஸ்தூபி பற்றிய துண்டுப் பிரசுரங்கள் வாசகர்கள்
கேட்கும் பட்சத்தில் வாசிகசாலை உத்தியோகத்தர்களினால் இனாமாக வழங்கப்படுகின்றன.
மேலும் முக்கியமாக உதய ஆர்.தென்னகோன் என்ற வரலாற்று ஆசிரியரால் எழுதப்பட்ட Badulla
Piller Inscription. 10th. Century and rereading என்ற
நூலில் இந்த நினைவுச் சின்னம் பற்றிய சகலவிதமான விபரங்களும் கொடுக் கப்பட்டிருக்கின்றன.
மகியங்கனையில் ஈசானமூலையில் 3ஆவது மைல் தூரத்தில் அமைந்துள்ளது "ஹறபர" என்ற வாவி. இந்த
வாவிக்கருகில் இருந்து 10ஆம் நூற்றாண்டில்
உருவாக்கப்பட்டிருந்த இந்த வரலாற்று ஸ்தூபியை 1857 ஆம் ஆண்டில் பதுளை உதவி அரசாங்க அதிபராக இருந்த ஜோன்பேலி என்பவர்
பதுளைக்கு கொண்டுவந்தார். இப்படி கொண்டுவரப்பட்ட நினைவு சின்னம் அண்மைக் காலம் வரை
பதுளை கச்சேரிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்ட போதும், கச்சேரிக்கு வரும் மக்களோ அன்றி பதுளை மக்களோ இந்த சின்னம் குறித்து
பெரிதாக எந்த ஒரு ஆர்வமும் காட்டவில்லை.
அதற்குப்பின் பதுளை நகரத்தில் காணப்பட்ட
அபிவிருத்தி மற்றும் பாதைகள் விஸ்தரிப்புகளின் காரணமாக இந்த நினைவு சின்னம் பதுளை
வாசிகசாலை யில் இடம்பிடித்தது. பல கற்றறிவாளர்கள் (Intellectuals) வந்து போகும் இடமான வாசிகசாலைதான் இந்த நினைவு ஸ்தூ பிக்கு உகந்த இடமாகக்
காணப்படுகின்றது. 10ஆம் நூற்றாண்டில் பதுளை, மகியங்கனை பகுதிகளை ஆண்ட மன்னனாகிய 3ஆம் ஸ்ரீ சங்கபோதி உதய மன்னனின் விருப்பப்படி இந்த ஸ்தூபி உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்தூபியில் 10ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இலங்கையில்
பயன்பாட்டிலிருந்த மொழியின் எழுத்து உருவைக் காணக்கூடியதாக இருக்கின்றது. இந்த
ஸ்தூபியின் உயரம் 8அடி 5அங்குலம்.
இலங்கையில் கண்டெடுக்கப்பட்ட வரலாற்று
கல்வெட்டுகளும், ஸ்தூபிகளும் சுமார் 4000 வரை இருக்கின்றன. இவற்றுள் மிக உயரமான கல்வெட்டாகவும் மிகச் சிறிய
எழுத்துக்களாலான கல்வெட்டாகவும் இந்த ஸ்தூபி காணப்படுகின்றது. இவை 2000 எழுத்துகளை கொண்ட 203 வரிகளாலானது.
இந்த கல்வெட்டு சமூகம், பொருளாதாரம்,
அரசியல் சம்பந்தமான பல ஒழுங்கு முறைகளையும்,
நெறிகளையும் உள்ளடக்கியுள்ளது. அத்துடன்,
1) 10ஆம் நூற்றண்டின் இலங்கையின் கிராமிய
சமூக அமைப்பு.
2) 10ஆம் நூற்றண்டின் உள்நாட்டு வியாபாரக்
கட்டமைப்பு.
3) அரச ஒழுங்கமைப்பு சம்பந்தமான விபரங்கள்.
4) நீதித்துறை சம்பந்தமான ஒழுங்கு முறைகளும்,
அதிகாரிகளுக்கான அதிகார எல்லைகளும்.
5) சமூக பழக்க வழக்கங்களும் அவற்றை பேணுவதற்கான
நடை முறைகளும்.
6) 10ஆம் நூற்றாண்டின் மொழி மற்றும் எழுத்து
சம்பந்தமான விபரங்களும், அரச நீதிகளும்,
கட்டளைகளும்.
இவைகள் அனைத்துமே 3ஆம் ஸ்ரீ சங்கபோதி உதய மன்னனின் அரச கட்டளைகள் என்ற மிகப் பெரிய அதிகாரத்தை
கொண்டிருந்ததால் அதனை ஏற்க மறுப்பதோ, மீறி நடப்பதோ
ராஜ துரோகமாகவே கணிக்கப்பட்டது. அப்படி மீறி நடப்பவர்களுக்கான தண்டனையும் கூட
இந்தக் கல்வெட்டில் தெளிவாகக் கூறப்பட்டிருக்கின்றது. அன்றைய காலகட்டங்களில் இன்றைய
நாட்களைப் போலவே சட்ட விரோதமாக மரங்களை வெட்டி சாய்ப்பது, காலம் காலமாக நிகழ்ந்து வரும் மண்ணுக்கு செய்யப்படும் துரோகமாகவே
கணிக்கப்பட்டாலும் கூட அதனைக் கட்டுப்படுத்துவது பல அரசாங்கங்களுக்கு கைகூடாத காரியமாகத்தான்
இருந்து வந்துள்ளது. "மண் செழிப்புற்றால் தான் மரங்கள் செழிப்பாக வளரும்;
மரம் செழிப்புற்று வளர்ந்தால் தான் மக்கள்
செழிப்புற வாழ முடியும்" என்ற சாதாரண அறிவியலைக் கூட உணர முடியாத மக்கள் மரங்களை
வெட்டுவதையும் அவற்றை "ஹோ ..." என்று மண்ணில் சாய்ப்பதையும் ஒரு வணிகமாகவே
கொண்டுள்ளார்கள்.
10ஆம் நூற்றாண்டில் மகியங்கனையிலுள்ள 'ஹோபிட்டிகம' என்ற கிராமத்தில்
சட்ட விரோதமாக மரங்கள் வெட்டப்படுவதாகவும், அவைகள் பலகைகளாக விற்கப்படுவதாகவும் 3ஆம் ஸ்ரீ சங்கபோதி உதய மன்னருக்கு இரகசிய செய்திகள் வந்தன. இதைத்
தொடர்ந்து மன்னர், மரங்களை வெட்டுவோர் மீது நடவடிக்கைகள்
எடுக்கவும், மரங்கள் வெட்டுதலை தடுக்கவும் மிகவும்
கடுமையான உத்தரவுகளை பிறப்பித்தார். இந்த உத்தரவுகளை பின்பற்றி நடக்காதோர் மீது
கடுமையான தண்டனைகள் வழங்கவும் தீர்மானித்தார். இந்த தீர்மானங்களை இந்தக் கல்வெட்டில்
எழுதி மக்களின் பார்வைக்கும் வைத்தார். இந்தக் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ள மற்ற
சில சட்டம் சம்பந்தமான விடயங்களும், சில தண்டனைகளும்
இதில் தெளிவாக பொறிக்கப்பட்டிருக்கின்றன.
1) மக்கள் பிரதிநிதிகளால் விசாரிக்கப்பட்டு
ஒருவருக்கு விதிக்கப்படும் தண்டப் பணத்தினை மாத்திரமே அதிகாரிகள் அறவிடவேண்டும்.
2) ஒரு கிராமத்தை சுற்றி வளைத்து பலாத்காரமாக
தண்டப் பணத்தினை அறவிடக் கூடாது. அதிலும் முக்கியமாக தண்டனை பெற்றவரைத் தவிர அவரது
மனைவி மக்களை கைது செய்யக் கூடாது.
3) தண்டனை பணத்தை அறவிடும் அரசு அதிகாரிகள்
மது, இறைச்சி, தயிர், நெய் போன்றவற்றை தண்டனை பெற்றவர்களிடமி
ருந்து பெற்றுக்கொள்ளக் கூடாது.
4) போயா தினங்களில் வியாபாரம் செய்பவர்கள்
விளக்குப் பூஜைக்காக மகியங்கனை பௌத்த விகாரைக்கு குறிப்பிட்டுள்ள அளவு எண்ணெய்
கொடுக் கவேண்டும். அதன் மூலம் தீப விளக்குகள் ஏற்றப்பட வேண்டும் என்று பணிக்கப்பட்டுள்ளார்கள்.
5) தண்டப்பணத்தை அறவிட நியமிக்கப்பட்டுள்ள
அரச அதிகாரிகள் ஊர் மக்களுக்கு எந்த தொல்லையும் கொடுக்கக்கூடாது.
6) வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளோர் அரச அதிகாரிகளால்
அனுமதிக்கப்படாத நிறுவை உபகரணங்களை (தராசுகளை) பயன்படுத்தக் கூடாது.
7) வெற்றிலை, பாக்கு போன்ற புனிதமான பொருட்களை விற்கும்போது அவற்றை சுத்தமான மேடைகளில்
மட்டுமே வைத்து விற்பனை செய்யவேண்டும்.
8) பௌத்த விகாரைகளுக்கு சொந்தமாக
இருக்கும் காணிகளில் உள்ள மரங்களை வெட்டிசாய்க்கக் கூடது என்பது தடை செய்யப்பட்ட
முக்கியமான அம்சங்களாகும்.
9) குறிப்பிட்டுள்ள ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும்
ஒவ்வொரு விதமான தண்டப்பணம் வசூலிக்கபட வேண்டும். அரச அதிகாரிகள்
குறிப்பிடப்பட்டுள்ள தண்ட பணத்துக்கு மேலதிகமாக வசூலிப்பர்கள் என்றால்
அவர்களுக்கும் தண்டனை உண்டு. அரச அதிகாரிகளுக்கான தண்ட னையும் இந்தக் கல்வெட்டில்
தெரிவிக்கப் பட்டிருக்கின்றது.
மேலும் சிறப்பான வரலாற்று சான்றாக
திகழும் இந்தக் கல்வெட்டைப் பற்றிய எந்த ஒரு விபரமும் தமிழில் இல்லாதது பெருங்
குறையாகத்தான் தோன்றுகின்றது. இதனை கருத்தில் கொண்டு பதுளையை சேர்ந்த தமிழ்
அறிஞர்களோ அன்றி தமிழ் தலைவர்களோ இந்த சரித்திர ஸ்தூபி பற்றிய தெளிவான ஒரு
கையேட்டை தயாரிக்கும் பணியினை மேற்கொண்டு வாசகர்களின் பார்வைக்கு வைத்தால்
சரித்திரம் கற்கும் தமிழ் மாணவர்களுக்கு மட்டுமல்ல, சர்வகலாசாலையில் வரலாறு கற்கும் தமிழ் மாணவர்களுக்கும் பெரும்
உதவியாக இருக்கும்.
நன்றி - வீரகேசரி
+ comments + 2 comments
நல்ல தகவல் உள்ள பதிவு.இலங்கை பதுளை அருகில் கானவரை குரூப் எஸ்டேட்ல் மாசக்கொல்லை என்ற எஸ்டேட் உள்ளதா? விபரம் தெரிந்தால் தெரிவிக்கவும்.
நல்ல பதிவு, அனைவரும் பார்க்கவேண்டியது
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...