Headlines News :
முகப்பு » » சம்பள உயர்வு பெற்றுக்கொடுப்பதிலிருந்து தொழிற்சங்கங்கள் நழுவ முடியாது - மலைநேசன்

சம்பள உயர்வு பெற்றுக்கொடுப்பதிலிருந்து தொழிற்சங்கங்கள் நழுவ முடியாது - மலைநேசன்


பெருந்தோட்டத் தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்களுக்கும் தோட்ட முதலாளிமார் சம்மேளனத்துக்கும் இடையில் இரண்டு வருடங்களுக்கு முன்னர் செய்து கொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தம் கடந்த (மார்ச் 31) ஆம் திகதியுடன் முடிவடைந்தது. எனவே புதிய கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவேண்டும்.

பெருந்தோட்டத் தொழிலாளரின் சம்பளம் மற்றும் ஏனைய சேமநல விடயங்கள் ஒவ்வொரு கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் தீர்மானிக்கப்பட்டு வருகின்றன.

தொழிலாளரின் சம்பள உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தைகள், தீர்மானம், ஒப்பந்தம் என்பனவற்றை குறித்த திகதி முடிவடைந்த பின்னர் மேற்கொள்வதையே தொழிற்சங்கங்கள் வழமையாக கொண்டிருந்தன. ஆனால், வழமைக்கு மாறாக ஒரு சில தொழிற்சங்கங்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பிருந்தே இவ்விடயம் தொடர்பாக அறிக்கைகளை விடத்தொடங்கி விட்டன.

உண்மையில் அதன் பின்னணியில் அரசியல் காரணங்களும் தொழிற்சங்க போட்டிகளும் முன்னிலை வகித்திருந்ததனை அனைத்து தொழிலாளர்களும் உணர்ந்திருந்தனர். எவ்வாறெனினும், தமக்கு நியாயமான சம்பளம் கிடைக்க வேண்டுமென்று தொழிலாளர்கள் எதிர்பார்த்திருக்கும் நிலையில் யார் அதிக சம்பள உயர்வு பெற்றுக்கொடுத்தாலும் அதனை வரவேற்பவர்களாகவே இருக்கின்றனர்.
அடிப்படை (நாளொன்றுக்கு) சம்பளம் – 450.00 76% வேலை செய்தால் வரவுத்தொகை – 140.00 (19 நாட்கள் வேலை செய்தால் மட்டும்) நியமக்கொடுப்பனவு 30.00 மொத்தம் –620. 00 
அந்த வகையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான நாட் சம்பளத்தை 1000 ரூபாவாக உயர்த்த வேண்டுமென்று அதிரடியாக ஒரு கோரிக்கையை இ.தொ.கா. முன்வைத்துள்ளது. நாளொன்றுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் என்ற அறிவிப்பு தொழிலாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.
பல தொழிற்சங்கங்கள் இ.தொ.கா. வின் இந்த அதிரடி தீர்மானத்துக்கு தமது முழுமையான ஆதரவை வழங்குவதாக அறிவித்துள்ளன.

முதலாளிமார் சம்மேளனத்துடன் செய்து கொள்ளப்படும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தகுதியை இ.தொ.கா, இ.தே.தோ.தொ.ச. மற்றும் தோட்டத் தொழிற்சங்கக் கூட்டுக் கமிட்டி என்பனவே பெற்றுள்ளதாகவும் இந்த மூன்று அமைப்புக்களுமே இதுவரை கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டு வந்துள்ளன.

40 வீதமான தொழிலாளர்களை அங்கத்தினர்களாக கொண்டிருக்கும் தொழிற்சங்கங்களே கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் உரிமையை கொண்டுள்ளதாக அதன் விதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால் கூட்டு ஒப்பந்தத்தில் இதுவரை கைச்சாத்திட்டு வரும் மூன்று அமைப்புக்களிலும் குறித்த எண்ணிக்கையான 40% தொழிலாளர்கள் அங்கத்துவம் வகிக்கின்றனரா என்பது இதுவரை தெளிவுபடுத்தப்படவில்லை. உண்மையில் இது மீளாய்வு செய்யப்பட வேண்டிய விடயம் என்று பல தொழிற்சங்கங்கள் கூறி வருவதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

பெருந்தோட்டங்களில் தற்போது சுமார் 2 இலட்சத்து 30 ஆயிரம் பேர் அளவிலேயே தொழில் புரிந்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் தொழிற்சங்கங்களில் அங்கத்துவம் பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர்களில் சுமார் 75,000 பேர் வரை எந்தவொரு தொழிற்சங்கத்திலும் அங்கத்துவம் வகிக்காதவர்கள் என்று ஒரு கணக்கெடுப்பு கூறுகின்றது.

எனவே, எந்தெந்த சங்கத்தில் எவ்வளவு பேர் இருக்கின்றனர் என்பதையும் எத்தனை தொழிற்சங்கங்கள் மலையகத்தில் செயல்படுகின்றன என்பதையும் வெளிப்படுத்த வேண்டுமெனவும் பல சமூக அமைப்புக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

தற்போது நடைமுறையிலுள்ள கூட்டு ஒப்பந்தத்தின் படி நாளொன்றுக்கு தொழிலாளருக்கு 620 ரூபா சம்பளமாக வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. அது பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

19 நாட்களுக்கு குறைவாக வேலை செய்தவர்களுக்கு அடிப்படை சம்பளமாக 450 ரூபா மட்டுமே வழங்கப்படுகின்றது. வேறெதுவும் கிடைக்காது. அதேநேரம் மாதத்திற்கு 25 நாள் வேலை வழங்கவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இயற்கை சமச்சீரின்மை காரணமாக பெரும்பாலானோர் 25 நாட்கள் வேலைக்கு செல்வதில்லை. அதாவது கடும் மழை, காற்று, மண்சரிவு மற்றும் கடும் வரட்சி தொழிலாளர்களின் சுகவீனம் ஏனைய பிரச்சினைகள் காரணமாக குறிப்பிட்ட சிலரைத் தவிர ஏனையோர் 19 நாட்கள் பூரணமாக வேலைக்கு செல்வதில்லை. இதனால் அவர்களுக்கு அடிப்படை சம்பளம் மட்டுமே கிடைக்கும். 620 ரூபா கிடைக்காது.

இது கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் தொழிலாளர்களுக்கு செய்யப்பட்ட அநீதி என்றே சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். 620 ரூபாவை முழுமையாக அடிப்படை சம்பளமாக ஆக்கப்பட்டிருந்தால் தொழிலாளர்கள் நன்மையடைந்திருப்பார்கள் என்பதே பொதுவான கருத்தாகும். எனவே இந்த விடயத்தில் தொழிற்சங்கங்கள் பெருந்தவறைச் செய்திருக்கின்றன என்றே கருத வேண்டியுள்ளது.

இம்முறை தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்க வேண்டும் என்று இ.தொ.கா. கோரிக்கை விடுத்துள்ளது. இதனை பல்வேறு மலையக கட்சிகளும் வரவேற்றுள்ள நிலையில் இ.தே.தோ.தொ.ச. வின் பொது செயலாளரும் பெருந்தோட்டத் கைத்தொழில் இராஜாங்க அமைச்சருமான கே. வேலாயுதம் வித்தியாசமான கருத்தை தெரிவித்திருக்கின்றார்.

ஆயிரம் ரூபா சம்பளம் பெற்றுக்கொடுக்கப்படுமாயின் இ.தொ.கா. வை மலர் தூவி வரவேற்போம் என்று இராஜாங்க அமைச்சர் வேலாயுதம் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் தற்போதைய நிலையில் தினம் ஒன்றுக்கு 1000 ரூபா சம்பள உயர்வினைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலையே காணப்படுகின்றது. எனவே இவ்வாறானதொரு சம்பள உயர்வு சாத்தியப்படாத ஒன்று. யதார்த்தத்தை புரிந்து கொண்டு செயற்பட வேண்டு மெனவும் நடக்க முடியாததை கூறி தொழிலாளர்களை திசை திருப்பக்கூடாது என்றும் கூறியுள்ளார்.

மேலும் சில தொழிற்சங்கங்கள் 1000 ரூபா நாட் சம்பளம் கிடைப்பது தொடர்பில் சந்தேகங்களை வெளியிட்டுள்ளனர். அத்துடன் 800 ரூபா அளவிலேயே சம்பள உயர்வினை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

எனவே, எவ்வாறான தொகையை நாள் சம்பளமாக பெற்றுக்கொள்வது என்பது தொடர்பில் தொழிற்சங்கங்களுக்கிடையிலேயே ஒத்தக் கருத்து காணப்படவில்லை. முதலில் தொழிற்சங்கங்களுக்கிடையில் ஒரு தீர்மானம் ஏற்பட வேண்டும். சங்கப்பிரதி நிதிகள் ஒன்றுகூடி எவ்வாறான தொகையைக் கேட்க வேண்டும் என்று ஆராய்ந்து ஒரு தீர்மானத்திற்கு வர வேண்டும். அதன்பின்னர் அந்த கோரிக்கையை முதலாளிமார் சம்மேளனத்துடனான பேச்சுவார்த்தையின் போது முன்வைக்க வேண்டும். அதன் மூலமே வெற்றியடைய முடியும்.

ஒவ்வொரு தொழிற்சங்கமும் ஒவ்வொரு கோரிக்கையை முன்வைக்கும் போது அதனால் குழப்பம் ஏற்படுமே தவிர உரிய தீர்வு கிடைக்காது. அது முதலாளிமார் சம்மேளனத்துக்கு சாதகமாகவும் தொழிலாளர்களுக்கு பாதகமாகவுமே அமையும் என்பதை தொழிற்சங்கங்கள் மறந்து விடக்கூடாது.

இதேவேளை, இ.தொ.கா. எவ்வாறான அடிப்படையில் 1000 ரூபா நாட்சம்பளக் கோரிக்கையை முன்வைத்துள்ளது என்பதனையும் தெளிவுபடுத்த வேண்டும். அதாவது அடிப்படை சம்பளம் 1000 ரூபாவா அல்லது வருகைக்கான கொடுப்பனவு, நியமக்கொடுப்பனவு, அடிப்படைக் கொடுப்பனவு போன்றவை அதில் உள்ளடக்கப்பட்டுள்ளனவா என்பது பற்றி வெளிப்படுத்த வேண்டும்.

தோட்ட தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வைப் பெற்றுக்கொடுப்பதில் ஒவ்வொரு தொழிற்சங்கத்துக்கும் தீர்க்கமான கடப்பாடு உள்ளது. எந்தவொரு தொழிற்சங்கமும் சாக்குப்போக்குச் சொல்லியோ ஏனைய தொழிற்சங்கங்களை குற்றஞ்சாட்டியோ தமது பொறுப்பிலிருந்து நழுவி விட முடியாது. அவ்வாறு நழுவல் போக்கைக் கடைப்பிடித்தால் அச்சங்கம் தொழிற்சங்கமாக இருப்பதற்கு எந்தவிதமான தகுதியையும் கொண்டிருப்பதாக கருத முடியாது.

இதனை கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும் என்பதே அனைவரினதும் எதிர் பார்ப்பாகும்.

நன்றி - வீரகேசரி
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates