Headlines News :
முகப்பு » » இந்திய வம்சாவளியினருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் தொகுதிவாரியான தேர்தல் முறைமை (பாகம் -1) - சிலாபம் திண்ணனுரான்

இந்திய வம்சாவளியினருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் தொகுதிவாரியான தேர்தல் முறைமை (பாகம் -1) - சிலாபம் திண்ணனுரான்


தற்போதைய விகிதாசார தேர்தல் முறைமையை மாற்றி தொகுதி வாரியான தேர்தலை மீண்டும் அறிமுகப்படுத்துவது இந்திய வம்சாவளி மக்களுக்கு பெரும் பாதிப்பை எதிர்காலத்தில் ஏற்படுத்துமென அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். தொகுதி வாரியான தேர்தலுக்குள் விகிதாசார தேர்தலும் உள்வாங்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று தேர்தல் முறைமை மாற்றம் பற்றிய கருத்தரங்குகள், ,விவாதங்கள் பல கொழும்பில் பரவலாக பெரும்பான்மை இன கட்சிகள் மத்தியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் 1978 ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட அரசியல் சட்டத்தின் கீழ் இடம்பெற்று வந்த மாவட்ட விகிதாசார விருப்பு வாக்கு முறை தேர்தல் முற்றாக நீக்கப்பட வேண்டுமெனவும் மீண்டும் தொகுதி உறுப்பினர் என்ற நடைமுறையை ஏற்படுத்த வேண்டுமென பெரும்பான்மையின கட்சிகள் சில பேசுகின்றன. புதிய தேர்தல் எவ்வாறான தோற்றத்தில் இடம்பெறும் என்ற உண்மையான, நம்பகத்தன்மையான தகவல்கள் வெளிவராத நிலையில் இவ்விவாதங்கள் வேகமாக இடம்பெற்று வருகின்றன.

இவ்வாறான விவாத நிகழ்வுகளில் இந்நாட்டில் வாழும் இந்திய வம்சாவளியினரின் எதிர்கால அரசியல் அந்தஸ்து இம்மக்களின் பாராளுமன்ற, மாகாண சபை, உள்ளூராட்சி பிரதிநிதித்துவம் பற்றி எவருமே தகவல்களை முன்வைப்பதுமில்லை. விவாதிப்பதுமில்லை. இவ்விவாதத்தில் இச்சமூகம் தொலைந்து போயுள்ளது. விகிதாசார தேர்தல் முறைமையில் மாற்றம் நிகழும் பட்சத்தில் இந்நாட்டில் வாழும் இந்திய வம்சாவளி தமிழர்களின் அரசியல் அடையாளம் முற்றும் முழுதாக தொலைந்து போய்விடும்.

அனைத்து அரசியல் சபைகளிலும் இச்சமூகத்தின் பிரதிநிதித்துவம் பெருமளவில் குறைவடையும். இந்நாட்டில் இந்திய தமிழர்கள் 8 இலட்சத்து 42 ஆயிரத்து 323 பேர் (குடிசனமதிப்பு) தொகை மதிப்பு புள்ளி விபரத்திணைக்களத்தில் பதிவாகியுள்ளது. இத்தொகையின்படி இன்றைய பாராளுமன்றத்தில் குறைந்தது இச்சமூகத்தின் பிரதிநிதிகளாக 15 பேர் இருக்க வேண்டும். அவ்வாறான பிரதிநிதித்துவம் இன்று இல்லையே. இது யாரது தவறு என்பது தெரியவில்லை. இருப்பினும் முறையான அரசியல் தலைமை இல்லாமை, அரசியல் போட்டியின் காரணமாகவே இத்தவறு தொடராக தேர்தல்களில் இடம்பெற்று வருவது கவலைக்குரியதாகும்.

இந்நாட்டின் அரசியல் வரலாற்றின் ஆரம்பம் முதலே இந்திய வம்சாவளி மக்களின் பிரதிநிதித்துவம் பற்றி பேசப்பட்டே வந்துள்ளது. இதை பேராசிரியர் பேமதாச சிறி அளவத்துஹே எழுதிய 'ஸ்ரீலங்கா மெத்திவரண பிரதிப்பல சங்ராய' என்ற சிங்கள நூலின் தேர்தல் கால விபரங்களில் காணலாம்.

1921ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மனிங்யாப்பு சீர்த்திருத்தம் மூலம் இந்நாட் டின் சட்ட சபைக்கான (Legislative council) உறுப்பினர் தொகை 37ஆக உயர்த்தப்பட்டது. இவர்களில் ஏழுபேர் ஆளுநரால் நியமனம் செய்யப்பட்டனர். இவர்களில் ஒரு இந்தியப் பிரதிநிதி ஆளுநரால் தெரிவாக வேண்டும். அவ்வாறு தெரிவு செய்யப்பட்டவரே கண்டியை சேர்ந்த ஈ.ஜீ ஆதமலை என்ற இந்தியராவார்.

இவர், 1921 ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி அன்றைய ஆளுனர் சேர் வில்லியம்ஸ் மணிங்ஸால் சட்ட சபைக்கு தெரிவு செய்யப்பட்டார். இலங்கையின் அரசியல் களத்தில் முதன்முதலாக கால்பதித்த இந்தியர் ஈ.ஜி. ஆதமலையேயாவார்.

1924ஆம் ஆண்டு சில திருத்தங்களை ஒட்டிச் சட்டசபை உறுப்பினர் தொகை 49ஆக உயர்த்தப்பட்டது. இதில் வகுப்பு ரீதியாக ஐவர் தெரிவு செய்யப்பட்டனர். வகுப்பு ரீதியாக இந்தியர்களுக்கு இரண்டு உறுப்பினர்கள் தெரிவு செய்ய அனுமதி வழங்கப்பட்டது. 1924 ஒக்டோபரில் இடம்பெற்ற சட்ட சபைக்கான தேர்தலில் இந்தியர் உறுப்பினர் தெரிவுக்காக ஐ.எக்ஸ். பெரேயிரா, மகமுது சுல்தான் ஆகியோர் முறையே 5,141, 3511 வாக்குகளைப்பெற்று தெரிவானார்கள். இத்தேர்தலில் கே.நடேசய்யா 2948 வாக்குகளைப் பெற்று தோல்வி அடைந்தார். இந்தியத் தமிழரும் தூத்துக்குடி பரதவர் குலத்தைச் சேர்ந்த வருமான ஐ.எக்ஸ். பெரேயிராவை கௌரவிக்கும் வகையில் கொழும்பு–11 ஐ.எக்ஸ். பெரேயிரா வீதி அமைக் கப்பட் டது. இன்றும் இவ்வீதி உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

1931ஆம் ஆண்டு டொனமூர் யாப்பின் மூலமாக 61 உறுப்பினர்களை கொண்ட அரசக்கழகம் (State Council) ஏற்படுத்தப்பட்டது. தேர்தல் தொகுதி வாரியாக 50 உறுப்பினர்களும் ஆளுநர் நியமனம் 8 ஆகவும் அரச உத்தியோகத்தர் மூவருமாக இணைந்த உறுப்பினர்களை அரசக்கழகம் கொண்டு இருந்தது. இந்திய வம்சாவளியினர் பிரதிநிதியாக அட்டன் தொகுதியில் பெரி.சுந்தரம் போட்டியின்றி தெரிவானார். தலவாக்கலை தொகுதியில் எஸ்.பி.வைத்தியலிங்கம் 5898 வாக்குகளால் தெரிவானார். ஆளுநரால் இந்திய வர்த்தகர்களின் சார்பில் ஐ.எக்ஸ. பெரேயிரா தெரிவு செய்யப்பட்டார். இத்தேர்தல் 1931 ஜூன் மாதம் இடம்பெற்றது. பெரி.சுந்தரம் தொழிலாளர் வாணிபம், கைத்தொழில் அமைச்சராக நியமனம் செய்யப்பட்டார். இந்நாட்டின் அமைச்சரவையின் முதலாவது இந்திய தமிழ் அமைச்சர் பெரி.சுந்தரம் என்ற சரித்திரபதிவும் இடம்பெற்றது.

இவ்வாறே இந்நாட்டின் இந்திய வம்சாவளியினரின் அரசியல் நகர்வு இடம்பெற்றது.

1936இல் இடம்பெற்ற இரண்டாவது அரசக் கழகத்திற்கான தேர்தலில் அட்டன் தொகுதியின் கே.நடேசய்யர் 16324 வாக்குகளாலும் தலவாக்கலையில் எஸ்.பி.வைத்திலிங்கம் 15396 வாக்குகளாலும் உறுப்பினர்களாக தெரிவானார்கள். ஆளுநர் ரெஜினால்ட் ஸ்ரப்ஸ் இந்திய வர்த்தக சமூகத்தின் உறுப்பினராக ஐ. எக்ஸ் பெரேயிராவை மீண்டும் நியமனம் செய்தார்.

13.10.1943இல் இடம்பெற்ற அரசக் கழகத்திற்கான பண்டாரவளை தொகுதிக்கான இடைத்தேர்தலில் ஆர்.காளிமுத்து 8,663 வாக்குகளைப்பெற்று உறுப்பினராகத் தெரிவானார். 1833 – 1931 டொனமூர் அரசில் யாப்புத் திட்டம் வரை இந்தியர்களின் அரசியல் வளர்ச்சியானது, இந்நாட்டில் வளர்ந்திருந்தாலும் இந்தியர்களுக்கான அரசியல் அங்கீகாரம் முறையாக வழங்கவில்லை என்பது தெளிவான விடயமாகும். காலத்துக்கு காலம் நியமனம் பெறும் ஆங்கில ஆளுநர்கள் இந்தியர்களின் அரசியல் கொள்கையில் பல்வேறுபட்ட கொள்கைகளை கொண்டே இருந்தனர். இந்நாட்டில் வாழ்ந்த அனைத்து தமிழர்களையும் கூலித் தமிழர்கள் (Cooley Tamil) என்றே அழைத்தனர்.

1930 ஆம் ஆண்டு கொமர்ஷல் கம்பனி வெளியிட்டுள்ள FERGUSONS CEYLON DIRECTORY 1930 (2100 பக்கங்களைக் கொண்ட நூல்) என்ற நூலில் இதன் ஆசிரியர் பெர்குசன், இலங்கையில் அனைத்து மாகாணங்களிலும் இந்தியத் தமிழர்களின் சனத்தொகை ஆறு இலட்சத்து 92 ஆயிரத்து 735 என்றும், இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 17 ஆயிரத்து 324 என்றும் தெரிவிக்கின்றார்.

இதில் மேல் மாகாணத்தில் 91 ஆயிரத்து 293 பேரும், மத்திய மாகாணத்தில் 3 ஆயிரத்து 771 பேரும், ஊவா மாகாணத்தில் 82 ஆயிரத்து 562 பேரும், சப்ரகமுவ மாகாணத்தில் 98 ஆயிரத்து 93 பேருமாக இந்தியத் தமிழர்கள் வாழ்ந்ததாக தெரிவிக்கின்றார். 1929இல் இந்நாட்டின் சனத் தொகை மதிப்பீட்டு கணக்கின்படி சிங்களவர்களுக்கு அடுத்ததாக இனத் தொகுதி ஆட்களின் எண்ணிக்கையில் இந்தியத் தமிழர்களின் எண்ணிக்கையே இரண்டாம் இடத்தில் உள்ளதாக பெர்குசன் அவரது தகவல் நூலில் விபரமாக தெரிவித்துள்ளார். இவ்வாறு இந்திய மக்களின் தொகைக்கு ஏற்ற வகையில் அரசக்கழகத்தில் (State council) ஆங்கிலேயராலும் பிரதிநிதித்துவம் சரியான முறையில் வழங்கப்படவில்லை.

1945ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஏற்படுத்தப்பட்ட சோல்பரி திட்டத்தின்படி 1947ஆம் ஆண்டு ஜூலை 23 முதல் ஆகஸ்ட் மாதம் 20ஆம் திகதி வரையில் 19 தினங்கள் இந்நாட்டின் முதலாவது பாராளுமன்றத்துக்கான தேர்தல் இடம்பெற்றது. 75,000 மக்கள் அல்லது 1000 சதுர மைல் பரப்புள்ள பிரதேசம் என்ற அடிப்படையில் தொகுதிகள் பிரிக்கப்பட்டு சிறுபான்மையினரை தெரிவு செய்யும் பொருட்டு தகுந்த இடங்களில் பல உறுப்பினரை ஒரு தொகுதியில் தேர்ந்தெடுக்கும் முறை (Multiple Member corrs tituercy) யையும் பின்பற்றும் வகையில் இத்தேர்தல் இடம்பெற்றது. 89 தொகுதிகளில் 95 பேர் தொகுதி ரீதியாகவும், 6 பேர் தேசாதிபதியாலும் நியமனம் செய்யப்பட்டனர். மொத்தம் 101பேர் உறுப்பினராக இருந்தனர்.

இத்தேர்தல் இந்நாட்டின் இந்திய வம்சாவளியினரின் தலைவிதியை நிர்ணயிக்கும் தேர்தலாகவும் இருந்தது. இலங்கை – இந்திய காங்கிரஸ் நுவரெலியா, தலவாக்கலை, கொட்டகலை, நாவலப்பிட்டி, மஸ்கெலியா, பதுளை, அப்புத்தளை, மத்துரட்ட, அலுத் நுவர ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டது.

நுவரெலியா தொகுதியில் எஸ்.தொண்டமான் (9386 வாக்குகள்), தலவாக்கலை சி.வி.வேலுப்பிள்ளை (10645 வாக்குகள்), கொட்டக்கல தொகுதி கே.குமாரவேல் (6722 வாக்குகள்), நாவலப்பிட்டி தொகுதி கே.ராஜலிங்கம் (7933 வாக்குகள்), மஸ்கெலியா தொகுதி ஸ்ரீ.ஆர்.மோத்தா (9086 வாக்குகள்) ,அலுத்நுவர தொகுதி டீ.ராமனுஜம் (2772 வாக்குகள்), பதுளை (இரட்டையர் தொகுதி) 2,7121 வாக்குகளைப்பெற்று இத்தொகுதியின் முதலாவது பாரளுமன்ற உறுப்பினராக எஸ்.எம்.சுப்பையா தெரிவானார். இவ்வாறு இந்நாட்டின் முதலாவது பாராளுமன்றத்துக்கு இந்தியர்கள் 7 பேர் தெரிவானார்கள்.

மத்துரட்ட தொகுதியில் இலங்கை இந்தியர் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட எஸ்.சோமசுந்தரம் 3,572 வாக்குகளையும் (அப்புத்தளை தொகுதியில்) ஆர்.ஏ.நடேசன் 1337 வாக்குகளையும் பெற்று தோல்வி அடைந்தனர். 11.31.1950இல் நடைபெற்ற மஸ்கெலியா தொகுதிக்கான இடைத்தேர்தலில் இ.இ.காங்கிரஸ் வேட்பாளராகக் களம் இறங்கிய ஏ. அஸீஸ் 11343 வாக்குகளால் பாராளுமன்ற உறுப்பினரானார்.

1947இல் இடம்பெற்ற தேர்தலில் இ.இ.காங்கிரஸ் 58.7% வீத வாக்குகளை பெற்றுக்கொண்டது. இப்பாராளுமன்றத்தில் காங்கிரஸ் 7 உறுப்பினர்களுடன் நான்காம் இடத்தில் இருந்தது. தோட்டத் தொழிலாளர்கள் இவ்வாறு பிரதிநிதிகளை தெரிவு செய்தால் எதிர்காலத்தில் அவர்கள் எதிர்க்கட்சியாக அமர்வதற்கு உள்ளாகலாம் என அன்றைய ஆளுங்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி எண்ணியது. இலங்கையில் 1946இல் 7,80,600 இந்தியர்கள் வாழ்ந்தனர். மொத்த சனத் தொகையின் இது 11.7 வீதமாகும். இதில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் 6 இலட்சத்து 65 ஆயிரத்து 855 ஆகும். தோட்டத் தொழிலாளர்களின் விகிதாசாரம் 88.8 ஆக இருந்தது. இவ்வினப்பெருக்கத்தின் தாக்குதல் இந்நாட்டின் சிங்கள முதலாளித்துவத்தை சிந்திக்க வைத்தது. அதன் பிரதிபலிப்பாக 1948 ஆம் ஆண்டு 18ஆம் இலக்க பிரஜா உரிமைச் சட்டம் (CEYLON CITIZENSHIP ACT NO 18 OF 1948) கொண்டு வந்ததன் மூலம் இந்நாட்டில் வாழ்ந்த இந்திய மக்களின் வாக்குரிமை உட்பட பல உரிமைகள் பறிக்கப்பட்டன. இச்சட்ட மூலம் பாராளுமன்றத்தில் 1948ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25ஆம் திகதி நிறைவேற்றப்பட்டது. 53பேர் ஆதரவாகவும் 35பேர் எதிராகவும் வாக்களித்தனர்.

இடதுசாரித் தலைவர்கள் இச்சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் கடுமையாக எதிர்த்து உரையாற்றினர். இதற்கு முக்கிய காரணம் 1947 தேர்தலில் இ.இ.காங்கிரஸ் போட்டியிடாத தொகுதிகளில் இடதுசாரி வேட்பாளர்களை தோட்டத் தொழிலாளர்கள் ஆதரித்து வெற்றி பெற வாக்களித்தனர். இச் சட்ட மூலத்தின் மூலமாக மலையக மக்கள் ஜனநாயக உரிமைகளை இழந்து குடியுரிமைகளும் இல்லாது நாடற்றவர்களாக மாற்றம் பெற்றனர்.

இந்நிலையில் 1928 டொனமூர் கமிஷன் இலங்கையில் வாழும் இந்தியர்களில் 50 வீதமானோர் இலங்கையில் பிறந்தவர்கள் என்கிறது. அன்று இலங்கையில் 6 இலட்சத்து 26 ஆயிரத்து 123 பேர் இந்தியர்களாக பதிவு செய்யப்பட்டிருந்தது. 1938 ஜாக்சனின் அறிக்கைப்படி 60 வீதமானர்கள் இலங்கையில் பிறந்தவர்கள் என தெரிவிக்கின்றது.

1946இல் சோல்பரி அறிக்கை 80 வீதமானவர்கள் இலங்கையில் பிறந்த இந்திய வம்சாவளி என்றது. இந்த மூன்று அறிக்கைகளும் இந்திய வம்சாவளியினர் இலங்கையில் பூரண உரிமைகள் அனுபவிக்க உரிமையுடையவர்கள் என்பதை உறுதிப்படுத்தியுள்ளன. 1948இல் டீ.எஸ்.சேனநாயக்கவினால் கொண்டுவரப்பட்ட பிரஜா உரிமைச் சட்டம், வாக்குரிமைச் சட்டம் என்பனவற்றால் மலையகத் தமிழர்களை நாடற்றவர்களாக்கியது.

இறுதியில் மலையக தமிழர்கள் தேசமற்றுப்பபோக இலங்கை – இந்தியர் பிரச்சினை என்பது இருநாட்டு அரசுகள் மத்தியில் பெரும் பிரச்சினையாக உருவானது. பின்னர் இந்நாட்டின் இந்திய வம்சாவளி எதிர்ப்பு செயற்பாடுகள் தீவிரமானது. இவ்வாறான நிலையில், 1952 மே 24, 26, 28, 30ஆம் திகதிகளில் இரண்டாவது பாராளுமன்றத்துக்கான தேர்தல் இடம்பெற்றது. இத்தேர்தலில் நுவரெலியா தேர்தல் தொகுதியில் இரத்தினமும் (842 வாக்குகள்), அப்புத்தலையில் கே.சிவசாமி (94 வாக்குகள்) ஆகிய இரு இந்தியத் தமிழர்கள் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டு தோல்வி அடைந்தனர். எஸ். வைத்திலிங்கம் நியமன உறுப்பினராகத் தெரிவானார். மலையக மக்கள் அரசியல் ரீதியாக இத்தேர்தலில் அடக்கப்பட்டனர்.

1956 ஆம் ஆண்டு ஏப்ரல் 5, 7, 10 ஆம் திகதிகளில் இடம்பெற்ற மூன்றாவது பாராளுமன்றத்தேர்தலில் இந்திய வம்சாவளியினர் எவருமே போட்டியிடவில்லை. 1960ஆம் ஆண்டு மார்ச் மாதம் 4ஆவது பராளுமன்றத்துக்கான தேர்தல் இடம்பெற்றது.

வோல்டர் தல் கொடபிட்டிய கமிசனின் சியார்சின் படி தேர்தல் தொகுதிகள் 145 ஆக பிரிக்கப்பட்டு 151 பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவானர்கள். இத் தேர்தலில் கம்பளை தொகுதியில் என். சிவஞானம் (183 வாக்குகள்) நுவரெலியா தொகுதியில் எஸ். தொண்டமான் (1940 வாக்குகள்) மஸ்கெலியா தொகுதியில் வி.ஜே. வெள்ளையன் (1349 வாக்குகள்) அப்புத்தலை தொகுதியில் எம். அருணா ??????? (428) ஆகியோர் போட்டியிட்டு தோல்வி அடைந்தனர்.

1960 ஜுலை 20 ஆம் திகதி இடம்பெற்ற 5 ஆவது பாராளுமன்றத் தேர்தலில் இந்தியவம்சாவளித் தமிழர்கள் எவருமே போட்டியிட வில்லை சிறிமாவோ தலைமையிலான இப்பாராளுமன்றத்தில் அமரர். எஸ். தொண்டமான் நியமன உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார். ஆறாவது பாராளுமன்ற தேர்தல் 1965 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22 ஆம் திகதி இடம்பெற்றது. 21 வயதுக்கு மேற்பட்டோரே இதுவரை தேர்தலில் வாக்களித்து வந்தனர். இத்தேர்தலில் 18வயதுக்கும் மேற்பட்டோர் வாக்களிக்கத் தகுதி பெற்றனர். இத் தேர்தலில் நுவரெலியா தேர்தல் தொகுதியில் என். சிவஞானம் என்பவர் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டு 87 வாக்குகளை மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார். டட்லி சேனாநாயக்க தலைமையில் அமைக்கப்பட்ட ஐ.தே கட்சியின் ஆட்சியின் எஸ்.தொண்டமான் பி.அண்ணாமலை ஆகிய இருவரும் நியமன உறுப்பினர்களாக தெரிவாகினர்.

1970 ஆம் ஆண்டு மே மாதம் 27 ஆவது திகதி ஏழாவது பாராளுமன்ற தேர்தல் இடம்பெற்றது. இத்தேர்தலின் சுயேட்சை வேட்பாளர்களாக நுவரெலியா தொகுதியில் சி.வி வேலூப் பிள்ளையும் (170 வாக்குகள்) மஸ்கெலியா தொகுதியின் வி.கே வெள்ளையனும் (1412 வாக்குகள்) போட்டியிட்டு தோல்வி அடைந்தனர். ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் தலைமையிலான அரசினால் ஐ.தொ. காங்கிரஸ் தலைவர் ஏ.அஸீஸ் நியமன உறுப்பினராக தெரிவானார்.

1947 இல் சிறிமாவோவின் ஆட்சியில் நோயன் தித்தவெணண கமிசனின் தேர்தல் தொகுதி எல்லை நிர்ணயப்படி தொகுதிகள் 160 ஆக உயர்த்தப்பட்டு 168 உறுப்பினர்கள் பாராளுமன்றத்துக்கு தெரிவாகும் வகையில் நுவரெலியா மஸ்கெலியா தொகுதிகள் ஒன்றாக இணைக்கப்பட்டு மூன்று அங்கத்தவர் தொகுதியாகவும் பேருவளை, ஹரிஸ்பத்துவ, மட்டக்களப்பு, பொத்துவில் தொகுதிகள் இரட்டை அங்கத்துவர் தொகுதியாக்கப்பட்டது. இவ்வாறான தொகுதி நிர்ணயம் நுவரெலியா, மஸ்கெலியா தொகுதியில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது.

1977 ஜூலை 21 ஆம் திகதி எட்டாவது பாராளுமன்றத்துனக்கான தேர்தல் இடம்பெற்றது.

இத்தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் போட்டியிடுவதற்காக தேர்தல்கள் திணைக்களத்தின் இலங்கை தொழிலாளர் காங்கிரஸை அதன் பெருந்தலைவர் அமரர். சௌமிய மூர்த்தி தொண்டமான் அரசியல் கட்சியாக பதிவு செய்வததுடன் அக்கட்சியின்

சின்னமாக சேவல் சின்னத்தையும் பதிவு செய்தார். இதுவே மலையக பெருந்தோட்ட மக்களின் அரசியல் அநாதைகள் என்ற அடையாளத்தை (1947 முதல் போராடி) மூன்று தசாப்தங்களுக்கு பின்னர் உடைத்தெறிந்தது. இது காலம் வரை கடந்து வந்த மலையக அரசியல் பாதையை விட இனி கடக்கப் போகும் மலையக அரசியல் பாதை மிக கஷ்டமாக தெரிகிறது.

இத்தேர்தலில் மத்திய கொழும்பு தொகுதியில் இ.தொ.கா வின் (அன்றைய) பொதுச் செயலாளர் எம்.எஸ்.செல்லச்சாமி போட்டியிட்டார். இவரின் அன்றைய தேர்தல் வேட்பாளர் நியமனம் பேரின வாதிகளினால் மிகவும் மோசமான வகையில் விமர்ச்சிக்கப்பட்டது. அவ்வாறான பெரும் எதிர்ப்பு மத்தியில் சேவல் சின்னத்தில் எம்.எஸ்.செல்லச்சாமி போட்டியிட்டு பெரும்பான்மையினரின் கடுமையான எதிர்ப்பு பிரசாரத்துக்கு மத்தியில் 26964 வாக்குகளைப் பெற்று மத்திய கொழும்பு தொகுதியில் 4 ஆம் இடத்தைப் பெற்று தோல்வி அடைந்தார்.

பெருந்தலைவர் அமரர் செளமிய மூர்த்தி தொண்டமான் நுவரெலியா மஸ்கெலியா தொகுதியின் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு 35743 வாக்குகளைப் பெற்று மூன்றாவது பாராளுமன்ற உறுப்பினராக தெரிவானார். முப்பது வருடங்களின் பின்னர் மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினராக அமரர். செளமியமூர்த்தி தொண்டமான் பாராளுமன்றத்துக்கு தெரிவானமை இந்நாட்டு அரசியல் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. சரியாக முப்பது வருடத்தின் பின் இந்நாட்டு பாராளுமன்றத்தில் 1977 ஆகஸ்ட் 22ஆம் திகதி மலையக மக்களின் குரலாக அமரர். செளமிய மூர்த்தி தொண்டமான் தனது கன்னிப் பேச்சை நிகழ்த்தினார்.

1989 ஆம் ஆண்டு பெப்ரவரி 18 ஆம் திகதி இடம்பெற்ற 9ஆவது பாராளுமன்றத்துக்கான தேர்தலில் தொகுதி முறை ஒழிக்கப்பட்டு 1978 ஆம் ஆண்டின் அரசியல் யாப்பின் தேர்தல் சட்டமுறையின் கீழ் மாவட்டங்கள் தேர்தல் மாவட்டங்களாக மாற்றப்பட்டு விகிதாசார விருப்பு வாக்குகள் தேர்தல் அறிமுகப்படுத்தப்பட்டது. தொகுதி உறுப்பினர் மாவட்ட உறுப்பினர் என்ற நடைமுறையின் கீழ் உள்வாங்கப்பட்டார். 196 பேர் விருப்பு வாக்குகள் அடிப்படையில் மாவட்ட ரீதியாகவும் தேசிய மட்டத்தில் கட்சிகள் பெறும் வாக்குகள் அடிப்படையில் தேசியப் பட்டியல் மூலமாக 29 பேருமாக 225 பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டனர்.

இத்தேர்தலில் ஐ.தே கட்சி பட்டியலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட எம்.எஸ்.செல்லச்சாமி (36480 வி.வா) வெற்றிபெற்றார். நுவரெலியா மாவட்டத்தில் ஐ.தே கட்சியின் பட்டியலில் போட்டியிட்ட முத்து சிவலிங்கம், வி.அண்ணாமலை ஆகிய இ.தொ.கா வேட்பாளர்கள் தோல்வி அடைந்தனர். மாத்தளை, பதுளை, இரத்தினபுரி, கண்டி மாவட்டங்களிலும் இ.தொ.கா வேட்பாளர்கள் தோல்வியடைந்தனர். அமரர். செளமிய மூர்த்தி தொண்டமான் பி.பி தேவராஜ் ஆகிய இருவரும் ஐ.தே.கட்சியின் தேசிய பட்டியல் மூலமாக பாராளுமன்ற உறுப்பினராகினர். கிராமிய கைத்தொழில் அமைச்சராக செளமிய மூர்த்தி தொண்டமானும் இந்து கலாச்சார இராஜாங்க அமைச்சராக பி.பி.தேவராஜும் நியமனம் பெற்றனர். பிரதி போக்குவரத்து அமைச்சராக எம்.எஸ்.செல்லச்சாமியும் நியமனம் பெற்றார்.

இத்தேர்தலில் இந்திய வம்சாவளி தமிழர்கள் முறையாக வாக்களித்திருந்தால் மாத்தளை கண்டி நுவரெலியா பதுளை ஆகிய மாவட்டங்களில் குறைந்தது ஐந்து உறுப்பினர்களை பெறக்கூடிய இலக்கை இழந்து விட்டோம். 1977 இல் நுவரெலியா மஸ்கொலியா தனித்தொகுதியில் இ.தொ.கா பெற்றிருந்த அங்கத்துவத்தை நுவரெலியா தேர்தல் மாவட்டமாக மாற்றியப்பின் உறுப்பினரை இழந்தமை மிகவும் கவலைக்குரிய விடயமாகும். 1989இல் வாக்காளர் தொகையும் பெருகி இருந்த நிலையில் இந்த நிலை ஏற்பட்டது.

1994 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16 ஆம் திகதி இடம்பெற்ற 10 ஆவது பாராளுமன்றத்துக்கான தேர்தலின் எட்டுப் பேர் மலையகப்பிரதி நிதிகளாக தெரிவாகினர். இத்தெரிவு மலையக மக்களின் அரசியல் உணர்வை வெளிக்காட்டியது. இத்தேர்லில் பொதுஜன ஐக்கிய முன்னணியில் எம்.எஸ். செல்லசாமி (12474 வி.வா) யும் ஐக்கிய தேசிய கட்சியின் பட்டியலின் போட்டியிட்ட ஆர்.யோகராஜன் (37028 வி.வா) பி.பி. தேவராஜா (33494 வி.வா) ஆகியோர் கொழும்பு மாவட்டத்தில் தோல்வி அடைந்தனர்.

இத்தேர்தலில் கண்டி மாவட்டத்தில் ஐ.தே கட்சியில் போட்டியிட்ட எஸ். ராஜரத்தினம் (38343 வி.வா) நுவரெலியா மாவட்டத்தில் முத்து சிவலிங்கம் (85490 வி.வா) எஸ்.சதாசிவம் (83368 வி.வா) ஆறுமுகம் தொண்டமான் (75297 வி.வா) ஆகியோர் வெற்றி பெற்றனர். அம்மாவட்டத்தில் பொதுஜன ஐக்கிய முன்னணி பட்டியலில் போட்டியிட்ட கந்தையா (9108 வி.வா) ஏ.எம்.எஸ்.அருள்சாமி (8077 வி.வா) ஐ.ஆறுமுகம் (8035 வி.வா) ஆகியோர் தோல்வியைத் தழுவினர். இத்தேர்தலில் சுயேட்சைக் குழு அமைத்து அதன் தலைமை வேட்பாளராக போட்டயிட்ட அமரர்.பி.சந்திரசேகரன் (23453)வெற்றி பெற்று 1977 முதல் 17 வருடங்கள் ஆட்சியில் நின்ற ஐ.தே.கட்சி தேர்தலில் தோல்வியடைய பொ.ஜ.ஐ.முன்னணி சந்திரிக்கா பண்டார நாயக்க குமாரதுங்க ஆட்சி அமைக்க பி.சந்திரசேகரன் கை கொடுத்து கிங்மேக்கர் என அழைக்கப்படும் வகையில் பரிணாமம் அடைந்தார் என்று சந்திரிக்கா அம்மையாருக்கு ஆட்சி அமைக்க 113 உறுப்பினர்கள் தேவைப்பட்டது. பொ.ஜ.ஐ.முன்னணி 105 உறுப்பினர்களுடன் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் 7 உடன் இணைந்தும் ஆட்சி அமைக்க இயலாத கட்டத்திலேயே மலையக மக்கள் முன்னணி தலைவர் அமரர். பி.சந்திரசேகரன் கிங்மேக்கராக உருவெடுத்து மலையக மக்களின் வாக்கு பெறுமதியை இந்நாட்டு அரசியல் வாதிகளுக்கு அடையாளப்படுத்தினார். இது மலையக வரலாற்றில் அரசியல் சாதனையாகும். மலையக அரசியல் தலைமைகளை மட்டுமல்லாது தேசிய அரசியல் கட்சித் தலைவர்களையும் சிந்திக்க வைத்த கிங்மேக்கரானார்.

இத்தேர்தலில் பதுளை மாவட்டத்தில் வீரன் சென்னன் (41683 வி.வா) ????????????

வெற்றி பெற்றார். இவருடன் ஐ.தே.கட்சி பட்டியலில் இடம்பெற்ற மற்றுமொரு வேட்பாளரான எம்.கே.சுப்பையா 39650 வி.வா பெற்று 643 வாக்குகளால் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவில் தோல்வி அடைந்தார். இந்நிலையில் அமரர் எஸ்.தொண்டமான், ஏ.எம்.டி.ராஜன் ஆகியோர் ஐ.தே.கட்சியின் தேசிய பட்டியலில் இடம்பெற்று பாராளுமன்ற உறுப்பினராக தெரிவானார்கள். அமரர் பி.சந்திரசேகரன் தோட்ட உட்கட்டமைப்பு பிரதி அமைச்சராக நியமனம் பெற்றார்.

இந்நிலையில் 1994 ம் ஆண்டு கொழும்பு தொட்டலங்கையில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஓசி அபேகுணசேகர வீரசிங்கமல் ஆராட்சி ஆகிய இருபாராளுமன்ற உறுப்பினர்களும் மரணம் அடைய ஆர்.யோகராஜன், பி.பி.தேவராஜ் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவானார்கள்.

2000 ஆம் ஆண்டு அக்டோபர் 10ம் திகதி இடம்பெற்ற 11ஆவது பாராளுமன்றத்துக்கான தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் ஆறுமுகம் தொண்டமான் (61779 வி.வா) , முத்து சிவலிங்கம் (வி.வா 55673), எஸ்.ஜெகதீஸ்வரன் (வி.வா50735) ஆகியோர் பொ.ஐ.ஐ.முன்னணியின் வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்று வெற்றி பெற ஐ.தே.கட்சியின் வேட்பாளர் பட்டியலில் போட்டியிட்ட பி.சந்திரசேகரன் (54681 வி.வா), எஸ்.சதாசிவம் (48126 வி.வா) ஆகியோர் வெற்றி பெற்றனர். பொ.ஐ.ஐ. முன்னணியின் தேசியப் பட்டியலில் கே. மாரிமுத்து (இ.தொ.கா) வும் ஐ.தே.கட்சி தேசிய பட்டியல் மூலமாக கணபதி கனகராஜ், பி.பி தேவராஜ் ஆகியோர் தெரிவானார்கள். இத்தேர்தலில் பதுளை, களுத்துறை, கம்பஹா, இரத்தினப்புரி, கண்டி ஆகிய மாவட்டங்களில் இந்திய வம்சாவளியினர் போட்டியிட்டும் வெற்றி பெற இயலாது போனது.

2001ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ம் திகதி இடம்பெற்ற 12 ஆவது பாராளுமன்றத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் ஆறுமுகன் தொண்டமான் (1,21,545 வி.வா) பி.சந்திரசேகரன் (1,21,421 வி.வா) முத்துசிவலிங்கம் (1,07,338வி.வா) ஐ.தே.கட்சியில் போட்டியிட்டு பெரும் வெற்றியை பெற்றனர். இத்தேர்தலின் முடிவுகளில் பெருந்தோட்ட மக்களின் அரசியல் தெளிவு தெட்டத்தெளிவாக விளங்குகின்றது. இத்தேர்தலில் பொ.ஜ.ஐ. முன்னணியில் இம்மாவட்டத்தில் போட்டியிட்ட வி.புத்திரசிகாமணி (10, 261 வி.வா) , எஸ்.ராஜரத்தினம் (10, 028 வி.வா), கணபதி கனகராஜ் (9878 வி.வா), கணபதி பிள்ளை (3535) ஆகியோர் தோல்வி அமைந்தனர். பதுளை மாவட்டத்தில் ஐ.தே.கட்சியின் பட்டியலில் போட்டியிட்ட முருகன் சச்சிதானந்தன் (39,749 வி.வா) வெற்றி பெற்றார். இத்தேர்தலில் இ.தொ.கா வேட்பாளர்கள் ஐ.தே.கட்சி பட்டியலில் கண்டி, கொழும்பு, மாத்தளை தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற இயலவில்லை.

ஐ.தே.கட்சியின் தேசிய பட்டியலில் பி.இராதாகிருஷ்ணன், ஆர்.யோகராஜ் பொ.ஐ.ஐ.முன்னணியில் எஸ்.சதாசிவம், மக்கள் விடுதலை முன்னணியில் ராமலிங்கம் சந்திரசேகரனும் தெரிவானார்கள்.

2004ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2ம் இடம்பெற்ற 13 ஆவது பாராளுமன்றத்துக்கான தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் ஐ.தே.கட்சி பட்டியலில் இணைந்து போட்டியிட்ட இ.தொ.கா வின் வேட்பாளராக ஆறுமுகன் தொண்டமான் (99783 வி.வா), முத்து சிவலிங்கம் (85, 708வி.வா), எஸ்.ஜெகதீஸ்வரன் (81 386 வி.வா) வெற்றி பெற மலையக மக்கள் முன்னணி மண்வெட்டி சின்னத்தில் போட்டியிட்டு பி.சந்திரசேகரன் (42, 582 வி.வா) வெற்றி பெற்றார்கள். பதுளை மாவட்டத்தில் ஐ.தே.கட்சி பட்டியலில் போட்டியிட்ட இ.தொ.கா எம்.சச்சிதானந்தன் (44,937வி.வா), வடிவேலு சுரேஷ் (40,820 வி.வா) ஆகியோர் வெற்றிப் பெற்றனர். இத்தேர்தலில் தேசியப் பட்டியலில் ஐ.ம.சு.முன்னணியின் பட்டியலில் ம.வி.முன்னணியின் சார்பில் ராமலிங்கம் சந்திரசேகரனும் ஐ.தே.கட்சியின் பட்டியலில் (இ.தொ.கா) எம்.எஸ்.செல்லச்சாமி பி.பி. இராதாகிருஷ்ணன் (ம.ம.மு) வி.புத்திரசிகாமணி ஆகியோர் பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவானார்கள்.

13வது பாராளுமன்றத்தின் இறுதி வருடங்களில் மலையக அரசியல் என்றுமே இல்லாத பெரும்மாற்றம் நிலவியது. மலையக பாராளுமன்ற உறுப்பினர்களின் ம.வி.மு.உறுப்பினர் இராமலிங்கம் சந்திர சேகரனைத் தவிர ஏனைய 9 உறுப்பினர்களும் ஐ.ம.சு.முன்னணியில் இணைந்திருந்தனர். இரண்டு அமைச்சர்கள் 7 பிரதி அமைச்சர்கள் இருந்தனர். இது மலையக மக்களின் சாதனையா? அல்லது அரசியல்வாதிகள் சுயநலம் கொண்டு இப்பதவிகளை பெற்றனரா என்பது கேள்வியாகவே இன்றும் வாழ்கின்றது.

2 அமைச்சர்கள் 

1. ஆறுமுகன் தொண்டமான் ( இளைஞர் வலுவூட்டல் சமூக பொருளாதார அமைச்சர்)
2. பெ.சந்திரசேகரன் (சமூக அபிவிருத்தி சமூக அநீதி ஒழிப்பு அமைச்சு)

7 பிரதி அமைச்சர்கள்

1. முத்து சிவலிங்கம்  தோட்ட உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர்
2. எம்.எஸ்.செல்லச்சாமி (தபால் தொலைத்தொடர்புகள் பிரதி அமைச்சர்)
3. எஸ்.ஜெகதீஸ்வரன் (தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர்)
4. எம்.சச்சிதானந்தன் (பிரதிக்கல்வி அமைச்சர்)
5. வடிவேல் சுரேஷ் (பிரதிசுகாதார அமைச்சர்)
6. வி.புத்திரசிகாமணி ( நீதி சட்ட மறுசீரமைப்பு பதில் அமைச்சர்)
7. பெ.இராதாகிருஷ்ணன் வாழ்க்கை தொழில் பயிற்சி பிரதி அமைச்சர்)

மலையகத்தின் அரசியல் வரலாற்றில் மட்டுமல்லாது இலங்கையின் அரசியல் வரலாற்றில் மலையக மக்கள் பிரதிநிதிகளில் இவ்வாறான சாதனை இனி எதிர்வரும் காலங்களில் இடம்பெறபோவதில்லை. இது அரசியல் அவதானிகளின் தகவல்களாகும். காலம்தான் பதில் தர வேண்டும்.

14வது பாராளுமன்றத்துக்கான தேர்தல் 2010 ஆம் ஆண்டு ஏப்ரல் 8 ம் திகதி நடைபெற்றது. இத்தேர்தலில் இ.தொ.கா. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் பட்டியலில் இடம்பிடித்து நுவரெலியா, கண்டி, மாத்தளை, பதுளை, மொனராகலை மாவட்டங்களில் போட்டியிட்டது.

நுவரெலியா மாவட்டத்தில் ஆறுமுகன் தொண்டமான் (வி.வா60,997) எஸ். இராதாகிருஷ்ணன் (வி.வா 54083) பி.இராஜதுரை (வி.வா 49 228) ஆகியோர் வெற்றி பெற்றனர். ஐ.தே.கட்சியின் பட்டியலில் போட்டியிட்ட தொழிலாளர் தேசிய சங்க தலைவர் பழனி திகாம்பரம் (வி.வா39490) பிரஜைகள் முன்னணி செயலாளர் ஸ்ரீரங்கா ஜயரத்னம் (வி.வா 33948) ஆகியோர் வெற்றி பெற்றனர். ஏ.எஸ்.அருள்சாமி (வி.வா 5855) வி.புத்திரசிகாமணி (வி.வா 2896) எம்.உதயகுமார் (வி.வா 30928) எஸ்.சதாசிவம் (24152வி.வா) எல்.பாரதிதாசன் (வி.வா 7705) ஆகியோர் நுவரெலியா மாவட்டத்தில் தோல்வியைத் தழுவ ஏனைய மாவட்டங்களில் போட்டியிட்ட இ.தொ.கா வேட்பாளர்கள் அனைவரும் தோல்வியுற்றனர். ஐ.ம.சு. முன்னணியின் தேசியப் பட்டியல் மூலமாக முத்து சிவலிங்கம் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவானார்கள்.

இத்தேர்தலில் பதுளை மாவட்டத்தில் தெரிவான ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ 2014ம் ஆண்டு ஊவா மாகாண சபைக்கு தெரிவானதையடுத்து கே.வேலாயுதம் பதுளை மாவட்டத்திற்கான ஐ.தே.க உறுப்பினராக தெரிவானார். இன்று பி.திகாம்பரம் அமைச்சராகவும் வே.வேலாயுதம், வி. இராதாகிருஷ்ணன் ஆகியோர் இராஜாங்க அமைச்சராகவும் பதவி வகிக்கின்றனர்.

இவ்வாறு மலையக அரசியல் பெரும் இன்னல்களை தொட்டு வாழ்கின்றனர். விருப்பு வாக்கு கொண்ட தேர்தல்மூலமே பெரும்பாலும் மலையக பிரதிநிதிகளை பெறக்கூடிய வாய்ப்பு உள்ளது. 1989 இல் நுவரெலியா மாவட்டத்தில் விருப்பு வாக்கு மூலமாக ஒரு பிரதிநிதியையாவது பெற இயலாமை போனது இச்சமூகத்தின் துரதிஷ்டமேயாகும். பின்னர் வந்த தேர்தல்களில் பதுளை, நுவரெலியா, கண்டி மாவட்டங்களில் பிரதிநிதிகளை பெற்றிருந்தாலும் அரசியல் போட்டிகள் காரணமாக பிரதிநிதித்துவம் இழந்துள்ளதைக் காணலாம். மலையகத்தின் அனைத்துக்கட்சிகளும் இணைந்து கூட்டணி அமைத்தால் இன்றைய விகிதாசார மாவட்ட தேர்தல் பிரதிநிதித்துவம் மூலமாக கொழும்பு, களுத்துறை, கம்பஹா, இரத்தினபுரி, கேகாலை, மாத்தளை, கண்டி, நுவரெலியா, பதுளை ஆகிய மாவட்டங்களில் குறைந்தது 14 முதல் 16 வரையிலான பாராளுமன்ற உறுப்பினர்களை பெறலாம். எதிர்காலத்தில் தேர்தல்மாற்றம் பெறுகையில் மலையக பிரதிநிதிகளின் எண்ணிக்கை வெகுவாக குறையும். மலையக மக்களின் இருப்பை குறைப்பதற்காக மறைமுகமாக தேர்தல் தொகுதிகள் நிர்ணயிக்கப்பட்டு அவைகள் பெரும்பான்மை இன மக்களைக் கொண்ட பகுதிகளுடன் இணைக்கப்படலாம். இதனால் மலையக மக்கள் பாராளுமன்றம், மாகாணசபை, உள்ளூராட்சி சபைகளில் பிரதிநிதிகளை பெற இயலாத சூழலை உருவாக்கலாம். 90 ஆயிரம் மக்களைக் கொண்ட பகுதி இன்று தேர்தல் தொகுதியாக நிர்ணயிக்கப்படுகின்றது. அவ்வாறு நுவரெலியா தொகுதி பிறிக்கப்பட்டால் நிலைமை மாறிவிடும்.

உதாரணமாக சில சம்பவங்களை இங்கு அடையாளம் காட்டலாம். 1974 ஆம் ஆண்டு நோயல் தித்தவெல்ல எல்லை தொகுதி நிர்ணய குழு சிலாபம் தேர்தல் தொகுதியுடன் இணைந்திருந்த தமிழ் கிராமமான ?????????????????????? தொகுதியுடன் இணைந்து தமிழர்களை சிலாபம், புத்தளம் தொகுதிகளில் மூன்றாம் நிலைக்கு தள்ளியது. அதேபோன்று தமிழ் பேசும் மக்களைக் கொண்ட புத்தளம் தொகுதியில் இணைந்திருந்த வண்ணாத்திவில்லு பெரும் பிரதேசத்தை பெரும்பான்மை இனமக்களைக் கொண்ட ஆனமடுவ என்ற புதிய தேர்தல் தொகுதியை உருவாக்கி அத்தொகுதிக்குள் வண்ணாத்திவில்லு பிரதேசம் திணிக்கப்பட்டது. இவ்வாறு இந்நாட்டில் சிறுபான்மை இன அழிப்பு அடையாளம் அழிப்பு காலத்துக்கு காலம் மறைமுகமாக ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. 1977ம் ஆண்டு இடம்பெற்ற தொகுதி வாரியான தேர்தலில் புத்தளம் தொகுதியில் முன்னாள் நிதி அமைச்சர் எம்.எச். எம்.நெய்னா மரைக்கார் (ஐ.தே.க) 17583 வாக்குகளைப் பெற்றுவெற்றி பெற்றார். இத்தேர்தலுக்கு பின்னர் 38 வருடங்களாக புத்தளம் மாவட்ட சிறுபான்மை இன மக்கள் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இல்லாது அரசியல் அநாதைகளாக உள்ளதை இந்திய வம்சாவளி அரசியல் வாதிகளும் மக்களும் உணர வேண்டும்.

புதிய தேர்தல் முறைபற்றிய முழு நிலைமை இன்னும் தெளிவாக வெளிவரவில்லை. ஒவ்வொரு கட்சியினரும் ஒவ்வொரு வகையில் விவாதிக்கின்றனர். விவாதம் எப்படி நின்றாலும் மலையகம் பிரதிநிதித்துவத்தை காப்பாற்ற மலையக புத்தி ஜீவிகளும் ஏனையோரும் ஒரே அணிக்குள் நிற்க வேண்டும்.

மலையக பெருந்தோட்ட மக்கள் பெரும் போராட்டங்களையும் சத்தியாக்கிரகங்களையும் அஹிம்சை வழியில் நடாத்தி அவர்களால் பெறப்பட்டதே இவ் வாக்குரிமையாகும். இவ்வாக்குரிமையின் பெறுமதியை இன்னும் நாம் சரியாக உணரவில்லை. அனுபவிக்கவும் இல்லை. வாக்குரிமையின் பயனாகவே பெருந்தோட்ட மக்களின் தனித்துவம் வெளிவந்தது. இரு பிரதான கட்சிகளும் பெருந்தோட்ட மக்களின் உரிமைகளை பூரணமாக வழங்க இதுவரை முன்வரவில்லை. இதுவரை காலமும் இருகட்சியினரின் ஆட்சியில் சலுகைகளே வழங்கப்படுகின்றன. உரிமைகள் வழங்கப்பவில்லை. பெருந்தோட்ட மக்களின் தனித்துவத்தை தேர்தல் மாற்றத்தின் மூலமாகவும் சிதறிடிக்கப்படலாம்.

30.10.1964 இல் மேற்கொள்ளப்பட்ட சிறிமா சாஸ்திரி ஒப்பந்தமும் பெருந்தோட்ட மக்களின் வாழ்வியல் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. இவ் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படாது இருந்திருந்தால் இன்று கொழும்பு, களுத்துறை, நுவரெலியா, கேகாலை, இரத்தினபுரி, பதுளை, கண்டி, மாத்தளை மாவட்டங்களிலிருந்து விகிதாசார தேர்தல் முறையில் இன்று குறைந்தது 35 பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்யும் சந்தர்ப்பம் இருந்தது. அது அரசியல் வழிப்பறி கொள்ளையால் தடுக்கப்பட்டு விட்டதை நாம் மறக்க இயலாது. இவ்வாறு இன்று பலருக்கு அரசியல் முகவரியை கொடுத்தவர்கள் பெருந்தோட்ட மக்களும் அவர்களின் சத்தியப் போராட்டங்களுமேயாகும்.

மலையக அரசியலுக்கு வரலாறு உண்டு. தேர்தல் முறை மாற்றத்தால் அது தொலைந்து போய்விடக்கூடாது. இவ் அரசியர் அடையாளத்தை பாதுகாப்பது அனைவரினதும் கடமையாகும். இதுவரை கடந்து வந்த பாதையை விட இனி கடக்க போகும் பாதை மிக எளிதானதாக தெரியவில்லை.

நன்றி - வீரகேசரி
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates